நம் பால்வழிமண்டலத்தின் அடுத்த வீடான, ஆன்ட்ரோமிடாவில் இருந்து அறிவியல் கதைகளை கொட்டிய தோழர் ஆயிஷா நடராஜன் அவர்கள் அவரது முன்னுரையிலேயே நம்மையெல்லாம் அசத்தியிருக்கிறார். ஆச்சரியமான விஷயம்தான்! ஜார்ஜ் மாரட்டின் திகில் அறிவியல் புனைவுகள் படிப்பதில் துவங்கியவர் பல பத்திரிகைகளில் அறிவியல் கதைகளை எழுதி மக்களை அறிவால் மிரட்டி மயக்கிக் கொண்டு இருக்கிறார் என்பதுதான் நிதர்சனமான உண்மை. தோழர் ஆயிஷா நடராஜன், வெற்றிக்களம் கண்ட இந்திய அறிவியல் புனைவெழுத்தாளர்களின் பட்டியலில் இருப்பது, நமக்கு பெருமை; மகிழ்ச்சியும் அளிக்கும் தகவலாகும்.
இந்த நூற்றாண்டின், தமிழகத்தின் சிறந்த அறிவியல் புனைகதை படைப்பாளர் ஆயிஷா நடராஜன் என்றால் மிகை இல்லை. அவர் மோதிரக் கையால் குட்டுப்பட்டவர். எப்படித் தெரியுமா? 90களில் அறிவியல் எழுத்தாளர் சுஜாதாவிடம், ஆர்தர் சி கிளார்க்கின் அறிவியல் தொகுப்புகளைப் பரிசாக பெற்றவர். அறிவியல் புனைகதைகள் போட்டியில் வெற்றி பெற்று, எழுத்தாளர் ஜெயகாந்தனிடம் “ஐசக் அசிமா பதக்கம்” பெற்றவர். அதன் தொடர்ச்சியாகத்தான் இன்றைக்கு அசிமவ்வின் தோழர்களை படைத்திருக்கிறார். தலைப்பே வித்தியாசம் மட்டுமல்ல, கலக்கலாக அமைந்திருக்கிறது.
ஆயிஷா நடராஜனின் அறிவியல் புனைகதை படைப்பிற்கு அகில இந்திய அறிவியல் புனைகதை எழுத்தாளர்களின் பொதுச் செயலர் பேராசிரியர் ஸ்ரீநரகரி அணிந்துரை தந்திருக்கிறார் என்றால், இந்தப் படைப்பின் தன்மையை பற்றி நாம் நம்மை கிள்ளிப்பார்த்து அறிந்து கொள்ள வேண்டும். ஆயிஷா நடராஜனின் அறிவியல் புனைகதைகள் மலையாளம், ஹிந்தி, வங்கம், ஆங்கிலம் என பல மொழிகளில் வந்துள்ளது தமிழகத்திற்குப் பெருமை சேர்ப்பதாகும். ஆளுமை மிக்க, எழுத்தாளுமைமிக்க, அறிவியல் கலந்த புனைவுத்தன்மை மிக்க கதைகளை தருவதில் ஆயிஷா வல்லவர். இது ஒப்புக்கு பேசப்படும் பேச்சல்ல 916 உண்மை. இப்போது நாம் அசிமவ்வின் தோழருக்குள் நுழையலாமா?
அசிமவ்வின் தோழர்கள் அறிவியல் புனைகதைக்குள் 26 கதைகள் இருக்கின்றன. பெரிதும் சிறிதுமாக. இதில் டாப் டக்கர் என்று நான் உணர்வது முதல் கதையான “அசிமவ்வின் தோழர்கள்”தான். இது நான் பெண் என்பதால் கூட இருக்கலாம். ஒவ்வொரு கதையும் படித்து முடித்ததும் நம்மை வியக்க வைக்கிறது. எப்படி இவர் இவ்வளவு அற்புதமாக கற்பனையில் கதாபாத்திரங்களை வடித்து அவைகளை வார்த்தைகளில் கோர்த்து நம் முன்னே படைத்திருக்கிறார் பிரமாதம். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதமான தகவல்களை நம்முள்ளே தெளிக்கின்றன. இதில் எந்த அறிவியல்துறையும் விடுபடவில்லை. அனைத்து அறிவியல் துறைகளையும் கதைக்குள்ளே புகுத்தி இருக்கிறார். ஒன்றல்ல, இரண்டல்ல அறிவியலை பிரித்துப் போட்டு புரட்டி ஒன்றாக கொடுத்துள்ள ஆசிரியர் ஆயிஷா நடராஜனின் திறமையை எவ்வளவு பாராட்டினாலும் தகும். நீங்களே உள்ளே புகுந்து படித்துப் பார்த்தால், அறிவியல் புனைகதைகளின் வலிமை தெரியும். அதிசயிப்பீர்கள்.
