சௌம்யா ஸ்ரீ
வில்லாளன் எனும் இந்நூலை அறிமுகம் செய்வதுடன் பாலோ கொயலோ (Paulo Coelho) எனும் எழுத்தாளரைப் பலருக்கு அறிமுகம் செய்வதும் மிக முக்கியம் எனக் கருதுகிறேன். பாலோ கொயலோ ஒரு பிரேசில் நாட்டு எழுத்தாளர். இவர் ரசவாதி (The Alchemist), பதினோரு நிமிடங்கள் (Eleven Minutes) போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய ரசவாதி எனும் நூல் உலக அளவில் 65 மில்லியன் பிரதிகள் விற்கப்பட்டுள்ளது.
“பாலோ கொயலோவின் சொந்த வாழ்க்கையே அவருடைய நூல்களுக்கான உத்வேகமாக இருந்து வருகிறது. அவர் சாவை முத்தமிட்டுள்ளார். பைத்திய நிலையை அடைவதிலிருந்து தப்பித்துள்ளார், போதைப் பொருட்களைப் பயன்படுத்தி அவற்றிலிருந்து மீண்டிருக்கிறார். சித்திரவதைகளைப் பொறுத்துக் கொண்டிருக்கிறார், ரசவாதத்தையும் மாயாஜாலத்தையும் சுவைத்திருக்கிறார், தத்துவங்கள்
குறித்தும் மதங்கள் குறித்தும் ஆழமாகக் கற்றறிந்திருக்கிறார், பெரும் தாகத்தோடு நூல்களைப் படித்திருக்கிறார், மத நம்பிக்கையை இழந்து மீண்டும் அதைச் சுவீகரித்திருக்கிறார், அன்பின் இன்ப துன்பங்களை அனுபவித்திருக்கிறார். இவ்வுலகில் தனக்கான இடம் எது என்ற தேடலின் ஊடாக, எல்லாரும் எதிர்கொள்கின்ற போராட்டங்களுக்கான விடைகளை இவர் கண்டறிந்துள்ளார். நம்முடைய சொந்தத் தலைவிதியைக் கண்டறிந்து கொள்ளத் தேவையான வலிமை நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது என்று அவர் நம்புகிறார்” என்று வில்லாளன் நூலில் இவரைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இவை அனைத்தின் உண்மைத் தன்மையையும் அவரின் நூல்களைப் படிக்கும் போது உணர முடிகிறது.
வில்லாளன் எனும் நூல் வில்லின் மார்க்கத்தையும் வில்வித்தை பற்றியும் பேசுகிறது. இந்நூலில் 15 உட்தலைப்புகள் உள்ளன. இதில் கூறப்பெற்றவற்றைப் பின்பற்றினால் வில்வித்தை நிச்சயம் கைவரும். இதனூடே வாழ்வின் மார்க்கத்தையும் நூலாசிரியர் நமக்குக் கற்றுத் தருகிறார். வில்லாளன் எனும் நூலின் ஒவ்வொரு வரியும் வாழ்க்கையைப் பற்றி பேசுகிறது. இந்நூலில் முன்னுரை முடிவுரை நீங்கலாகக் கூறப்பட்டுள்ள அனைத்தும் சிலேடைப் பொருளில் அமைந்துள்ளது. வில்லைப் பற்றியும் வாழ்வைப் பற்றியும் தத்துவார்த்தமான புரிதலைக் கொடுக்கிறது.
