முனைவர். முபீன் சாதிகா
100 பெண்கள் 100 சிறுகதைகள் – ஹெர் ஸ்டோரிஸ் பதிப்பகம் வெளியிட்ட பெண்களின் சிறுகதைத் தொகுப்பு. பேராசிரியர் இரா.பிரேமா அவர்கள் இதைத் தொகுத்திருக்கிறார். இத்தொகுப்பில் இடம்பெற்ற கதைகளை வாசிக்கும் போது மூன்று தலைமுறையைச் சார்ந்த பெண் எழுத்துகள் காலந்தோறும் எப்படி மாற்றம் அடைந்திருக்கின்றன என்பதை அறிய முடிகிறது.
கவிதைகளில் பெண்களின் முன்னேற்றம் தமிழில் மிதமிஞ்சிய கூர்மையையும் நுட்பத்தையும் கொண்டதாக மாறிவிட்டது. ஆனால் சிறுகதைகளில் அது இன்னும் செம்மைப்பட வேண்டியதாக உள்ளது. தமிழின் கவிதைக்கான பாரம்பரியம் மிகவும் ஆழமானது, தீவிரமானது. ஆனால் சிறுகதைக்கான பாரம்பரியம் காலனியத் தாக்கம் கொண்டது என்பதால் இது போன்ற வளர்ச்சி நிலை காணப்படுகிறது எனலாம்.
பொதுவாக இத்தொகுப்பில் இடம்பெற்ற கதைகளை 1.ஆண்களின் உலகில் பெண்கள் 2.நவீன யுகத்தின் உறவு முறை மாற்றம் 3.பெண்களின் அகமுகச் சிந்தனைப் பதிவு என்ற வகையில் வாசிக்கலாம். இதில் முதல் தலைமுறை சார்ந்தவர்கள் இருபதாம் நூற்றாண்டு முதல் 1950கள் வரை எழுதி வந்தவர்களாக உள்ளனர். இவர்கள் ஆண்களின் உலகத்தில் பெண்களின் இடம் குறித்த கதைகளில் அதிகம் கவனம் செலுத்தியிருக்கின்றனர் எனலாம். இதற்குக் காரணம் குடும்பம் என்ற அலகிலிருந்து விடுபட முடியாத சிந்தனை அடிப்படையாக இருந்திருக்கிறது. மேலும் திருமணத்தின் மீதான நம்பிக்கை அவர்களிடம் தொடர்ந்திருந்தது. சாவித்திரி அம்மாள் தொடங்கி லட்சுமி கிருஷ்ணமூர்த்தி வரையுள்ள 21 பெண் எழுத்தாளர்களின் கதைகளை இந்த வகையில் அடையாளம் காண முடிகிறது. அதன் பின் இரண்டாம் தலைமுறைப் பெண் எழுத்தாளர்களாக ராஜம் கிருஷ்ணன் தொடங்கி பிரேமா அருணாச்சலம் வரை உள்ள 32 எழுத்தாளர்களில் குறிப்பாக வாஸந்தி, சிவசங்கரி, ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், அம்பை, காவேரி,க்ருஷாங்கினி, இந்துமதி, எம் ஏ சுசீலா, கமலாதேவி அரவிந்தன், திலகவதி, காஞ்சனா தாமோதரன் போன்றவர்கள் குடும்பத்தின் நிலையில் மாற்றம் ஏற்படுவதைக் கவனப்படுத்தியவர்களாக இருப்பதால் அவர்கள் எழுதிய கதைகளில் இந்த மாற்றங்கள் பதிவாகியுள்ளன. அது தவிர புலம்பெயர் எழுத்தாளர்களிடமும் இந்த வகையான குடும்பம் குறித்த பல கேள்விகள் எழுவதை அவர்களின் கதைகளில் காண முடிகிறது. மூன்றாம் தலைமுறை எழுத்தாளர்களாக 1960களுக்குப் பிறகான எழுத்தாளர்கள் பல நாடுகளில் வாழ்ந்து வருபவர்களாக அவர்களைச் சுற்றியுள்ள பல அம்சங்களைக் கதைகளில் பதிவு செய்பவர்களாக இருந்திருக்கிறார்கள். இவர்களிடம் குடும்பம் பற்றிய கவனம் பெரிதாக இல்லை. புதிய களங்களைக் கதைகளுக்குள் கொண்டு வரும் ஆர்வம் அவர்களிடம் உள்ளது. அதில் குறிப்பாகத் தனிமையில் இருப்பதும் அதற்கான அவசியமும் ஆண்களின் துணை குறித்த பொருட்படுத்தலின்மையும் இன்றைய காலகட்டத்து எழுத்தாளர்களிடம் காணக்கூடிய கதைப் போக்காக உள்ளது. அது பெண் பற்றி அகமுகச் சிந்தனையாக வளர்சிதை மாற்றம் அடைந்திருக்கிறது.
