புவனா சந்திரசேகரன்
பாரதி புத்தகாலயத்தின் வெளியீடுகளான நான்கு சிறார் நூல்களை வாசிக்கும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. நான்கும் நான்கு இரத்தினங்களாக ஜ்வலிக்கின்றன. நான்கும் வேறு வேறு ஆசிரியர்களால் எழுதப் பட்டுள்ள நூல்கள்.
1.ஊசி | ஆசிரியர்: சக. முத்துக்கண்ணன்/பக்கங்கள் 16/விலை ரூ 20
பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் இணைந்து பதிப்பித்த நூல். வாசிப்பு இயக்கச் செயல்பாட்டாளரான ஆசிரியர், அரசுப் பள்ளியில் பணி புரிகிறார். வாசிப்பு இயக்கம் தன்னுடைய தீராத கனவென்று கூறுகிறார். எளிய குடும்பச் சூழ்நிலையில் வளரும் குழந்தைகளையும், அதிகக் கல்வியறிவில்லாத அவர்களுடைய பெற்றோர்களையும் குறிப்பாகப் பெண்களையும் படிக்கத் தூண்டும் வகையில் இந்தப் புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. எளிய மொழி, சிறு சிறு வாக்கியங்கள், படங்கள் என்று எளிய முறையில் தயாரிக்கப்பட்டுள்ளன. ஊசி என்கிற தலைப்பில் உள்ள கதை : வெண்பா என்கிற குழந்தை ஊசிக்குப் பயப்படுகிறாள். ஏனென்றால் பெரியவர்கள் அடிக்கடி ஊசி போடுவதைத் தண்டனையாகச் சொல்லி மிரட்டுவதுதான் காரணமாகிறது. ஊசி பற்றிய பயம் வெண்பாவின் மனதில் வலுக்கட்டாயமாக ஒட்டிக்கொள்கிறது. ஒருமுறை வெண்பாவிற்குக் காய்ச்சல் வர, மருத்துவமனைக்குப் பேருந்தில் செல்கிறார்கள். வழி நெடுக மனதில் பயத்துடன் பயணிக்கிறாள் வெண்பா. ஆனால், அவளுக்குச் சிகிச்சை தரும் குழந்தை நல மருத்துவர் மிகவும் பிரியத்தோடு பேசுவதோடு, சிறு குழந்தைக்கு ஊசி தேவையில்லை என்று கூறி மருந்து மட்டுமே தந்து அனுப்புகிறார். அதுவும் அவளுக்குப் பிடித்த மாதிரி இனிப்பு மருந்து. வெண்பாவுக்கோ கொள்ளை மகிழ்ச்சி.
ஆனால், மீண்டும் ஒருமுறை இரவு நேரத்தில் வெண்பாவிற்குக் காய்ச்சல் அதிகமாகிவிட அருகில் இருக்கும் பொது மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறார்கள். குழந்தைகள் நல மருத்துவரிடம் இரவு நேரத்தில் போக முடியவில்லை. அவரோ, வெண்பாவிற்கு நறுக்கென்று ஊசியைக் குத்தி விடுகிறார். அழுது அழுது நேரத்தைக் கழிக்கும் வெண்பா, தான் ஊசி போட்டுக் கொண்ட விஷயத்தை எல்லாரிடமும் சொல்கிறாள். அன்று இரவே அவளுடைய கனவில் ஊசி வந்து அவளைத் துரத்துகிறது. கனவின் இறுதியில் என்ன ஆகிறது என்பதைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். எனக்குப் படிக்க விறுவிறுப்பாகவே இருந்தது.