இவ்வுலகில் மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் நிறையப் பிரச்சனைகள் இருக்கின்றன. வாழ்க்கையே பிரச்சினையாகவும் இருக்கிறது. நாம் துவண்டு போகும் நேரங்களில் ராஜாவோ, தேவாவோ, ரகுமானோ நம்மைத் தேற்றி விடுகிறார்கள். ஆனால் துணிவுடன் வாழ்க்கைப் பயணத்தை முன்னெடுத்துச் செல்ல ஓர் ஒளித்தொகுப்பை நம் கைகளில் கொடுக்கிறது இந்நூல். பொதுவாகவே இந்த 21வது நூற்றாண்டில் நமது நலன் விரும்பிகள் என்று யாரை நம்புவது என்று நமக்குத் தெரிவதில்லை. நமது நலனை அவர்கள் ஏன் விரும்புகிறார்கள்? இதனால் அவர்களுக்கு என்ன லாபம்? பயன் கருதாமல் யார் பழகுவார்? என்றெல்லாம் கூடச் சிந்தனைகள் உண்டு. நலன் விரும்பிகள் யார்? அவர்கள் ஏன் நம் வாழ்க்கைக்கு மிகவும் அவசியமாகிறார்கள்? அவர்களை எப்படி அடையாளம் காண்பது? அவர்களுக்கு நாம் என்னவாக இருக்கிறோம்? என்ற பல கேள்விகளுக்கு இந்நூல் நமக்குத் தெளிவாகப் பதிலளிக்கிறது. ‘தோரணைகளில் மிகவும் அசௌகரியமானது நேர்த்தியாக இருப்பதுதான். ஒரு வில்லாளன் கச்சிதமாக அம்பு எய்து அவன் இலக்கைத் துல்லியமாகத் தாக்க வேண்டும் என்று விரும்பினால் அதற்கு உதவக்கூடிய மிகச்சிறந்த தோரணை நேர்த்தியாக இருப்பதுதான் என்கிறார் ஆசிரியர். ‘மேலோட்டமாக இருக்கின்ற அனைத்தும் களையப்பட்டு எளிமையையும் கவனக் குவிப்பையும் ஒரு வில்லாளன் கண்டு கொள்ளும்போது நேர்த்தி அடையப்படுகிறது’ என்று நேர்த்தியாக இருப்பது எப்படி என்பதையும் அவரே கூறுகிறார். இது வில்லாளர்களுக்கு மட்டுமே பொருத்தமானதன்று. எல்லாருக்குமானது.
“ஓர் அம்பை எவ்வாறு தாங்கிப் பிடிக்க வேண்டும்” என்ற தலைப்பின்கீழே எழுதப்பட்ட மெய்களை வாழ்வில் கையாண்டால் ஒரு பெரும் தெளிவு நமக்குள் வரும். வில்தான் ‘ஜீவன்’. ஒரு வில்லை எவ்வாறு தாங்கிப் பிடிக்க வேண்டும் என்ற தலைப்பில் ஆசிரியர் கூறும் விடயங்கள் யாவும் நம் ஜீவனை அணைத்துக் கொள்வது போல் இருக்கும். “ஒரு நாணை எவ்வாறு இழுத்துப் பிடிக்க வேண்டும்” என்று கூறுகையில் ‘நாண் மிகவும் பெரியது. ஆனாலும் அம்பு அந்த நாணின் ஒரே ஒரு புள்ளியை மட்டுமே தொடும்’ என்கிறார் ஆசிரியர். மனித ஜீவன் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதன் நோக்கத்தை ஒரு புள்ளியில் செத்லுத்திப் பயணித்தால் மட்டுமே நாம் எதிர்நோக்கும் வெற்றி கைகூடும். வில்லாளனில் இவ்வாறாகப் பல தத்துவார்த்த வரிகள் இடம் பெற்றுள்ளன. நம் வார்த்தைத் தொகுப்பால் உணர்த்திவிட முடியாத பொருள்களை நம்முள் அவை உணர்த்துகின்றன. இது இந்நூலின் மேலும் ஒரு தனிச்சிறப்பு.
“ஓர் இலக்கை எவ்வாறு குறி பார்க்க வேண்டும்” என்று சொல்லும்போது ‘வில்வித்தை நம்முடைய தவறுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது’ என்றும் ‘பயத்தின் காரணமாகவோ அல்லது மகிழ்ச்சியின் காரணமாகவோ அம்பு எய்வதை மட்டும் நிறுத்தி விடாதே. ஏனெனில் வில்லின் மார்க்கம் முடிவற்றது’ என்றும் கூறுகிறார். வாழ்க்கையும் கூட அப்படித்தானே.
