சு. ராஜா
வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட பராந்தகப் பாண்டியன் என்னும் நாவல், புனைவைக் காட்டிலும் வரலாற்றுத் தரவுகளையே மிகுதியாகக் கொண்டது எனலாம். வெகுவான எழுத்தாளர்கள் புனைவைக் கூறுவதற்காக வரலாற்றுத் தரவுகளைத் துணையாகக் கொள்வர். ஆனால், இந்நாவலின் ஆசிரியர் வரலாற்றைக் கூறுவதற்காகப் புனைவைத் துணையாகக் கொண்டது பாராட்டுதற்குரியது. இதன் மூலம் வரலாற்றின் மேல் இந்நூல் ஆசிரியருக்கு இருக்கும் காதலை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
மதுரையைத் தலைநகராகக் கொண்டு பராந்தகப் பாண்டியன் என்னும் மன்னன் இருபது ஆண்டுகள் ஆட்சி புரிந்துள்ளான். அன்றைய பாண்டியநாடு பல கூற்றங்களாகவும், வளநாடுகளாகவும் பிரிக்கப்பட்டிருந்தது. இதில் சிறிய பிரிவு கூற்றம் எனவும், பல கூற்றங்கள் கொண்ட பெரும் பிரிவு வளநாடு எனவும் அழைக்கப்பட்டது.
பாண்டிய நாட்டின் நிலப்பரப்பில் பிரிக்கப்பட்டிருந்த நாடுகளின் பெயர்களை மிக நேர்த்தியாக நம்முன் பட்டியலிட்டுக் காட்டிக்கொண்டே தோரண வாயில் திறக்கிறது. எல்லா வரலாற்று விடயங்களையும் தன் கற்பனையில் அல்லாமல் சரியான ஆதாரங்களோடு எடுத்துக் கூறியுள்ளமை உற்று நோக்கத்தக்கதாக உள்ளது.
பராந்தகப் பாண்டியனுக்கு முன்பு ஆட்சி புரிந்தவர்களின் கால வரையறை, மன்னர்களின் வரிசை, அவர்கள் ஆட்சி புரிந்த பகுதிகள் போன்றவற்றைச் சரியான வரலாற்று நூல்களின் மேற்கோள்களோடு எடுத்துக் கூறியுள்ளார். மேலும், வரகுண பாண்டியரின் ஆட்சிக் காலத்தில் முதலமைச்சராக இருந்த மாணிக்கவாசகரின் வரலாற்றில் ஏற்படும் குழப்பத்தைத் தனது கற்பனை முறையின் மூலம் தெளிவாக்க முயன்றுள்ளார். அதற்காக மாணிக்கவாசகருக்கு ஒரு தம்பியை உருவாக்கி அவருக்குக் கற்பனைப் பெயர் மற்றும் பட்டப் பெயர் அளித்து இக்கதைக்கு வலுச் சேர்த்துள்ளார். மேலும், மிகவும் வியக்கத்தக்க வகையில் நாவலில் பார்க்க முடிந்தது யாதெனில், அன்றைய காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்களின் சரியான பெயர்களின் தொகுப்பை இந்நூலில் நாம் மொத்தமாகப் பார்க்க முடியும். அக்காலத்தில் புழக்கத்தில் இருந்த ஆபரணங்களான, தலையணிகள், காதணிகள், கழுத்தணிகள், புய அணிகலன்கள், கை அணிகலன்கள், கைவிரல் அணிகலன்கள், கால் அணிகலன்கள், கால் விரல் அணிகலன்கள் போன்றவற்றை வரிசையாகத் தெளிவான பெயர்களோடு குறிப்பிட்டுள்ளமை கவனிக்க வேண்டிய ஒன்று. அணிகலன்கள் சார்ந்து ஆய்வு செய்வோர் பயன்படுத்த வேண்டிய முக்கியமான நூல்களில் இந்நாவலும் ஒன்று.