2.பறக்கும் பூநாய் | ஆசிரியர்: ஞா. கலையரசி/16 பக்கங்கள்/விலை ரூ. 20
பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கம் மற்றும் பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரன் அமைப்பும் இணைந்து வெளியிட்டுள்ள புத்தகம்.திருமதி ஞா. கலையரசி அவர்களும் நிறையச் சிறுவர் கதைகளை எழுதிப் புகழேணியில் ஏறிக் கொண்டிருக்கும் திறமையான சிறார் எழுத்தாளர். தமிழ்நாடு வாசிப்பு இயக்கத்தின் மாநிலக் கருத்தாளர். வாசிப்பு இயக்கத்தின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப எளிமையான நடையில் தெளிவாகக் கதையைப் படைத்துள்ளார். இனி கதைக்குள் : இரண்டு கதைகள் இருக்கின்றன. முதல் கதையில் வாணியும், மணியும் மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில் மின்னல், இடியுடன் மழை வரும் போல இருக்கிறது. திடீரென வானத்தில் இருந்து அவர்களருகில் விழுந்தது ஒரு வினோதமான விலங்கு. நாய் போன்ற உடலும், பூனை போன்ற முகத்தையும் இறக்கைகளையும் கொண்ட அந்த விலங்குக்கு, “பூநாய்” என்று பெயர் சூட்டி மகிழ்கிறார்கள் குழந்தைகள். தாங்களே வளர்ப்பதாக முடிவு செய்தவர்களுக்கு அது என்ன சாப்பிடும் என்று தெரியாமல் திணறுகிறார்கள். அந்தக் குழந்தைகளின் அம்மா, சமையலுக்காக வைத்திருந்த கீரையைத் தின்றுவிடுகிறது அந்தப் பூநாய். அப்போது தான் அது தாவரங்களை உண்ணும் வழக்கம் கொண்ட விலங்கு என்று அவர்களுக்குப் புரிகிறது. அதன் பிறகு குழந்தைகள் விரிக்கும் சாக்கில் தூங்கிவிடுகிறது அந்தப் பூநாய். அடுத்த நாள் அந்த விலங்கு என்ன ஆகிறது, அந்தப் புதுமையான விலங்கை அம்மாவின் அறிவுரைப்படிக் காட்டுயிர்க் காப்பகத்தில் குழந்தைகள் ஒப்படைக்கிறார்களா என்பதைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
- நரி என் குழந்தை | ஆசிரியர்: லைலா தேவி /16 பக்கங்கள்/விலை ரூ. 20
அடுத்த கதையில் வரும் ஆதன் என்கிற சிறுவனுக்கு மந்திரப் பென்சில் ஒன்று கிடைக்கிறது. அதனைக் கொண்டு ஆதன் வரையும் பொருட்கள் உயிர் பெறுகின்றன. கையில் கிடைத்த மந்திரப் பென்சிலை உபயோகித்து, அவனுடைய தங்கை நீலா கூறும் கருத்தை ஏற்று, ஊருக்கு உபகாரமான காரியம் எதையாவது ஆதன் செய்கிறானா என்பதைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
முதலில் இந்த நூலின் ஆசிரியர் எம். ஏ. பி. எட் பட்டம் பெற்றவர். இன்னும் சில சிறார் கதைகளை எளிய நடையில் ஏற்கனவே எழுதியிருக்கிறார் இனி கதைக்குள் : இது ஒரு மொழி பெயர்ப்புக் கதை. ஜப்பான் தேசத்தில் உலவி வரும் நாட்டுப்புறக் கதையின் தமிழாக்கம். முதலில் மொழிபெயர்ப்பு செய்வது எளிதான செயல் அல்ல. இரண்டு மொழிகளையும் நன்கு கற்றுத் தேர்ந்தவரால் மட்டுமே செய்யமுடியும். அதுவும் மூலக் கதையின் அமைப்பும் அழகும் சிதைந்துவிடாமல் நம் தமிழ்நாட்டுக் குழந்தைகளுக்கு ஏற்றபடி எளிய நடையில் தமிழ் மொழியில் தருவது எவ்வளவு கடினமான செயல் என்று என்னால் கணிக்க முடிகிறது. அந்தச் செயலைச் செம்மையாகவே செய்திருக்கிறார் ஆசிரியர். மூலக் கதையின் அழகு சிதையாமல் அற்புதமாக வந்திருக்கிறது இந்த மொழிபெயர்ப்புக் கதை.
ஊர் ஊராகத் திரியும் பெரியவர் ஒருவரைப் பற்றிய கதை இது. அவருக்குப் பெயர் கூடக் கிடையாது. ஒரு குறிப்பிட்ட ஊரின் மக்களின் அன்பிற்குக் கட்டுப்பட்டு அந்த ஊரிலேயே தங்குகிறார். ஊர்மக்கள் பிரியத்துடன் தரும் உணவை உண்டு அங்கேயே வாழ்கிறார். ஒருநாள் இரவு அவரது குடிலின் கதவைத் தட்டுகிறது ஒரு நரி. அந்த நரிக்கு உணவு அளித்துப் பிரியத்தைச் சொரிகிறார் பெரியவர். அடிக்கடி தன்னைச் சந்திக்க வரும் நரியைத் தன் மகனாகவே கருதுகிறார் அவர். ஒருமுறை அவருக்கு என்ன வேண்டும் என்று நரி கேட்கிறது. அந்தப் பெரியவர், நரியிடம் என்ன உதவி கேட்கிறார் என்பதையும், அந்த நரியால் அந்தச் செயலைச் செய்ய முடிகிறதா என்பதையும் கதையைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு பூனையை, அல்லது நாயைத் தன் வீட்டில் வளர்க்கும் போது ஒரு நரியை ஏன் வளர்க்கக் கூடாது என்ற சிந்தனையைக் கிளப்பிவிடுகிறது இந்தக் கதை.
4.பீம்பாய் பீம்பாய் எனக்கொரு டவுட்டு
ஆசிரியர்: ந. பாலமுருகன் /பக்கங்கள் 48 /விலை ரூ. 50 புக்ஸ் ஃபார் சில்ரன், பாரதி புத்தகாலய வெளியீடு.
