நேர்காணல்:
இரா.செல்வம் I.A.S
சந்திப்பு : விஷ்ணுபுரம் சரவணன்
இரா. செல்வம் ஐ.ஏ.எஸ், உள்ளொடுங்கிய கிராமம் ஒன்றில், மிக எளிய பொருளாதாரத்தைப் பின்னணியாகக் கொண்ட விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். கல்வி ஒன்றையே இருளகற்றும் துணையாகக் கொண்டு கடும் உழைப்பினால் ஐ.ஏ.எஸ் ஆகியவர். பல்வேறு இடங்கள், பொறுப்புகளில் பணியாற்றிய அவர் தற்போது மத்திய அரசின் தோல் ஏற்றுமதிக் கழகச் செயல் இயக்குநராக உள்ளார். ’பனையடி,, ’ஹார்வர்டு நாட்கள்’ ஆகிய நூல்களை எழுதியவர். அவருடன் உரையாடியதிலிருந்து…
வாசித்ததில் உங்கள் வாழ்க்கையோடு ஒத்துப்போகும் வரிகள் அல்லது மேற்கோளோடு இந்த நேர்காணலைத் தொடங்கலாமா?
நிச்சயமாக. காந்தியடிகளின் சத்தியசோதனை பிடித்த நூல். அவரின் “அமைதியான எதிர்ப்பை” என் வாழ்வில் கடைப்பிடித்திருக்கிறேன். ஆயினும், வள்ளுவரின் ‘தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்’ எனும் குறள் என் வாழ்விற்கு முற்றிலும் பொருந்தும். என் வாழ்வில் அதிர்ஷ்டத்தால் நிகழ்ந்தது ஒன்றுகூட இல்லை. மாறாக, என் உழைப்பிற்கு தகுந்த பலனே கிடைத்துள்ளது. அதேபோல, பாரதியாரின் ‘தேடிச் சோறு நிதம் தின்று’ எனும் பாடலும் எப்போதும் என் மனதில் நிற்கக்கூடியதே.
உங்களின் பால்யகாலத்தைப் பற்றிப் பகிர்ந்துகொள்ளுங்களேன்!
வேளாண்மையை மையமாகக் கொண்டு இயங்கும் இந்தியக் கிராமங்களில் ஒன்றுதான் எங்கள் ஊரான அரியலூர் மாவட்டத்தில் உள்ள அய்யப்ப நாயக்கன்பேட்டை. கூரை வீடுகள் மிகுந்த, மின்வசதியோ போக்குவரத்து வசதியோ அதிகம் இல்லாத கிராமம். கல்வியின் முக்கியத்துவத்தை அறியாத மக்கள் வாழ்ந்த ஊர். முழுக் குடும்பமும் விவசாயத்திலேயே ஈடுபடுத்திக்கொள்ளும் வழக்கம் உள்ள ஊர். அப்போதெல்லாம் ஆசிரியர் ஊருக்குள் வந்து மாணவர்களைத் திரட்டிக்கொண்டு பள்ளிக்குச் செல்லும் வழக்கம் இருந்தது. படித்தால் அரசு வேலைக்குச் செல்லலாம் என்று நம்பிக்கை தருவதற்கு முன்மாதிரி மனிதர்களைப் பார்க்க முடியாத கிராமம் அது. மிகச் சில வீடுகளில் மட்டும் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பினார்கள். அதுவும் விவசாய வேலை நேரம் போக, மற்ற நேரங்களில்தான். அவற்றில் எங்கள் வீடும் ஒன்று. அப்படித்தான் நான் பள்ளிக்குச் சென்றேன்.
கூரைக்கொட்டகைதான் பள்ளிக்கூடம். உட்காருவதற்கு மண் தரையில் பலகை போட்டிருப்பார்கள். பெரும்பாலும் மரத்தடியில்தான் வகுப்புகள். மின்விளக்கோ, மின்விசிறியோ கிடையாது. ஆயினும் சிறந்த ஆசிரியர்கள் இருந்தார்கள். எங்கள் மனநிலையை உணர்ந்து கற்றுத்தந்தார்கள்.