“அம்பு விடுபடும் கணம்” என்ற தலைப்பின் ஒவ்வொரு வரியும் நம் ஆசானாக மாறுகிறது. அம்பு விடுவதில் இரண்டு வகைகள் உள்ளன ‘ஆத்மார்த்தமான ஈடுபாடு இல்லாமல் வெறுமனே துல்லியமாக அம்பு எய்வது முதல் வகை’. ‘இரண்டாவது வகை ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் அம்பு எய்வதாகும்’ என்கிறார் ஆசிரியர். வில்வித்தையில் மட்டுமில்லாமல் ஆத்மார்த்தமான ஈடுபாடு இல்லாமல் வாழ்க்கையில் எந்த ஒரு காரியத்தைச் செய்தாலும் அது அர்த்தமற்றதாகவே இருக்கும் என்று தோன்றுகிறது. “மீண்டும் மீண்டும் பயிற்சி” என்ற தலைப்பில் நாம் ஏற்கனவே அறிந்த உலக உண்மைகளை இன்னும் ஆழமாய்ப் பேசுகிறார். ‘தேவையான அளவு பயிற்சிக்குப் பிறகு தேவையான அசைவுகளைப் பற்றி நாம் யோசித்துக் கொண்டிருப்பதில்லை. அவை நம் இருத்தலின் ஒரு பகுதியாக ஆகிவிடுகின்றன’ என்று மீண்டும் மீண்டும் பயிற்சிப்பதின் பலனைக் கூறுகிறார். இதுகுறித்து எடுத்துக்காட்டுகள் கூறியும் விளக்கியுள்ளார்.
“அம்பு பாய்ந்து செல்வதை எவ்வாறு கவனிக்க வேண்டும்” என்ற தலைப்பில் ‘அம்பை விடுவிக்கின்ற கணம் கச்சிதமாக இருப்பதை உள்ளுணர்வு உறுதி செய்கிறது’ என்று உள்ளுணர்வின் முக்கியத்துவத்தையும் ‘ஒவ்வோர் அம்பும் வெவ்வேறு விதமாய்ப் பறந்து செல்கிறது. நீ ஆயிரம் அம்புகளை எய்தால் அவை ஒவ்வொன்றும் முற்றிலும் வேறுபட்ட ஓர் ஏவுபாதையில் பயணிக்கும். அதுதான் வில்லின் மார்க்கம்’ என்று வாழ்வின் மார்க்கத்தையும் கூறிவிடுகிறார். வில்லாளன் நூல் ஒரு வில்லின் மார்க்கத்தைப் பயிற்றுவிக்கும் நூலாக மட்டுமில்லாமல் அதனுள் ஒரு கதைக்களமும் நம்மை ஈர்க்கும் வகையில் எழுதப்பெற்றிருக்கிறது. முதல் நூலின் சுவை மாறாது எளிமையாக விளங்கும்படி இந்நூலைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் நாகலட்சுமி சண்முகம் அவர்கள்.
வில்லை ஜீவனாக்கி அம்பை நோக்கமாக்கி இலக்கைக் குறிக்கோளாக்கி நூலாசிரியர் எழுதி இருக்கும் வரிகளில் வாழ்க்கைப் புதிர்களுக்கான விடைகள் கிடைக்கின்றன. வில்லாளன் ஒரு தத்துவார்த்த நூல். இதைப் படித்துவிட்டுக் கடந்து செல்லுதல் என்பது மிக இயல்பாக நிகழ்ந்துவிடாது. இப்படியாக தன் வார்த்தைகளால் வாசகர்களை ஏதோ செய்யும் எழுத்தாளர்கள் இலக்கிய உலகில் வெற்றி பெறுகிறார்கள். உண்மைகள் பேசியும் உணர்வுடன் இணைந்தும் வாழ்க்கைப் பயணத்திற்கு உதவும் இலக்கியம் வெற்றி அடைகிறது. வில்லாளன் வெற்றியாளன். l