கல்வித்துறையில் ஒன்றிய அரசின் ஆக்கிரமிப்பும் அராஜகமும் மிரட்டல்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. எப்படியாவது பழமைவாத சமஸ்கிருத ஹிந்தித் திணிப்பை ஆதாரமாகக் கொண்ட ஆர் எஸ் எஸ் பரிவாரத்தின் அப்பட்டமான குலத்தொழில் சதியே புதிய தேசிய கல்விக் கொள்கையின் பெயரில் மூன்று மொழிக் கொள்கை என்கிற திமிரான சொற்களோடு மாநிலங்களை மிரட்டுகின்ற உத்தியில் தற்போது மத்தியக் கல்வி அமைச்சர் களம் இறங்கியிருக்கிறார். அவருக்கு ஆதரவாகத் தமிழகத்தினுடைய இந்துத்துவா குரல்கள் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
வெட்கமில்லாமல் ஏற்கனவே வளர்ச்சி கண்டுள்ள தமிழகத்தின் கல்வியைக் கேலி செய்து அவதூறு பரப்பி வெற்றியடைய முடியுமா என்று பார்க்கிறார்கள்.. அவர்கள் தொலைக்காட்சிச் சேனல்களையும் பத்திரிகைகளையும் விலை கொடுத்து வாங்கி இருக்கிறார்கள் என்பதைப் பட்டவர்த்தனமாகப் பார்க்க முடிகிறது.
இதற்கிடையேதான் குழந்தைகளிடையே தமிழ் வாசிப்பை எடுத்துச் செல்வதற்கு அரசுப் பள்ளிகளில் பள்ளிக்குப் பள்ளி வாசிப்பு இயக்கம் என்கிற ஒன்று நடந்து வருகிறது.. இந்த வாசிப்பு இயக்கத்திற்கு ஆதரவாகப் பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரன். களம் இறங்கத் தீர்மானித்து புதிய திட்டம் ஒன்றை முன்மொழிந்து இருக்கிறது. இந்தத் திட்டத்திற்கு உடனடியாக 100 பள்ளிகளில் வாசிக்கும் ஆசிரியர்களிடம் இருந்து மாபெரும் ஆதரவு கிடைத்திருப்பது நம்பிக்கை அளிக்கிறது.
பள்ளி தோறும் நடைபெற இருக்கின்ற சிறு புத்தகக் காட்சிகளில் மிகவும் வித்தியாசமான அணுகுமுறையோடு புதிய செயல் திட்டங்களைச் சேர்த்து இருக்கிறோம். இவற்றை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதன் மூலம் அடுத்த தலைமுறையைத் தமிழின் சிறந்த வாசகர்களாக மாற்றுவதற்குப் பாரதி புத்தகாலயம் மற்றும் அதனுடைய தோழமை அமைப்புகள் இணைந்து மாபெரும் முயற்சியை முன்னெடுத்து இருக்கிறோம்.
புத்தகக் கண்காட்சி நடைபெறுகின்ற பள்ளிக் கூடங்களின் ஆசிரியர்கள், குழந்தைகள் படைப்பாளிகளாக ஆகத் தங்களுடைய படைப்புகளை வெளியிடுவதற்கு ஊக்கம் அளிக்கிறோம். மாணவர்களின் படைப்புகளைப் புத்தகங்களாக அந்தக் கண்காட்சியில் வெளியிட்டுப் புத்தக விமர்சனம் மற்றும் புத்தக அறிமுக அமர்வுகளைத் திட்டமிட்டு இருக்கிறோம். ஒரு குழந்தை ஒரு பக்க அளவிற்குத் தான் சுயமாகச் சிந்தித்து ஏதாவது ஒன்றை எழுத வேண்டுமென்றால், இதன் மூலம் ஆதார வாசிப்பு வளரும் என்பதில் சந்தேகமில்லை. அத்தோடு படைப்பாக்கம் மிக்கவர்களாக, சிறந்த கதை சொல்லிகளாக, கற்பனை வளம் கொண்ட ஒரு சமூகம் இதன்மூலம் உருவாக்கப்படும் என்று கருதுகின்றோம். ஒவ்வொரு மாவட்டத்தின் தலைநகரத்திலும் தமிழக அரசு நடத்துகின்ற புத்தகக் கண்காட்சிகளுக்குத் தலை நகரத்திலிருந்து தள்ளி இருக்கும் குக்கிராமங்களில் இருந்து மாணவர்களை வரவழைப்பதில் பெரிய சிரமம் இருக்கிறது. இப்படிப்பட்ட ஊர்களில் உள்ள பள்ளிகளில் நாம் புத்தகக் கண்காட்சிகளை நடத்த இருக்கிறோம் என்பதும், இந்தப் பள்ளிகளில் நூலகங்களுக்குப் புத்தகங்கள் வழங்குவதற்குப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் உட்பட அனைவரிடமும் நாம் புத்தகக் கொடையாளர்களை உருவாக்க வேண்டும் என்பதும், நாம் முன்னெடுத்து இருக்கின்ற மாபெரும் செயல்பாடாகும்.
புத்தகங்களைக் களத்திற்கு எடுத்துச் சென்று போராடி அதை வாசிப்பாளர்கள் கையிலே ஒப்படைக்கின்ற நம்முடைய தோழர்களுக்குத் துணை நிற்போம். பள்ளிதோறும் புத்தகக் கண்காட்சிகள் என்கின்ற இந்த திட்டத்தை மகத்தான வெற்றி அடைய வைப்போம். தமிழகக் கல்வியை முடிவுக்குக் கொண்டு வரச் சதி செய்யும் ஒன்றிய அரசின் அத்தனை முயற்சிகளையும் முறியடிப்போம்.
– ஆசிரியர் குழு l
previous post