அசிமவ்விவின் தோழர்கள்
முதல் கதை “அசிமவ்விவின் தோழர்கள்.” துவக்கத்திலிருந்து துப்பறியும் கதைபோல சஸ்பென்ஸ் ஆகவே செல்கிறது. கதையின் நாயகி கோரமான தோற்றம் கொண்ட ஒரு சிறுமி. அவரை பராமரிக்க செவிலியர் தேவை என்ற விளம்பரம், பார்த்து வேலைக்கு வந்தவர் மேரி என்ற பெண். சிறுமியைப் பார்க்கிறாள் மேரி; மண்டை மட்டும் பெரிதான ஓர் உருவம். தாடை எலும்பு அரைச்சாணுக்கு நீட்டிக்கொண்டு.
முடி கத்தை கத்தையாய் முகத்திலும் தொங்குகிறது. சாக்குப்பையை ஆடையாய் போர்த்திகொண்டு, ஒரு பெண். அவளை மேரிக்கு காட்டுகிறார் டாக்டர் மாதேவ். இவர்தான் அந்த ஆய்வகத்தின் சூத்திரதாரி; இயக்குநர். மேரிக்கோ பயம்தான். அந்த சிறுமியைவிட வேலை அத்தியாவசிய தேவையாக இருந்தது. ஏழ்மை நிலை. புது இடம். சிறுமியை டாக்டர் தேவ் மேரியிடம் கண்ணாடி கதவு வழியே காட்டிவிட்டு, இவளைத்தான் நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார். குத்துக்காலிட்ட சிறுமியை பார்க்க பயமாக இருக்கிறது. ஆனால் வேலை வேண்டும். டாக்டர் தேவ் மேரியிடம் “உங்களால் இவளுக்கு பாலைக் குடிக்க வைத்தால் வேலை உறுதி” என்கிறார். அந்த அறை முழுவதும் வைக்கோல், அது, இது என ஏதாவது கிடக்கிறது. அருவருப்பான முகம் கொண்ட சிறுமியிடம் நெருங்குகிறாள் மேரி. சிறுமி தூர தூர ஓடிப் போகிறாள்; தட்டில் உள்ள டம்ளரிலும் பாட்டிலிலும் பால் இருக்கிறது.
மெதுவாக இந்த சிறுமியின் அருகே சென்ற மேரி லேசாகத் தொடுகிறாள். நாற்றம் வயிற்றைக் குமட்டுகிறது. அவளை குளிக்க வைக்க வேண்டும் என நினைக்கிறாள். சிறுமிக்கு மேரி தொட்டது பிடிக்கவில்லை; துடிக்கிறாள். பின்னர் இருவர் மட்டும் இருப்பதை உணர்ந்து கொஞ்சம் அமைதியாகிறாள். மேரி சிறுமியை தொட்டு உட்கார வைக்கிறாள்; ஆடையை சரி செய்கிறாள்; பாட்டில் பாலைக் குடிக்க மறுக்கிறாள். கீழே தட்டில் பால் கொட்டுகிறது; என்ன என பதறும்போது சிறுமி அவள் எதிர்பாராமல் கொட்டிய பாலை தரையில் படுத்து பூனைபோல சளக் சளக் என்று குடிக்கிறாள். ஆச்சரியம்தான் பின்னால் இருந்து, “சபாஷ் மேரி!” என்ற ஒரு குரல் தேவ் அவர்களின் பாராட்டில். இதுதான் நியாண்டர்தால் சிறுமி என்கிறார். ஆய்வகத்தில் அவர்கள் நான்கு பேர் கொண்ட குழு
3 ஆண்கள்+ஒரு பெண் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் ஸ்டான்லி. அவரை மேரிக்குப் பிடிக்கவில்லை. எல்லோரும் மானுடவியல் துறையின் பல பிரிவினைச் சேர்ந்தவர்கள். பெண் மரபணுத்துறையைச் சேர்ந்தவர்.
மேரிக்கு வேலை கொடுக்கப்படுகிறது. வீடு செல்ல அனுமதி இல்லை. ஆய்வகத்தில் இருக்க வேண்டும். இரவில் வேண்டுமானால் செல்லலாம். இப்போது ஒரு வாரம் இல்லை. ஆய்வகம்.இருப்பதோ சென்னையின் கடைக்கோடியில். எந்த ஊர் என்பதுகூட மேரிக்கு தெரியாது. ஆய்வகத்தை “வார்ம் ஹோல்” என அழைத்தனர். இந்த விஞ்ஞானிகள் காலச்சக்கரத்தில் பயணித்து பின்னோக்கிச் சென்று, அங்கு 2.3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த புரோடிரோசோயிக், பாக்டீரியா போன்றவற்றைக் கொண்டு வந்து பின்னர் அங்கேயே கொண்டு விட்டதில் வல்லவர்கள். அப்படி டாக்டர் தேவ் ஆதிகால உயிரிலிருந்து டைனோசர் வரை மாதிரிகளை கொண்டு வந்து உலகுக்கு காட்டி பெருமைப் பட்டவர்.