இது வளரிளம் குழந்தைகளுக்காக என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர். இவர் பெத்த நாயக்கனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ்ப் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றுகிறார். தமிழ்ப் பாடநூல் உருவாக்கக் குழு ஆசிரியரான இவர், சுற்றுச்சூழல் ஆர்வலர், எழுத்தாளர் மற்றும் கவிஞர். ஆசிரியராக இருப்பதாலோ என்னவோ இவர் கதைகள் மூலமாகவும் குழந்தைகளுக்கு அறிவியலைக் கற்றுத் தரும் ஆர்வத்தில் இந்த நூலை எழுதியுள்ளார். மாணவர்கள் எப்போது கேள்விகளை எழுப்ப ஆரம்பிக்கிறார்களோ, அப்போதே அவர்கள் கல்வியில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது நிரூபிக்கப்படுகிறது. கேள்விகளைப் பிறப்பிக்கும் மூளை, புதிய தகவல்களைத் தேடி அலைகிறது. அறிவியல் சார் அறிவை மாணவர்களுக்கு ஊட்டும் முயற்சியாக அமைந்திருக்கிறது இந்த நூல். இனி கதைக்குள்: ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு கருத்தை மையமாக வைத்து அறிவியல் சார் சிந்தனைகளை உரையாடல்கள் மூலமாகத் தூண்டி விடுவதில் வெற்றி பெறுகிறார் ஆசிரியர். முதல் கதையில் மிளகாய் வருகிறது. உலகிலேயே அதிகக் காரம் உள்ள மிளகாய் எங்கே விளைகிறது, மிளகாயின் காரத்திற்குக் காரணமான பொருள் எது என்பதையும் பிரைட் பீமா, தன்னுடைய நண்பர்களான ஆசை, கண்ணன், கோபி, ராம் மற்றும் செல்வத்திற்கு விளக்கமாகச் சொல்கிறான். இவர்களுடைய உரையாடலை வாசிப்பதன் மூலமாக நாமும் அறிந்துகொள்ள முடிகிறது. இரண்டாவது கதையில் மின்சார அடுப்பாகிய தூண்டல் அடுப்பின் செயல்முறையை பீமாவின் உதவியுடன் அவனுடைய நண்பர்கள் புரிந்து கொள்கிறார்கள். மின்காந்தம், காந்தப்புலம், சுழல் மின்சாரம் என்று ஒவ்வொன்றாக அவன் எடுத்துச் சொல்லும்போது நம்மாலும் புரிந்து கொள்ள முடிகிறது. மூன்றாவது கதையின் ஆரம்பத்தில் சொல்லப்பட்டிருக்கும் அக்பர், பீர்பால் கதை மிகவும் சுவாரசியமானது பிரபலமானது. வெப்பமும் குளிரும் இடத்துக்கு ஏற்றவாறு எப்படி மாறுகிறது என்ற விளக்கம் தரப்படுகிறது. உயரத்தில் செல்லும் போது, கதிரவனின் அருகில் சென்றாலும் வெப்பம் அதிகரிக்காமல் குளிர் ஏன் கூடுகிறது என்கிற நியாயமான சிந்தனைக்கு அறிவியல் பூர்வமான விளக்கம் தந்து புரிய வைக்கிறான் பீமா. நான்காவது கதை ஜெட் விமானம் பற்றிய அரிய தகவல்களைத் தருகிறது. வளி மண்டலத்தின் நான்கு அடுக்குகளில் அடிவளி மண்டலம் எனப்படும் ட்ரோபோஸ்பியர் மற்றும் படை மண்டலம் என்று அழைக்கப்படும் ஸ்ட்ரோஸ்பியர் அடுக்குப் பற்றியும் ஜெட் விமானம், மற்ற விமானங்களில் இருந்து எப்படி மாறுபடுகிறது என்றும் பீமா விளக்கிச் சொல்வதைக் கேட்டு நண்பர்கள் புரிந்து கொள்கிறார்கள். இறுதிக் கதையில் இரத்தத்தின் வகைகளான, A +, A-, B+, B-, O+, O-, AB+, AB- ஆகிய இரத்த வகைகளைப் பற்றியும் ஹீமோகுளோபின் பற்றியும் இரத்தத்தின் ஒவ்வொரு வகையிலும் என்ன பகுதிப்பொருட்கள் இருக்கின்றன என்பது போன்ற அரிய தகவல்கள் கிடைக்கின்றன.
இன்று சிறார் இலக்கியம் ஒரு தெளிவான இலக்கை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்திருக்கிறது. இந்த அற்புதமான மாற்றம், சிறப்பாகத் தொடரவேண்டும். இந்த முயற்சியில் சிறார் எழுத்தாளர்களுக்குப் பெரிதளவும் உதவி வருகின்ற பாரதி புத்தகாலயம் நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். l