பேரா. கவிதா
கோவையை மையமாகக் கொண்டு இயங்கி வரும், சிறுவாணி வாசகர் மையத்தின் ஏழாம்ஆண்டில், மாதம் ஒரு நூல் என்ற வரிசையில், பவித்ரா பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட நூல் இது. எழுத்தாளர் திரு. கா.சி. தமிழ்க்குமரன் அவர்களின் ‘மந்தைப்பிஞ்சை’ என்ற சிறுகதைத் தொகுப்பு. கதையாகச் சொல்ல முடியாத, கதையாகச் சொல்லக்கூடாத, வாசித்து அனுபவிக்க வேண்டிய, அனுபவித்ததை நினைவு கூரும் விதமான மொத்தம் 20 சிறுகதைகள்.
- முறிமுக்கால், 2. பெத்தவள், 3. ஏமிலாந்தி, 4. தசகூலி, 5.பூரிதக்குஞ்சலம், 6.ஊர்ச்சேவகம், 7. சம்சாரித்தனம், 8. விதிவிலக்கல்ல அப்பாவும், 9. என்ன சொல்லவோ, 10. பிசகு, 11. இராச குமாரன், 12. சக்தியை நோக்க, 13. மந்தைப்பிஞ்சை, 14. கொட்டாப்புளி, 15. உடுக்கை இழந்தவன், 16. வாழ்ந்தவர்கள், 17. மச்சான், 18. வனாந்திரம், 19.பெரும்போட்டுக்காரன், 20. ஆ…நீக்கம் கிராமத்திற்குப் போகாத, போக முடியாத நிலையில், அந்த ஏக்கம் தீர, கரிசல் கிராமத்து வாழ்வின் எதார்த்தங்களை உள்ளது உள்ளபடி சொன்னவையாக இருந்தன அனைத்துக் கதைகளும். கதைக்களத்திற்கு அருகில் நின்று பார்க்க முடிந்த, நம்மைப் பயணப்படுத்தும் கதைகள்.
13 வது சிறுகதையான மந்தைப்பிஞ்சையில் ஆரம்பிக்கப்பட்ட வாசிப்பு, உருண்டோடியது மாட்டு வண்டியின் சக்கரம் போல, நின்று நிதானமாக உள்வாங்க. அவ்வளவு ஆழம், அவ்வளவு அடர்த்தி கதைகளில் இடம் பெற்ற சொல்லாடல்கள். மொழியும் வாழ்விடமும் நமக்கானதல்ல என அந்நியப்பட்டு நகர்ந்து விடாமல் அனைவரும் வாசித்து அவரவருக்கான அனுபவத்தினை இணைத்துப் பார்க்கலாம் இக்கதைகளில். நிதானமாக வாசிக்கப்பட வேண்டிய கதைகள் அனைத்தும்.கதைகளில் எழுத்தாளரின் மொழி என்பது வாசிப்பாளருடனான ஓர் இணைப்புக் கருவியாக இருந்தது. அவரின் சொல்லாடலும் மனிதர்களை மனிதர்களோடு மனிதப்படுத்தும் ஓர் ஊடகம். பொத்துனாப்புல, வக்கனையா, இம்புட்டுக்காண்டு, அய்யரவில், பண்டுவம் பார்த்து, ஒருக்களிச்சு, சிறுக்கி, இப்படிக் கரிசல் மண்ணுக்கே உரிய பல சொற்கள் கதைகள் முழுவதும் மண் மனத்தோடு.
கவிஞர். தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டது போல், இக்காலப் பிள்ளைகளுக்கு, கரிசல் சொற்களைச் சொல்லித் தரவேண்டிய நேரம் வந்துவிட்டது. தமிழ்க் குமரன் கதைகளைப் படிக்கச் சொல்லியும் அதைச் செய்யலாம். ஆம், கிராமத்துச் சொல்லாடல்களுக்கு பழக்கம் இல்லாத இக்காலப் பிள்ளைகளுக்கு, அச்சொற்களை எடுத்துச்சொல்ல ஏதுவான கதைகளின் தொகுப்பு.
மாயத்திரை, ஊமைத்துயரம், பொலையாட்டு ஆகிய சிறுகதைத் தொகுதிகள், ஒறுப்பு என்ற நாவல் என எழுத்தாளரின் இன்னபிற படைப்புகளுடன், கரிசல் மண் கவளங்களாக 20 சிறுகதைகளின் தொகுப்பாக இந்நூல். இலக்கிய விருது மற்றும் பல்கலைக்கழகப் பாடத்தில் துணைப்பாடம் என கதையாசிரியர் பல களம் கண்டுள்ளார்.