பள்ளியில் மட்டுமல்ல, வீட்டிலும் மின் இணைப்புக் கிடையாது. படித்தது எல்லாம் அரிக்கேன் விளக்கில்தான். நான் பத்தாம் வகுப்புப் படிக்கும்போதுதான் வீட்டுக்கு மின்சாரம் வந்தது. அதுவும் மின்விளக்கு மட்டும்தான். மின்விசிறி எல்லாம் ஆடம்பரம் என்று பார்க்கப்பட்டது. கிராமம்தான் என்றாலும் பல இரவுகளில் புழுக்கம் தாங்காமல் உறக்கம் கலைந்தது உண்டு. அதனால் ஃபேன் வாங்குவது பெரும் கனவாக இருந்தது. நான் பி.எஸ்.எஸி அக்ரி நான்காம் ஆண்டு படிக்கும்போது, டெல்லிக்குக் கல்விச் சுற்றுலா அழைத்துச் சென்றார்கள். அங்கிருந்து ஒரு ஃபேன் வாங்கி வந்தேன். அதைப் பார்த்த அப்பா, இதெல்லாம் ஆடம்பரச் செலவு எனக் கோபப்பட்டார். அந்த வாழ்க்கை மீது புகார் ஏதுமில்லை. அப்போதைய சூழல் அதுவாக இருந்தது. அப்போது நிறைய விளையாடினோம். அதன்வழியாக விட்டுக்கொடுப்பது போன்ற பண்புகளையும் பெற்றோம். இப்போதைய குழந்தைகளுக்கு அவை கிடைக்கவில்லை.
உங்களைப் படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் பெற்றொருக்கு எப்படி வந்தது?
ஊரின் நிலையைப் பார்த்துதான் அப்பா, அந்த முடிவுக்கு வந்தார் என நினைக்கிறேன். ஏனென்றால், எங்கள் ஊரில் எட்டாவது முடித்தவர்கள் வெளியூர் போவார்கள். சில மாதங்கள் கழித்து மீண்டும் ஊருக்கே வந்துவிடுவார்கள். விவசாய வேலைகளைத்தான் பார்ப்பார்கள். விவசாயம் செய்து பெரிய முன்னேற்றம் அடைந்துவிட முடியாது என்று வீட்டில் நினைத்தனர். காரணம், அவர்கள் சிறுவயது முதலே வயலில் கடும் உழைப்பைச் செலுத்துபவர்கள். அதுவும் அப்பா, கிணற்றிலிருந்து ஏற்றம் இறைத்து, விவசாயம் செய்தும் பெரிய பலன் கிடைக்கவில்லை.
பிறகு ஊருக்குத் திரும்பிய இளைஞர்கள் பலர் சாராயம் காய்ச்சுவதையும் பார்த்தார். இருபத்தியைந்து, முப்பது வயதுக்குள் அவர்களின் வாழ்க்கையே முடிந்து போனதுபோல ஆகிவிடும். அவர்கள் வீட்டில் தினசரி சண்டை நடக்கும். இதெல்லாம் பார்த்த அப்பா, எனக்கு அப்படியான நிலை வந்துவிடுமோ என்று பயந்தார். அதனால், நான் ஊருக்குள் இருக்கக்கூடாது என்று முடிவெடுத்தார். வெளியே எதற்காக அனுப்ப வேண்டும் என்றால் படிக்கத்தான் அனுப்ப வேண்டும் என்று நினைத்தார். அதனால், என்ன செய்தாவது என்னைப் படிக்க வைத்தார். என்னை மருத்துவராக்க வேண்டும் என்பது அவரின் கனவு.
பல்வேறு படிப்புகள் இருக்க மருத்துவர் படிப்பு என ஏன் தேர்ந்தெடுத்தார்?
முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன் அது என் அப்பாவின் கனவு மட்டுமல்ல. பொதுவான தமிழ்ச் சமூகத்தின் கனவே, தம் பிள்ளை மருத்துவராக வேண்டும் என்பதுதான். மேலும், அப்போது கிராமங்களில் மருத்துவரைப் பார்க்க முடியாது. நகரங்களுக்குத்தான் செல்ல வேண்டும். எங்கள் ஊரை எடுத்துகொண்டால். ஒருத்தருக்குக் காய்ச்சல் என்றால் காலை ஆறு மணிக்குப் புறப்பட்டு மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்து பேருந்து நிறுத்தம் செல்ல வேண்டும். அங்கே ஒரு மணிநேரம் காத்திருந்து பேருந்து ஏறி பத்து-இருபது கிலோமீட்டர் பயணம் செய்து மருத்துவமனையை அடைய வேண்டும். அங்கும் மருத்துவரைப் பார்க்க மதியத்திற்கு மேலாகி விடும். அதற்குப் பிறகு சிகிச்சை எடுத்துக்கொண்டு ஊருக்குத் திரும்ப இரவாகி விடும். இப்படியான சூழலில் நமது ஊரிலேயே மருத்துவர் இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைப்பது இயல்புதானே. அதனால், அது அப்பாவின் கனவு மட்டுமல்ல. எங்கள் ஊரின் கனவாகவும் இருந்தது. இது தவிர நான் பார்த்த சில மரணங்களும் எனக்கு அந்த எண்ணத்தைத் தோற்றுவித்தன. வீட்டில் நடக்கும் சண்டையில், வயலில் தெளிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து விடுவார்கள். அவர்களை மாட்டு வண்டியில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழிலேயே செத்தவர்கள் பலர். சாராயம் குடித்துக் குடித்துச் செத்தவர்களும் பலர். பாம்பு கடித்துச் செத்தவர்கள் நிறையப் பேர். சின்ன வயதில் ஊரில் லாரி மோதி ஒருவர் துடிக்கத் துடிக்க இறந்ததைப் பார்த்தேன். அப்போது ஊரில் மருத்துவமனை இருந்தால் அவர் பிழைத்திருப்பாரே என நினைத்தேன். அது, எனக்கும் மருத்துவராக வேண்டும் என்ற விருப்பத்தை ஏற்படுத்தியது.