இப்போது நியாண்டர்தால் இனச் சிறுமி. இவர் 40,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் என்கிறார் டாக்டர் தேவ். பின் மேரி கூகுளில் தேடி, மனித இனம் 6 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்ததைப் படிக்கிறார்.
சிறுமியோடு கழித்து கழித்த இரவு மேரிக்கு மறக்க முடியாத இரவாகி விட்டது. மறுநாள் உலகம் முழுவதிலுமுள்ள பத்திரிக்கையாளர்கள் சந்திக்க இருப்பதாக தேவ் தெரிவிக்கிறார்.மேரிக்கு தனி அறை. அடுத்து சிறுமி அறை. ராத்திரி ஆனதும் சிறுமியின் அழுகை மனதை உருக்குகிறது; மேரி அருகில் சென்று பார்க்கிறாள்; அங்கே விளக்கு இல்லை, மேற்கூரை இல்லை. நட்சத்திரங்கள் மினுக்குதல். சிறுமி பரிதாபத்துடன் அருகில் சென்ற மேரி கொடுத்த பாலைக் குடிக்கிறாள்; பூனைபோல படுத்தே சிறுமி பின்னர் கண்ணீர் வடிய அழுகிறாள். மேரி வேண்டாம் என்று வாஞ்சையுடன் தடவுகிறார். இருவரும் ஒருவரை ஒருவர் ஒட்டிக் கொள்கின்றனர். சிறுமி கையை எடுத்து தன் நெஞ்சில் வைத்துக்கொண்டு “மேரி மேரி!” என்கிறார். கொஞ்ச நேரத்தில் சிறுமி “மே.. மே” என்கிறாள். சிறுமி இப்போது மேரி கையை எடுத்து அவள் நெஞ்சில் வைத்து “லீ லி” என்கிறாள். மேரிக்கு ஒரே ஆச்சரியம், இவளுக்கு பேசத் தெரியுமா என. மறுநாளில் இருந்து சிறுமியைப் பற்றி அனைத்து அறிவியல் சோதனைகளையும் செய்கிறார்கள். ரத்தம், எச்சில், சிறுநீர், சதை என அக்குவேறு ஆணிவேராக சோதனை. மேரியை பாராட்டுகின்றனர். பணம் நிறைய தருவதாகவும் கூறுகின்றனர். மேரி அவர்களைப் பற்றி சந்தேகிக்கிறார். முழுதும் அறிந்து கொள்கிறார். அவளுக்கு உதவியாக ஒரு சகா வேண்டும் என மேரி சொல்ல, தேவ் தன் மகளை கொண்டு வர வேண்டும் என்கிறார் கடைசியில் தன் செல்லநாயான அசிமாவை கொண்டு வந்து விடுகிறார். அசிமாவும் லீலியும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர்.
இந்த சிறுமியை “கொசஸ் தலை ஆற்றின் கரையில் ஒரு கூட்டத்தின் ஒற்றைப் பிரதிநிதியாக அவர்கள் பெற்றனர்” என்று தெரிய வருகிறது. டாக்டர் தேவ் சொல்கிறார்: “இன்னும் ஒரு மாதம் கழித்து இந்தப் பெண்ணை அவர்கள் கூட்டத்தில் சேர்த்து விடுவோம். அதற்குள் அனைத்து சோதனைகளையும் செய்யவேண்டும்” என்கிறார். சிறுமியின் உடையை களைந்து சோதனை செய்ய, மேரி மறுத்து விடுகிறார். “இது குரங்குக் குட்டிபோலத்தான். மனிதக் குழந்தை அல்ல.” என்கிறார். ஒரு பெண் என்று உரிமை இருக்கிறது என மறுக்கிறார் மேரி. இந்த மனித குழந்தை உடல்தான் குழந்தை ஆனால் மனம் 19 வயதுப் பெண்ணினுடையது.