முனைவர் பே. சக்திவேல்
தமிழ் இலக்கிய வரலாற்றில் பத்தொன்பதாம் நூற்றாண்டு ஒரு குறிப்பிடத்தக்க நூற்றாண்டாகக் கவனம் பெறுகிறது. அதுவரை இலக்கியம் என்றாலே செய்யுள் நடையில் இருப்பது என்கிற நிலையே இருந்து வந்தது. உரைநடை என்பது ஒருபுறம் இருந்து வந்தாலும் இலக்கியத்தில் அது தொழிற்படவே இல்லை.
குறிப்பிட்ட வட்டாரங்களை அடிப்படையாக, கதைக்களமாகக் கொண்டு சில நாவல்கள் வெளிவரத் தொடங்கின. நாஞ்சில் வட்டாரம், கொங்கு வட்டாரம், கரிசல் வட்டாரம், தஞ்சை வட்டாரம் எனத் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட நிலவியல் பகுதிகளைக் கதைக்களங்களாகக் கொண்டு படைக்கப்பெற்ற நாவல்களே வட்டார நாவல்கள் எனும் தனி வகையாக அடையாளம் பெற்றன. குறிப்பிட்ட சாதி, வர்க்கம், தொழில் சார்ந்த வாழ்வியலை இத்தகைய நாவல்கள் பேசின. இத்தகைய நாவல்கள் அச்சு அசலான மண்ணின் வாழ்வியலை, பண்பாட்டைத் தரிசிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தின.
பெரம்பலூர் வட்டாரத்தைப் பொறுத்தவரை அண்மைக்காலமாகத்தான் தமிழ் நாவல் பரப்பில் கவனம் பெறத் தொடங்கியுள்ளது. எழுத்தாளரும் பேராசிரியருமான க. மூர்த்தி தொடங்கி வைத்த பெரம்பலூர் வட்டார நாவல் தடத்தின் அடுத்த கட்ட நகர்வை எழுத்தாளர் ச. மோகன் ‘குருதிப்பாடு’ நாவலின் வழியே முன்னெடுத்துள்ளார்.
பெரம்பலூர் வட்டாரத்தில் அமைந்துள்ள வெங்கலம் எனும் ஊரைச் சேர்ந்த நாவலாசிரியர் ச. மோகன், தம் ஊரைக் களமாகக் கொண்டு படைத்துள்ள ‘குருதிப்பாடு’ எனும் இந்த நாவல் தமிழ்ப் பண்பாட்டின் முக்கியமான, பெண் உடல் சார்ந்த ஓர் அசைவியக்கத்தைக் கருவாகக் கொண்டு வெங்கலம் எனும் ஊரின் அசலான வாழ்வை, அவ்வூரில் வாழ்ந்த; வாழும் மக்களின் இருப்பை, வெகு நுணுக்கமாக, அணுக்கமாக விவரித்துச் செல்கிறது.
வீரமுத்து – தெய்வானை தம்பதியர் அடுத்து ஆண் பிள்ளை, அடுத்து ஆண் பிள்ளை என ஒன்றுக்கு மூன்றாகப் பெண் பிள்ளைகளைப் பெற, தெய்வானை மீண்டும் கர்ப்பமுறுகிறாள். கணவனும் மனைவியும் இதுவாவது ஆண் பிள்ளையாக இருக்க வேண்டுமென வேண்டாத தெய்வங்களை எல்லாம் வேண்டுகின்றனர். ஆனாலும், பெண் பிள்ளையே பிறக்க அப்பிள்ளைக்குப் ‘போதும்பொண்ணு’ எனப் பெயர் வைக்கின்றனர். மூத்தவள் சமயபுரமும் கடைக்குட்டி போதும்பொண்ணும் மட்டுமே எஞ்ச இரண்டாவது, மூன்றாவதாகப் பிறந்த இரு பெண் பிள்ளைகளும் காலராவில் மடிகின்றனர். போதும்பொண்ணு சராசரிப் பெண் பிள்ளையாக வளர்ந்தாலும் உரிய வயதில் பருவம் அடையாமலே இருக்கிறாள். இதனால் பலவிதமான அவமானங்களையும், ஏமாற்றங்களையும் சுமந்தபடி வாழ்கிறாள். பற்றுக்கோடெனக் கருதும் செங்கோடனும் அவளைப் புறக்கணிக்க, பிளேடால் வயிற்றை அறுத்துக்கொண்டு முப்பத்தொன்பது வயதில் பூக்காமலே மடிந்து போகிறாள். இதுதான் இந்நாவலின் கதை. பெண்ணாகப் பிறந்து பூப்படையாமல் இருப்பதால் ஊராராலும் சமூகத்தாலும் அவள் அடையும் அவமானங்கள், வெங்கலம் கிராமத்தில் அவளது இருப்பு, உறவு, நட்பு, செங்கோடன் என்பவன் அவளை உடல் சுகத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வது எனக் கதை விரிகின்றது.