கதையானது கற்பனைப் பாத்திரமான இளம்பரிதி என்னும் வீர தீர இளைஞனிடமிருந்து தொடங்குகிறது. பராந்தகப் பாண்டியனின் அரச வம்சத்தைக் காக்கும் பொறுப்பு நிறைந்த வழுதிமாறன் என்ற சிற்றரசர்தான் இளம்பரிதியின் தந்தை. தந்தை வழுதிமாறன் கொடுத்த பொறுப்பினை ஏற்று மதுரையை நோக்கி விரைகிறான் இந்த இளைஞன். அவன், தான் செல்லும் பாதைகளில் உள்ள அழகியலை ரசித்துக் கொண்டே செல்கிறான். பாதையில் உள்ள காட்சியின் வர்ணனைகளை மிக அழகாகக் கூறியதில் எழுத்தாளரின் கை வண்ணம் மிளிர்கிறது. இடையே எழினி என்னும் இளம் மங்கையைக் கண்டு காதல் கொள்கிறான். நாவலில் அவர்களின் உரையாடலும், இளம்பரிதி குதிரையைப் பெயர் சொல்லி அழைத்து அதனோடு உறவாடுவதுமென உணர்ச்சி பொங்க கதை நகர்கிறது.
ஆபத்தில் சிக்கியிருக்கும் இளம் மங்கையான எழினியைக் காப்பாற்றி அவளுக்கு ஏற்பட்டிருக்கும் காயங்களை மருத்துவரின் உதவியோடு குணப்படுத்துகிறான். முதன் முதலில் ஒரு பெண்ணிடம் ஆண் கொள்ளும் தவிப்பையும், ஒரு நாள் பழகி இருந்தாலும் நம்மை நம்பியவளுக்காக உதவி செய்ய வேண்டும் என்கிற பண்பையும் ஒருங்கே காட்டி இருப்பது சிறப்பான ஒன்று. இருவரும் மதுரையை நோக்கிச் செல்லும் நிகழ்வை, சொல்லும் அழகு ரசிக்க வைத்தது. அவர்கள் இருவரும் மதுரையை அடைகிறார்கள். இளம்பரிதிக்கு நிகழும் சிறைவாசம், கழுகுச் சின்னம் பொறிக்கப்பட்ட கத்தி, எழினியின் மனமாற்றம் போன்றவை மர்மத்தைக் கொடுத்துக் கதையை நகர்த்துகின்றன. பராந்தகப் பாண்டியனின் உடலில் ஏற்பட்டுள்ள காயத்தை ஆற்றுவதற்குத் திட்டம் தீட்டும் நிகழ்வு மிகவும் தெளிவாகப் பேசப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பின் தனது மகனைப் பார்க்கும் வழுதிமாறன் மற்றும் அவரது மனைவியின் பாசப் போராட்டம் நெகிழ்ச்சி அடைய வைக்கிறது. அரண்மனையின் வாயில்கள், ரகசியச் சுரங்க அறைகள், போர் வீரர்களின் தற்காப்புக் கருவிகள், ஒற்றர்களின் தேர்வுகள் என ஒவ்வொன்றையும் விளக்கிக் கூறியிருப்பது, அவற்றை நேரில் பார்ப்பது போன்ற உணர்வைத் தருகிறது. அமைச்சரின் தெய்வீகப் பற்றும் ஆயுதத்தின்பால் அவர் கொண்ட மதிநுட்பமும் சிறப்பானது.
மன்னரின் உயிரைக் காப்பதற்காக மன்னருக்கு அருகிலேயே எப்போதும் இருப்பவரை ஆபத்துதவி என்பார்கள். ஒருவேளை மன்னர் இவரின் பாதுகாப்பை மீறி இறந்து விட்டால், இவரும் மன்னரின் சிதையில் விழுந்து உயிரை விடும் அளவிற்கு விசுவாசியாக இருப்பார்.
