மயிலம் இளமுருகு
திரு ஆ. தி பகலன் அவர்கள் தமிழ் கற்பித்தல், தமிழ்ப் பணி திருக்குறள் பணி என்று தன்னுடைய ஆகச் சிறந்த செயல்பாட்டால் தமிழ்ச் சமூகத்திற்குச் சிறப்பான பணியைச் செய்து கொண்டு வருகின்றார். அவருடைய பணி தமிழுக்குத் தேவையான ஒன்றாகவே இருக்கின்றது. இவர் ஏற்கனவே பல நூல்களை எழுதி உள்ளார். குறிப்பாக வள்ளலார் கண்ட தருமச்சாலை என்ற நூல் அனைவராலும் பாராட்டப்பட்ட நூலாக திகழ்கின்றது. இந்நூல் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பாடநூலாகவும் வைக்கும் அளவிற்கு தகுதி பெற்றுள்ளது. மாணவர்களுக்குத் திருக்குறளை எளிமையாகவும் அதே சமயத்தில் அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் கற்பித்து, மாணவர்கள் சாதனை புரியும் அளவிற்கு இவர் சாதனை புரிந்து கொண்டு வருகின்றார்.
இவருடைய அயராத பணி ஆச்சரியமூட்டுவதாகவே இருக்கின்றது. அந்த வகையில் தற்போது தமிழ் அறிவோம் என்ற தலைப்பில், தினந்தோறும் ஒரு பதிவைத் தந்து பல்வேறு கருத்துகளைத் தமிழ்ச் சமூகத்திற்குக் கொடுத்துள்ளார். இப்பதிவு அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக அவருடைய இயல்பான எழுத்து நடையில் அமைந்துள்ளது.இக்கட்டுரைகள் இன்றைய காலத்திற்கு மிகவும் தேவையானவையாகவே இருக்கின்றது.
குறிப்பாக தமிழ் இலக்கியம் சார்ந்து பயணிப்பவர்களுக்கும் மாணவச் செல்வங்களுக்கும் நல்ல ஓர் உறுதுணையாகவும் விளங்குகின்றது. இவர் எழுதிய இக்கட்டுரைகள் பல்வேறு பொருண்மைகளில் அமைகின்றன. அப்படி பார்க்கின்ற போது பல்வேறு கட்டுரைகள் சொற்களுக்கான விளக்கங்களைத் தருவனவாக உள்ளன. எந்தச் சொல் சரியானது எதைப் பயன்படுத்த வேண்டும் என்ற வகையில் அவை அமைந்துள்ளன.
நூல் செய்திகளை அதாவது ஒரு குறிப்பிட்ட நூலை எடுத்துக்கொண்டு அந்த நூலில் சொல்லப்பட்டுள்ள கருத்துகளுள் எவையெவை முக்கியமானவை என்று கூறுவதன் வாயிலாக அந்த நூலைப் படிக்கின்ற ஆர்வத்தைப் படிப்பவர்களுக்கு ஏற்படுத்துகின்றார். வாழ்க்கை நடைமுறைகளை இந்தத் தொடர் கட்டுரையில் பதிவு செய்திருக்கின்றார். வாழ்க்கைக்கு எது தேவை, எது தேவையற்றவை என்றும் நீதிநூல் சார்ந்த கருத்துகளைத் தொடர்ந்து கவனத்திற்கு உட்படுத்திக்கொண்டு வருகின்றார்.
ஒளவையார் குறித்து பல கட்டுரைகள் இதனுள் இருக்கின்றன. ஒளவையாரின் ஒழுக்கம் சார்ந்த, மக்கள் பின்பற்ற வேண்டிய கருத்துகளையும் இவர் இந்நூலில் எளிமையாகக் கூறியுள்ளார். பாரதியார் குறித்தும் பாரதிதாசன் குறித்தும் மிகச் சிறப்பான கருத்துகளைத் தந்துள்ளார்.
காலத்தின் தேவை குறித்தும் தன்னம்பிக்கை பற்றியும் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் அழகாக எழுதி இருக்கின்றார். சித்தர் பாடல்களைக் குறிப்பிட்டு அப்பாடல்களில் சொல்லப்பட்டுள்ள கருத்துகளையும் இதனுள் பதிவு செய்துள்ளார். தமிழ், தமிழர், தமிழர் பெருமிதம் போன்றன இவரது கட்டுரையில் அவ்வப்போது இடம் பெற்றுள்ளன. தமிழ்ச்சொற்கள் குறித்தும் சொற்களுக்கான விளக்கங்களை விளக்கிய விதமும் மிகச் சிறப்பாக உள்ளது. வள்ளல்கள் குறித்தும் அதில் குறிப்பாகக் கடையேழு வள்ளல்கள் குறித்தும் மிக விரிவாகவே எழுதி இருக்கின்றார்.