நாவலாசிரியர் எடுத்துக்கொண்டுள்ள கரு மிக முக்கியமானது. தமிழ்ப் பண்பாட்டைப் பொறுத்தவரை ஆணோ, பெண்ணோ அவர்கள் பிறந்து பருவமெய்தி, மணமுடித்து, பிள்ளைகளைப் பெற்றெடுத்துச் சராசரியாகவேனும் வாழ்ந்து மடிவதே முழுமையான வாழ்வாகக் கருதப்பெறுகின்றது. அதிலும் பெண் என்பவள் பூத்து, காய்க்க வேண்டும். இல்லையேல் அவள் பெண் எனும் தகுதியை எட்டியவளாகக் கருதப்படுவதில்லை. இத்தகையவள் வெறும் உடல்தான்; ‘பண்பாட்டு உடல்’ அல்லள். திருமணமாகாது, பருவ வயதில் இறப்போருக்கு எருக்கமாலையை அணிவித்து ஈமச் சடங்குகளைச் செய்வதும், திருமணமாகாமல் மாண்ட கன்னிப் பெண்களைத் தெய்வமாக வழிபடுவதுமான தமிழர் வழக்கங்கள் ஆணையும், பெண்ணையும் மனித உயிர்களை உற்பத்தி செய்யும் பண்பாட்டு உடல்களாக; பண்பாட்டு உயிர்களாகக் கருதுவதன் பின்னணியில் அமைவனவேயாகும். இந்தப் புரிதலின் அடிப்படையில் நோக்கும்போதுதான் நாவலில் விவரிக்கப்பெறும் போதும்பொண்ணின் உணர்வுகளை, வலிகளை, ஆசைகளை, ஏக்கங்களை நாம் புரிந்து கொள்ளவும் விளங்கிக்கொள்ளவும் முடியும்.
இந்நிலையில், நாவலாசிரியர் முக்கியமான ஒரு பண்பாட்டு நடத்தையைக் கதைப் பொருளாக்கியுள்ளார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது. பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் குருதிப் போக்கை, உதிரப்பாடு, பெரும்பாடு எனும் பெயரில் குறிப்பது கிராமத்து வழக்கம். இங்குப் பூப்புக் குருதி வெளியேறாத போதும்பொண்ணுவின் வலியைப் பெரும்பாடாகக் கருதி, ‘குருதிப்பாடு’ என நாவலுக்குப் பெயரிட்டுள்ள நாவலாசிரியரின் நோக்கு குறிப்பிடத்தக்கது; பாராட்டத்தக்கது. தன் வாழ்நாளில் குருதிப்பாட்டைக் காணாதபோதும் போதும்பொண்ணுவின் வாழ்க்கைப் பாட்டைச் சிறப்பாக எடுத்துரைத்துள்ள நூலாசிரியர் பெண்ணின் அகவெளியை நுணுக்கமாக அவதானித்துள்ளார்.