முதல் பிரிவைச் சேர்ந்த மூத்த எழுத்தாளர்களில் குறிப்பாக வை.மு.கோதைநாயகி அம்மாள், சரஸ்வதி அம்மாள் போன்றவர்கள் குடும்பத்தின் வரைமுறை பற்றிய கவனத்தை வைத்திருக்கிறார்கள். சரஸ்வதி அம்மாள் எழுதிய மறுமணம் என்ற கதை மனைவியை இழந்தவர் வெகு காலம் கழித்து மறுமணம் செய்து கொள்வது பற்றியதாக உள்ளது. பெண்கள் விதவை மறுமணம் நடைபெறுவதற்கான நடைமுறைச் சிக்கல்கள் இருந்த காலகட்டத்தில் ஆண்களின் மறுமணத்தைப் பற்றி இந்தக் கதை பேசியிருக்கிறது. எனவே குடும்பம் எனும் அலகு நிலைபெற வேண்டிய நம்பிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தும் போக்காக இதனைக் கொள்ள முடிகிறது. அதே போல் குமுதினி எழுதிய பிடிவாதம் என்ற சிறுகதை ஒரு குடும்பத்தைச் சேர்ந்த கணவனும் மனைவியும் பிணக்கினால் பிரிந்து வாழ்ந்து வருவதைச் சேர்த்து வைக்கும் கதையாக உள்ளது. குடும்பத்தின் அவசியம் குறித்த வலியுறுத்தல் தொடர்ந்து இது போன்ற கதைகளின் வழி நிகழ்ந்து கொண்டிருந்த காலகட்டமாக இதனைப் பார்க்க முடிகிறது. இதற்கு அடுத்த காலகட்டமாக 1950களுக்குப் பின் நவீன யுகம் உருவானதால் அதில் குடும்பம் குறித்த கேள்விகள் எழத் தொடங்கின. அதனால் அதற்கான பதில்களைத் தேடவேண்டிய நிலையில் எழுதப்பட்ட கதைகளாக இவை உள்ளன. குறிப்பாக வாஸந்தி எழுதிய கதை குடும்பத்தில் கணவனும் மனைவியும் பிரிவதற்கான நிலை உருவாகும் போது குழந்தைகளின் பாடு பற்றிய சிக்கலைப் பேசுவதாக உள்ளது. நகரமயம் குடும்பத்தின் அவசியமின்மையை ஏற்படுத்திவிடுவதையும் இந்தக் கதை சுட்டிக்காட்டுகிறது.
சூடாமணி எழுதிய புவனாவும் வியாழக்கிரகமும் என்ற கதை முப்பத்து மூன்று வயதான பின்னும் திருமணம் முடியாமல் இருக்கும் ஒரு பெண்ணைப் பற்றியது. ஆனால் கதையில் இரு ஆண்கள் அதைப் பற்றிப் பேசுவது மட்டும் கதையாகியுள்ளது. பொருளாதார நிலைமையாலும் பெண்ணின் ஜாதக நிலையாலும் திருமணம் நடைபெறவில்லை என்பதைக் குறிப்பாக இந்தக் கதை காட்டுகிறது. ஆனால் கடைசி வரி இந்தக் கதையின் மொத்த அமைப்பையும் மாற்றி அமைக்கிறது. முப்பத்து மூன்று வயதுக்குப் பின் பெண்ணுக்கு நரைக்கத் தொடங்கிவிடும் என்பதால் அவளுடைய அப்பா அவளுக்குக் கோத்ரேஜ் ஹேர் டை வாங்கிச் செல்கிறார் என்ற கடைசி வரி காட்டுவதன் மூலம் பொருளாதார நிலையையும் ஜாதக நிலையையும் மாற்றி அமைக்க ஓர் ஆயுதமாக அந்தப் பெண்ணுக்குத் தலைமுடிக்கான சாயம் இருப்பதைச் சுட்டிக்காட்டிவிடுகிறது கதை. இதே காலகட்டத்தில் வந்த புலம்பெயர் எழுத்தாளர் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் அவர்களின் ரோசாலக்ஸம்பர்க் வீதி என்ற கதையும் குடும்பத்தின் ஒருங்கிணைப்பு குறித்த கேள்விகளை எழுப்புபவர்களாகப் பெண்கள் உருவாக வேண்டிய நிலையை எடுத்துக் காட்டும் ஒன்றாக உள்ளது. மூன்றாம் தலைமுறையினரான இன்றைய காலகட்டம் வரையுள்ள எழுத்தாளர்கள் ஆண்-பெண் உறவு குறித்துக் கேள்விகளை எழுப்புகின்றனர். அகமுகச் சிந்தனையில் பெண்ணை மையப்படுத்திய