இவள் கருவுறும் நிலையில் இருக்கிறாள், உறவு கொள்ள முடியும், என அவர்கள் திட்டமிடுகிறார்கள். அவளை கருவுற வைக்க சிம்பன்சி குரங்கை கொண்டு செய்யலாம்: முடிவில் மனிதனை என்கிறார்கள். “ஆனால் அவள் யாரிடம் நாட்டம் காட்டுகிறாள் என்பதை அறிவது எங்கள் நோக்கம்” என்று சொல்கிறான் ஸ்டான்லி. வேலையை விட்டுவிடலாம் என்று நினைக்கிறாள் மேரி. ஆனால் லீலியின் மேல் உள்ள அன்பு அவளைத் தடுக்கிறது. அப்படி செய்யக்கூடாது என அவர்களிடம் மறுக்கிறாள். ஆனால் அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போது நடந்தது. என்பதும் அவள் அறையைவிட்டு வரக்கூடாது என்பதும் சொல்லப்பட்டது. இதையெல்லாம் எப்படி சொல்ல முடியும்? ஒவ்வொரு நாளும் சத்தம் மனதை அப்படியே படுத்துகிறது படபடப்பு. ஆனால் ஒரு நாள் லீயின் அதிர்ச்சி முகம் தூரத்தில் ஜன்னல் வழியே தெரிகிறது. கடைசி நாளில் அதிகாலை 3 மணி அளவில் சிம்பன்சியை அழைத்துக்கொண்டு உள்ளே ஸ்டான்லியுடன் ஓடினார்கள். லீலி அதிர்ச்சியால் உறைந்து, மேல் நோக்கி கூவி அழைக்கிறார். அவளால் வெளியே வர முடியவில்லை. ஆனால் அவள் ஊய் ஊய் என்று கத்த அசிமா ஓடி வருகிறது. மேலும் கத்தக் கத்த… 40-50 நாய்கள் வருகின்றன. விஞ்ஞானிகளையும், ஆய்வகத்தையும் துவம்சம் பண்ணி விடுகின்றன. ஆனால் மிஞ்சியது மேரி மட்டும்தான். லட்சம் ஆண்டுகளுக்கும் முன் வாழ்ந்த, அந்த நியாண்டர்தால் மனிதப் பெண்ணின் பலம் என்ன என்பதை உலகுக்கு கற்பனையில் காட்டியிருக்கிறார். அற்புதமான கதை எப்படி பெண்ணின் மேல் வன்மம் விஞ்ஞானியே பால் புணர்ச்சி காட்டவுள்ள இருந்தாலும் அவர்களை துவம்சம் செய்யக்கூடிய அசிமாவும் லீலியும் நிச்சயமாக உலகில் நிலைத்து நிற்பார்கள் என்பதை அறிவியல் புனைகதை மூலம் அற்புதமாக வடித்துள்ளார் தோழர் ஆயிஷா நடராஜன்
“அல்காரிதன்”
இரண்டாவது கதை “அல்காரிதன்”.இது கொஞ்சம் சிக்கலான கதை. இதில் ஒரு சாவுடன் துவங்குகிறது கதை. தனது அண்ணன் ஆன்லைன் ரம்மி ஆடி இறந்து விட்டதை அறிந்து கவலைப்படுகிறாள் கவின். தென்னாற்காடு மாவட்டம் வரக்கல்பட்டு கிராமம். இதில் நிகழ்ந்த கணினி நிகழ்வு உலகத்தையே ஒரு குலுக்கி குலுக்கி விட்டது கவின் மூலம். கணினி வழி “சீட்டாட்ட அல்காரிதன்” செத்துப் போனது. ஹேக்கர் ரம்மியில் இணைந்த கவின் தன் சகோதரனை இழப்பாள் என்று நம்பவில்லை. படிக்க வைத்த அண்ணன் ரமணா ரம்மியில் சிக்கி ஒன்றுமே செய்ய முடியாமல், முடிவில் தற்கொலை செய்து விடுகிறான்.அப்பாவின் தோழர் டாக்டரிடம் கவின் எல்லா விஷயத்தையும் கொட்டி தீர்க்கிறார்.பின் டாக்டர் விக்டர் 92 வயது சீட்டாட்ட மனிதனை சந்திக்க கூப்பிட்டு செல்கிறார். அங்கே 92 வயதில் உட்காரக்கூட முடியவில்லை .ஆனாலும் கூட சுற்றிலும் சீட்டுக்கட்டு. விளையாடிக் கொண்டே இருக்கிறார். தானே எதிராளி இருப்பதாக நினைத்து, விளையாடுகிறார். அவர் பேராசிரியர். ஆனால் சீட்டு ஆடுவதால் வேலையை விட்டவர். ஆனாலும்கூட, சீட்டாடாமல் அவரால் இருக்க முடியாது. சீட்டாட யாருமில்லை என்றால், மனைவியின் மகளையும் துணைக்கு வைத்துக் கொள்வர். எங்கு சென்றாலும் சீட்டோடுதான் பயணம். 