வட்டார நாவல்களைப் பொறுத்தமட்டில் நாவலின் உயிர்ப்புக்கு அடிப்படையாக அமைவனவற்றுள் பாத்திரப்படைப்பு மிக முக்கியமானது. போதும்பொண்ணு, கூந்தையம்மாள், பாஞ்சாலை, வெள்ளச்சி, சமயபுரம் முதலான பெண்களும் வீரமுத்து, செங்கோடன், காங்கமுத்து, சீதக்காதன், தம்பிக்காளை முதலான ஆண்களும் மண் சார்ந்த மனிதர்களாக, ஆசாபாசங்களைக் கொண்ட சராசரி மனிதர்களாக, வாழ்வின் சுகங்களை, துயரங்களை, அவமானங்களை ஏற்றுக்கொண்டு வாழ்பவர்களாக நாவலில் வாழ்கிறார்கள். தங்களின் இயல்பான வாழ்வின் ஊடாக நமக்கு மிக நெருக்கமானவர்களாகிறார்கள். இத்தகைய மனிதர்களை இலட்சியவாதிகளாக இல்லாமல் வெள்ளந்திகளாக, இயல்பானவர்களாகப் படைத்துக் காட்டியுள்ள நாவலாசிரியர் பாத்திரப்படைப்பில் வெற்றி பெறுகிறார். இவர்களில் சிலர் சூழ்நிலையால் தவறு செய்பவர்களாகிப் பின்னர்க் குற்றவுணர்வுக்காளாகும் இயல்பான மனிதர்களாகிறார்கள்.
ஒரு நாவல் வட்டார நாவல் என அடையாளப்படுத்தப்படுவதற்கு அதன் மொழிநடையே அடிப்படையாகிறது. அன்றாடப் பேச்சில் வெளிப்படும் வசவுச் சொற்கள், சொலவடைகள், உவமைகள், உருவகங்கள், உழைப்புக் களத்தில், சடங்குகளில், இறப்பில் வெளிப்படும் நாட்டுப்புறப் பாடல்கள் ஆகியவையே நாவல் குறிப்பிட்ட பிரதேசத்தைப் பற்றிய சித்திரிப்பை முன்வைத்துள்ளது எனும் உணர்வை ஏற்படுத்துபவை. இந்த வகையில் நாவலாசிரியர் அசலான பெரம்பலூர் வட்டார – வெங்கலம் கிராமத்தின் மொழியை வெகு சிறப்பாக நாவலில் கையாண்டுள்ளார். கதையை எடுத்துரைப்பதிலும் கதைப்போக்கில் இடம்பெறும் வருணனைகளிலும் பாத்திரங்கள் குறித்த விவரிப்பிலும், உரையாடல்களிலும் மொழியை இலாகவமாகவும், நுட்பமாகவும் பயன்படுத்தியுள்ளார். நாவலாசிரியர் நாவல் முழுக்கப் பல சொலவடைகளை உரையாடலில் இயல்பாகப் பதிவு செய்துள்ளார். உவமைகள் வெகு எதார்த்தமானவையாக மண் சார்ந்தவையாக வெளிப்படுகின்றன.
‘உப்புண்ணா கைக்கணும், ஊசின்னா தைக்கணும்’ (ப. 27), ‘கண்ணுல பட்டா கரிக்குமா? புருவத்துல பட்டா கரிக்குமா? (ப. 25), ‘கொல்லம் புடுக்குல நெருப்பு விழுந்த மாதிரிதான்’ (ப. 21), ‘கோழிச் சண்டை கோர்ட்டு வரைக்கும்’ (ப. 46) போன்று பல சொலவடைகள் நாவலில் இயல்பாக மண்மணத்தைப் பறைசாற்றி வலம் வருகின்றன. பக்கம் பக்கமாகச் சொல்ல வேண்டிய செய்திகளை இந்தச் சொலவடைகள் பக்குவமாகச் சொல்லிவிடுகின்றன. ‘‘பெரியேரிக் கரையிலிருந்து பெண்ணின் தலைவகிடுபோல நேர்க்கோடாய் இறங்கும் மதவு வாய்க்கால்’’ (ப. 14), ‘‘ஊருணி, தேரு, திருநான்னும் எப்பவும் கலகலப்பாக இருக்கும் வெங்கத்தில் பொண்ணு மட்டும் கலகலத்துப்போன பழைய கட்டில்கால் மாதிரி உலுத்துக் கிடந்தாள்’’ (ப. 15), ‘‘சட்டை போடாத அவனது நெஞ்சு பொளந்து போட்ட செறாவாட்டம் இருந்தது’’ (ப. 17), ‘‘அக்கா அக்கா என்று அவளோடு முருங்க மரத்துக் கோந்து மாதிரி ஒட்டிக்கொண்டான்’’ (ப. 41) என உவமைகளை எளிமையாக மண் சார்ந்த கருப்பொருள்களைக் கொண்டே புலப்படுத்துகிறார் நாவலாசிரியர். இவ்வாறே வருணனைகளும்கூட வெகு இயல்பான எளிய மொழியின்வழியே புலப்படுத்தப்பட்டுள்ளன. சீரங்கத்துச் சீமையிலே சீரோட பொண்ணுருக்க/ சேலத்துப் பட்டணத்துல / காரோட பொண்ணுருக்க/ யாருட்டயும் சொல்லாம/ பாடையில போகுறியே (ப. 63) என ஆங்காங்கே (பக். 64, 103, 121, 146) இடம்பெறும் ஒப்பாரிகள் சோகத்தின் குரலாக, வலியைக் கடத்தும் வழியாகக் கதைப்போக்கில் ஆங்காங்கே இடம்பெறுவது கதைப்பொருளுக்குக் கனத்தையும், மண் வாசத்தையும் ஒருசேரத் தந்துவிடுகிறது.