பராந்தகப் பாண்டியனின் அப்படிப்பட்ட ராஜ விசுவாசிகளான பைரவன், ருத்ரன் போன்றோரைச் சரியாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். இளம்பரிதியும், எழினியும் காதல் கொள்ளும் காட்சிகள் தித்திப்பானவை. சுயமாகக் கவிதை புனைந்து அதைக் கதாபாத்திரத்தின் ஊடாக எழுத்தாளர் பதிவு செய்திருப்பது அவரின் கவித்திறமையைக் காட்டுகிறது. இடையிடையே வரலாற்று நிகழ்வுகளையும், இலக்கியப் பாடல்களையும் கதையின் மாந்தர்களின் ஊடாக எழுத்தாளர் சொல்லிச் செல்கிறார். சிவிகை, பல்லக்கு, உடைகள், ஆபரணங்கள், ஆயுதங்கள் என்று கூறப்படும் அனைத்துமே அக்காலத்தில் உண்மையிலேயே இருந்தவை என்பதுதான் இந்நாவலுக்கு மேலும் பலம் சேர்க்கிறது. ஒவ்வோர் அத்தியாயம் முடியும் போதும் ஏதோ ஓர் எதிர்பார்ப்பை வாசகர்களின் மனதில் புகுத்தி நகர்வது எழுத்தாளருக்கே உண்டான தனிச்சிறப்பு.
நாட்டில் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. அதனால், பராந்தகப் பாண்டியனின் உடலில் ஏற்பட்டிருக்கும் காயத்தை அகற்றுவதற்காகத் தலைமறைவாக நாட்டை விட்டு வெளியேறி, கபிலன் என்னும் மருத்துவரின் குடிலை அடைந்து அங்கே வைத்தியம் பார்க்கிறார்கள்.
ஒவ்வொரு மருத்துவ முறையும், பத்தியமும், மூலிகைப் பெயர்களும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளவை. நவகண்டம், அரிகண்டம், யமகண்டம் பொன்றவற்றைப் பற்றி வசிக்கும் போது உடல் நடுங்குகிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அறிமுகப்படுத்தி, அவர்களைப் பற்றிய வரலாற்றையும், முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறிக் கதை நகர்கிறது. தனது வாரிசை அரியணை ஏற்றுவதற்குப் போராட்டமும், சூழ்ச்சிக் குணமும் நிறைந்த யாழினி தேவியைப் பற்றி ருத்ரன் பரிதியிடம் எடுத்துக்கூறும் பகுதிகள் திடுக்கிட வைப்பவையாக இருக்கின்றன. மன்னரின் அருகிலேயே இருந்து அவரைக் காத்து வந்த இளம்பரிதி திடீரென அவரை விட்டு நகர்ந்து வேறொரு கோட்டைக்குச் செல்ல வேண்டிய நிலை. அந்தக் கோட்டையையும், அதன் இளவரசியான நுவலியையும் பற்றி விவரிக்கும் இடங்கள் அழகானவை. அவள் படுத்துறங்கும் கட்டிலானது, போரில் வீழ்ந்த யானையின் தந்தத்தின் பக்கங்களைச் செதுக்கி அலங்கரிக்கப்பட்டு இருந்தது என்பது விவரிப்பின் உச்சம். நுதலி என்னும் இளவரசிக்கும் இளம் பரிதிக்கும் உண்டான ரகசிய உரையாடல்கள், அரண்மனையில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்கள், நுவலி அரண்மனையை விட்டுத் தப்பிக்கப் பரிதி செய்யும் உதவி என்று கதை நீள்கிறது. ஓர் இளம் பெண்ணுடன் ஆடவன் கொள்ளும் ஸ்பரிச உணர்வை அகப்பாடல்களின் துணைகொண்டு விவரித்திருக்கும் இடங்கள் அழகோ அழகு.