92 வயதிலும்கூட. இப்போது சுற்றிலும் நான்கு குழந்தைகளோடு சீட்டாட்டம். அவரிடம் கவினை அறிமுகப்படுத்துகிறார் டாக்டர் விக்டர். மூவரும் சீட்டு ஆடுகின்றனர்; ஆடிக்கொண்டே இருக்கின்றனர். கவின், அவரிடம், “மனிதர்களை ஜெயிப்பது பெரிய விஷயம் இல்லை,” என்கிறாள். “நீ என்ன சொல்ற. குரங்கு, நாயுடனா விளையாட முடியும்” இது பேராசிரியர் கண்ணபிரான். “இதுவரை எத்தனை மனிதர்களுடன் விளையாடி இருக்கிறீர்கள்?” “ம், ஒரு லட்சம் ஒரு கோடி கூட இருக்கலாம் என்பது” “கம்ப்யூட்டருடன் உங்களால் சீட்டு ஆட முடியுமா? உங்களால் ஜெயிக்க முடியுமா?” என்கிறார் கவின். “ஏன் முடியாது?” என்றதும், தன் அண்ணா தோத்துப் போய் செத்துப் போய்விட்டார் என்கிறார் கவின். “சீட்டாடி தோத்ததுக்கு தற்கொலையா? அது கூடாது. உலகத்தில் விழிப்போடு விளையாட வேண்டும். இதுக்கு அட்ரினலின் ஹார்மோன் தான் காரணம். கோபம் பயம் இரண்டையும் தரவல்லது அட்ரினலின். தற்கொலை செய்து கொள்ள வைக்கும். இது கம்ப்யூட்டர் செய்த தற்கொலை. அதனைக் கொல்ல முடியும்.
கணினி வழி சீட்டாட்டம் செய்தால் மனிதனை கொலை செய்ய முடியும்” என்கிறார். பின் கம்ப்யூட்டருடன் சீட்டாடுகிறார். “ஐ வில் வின், ஐ வில் வின்” என்று கூறிக்கொண்டே தொடர்ந்து விளையாடுகிறார். மூன்றாம் நாள் டாக்டரின் வங்கிக் கணக்கு ஏறி இருக்கிறது. ஏற்கெனவே இரண்டு ரம்மி ஆப்களை திவால் ஆக்கியிருந்தார் கண்ணபிரான். இதெல்லாம் உங்க பணம் என்ற டாக்டர் சொன்னபோது, “எனக்கு எதுக்கு பணம்? நீயே வச்சுக்கோ. கவினுக்குகூட கொடு. எனக்கு வேண்டாம்” என்கிறார். நான்காம் ஆட்ட நிலையில், வேகம் வேகம் என வேகம் தாங்க முடியாமல் திணறுவதுபோல் இருக்கிறது என்கிறார். “இதற்கு பெயர் சூடோ ராண்டம் நம்பர் ஜெனரேட்டர்.இயந்திரக் கற்றல் எனும் மெஷின் கற்றல் பைத்தான். அது திணறுவது உண்மையானால் அதைத் தாண்டும் அல்காரிதமாக நீங்கள் உருவாகிவிட்டீர்கள் என்று அர்த்தம்” இது கவின். கவினால் ஆச்சரியத்தை அடக்க முடியவில்லை. “ஐ வில் வின், ஐ வில் வின். சனியன் என் வேகத்திற்கு வேலை செய்ய முடியவில்லை, இரண்டே மாதத்தில் பல் இளிக்கிறதே” என்றார். அடுத்த இரண்டு நாட்கள் அவருக்கு சீட்டு கார்டு அட்டை பிரித்து போடுவது திரையில் நின்று போனது. ரம்மி அல்காரிதம் ஒட்டு மொத்தமாக அழிந்து போனது மட்டுமல்ல..உலகம் முழுவதும் அழிந்துவிட்டது. அதனை அழைத்ததில் ஒருத்தியாக லெஜென்ட் கவின் இருப்பதை அறிந்தபோது உலகத்தை காப்பாற்றிய உண்மையானது. பின் நிஜ சீட்டுக்கட்டை குலுக்கிப் பிரித்து போட்டார் பேராசிரியர்.”கவின் என்னோடு ரம்மி ஆடி உன் கம்ப்யூட்டர் தற்கொலை செய்து கொண்டு விட்டது” என்று சிரித்தார் பேராசிரியர் கண்ணபிரான்.. சூப்பர் கதைதான்.இதோ உங்களுக்காக கதை.