கதை சொல்லிகளுக்கான கதைகளாக அனைத்தும் இருப்பது கதைகளின் கூடுதல் தரம். அக்கு வேறு ஆணி வேராகப் பிரித்து, சிலாகித்துப் பேசக் கதைகளின் போக்கும், களமும், தாக்கமும் உள்ளனவாக இருக்கும் தொகுப்பு. ஏமிலாந்தி என்ற சிறுகதையினை நாடகமாக நடத்தலாம். ‘விதிவிலக்கல்ல அப்பாவும்’ கட்டுரைச் சாயலில், நாட்டு நடப்பைப் பல சொலவடைகள் மூலம் சொல்லிச் செல்லும் கதை. //உரலுக்கு ஒரு பக்கம் இடின்னா மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் அடி// //கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்// //ஐந்தில் வளையாதது ஐம்பதில் எப்படி வளையும்//பழைய குருடி கதவைத் திறடி// இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுச் செல்ல// இப்படிக் கதைகள் முழுவதும் விரவிக் கிடக்கின்றன அன்றாடச் சொற்பிரயோகங்கள். வாழ்வின் தினசரியைச் சரியாகச் சொல்லி இருக்கும் கதையாக ‘என்ன சொல்லவோ’ கதை. தினசரியைச் சொல்வது அவ்வளவு எளிதல்ல என்பதற்காகவே பாராட்டுகள். பறவைகள் பல விதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் என்பது பறவைகளுக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என்பதைச் சொல்லிச் செல்கிறது ‘பெரும்போட்டுக்காரன்’ என்ற சிறுகதை.
பல ‘பிசகு’ லெட்சுமிகளையும், ‘இராசகுமாரன்’ ரோகிணிகளையும், ‘பூரிதக்குஞ்சலம்’ மீனாவையும், கூப்பிடும் தூரத்தில் பார்க்கலாம் நம் கரிசல் மண்ணில். ‘சம்சாரித்தனம்’ கதையின் நாயகன் போல ஊருக்கு ஒருவர் இருந்தால் கூட இந்த உலகம் பிழைத்துக் கிடக்கும். ‘பெத்தவள்’ கள் நிறைந்த நம் கரிசல் மண்ணில் ‘தசகூலி’ என்பது அப்ப அப்ப வந்து போகும் கண்ணீர் நிகழ்வு. இருப்பினும் ‘உழவே தலை’ என்பதை அறிவோம்.
செல்லத்துரை போல நாமும் விக்கித்து நிற்க ‘மந்தைப் பிஞ்சை’ கதை. ‘கொட்டாப்புளி’ கதை நாயகி சோலையம்மாள் ஊர்ப்பக்கம் வணங்கப்படும் ஒரு சிறு பெண் தெய்வத்தின் சாயல் என்பதில் ஐயமில்லை. ஊருக்கு ஓர் உடுக்கை இழந்தவர் இருப்பார் என்பதற்கு ‘உடுக்கை இழந்தவன்’ கதை ஒரு உதாரணம். வாழ்க்கை என்பதே வாழ்வுதான். வாழ்ந்து கெட்டவர்கள் என்றழைக்கப்படும் பொதுப்புத்திக்கு மத்தியில் ‘வாழ்ந்தவர்கள்’ என்று குறிப்பிடும் கதையாசிரியரின் வார்த்தை மயிலிறகின் வருடல்.
கரிசல் நில வெக்கை வாழ்வை அப்படியே ஏத்துக்கிட்ட ஆத்தா கதையாக ‘ஒச்சான்’ மொத்தம் உள்ள கதைகளில் ‘வனாந்திரம்’ ஓர் உள்வாங்க வேண்டிய விலகல் வகை. வட்டார மொழிக் கதைகளை வாசிப்பது ஒரு வகையில், ஆழமான முறையில் சுவாசித்தலுக்குச் சமம். வாழ்வின் கொறப்பொழுதையும் இம்மாதிரிக் கதைகள் வாசித்துக் கழிக்கலாம். கடவாய்ப் பற்கள் கொண்டு மனதைக் கடித்துக் குதறி ரத்தம் வரவழைப்பவையாக இல்லாத வகையான கதைகளாக இருப்பது ஆகப் பெரும் ஆறுதல். புனைவும் நிகழ்வும் கலந்த படைப்பாக ‘மந்தைப் பிஞ்சை’ இருப்பது ஆசிரியரின் எழுத்து பலம். கரிசல் மொழி ஒரு வகையான தேசாந்திரி போன்றது. உரையாடல்களில் எவ்வித செதுக்கலும் இல்லாமல் இயல்பாக இருக்கும் என்பதனால் வாசிப்புக்குக் கூடுதல் கவனம் தேவை. l