யாழினி தனது மகனை நுவலிக்குத் திருமணம் செய்து வைக்க விரும்புகிறாள். ஆனால் நுவலியோ திருமணத்தில் சிறிதும் நாட்டம் இல்லாமல் இருக்கிறாள். நுவலியைத் தனது மகனுக்குத் திருமணம் செய்து வைத்தால், பராந்தகப் பாண்டியனுக்குப் பிறகு பாண்டிய நாட்டைத் தனது மகனான மகிழ்மாறன் ஆளலாம் என்பது யாழினியின் திட்டம். இந்தச் சதி வேலைகளை எவ்வாறு உடைக்கிறார்கள், மகிழ்மாறனின் சூழ்ச்சிக்கு என்ன தண்டனை கிடைக்கிறது என்ற பரபரப்போடு கதை நகர்கிறது. யாழினி தேவியின் நாட்டின் மேல், உடல் நலம் மீண்டு வந்த பராந்தகப் பாண்டியர் போர் தொடுத்து வெல்கிறார். கோட்டையின் நிர்வாகியான உக்கிர வழுதி எவ்வளவோ முயன்றும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. யானையைப் பற்றிய மிக விரிவான ஓர் ஆய்வையே எழுத்தாளர் நடத்தியுள்ளார் என்று கூறலாம். பண்டைய காலத்தில் யானைக்கு இருந்த பெயர்களாக மட்டுமே அறுபத்து மூன்று பெயர்களைப் பட்டியலிட்டு இருப்பது படிப்பவரை ஆச்சரியத்தின் விளிம்பிற்கே கொண்டு செல்கிறது. மேலும் போர்க்கள ஆயுதங்களாக வீரர்கள் வைத்திருக்கும் முப்பது விதமான ஆயுதங்களின் பெயர்களை ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார். போருக்கான ஆயத்தங்கள், வியூகங்கள், போரில் வீரர்கள் காயம் அடைவது, மரணம் அடைவது, குதிரைகள் வீழ்வது, அதன்மேல் எதிரி நாட்டு வீரர்கள் சவாரி செய்வது, யானை விழுவது, யானையின் மேல் பராந்தகர் அமந்து ஈட்டி எறிவது என்று ஒரு போர்க்களத்தையே நேரில் பார்ப்பது போன்ற உணர்வை நாவல் தருகிறது. படையோடு படை மோதி அழிந்த பின்னர் இரு அரசர்களும் தனித்து மோதிக் கொள்ளும் போருக்கு அறத்தின் மண்டல் என்று பெயர். இந்த அறத்தின் மண்டல் முறையில் பராந்தகரும், உக்கிர வழுதியும் போரிடுவதாகச் சித்தரித்திருப்பதும், இதில் ஏற்பட்ட சூழ்ச்சியில் இருந்து மன்னனைக் காக்க இளம்பரிதி தன் உயிரையே பயணம் வைப்பதும் கதையின் உச்சபட்சத் தருணங்கள் ஆகும். கரவந்தபுரப் போரில் உக்கிரனை வீழ்த்தி வெற்றி பெற்ற பராந்தகர், அதற்கு அடுத்ததாகக் கொங்கு நாட்டரசனை வெற்றி கண்டு அடிபணியச் செய்தார். உக்கிரன் திருந்தி வாழ விழைகிறான், அமைச்சர் சதாசிவப் பிரம்மராயரின் இளமைக் காலத்துக் காதலியின் மரணத்திற்குக் காரணமானவன் கொலை செய்யப்படுகிறான், இளம்பரிதி, எழினியின் திருமணம் இனிதே நடைபெறுகிறது, பராந்தகப் பாண்டியர் மதுரை நாட்டைச் சீரும் சிறப்புமாக ஆள்கிறார் என்பதாக இந்நாவல் நிறைவு பெறுகிறது. மிகவும் சிறப்பு வாய்ந்த சரித்திர நிகழ்வுகளைப் புனைவினைச் சேர்த்து நாவலாக்கி இருப்பது தனிச்சிறப்பாக அமைகிறது. பாண்டிய வரலாற்றை ஆய்வு செய்பவர்கள், பண்டைய ஆபரணங்களைப் பற்றி ஆய்வு செய்பவர்கள், ஆயுதங்களைப் பற்றி ஆய்வு செய்பவர்கள், புனைபெயர்களைப் பற்றிய ஆய்வு செய்பவர்கள், ஊர்ப்பெயர் ஆய்வு செய்பவர்கள், போர்க்கால நிகழ்வுகளைப் பற்றி ஆய்வு செய்பவர்கள் என்று அனைத்து விதமான ஆய்வாளர்களுக்கும் பயன்படும் விதமாக இந்நாவல் உருவாக்கப்பட்டுள்ளது என்றே கூறலாம். ஏராளமான சங்க இலக்கியப் பாடல்கள், திருக்குறள், சிலப்பதிகாரம் போன்றவை மேற்கோள்களாகக் காட்டப்பட்டுள்ளன. மேலும், மலர்களின் பெயர்கள், சிறு நாடுகளின் பெயர்கள், கடைத்தெரு, மருத்துவம், கட்டில்கள், பெண்ணின் வர்ணனை என்று பலவிதங்களில் தெளிவானதோர் ஆய்வு நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது இந்நாவல். l