தமிழ் இலக்கியம் சார்ந்து மட்டும் இல்லாமல் தமிழ் இலக்கணம் சார்ந்த கருத்துகளையும் ஆங்காங்கே பதிவு செய்து வந்துள்ளார். தனித்தமிழ் இயக்கத்தின் வரலாறு குறித்தும் திரு.வி.க, மறைமலையடிகள் போன்றோரின் தமிழ்ப்பயணங்கள் குறித்தும் அவரது எழுத்து நடை, அவர்களின் படைப்புகள் குறித்தும் எழுதியுள்ள விதம் அருமை. இயற்கை சார்ந்த கருத்துகளையும் இதனுள் காண முடிகின்றது. தமிழில் பெயர் வைப்பது என்பது இன்று குறைந்து கொண்டே வருகின்ற சூழலில், தமிழில் பெயர் வைக்க வேண்டிய அவசியத்தைப் பகலன் குறிப்பிட்டுள்ளமை கவனிக்கத்தக்கது. உயிர் இரக்கம் என்பதனையும் அன்பு, கருணை போன்றவற்றைத் தகுந்த உதாரணங்களோடும் இன்றைக்குத் தேவையான வகையில் குறிப்பிட்டுள்ளமை சிறப்பு. தாயுமானவர், பட்டினத்தார் பாடல்கள் என்று ஆங்காங்கே பலரது படைப்புகளையும் அறிமுகம் செய்ததோடு அப்படைப்புகள் குறித்துச் சிந்திக்கவும் வைப்பதாக இவருடைய பதிவுகள் அமைந்துள்ளன.
உலக இலக்கியங்கள் தொடங்கி நாட்டார் வழக்காற்றியல் என அனைத்தையும் இந்த நூல் எடுத்து இயம்புகின்றது. கல்வி குறித்தும் ஆன்மீகம் குறித்தும் வாழ்க்கை குறித்தும் திருக்குறள், திருவள்ளுவர் குறித்தும் மிகச் சிறப்பாகவே எடுத்துரைக்கின்றது. தொடக்கநிலை மாணவர்களுக்கு இந்நூலில் உள்ள கட்டுரைகள மிகுந்த பயனைத் தரும். தமிழர் விருந்து, தமிழ் மக்களுடைய பெருமை, தேர்தல் வாக்கு, வாக்கு அளிப்பதின் சிறப்பு, வாக்காளரின் பலம் என்ன என்பதனையும் இந்நூல் விளக்கமாகக் குறிப்பிடுகின்றது. தாய்மை, யோகா, நட்பு பொதுவுடமை, கல்வியின் பயன், தமிழ்விடு தூது என இந்நூலில் சொல்லப்பட்டுள்ள கருத்துகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
இந்நூலுள் பல்வேறு கருத்துகள் ஆங்காங்கே கருத்துக் கருவூலமாகத் திகழ்கின்றன என்று சொன்னால் அது மிகையில்லை. பல்வேறு சொற்களுக்கான விளக்கங்களைக் குறிப்பிடும் போது நஞ்சை, புஞ்சை என்பதான சொற்களுக்கும் சான்று காட்டி உள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அறிஞர்கள், தமிழறிஞர்கள், தமிழுக்குத் தொண்டு செய்த அறிஞர்கள் குறித்தும் இந்நூலினுள் மிகச் சிறப்பாகவே ஆசிரியர் எழுதி இருக்கின்றார். மிக விரிவான கருத்துகளைச் சொல்வதாகவும் தேவையான கருத்துகளைச் சொல்வதாகவும் இந்நூல் அனைவருக்கும் பயன் தருவதாக இருக்கின்றது. தமிழ் குறித்து அறிந்து கொள்வதற்கான ஒரு தொடக்கத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்துவதாக இக்கட்டுரைகள் திகழ்கின்றன. ஐயம் ஏற்படுகின்ற இடங்களில் இந்நூல் தெளிவான விளக்கங்களைத் தருவதாகவும் திகழ்கின்றது. இப்படியான ஒரு மிகச்சிறந்த நூலைத் தமிழ் உலகிற்கு அளித்த திரு. ஆ.தி.பகலன் அவர்களுக்கும் சிறப்பான முறையில் பதிப்பித்த பகலன் பதிப்பகத்தாருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும். இதுபோன்று மிகச் சிறந்த நூல்களைத் தமிழ் உலகிற்கு மேலும் அளிக்க வேண்டும் என்று வாழ்த்துவதில் மகிழ்வெய்துகிறேன். மேலும் பல்வேறு சாதனைகளையும் புரிய வாழ்த்துகிறோம். l