அமீபாயோசிஸ்
மூன்றாவது கதை அமீபாயோசிஸ். சிக்கலான இடியாப்பச் சிக்கல் கதை. இங்கே எவ்வளவு திறமையுடன் ஆசிரியர் எழுதியிருக்கிறார் என மிக மிக வியந்து போனேன். படிப்பதற்கே தனித் திறமை வேண்டும். நான்கு வருடங்களாக நடந்த வழக்கை சாட் ஜிபிடி சொல்கிறது. டாக்டர் காசிராஜன் வெர்சஸ் எலிசபெத் ஆண்டனி, வழக்கு. ஆச்சரியம் சர்வதேச வழக்காக மாறியதே. காரணம் காசிராஜன், ஜெனிடிக்ஸ் அமீபயோசிஸ் வழி, மண்புழுவின் மரபணுவை வைத்து சோதனை, ஆண்டனி உடலில். மண்புழுவின் ஓர் உறுப்பு அழிந்தால், வெட்டினால், மீண்டும் வளரும். இந்த மரபணுவை ஆண்டனி உடலில் செலுத்தி சோதனை. கட்டை விரல் வெட்ட, அது வளர்ந்தது. இது மருத்துவ சாதனை. ஆனால் திடீரென பிரச்சினை. ஆண்டனி உறுப்புகள் சுருங்கின. திடீரென எப்படியோ, இரண்டு ஆண்டனிகள் வந்துவிட்டனர். அவர்களின் மூளையைப் பிரித்து அதில் மண்புழு மரபணு அனுப்புவதில் அது முழுமையாக வளர்ந்து விட்டது. ஆனால் அதில் ஒரு சின்னப் பொருள் வந்து அவர்களுக்கே தெரியாமல் வளர்ந்து உடலை முழுமையாக்கி விடுகிறது, அதுதான் ரெண்டு ஆண்டனி. இப்படி வந்ததன் காரணமும் நிஜ ஆண்டனியின் காரணமும் என்ன? முடிவை நான் சொல்லவில்லை. தீர்ப்பை வழங்குவது சாட் ஜிபிடி Chat gpt. நிஜ ஆண்டனியை எலிசபெத் ஆண்டனி சொல்வார் என முடித்துக் கொள்கிறது. அழகி எலிசபெத் ஆண்டனியை யார் அடையப் போகிறார்கள் என்று பாருங்கள். விடை திரையில் என்பதுபோல விடையை புத்தகத்தில் என நீங்கள் தான் சொல்ல வேண்டும். எலிசபெத் ஆண்டனி உடன் அவள் 3 வயது மகளும் இருக்கிறாள்.
அவ்வையார் பள்ளி
4 ஆவது கதை அவ்வையார் பள்ளி. இது ஒரு வித்தியாசமான கதையாகும். இரண்டு பள்ளி தோழர்கள். ஒருவர் ஆண் பேராசிரியர், ஒருவர் பெண். பள்ளியின் தலைமை ஆசிரியர் மங்கை. மங்கை, பேராசிரியரை பள்ளிக்கு பேச அழைக்கிறார். தமிழ் பேராசிரியர் நல்ல தமிழில் இலக்கியம் பேசுவார் என. பள்ளியில் உள்ள குழந்தைகள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மட்டுமே பேசுவதால். பேராசிரியர் அங்கு வந்து உற்சாகமாக பேசுகிறார். பள்ளி குழந்தைகள் எல்லாவற்றிற்கும் அப்படியே எதுவும் பேசாமல் அமைதியாக. அவ்வை என்று பேசும்போது மட்டும் அவர்கள் மிகவும் உற்சாகமாக இருந்தனர். இவர்களில் ஏகலைவன் அவர்களில் மிக புத்திசாலியான மாணவன். தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்றதும் ஏகலைவன் அவரிடம் இன்னொரு நாள் வந்து அவ்வை பற்றிப் பேச அழைக்கிறார். தலைமை ஆசிரியரும் ஒத்துக்கொண்டு அழைக்கிறார். மீண்டும் பேராசிரியர் வருகிறார். அப்பொழுது வேறு பணியால் மங்கை மேடம் இல்லை. 32 மாணவர்கள் இருக்கிறார்கள். இப்பொழுது உரையாடல் வளர்ந்து கொண்டே போகிறது, அவர் அவ்வை பற்றி பேசும்போது நிறைய கேள்வி கேட்கிறார்கள். ஏகலைவன் அற்புதமாக அவ்வையின் பாடல்கள் சொல்கிறான். பையன்கள், எத்தனை அவ்வைகள் உண்டு என்று கேட்கிறார்கள்.. நிறைய அவ்வைகள் இருக்கின்றனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலத்திலும் இருந்தார்கள். அவர்களுக்கு அவ்வை என்று பெயர் என்கிறார் பேராசிரியர்.பையன்கள் ஒத்துக்கொள்ளவில்லை. ஒரே அவ்வைதான் என்கிறார்கள். பேராசிரியர் திணறுகிறார். பையன்கள் படு ஸ்மார்ட். அதற்கு முன் அவர் “இங்கே வாருங்கள். உங்களுக்கு காண்பிக்கிறேன் நாங்கள் செய்த ப்ராஜெக்ட்” என்று பார்த்து அழைத்துப் போகிறார் ஏகலைவன். அவருடன், 32 மாணவர்களும் செல்கின்றனர். இது எங்கள் ப்ராஜெக்ட் இன்ஸ்பயர் ப்ராஜெக்ட் ரெக்கார்ட் செய்த ஒரு பேருந்து மாடலை காண்பிக்கின்றனர். பேருந்துக்கு மேற்கூரை இல்லை. அங்கு ஓட்ட எஞ்சின் இல்லை. ஆனால் நடுவில் வட்டமாக இருக்கிறது பிள்ளை வாருங்கள் சார் என அழைக்க, அவர் உள்ளே அழைக்கப்படுகிறார். “சார் இது காலப்பயணம். இது காலத்தை பின்னோக்கி நகர்த்தும். ஆனால் பேருந்து நகராது. நீங்கள் அந்த இடத்திற்கு வந்துவிடுவீர்கள். பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்த ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் போகலாம், மீண்டும் திரும்பிவிடலாம்” என்கின்றனர்.