கதைகளை உருவாக்குகின்றனர். குறிப்பாக, சல்மாவின் இழப்பு என்ற கதை பாலுணர்வு குறித்த சிக்கலை மிகவும் நுட்பமாக எழுதப்பட்ட கதையாக உள்ளது. அண்டை வீட்டைச் சேர்ந்த ஓர் இளைஞன் மரணம் அடைந்துவிட்டபின் ஏற்படும் விளைவுகள் குறித்து இந்தக் கதை காட்டுகிறது. ஆனால் மரணத்தின் தாக்கம் பற்றிய விவரணை என்பதைவிட அடக்கப்பட்ட பாலுணர்வின் வெளிப்பாடாக இந்தக் கதை அமைந்திருக்கிறது. அண்டை வீட்டில் இருந்த அந்த இளைஞன் மணமான பின்னும் கதைசொல்லியான பெண் பாத்திரத்திற்கு நள்ளிரவில் தொலைபேசி அழைப்பை விடுப்பதும் ஆனால் பேசாமல் இருப்பதும் அதில் அவனுடைய வேட்கையைப் பல வகைகளில் காட்டுவதும் மிகவும் அரிய வகை வர்ணனையில் எழுதப்பட்டுள்ளது. அவன் இறந்த பின் தொலைபேசி அழைப்பு நள்ளிரவு வருவதில்லை என்பதிலிருந்து அவன்தான் அந்த அழைப்பைச் செய்திருக்கிறான் என்று கதைசொல்லிப் பாத்திரத்திற்கு புரிவது அந்தப் பெண் பாத்திரத்திற்குள் பெரும் சிக்கலை ஏற்படுத்துவதாக இருப்பதும் அது போன்ற ஈர்ப்புக்கான தேவை அவளிடம் இருந்திருக்கலாம் என்ற வெளிப்பாட்டைக் கொண்டிருப்பதும் இந்தக் கதையை ஆழமாகக் கவனிக்க வைக்கிறது. இந்தத் தொகுப்பில் இடம்பெற்ற முக்கியமான கதையாக இது உள்ளது.
அடுத்து அனுராதா எழுதிய காளி என்ற கதையில் பாலுணர்வின் சிக்கல் மிகவும் நுட்பமாக வெளிப்பட்டுள்ளது. காளியின் சிலையைத் தூய்மைப்படுத்தும் ஆண் தன் மனைவியிடம் பாலுணர்வை வெளிப்படுத்த முடியாமல் இருப்பதும் சிலையிடம் அந்த உணர்வை அனுபவிப்பதும் வித்தியாசமான அனுபவத்தை உருவாக்கும் ஒன்றாக இருக்கிறது. அடுத்து சந்திரா தங்கராஜ் எழுதிய அறைக்குள் புகுந்த தனிமை கதை ஒரு பெண் தன் அதிகாரத்தின் கீழ் ஓர் ஆணைக் கொண்டு வர முடியும் என்ற வகையில் எழுதப்பட்ட அவலச்சுவை கொண்ட கதையாக உள்ளது. பெண்ணைத் தன் ஆளுகையின் கீழ் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்ட ஆண் மையச் சொல்லாடலுக்கு அதிர்ச்சியைத் தரும் கதையாக இது உள்ளது. இது போன்ற கதைகளைத் தொகுத்து வெளியிட வேண்டும் என்ற முயற்சியை எடுத்த பேராசிரியர் பிரேமா கடும் உழைப்பைத் தந்திருக்கிறார். மேலும் இத்தனை வகையான எழுத்துகள் பெண்கள் எழுதுவார்கள் என்ற ஆவணமாக இந்தத் தொகுப்பு உள்ளது. அது தவிர பிற்கால ஆய்வுக்குப் பயன்படும் வகையில் இந்தத் தொகுப்பு உள்ளது. பெண் மையச் சொல்லாடலின் எழுச்சியூட்டும் சிந்தனையைக் காண இது போன்ற கதைகள் பயன்படுகின்றன. மேலும் தொண்ணுறுகளுக்குப் பிறகான பெண்ணியச் சிந்தனைகள் ஏற்படுத்திய மாற்றம் இந்தத் தொகுப்பில் இடம்பெற்ற அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர்களிடம் வெளிப்படையாகத் தெரிகிறது. இந்தக் கதைத் தொகுப்பு பெரும் பயன் தரும் ஒன்றாக உள்ளது. ஹெர் ஸ்டோரிஸ் பதிப்பகம் இது போன்ற முன்னெடுப்பைச் செய்திருப்பதைப் பாராட்ட வேண்டும். அதே போல பேராசிரியர் பிரேமா அவர்களின் இந்த முயற்சியும் பெரும் கவனம் பெறும் ஒன்றாக உள்ளது. l