கதையோடு, கதை மாந்தர்களோடு நெருக்கம் பாராட்ட நாவலாசிரியரின் மொழியாளுமை பெரிதும் பயன்படுவதாய் உள்ளது. திருவிழாக்களும் ஊருணிப் பொங்கலும், கிடா வெட்டும், அம்மாயி கும்பிடுதலும் நேர்ந்து கொள்ளுதலும், குறிகேட்டலும் வெங்கலம் கிராமத்து மக்களின் சமய வாழ்வை, அது உலக வாழ்வின் நலத்தை அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளதைக் காட்டுகின்றன. ஆறுகள், ஏரிகள், குளங்கள், ஊர்கள் பற்றிய தொன்மங்களும், பழங்கதைகளும், மருத்துவ முறைகளும், உணவுகளும் நாவலின் பிரதேச எல்லைக்கு உயிர்ப்பைக் கூட்டுகின்றன. அரவான் கூத்தும், ஒப்பாரிகளும், வெங்கலம் மண்ணின் கலையாகவும் இலக்கியமாகவும் வெளிப்படுகின்றன. நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், சடங்குகள் ஆகியவற்றின் வழியே வெங்கலம் கிராமத்தின் அசலான வாழ்க்கை நாவலில் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
நாவலாசிரியர் நிலவியல் அறிவுடையவராக, பண்பாட்டு அறிவுடையவராக, சூழலியல் புரிதலுடையவராக, வாய்மொழி இலக்கியங்களை ஆழமாகப் புரிந்துகொண்டவராக வெளிப்படுவதை நாவலின் பக்கங்கள்தோறும் புலப்படுத்துகின்றன. நாவலில் இடம்பெறும் சொற்கள் ஒரு வட்டாரச் சொல்லகராதியை உருவாக்குமளவிற்கு ஆழமானவையாக, பரவலாக இடம்பெற்றுள்ளன. (நாவலாசிரியர் இந்த முயற்சியிலும் ஈடுபடலாம்) இதற்கு நொய்த்திரியமா (ப. 130), கிருமமா (ப. 130), செடலு (ப. 131), மனப்பெராக்காய் (ப. 132), அரிபரியாய் (ப. 132), குமுந்துகொண்டு (ப. 133), லெவுகா (ப. 135), மொறப்பாட்டுக்காரி (ப. 135) எனும் சொற்களைச் சான்று காட்டலாம்.
கனமான கருப்பொருள், செறிவான எடுத்துரைப்பு, ஈர்க்கும் மொழிநடை, இயல்பான மாந்தர்கள், அசலான மண்ணின் மொழி; வாழ்வியல் என அனைத்து நிலைகளிலும் மிகுந்த கவனம் பெறும் இந்த நாவல் வட்டார நாவல் வரிசையில் குறிப்பிடத்தக்க இடத்தைப்பெறுகிறது. ஒரு வட்டாரத்தின் உயிர்ப்பு மிக்க வாழ்க்கையை மிகச் சிறப்பாக எடுத்துரைத்துத் தமிழ் நாவல் மரபுக்குச் சிறந்த கையளிப்பைச் செய்துள்ள நாவலாசிரியர் ச. மோகன் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் உரியவராகிறார். l