பேராசிரியர் ஏறுகிறார். தலை சுற்றியது. எதுவும் தெரியவில்லை. முழித்துப் பார்த்தால், பையன்கள் ஒரு மரத்தடியில். இவர் மட்டும் பேருந்தில். பார்த்தால் நிஜமாகவே இங்கே பெரீய்ய வைகை நதியும், ஓரத்தில் குடிசையில் அவ்வைப்பாட்டியும்.”.நீங்கள் யார்?” என்கிறார் அவ்வை. “நாங்கள் உங்கள் எதிர்கால சந்ததிகள்”இது ஏகலைவன். அவ்வை பாட்டியிடம் கேள்விகள் கேட்கிறார்கள். “ஆமாம் நான்தான் அவ்வை. அவ்வை இல்லை. அது அவ்வா என்பதாகும். அவ்வா என்றால் திருமணம் ஆகாத கன்னிப்பெண்” என்கிறார். “எல்லா அவ்வையும் நான்தான். நானே பிற்காலத்தில் இருந்து 12-16 ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்து, அனைத்து பாடல்களும் நான் தான் எழுதியது.” பேராசிரியர் பார்த்துப் பிரமித்து போகிறார். நிறைய கேள்விகள் கேட்கிறார். உண்பதற்கு உணவு கேட்க, அவ்வா பாலும் தெளிதேனும், பாகும், பருப்பும் தருகிறார். “நீங்கள் எப்படி இவ்வளவு நாள் இருக்கிறீர்கள்?” என்பதற்கு அவ்வை ஒரு கையை நீட்டுகிறார். அந்தப் பக்கத்தில் பொன்னிற நெல்லிக்கனி. அது காலக்கனி பெரிய பூதாகரமாக இருக்கிறது. அதை சாப்பிட்டு தான் நான் இருக்கிறேன் என்கிறார். அவருடன் உரையாடல் நேரம் கடந்து விடுகிறது, சரி, போய் வருகிறேன் என்கிறார். அப்போது இரண்டு தவறுகளை அவர் செய்கிறார்.
1.புறப்படலாம் என்றதும் அவர் ஏறியது. 32 பேரும் அவரை நீங்கள் ஏறுங்கள் சார் என்கிறார்கள்.
2.”அந்த டிரைவர் இருக்கை திருப்புங்கள்” என்கிறார்கள். அவர் திருப்ப 32 பையன்கள் அவருடன் வரவில்லை. அவர் சுழல்கிறார்.பையன்கள், நாங்கள் அம்மாவின் கால ஊர்தியில் வருவோம் என்கிறனர். அவர் காதில் விழுவதற்குள், காணாமல் போகிறார். அதற்குள், செய்தி பத்திரிகையில்: “தலைமை ஆசிரியர் கைது பள்ளியின் 32 மாணவர்கள் காணவில்லை” அவர்களை கடத்திச் சென்ற பேராசிரியரை போலீஸ் தேடுகிறது என்று எப்படி இருக்கிறது கதை வித்தியாசமான காலப் பயணம் பற்றிய ஒரு கற்பனை கதை. கதைகளை புரிந்து கொள்ள நுண்ணிய புரிதலும் கூர்மையான அறிவின்கூட தேவை என்றுதான் நினைக்கிறேன். நம்மை, அறிவை சோதித்துப் பார்த்திருக்கிறார் கதை ஆசிரியர் தோழர் ஆயிஷா நடராசன்.
5வது கதை டால்பின் பாய்.
டாக்டர் அவந்திகா, சுசீலா மூர்த்தி, தியாக மூர்த்தி, &டாக்டர் சாருகேசி கதை மாந்தர்கள். சுசீலா மூர்த்தி தற்கொலையில் கதை பிறக்கிறது. சுசீலா மூர்த்திக்கும், தியாக மூர்த்திக்கும், நல்ல உடல்நிலை, சாதாரணமாக குழந்தை பிறக்கும் என்றாலும், உயர் ரக குழந்தை வேண்டி. மரபணு மாற்றம் செய்யப்பட்டது. அதில் சிறப்பு அனுபவம் பெற்ற டாக்டர் அவந்திகா, சாருகேசி தம்பதியரிடம் வருகிறார்கள். தியாகமூர்த்தி பலகோடிகளின் அதிபதி. அவருக்கு நல்ல அறிவுத்திறன், குறைவாக தூங்குதல்/தூங்காதிருக்கும், நல்ல உடல் திறனுள்ள குழந்தை வேண்டும். அதன் மூலம், மற்ற சந்ததிகளை உருவாக்கி, தூங்கா தொழிலாளிகளை உற்பத்தி செய்ய திட்டம் தியாக மூர்த்திக்கு. டாக்டர் அவந்திகா, டால்பின் மரபணுகொண்டு மரபணுமாற்றக் குழதையை உருவாக்கி முடித்து, கருவுற்ற சுசீலாவைக் கவனித்து, டால்பின் பாய் குழந்தையும் பிறந்து விடுகிறது. ஆனால் ஓயாமல், நம்மை நடுங்க வைக்கும் அழுகை. குழந்தை சுமக்கும்போதும், சுசீலாவுக்கு தூங்காமல் இருக்கும் குழந்தையால் கடுமையாய் வலி. தாய்க்கு குழந்தை அழுகையால் வேதனை. பாத்ரூமில் தூக்கு. டாக்டர் அவந்திகா வந்ததும், அவர் கையில் தூய்மைபணியாளர் கடிதம் கொடுக்கிறார். அது சுசீலாவின் கடிதம், அதில் “8 மணிநேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணிநேர தூக்கம், ” என்பது இவனைப் பெற்ற தாயின் குரல். “டால்பின் பாய்” குரல் இரவைக் கிழிக்கிறது.
நடக்காத மரபணுவியல் மாநாடு 11வது கதையில் இருவர் மாநாடு பற்றி அறிந்து வேவு பார்க்கச் செல்லுகின்றனர். இதன் கதாநாயகி டாக்டர் லீலாவதி காங் ஷன். அவரைப் பிடிக்க சர்வதேச காவல் கட்டுப்பட்டுக் குழு, தொழில்நுட்பப் பிரிவின் ஐ.ஜி. சுபத்ரா. அவரின் செயலர் காசிம். இருவரும் அந்த மாநாட்டுக்குச் செல்லுகின்றனர். ஒருவருக்கும் தெரியாமல் அவர்கள் அரங்கில். லீலாவதியைக் கைது செய்யும் வாரண்ட் உடன். ஆனால் லீலாவதியை மரபணு விஞ்ஞானிகள் மறைத்து காத்து வருகின்றனர். மனிதக்கருவில் மரபணு மாற்றச் செயல்பாடு உலகம் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. அரங்கைக் கண்டுபிடித்தாயிற்று. படம் எடுக்க நினைத்தால் கைபேசி நின்றுவிட்டது.
8 பேர் உள்ளனர். அதில் முகத்தில் சுருக்கம் விழுந்த உயரமான ஒருவர், புவியில் பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்தியா, துருக்கி போல மூன்றாம் உலக நாடுகளில் இதோ புதிய மரபணு மாற்று இனி உருவாகும் கரு பெண்கரு என்றால், அதனை எதைக்கொண்டும் அழிக்க முடியாது. ஆண் கரு என்றால் அழிக்க முடியும்” என்றார். “சபாஷ்” இது மூத்தவர். சுபத்ரா, காசிமிடம், அந்த கேமராக்களை ஆன் செய்ய வேண்டாம். இங்கு எந்த மரபணு மாநாடும் நடக்கவில்லை என்று தெரிவி என்கிறார். உசிலம்பட்டியில் இப்படி 26 கதைகளை நம் முன்னே பரப்பி வைக்கிறார் ஆயிஷா. எனக்கும் முக்கியமாக யானை வெடி, பைபிநோசி எண், மிட்டோகாண்ட்ரியா, கைப்பேசி யுத்தம், X ஒன்றல்ல, இரண்டு, சொல்ல ஆசை அனைத்தும் சுவை மிகுந்த கதைகள். நானே எல்லாவற்றையும் சொல்லிவிடக்கூடாதல்லவா? நீங்களே படித்து ரசியுங்கள். நண்பர்களுடன் புனைகதைகளை கதையுங்கள். l
previous post