ஆனால், அந்த விருப்பம் நிறைவேறாமல் போய்விட்டது பெரிய ஏமாற்றமாக இருந்திருக்கும், இல்லையா?
வேறொரு வாய்ப்புக்கான வழியாகவே அதைப் பார்த்தேன். மருத்துவ நுழைவுத்தேர்வில் நூலிழையில் வாய்ப்புப் பறிபோனது. மருத்துவக் கல்லூரியில் நிச்சயம் இடம்கிடைக்கும் என நம்பி, வேறு கல்லூரிகளில் விண்ணப்பிக்க ஆர்வம் காட்டாமல் வேளாண்கல்லூரியில் மட்டும் விண்ணப்பித்திருந்தேன். அதிலும் முதல் மூன்று சுற்றுகளில் இடம் கிடைக்கவில்லை. குடும்பத்தில் முதல் பட்டதாரி என்றால் ஐந்து மதிப்பெண்கள் தரப்படும். அதனால் வேளாண்கல்லூரியில் இடம் கிடைத்தது. நிராகரிப்பில் தேங்காமல் அடுத்து இயங்குவதே என் இயல்பாக இருந்ததால், மருத்துவப் படிப்பு கைநழுவியதைப் பெரிய ஏமாற்றமாக எடுத்துக்கொள்ளவில்லை.
வேளாண்கல்லூரியில் எதிர்கொண்ட சவால்கள் என்ன?
தூத்துக்குடி, கிள்ளிக்குளம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் படிக்க இடம் கிடைத்தது. பன்னிரெண்டாம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்த எனக்கு ஆங்கில வழி நடத்தப்படும் பாடங்களைப் புரிந்துகொள்வதுதான் முதல் சவாலாக இருந்தது. புத்தகங்களும் கையேடுகளும்கூட அப்போது கிடையாது. போதுமான நூலகங்களும் இல்லை. அதுவும் மூன்று மாதங்களில் முப்பது தேர்வுகள் எழுத வேண்டியிருந்தது. பேராசிரியர்கள் ஆங்கிலத்தில் நடத்துவதைக் குறிப்பெடுத்துதான் படிக்க வேண்டும். அவர்கள் வேகம் வேகமாக வேறு பேசுவார்கள். அவர்கள் கூறும் பல வார்த்தைகளை அதற்கு முன் கேள்விப்பட்டதே இல்லை. நகரங்களில் இருந்து வந்திருந்த மாணவர்களின் குறிப்பேட்டை வாங்கி நாங்கள் அதைப் பார்த்து எழுதிக்கொள்வோம். அதைப் படித்துப் புரிந்துகொண்டு தேர்வுக்குத் தயாராவோம். முதலில் சிரமமாக இருந்தது. ஆங்கில அகராதிகளின் துணையோடு கடுமையான உழைப்பைச் செலுத்தி அதை எதிர்கொண்டேன்.
பொருளாதாரப் பிரச்சனைகள் ஏதும் இல்லையா?
அது இல்லாமல் எப்படி இருக்கும்? விவசாயத்தில் அறுவடை முடிந்தால்தான் பணம் கிடைக்கும். அதுவரைக்கும் ஆகிற செலவுகளை உடன் படிக்கும் நண்பர்கள்தாம் பார்த்துக்கொண்டார்கள். வெளியே சாப்பிடுவது, சினிமா பார்க்கப்போவது, சுற்றுலாச் செல்வது என அனைத்திலும் என்னையும் இணைத்துக்கொண்டு செல்வார்கள்; செலவு செய்வார்கள். ஒவ்வொரு செலவையும் தவறாமல் குறித்துக்கொள்வேன். மூன்று மாதங்கள் கழித்து அப்பா அனுப்பும் பணத்தை வைத்து எனக்குச் செலவு செய்ததைப் பாக்கி இல்லாமல் கொடுத்து விடுவேன். அந்த நண்பர்கள் எல்லாரும் இப்போதும் தொடர்பில்தான் உள்ளனர்.
இக்கட்டான காலங்களில் அடுத்த நகர்வான காத்திருத்தல் என்பதை எப்படி எதிர்கொண்டீர்கள்?
எதிர்கொள்ளத்தானே வேண்டும்! ஆனால், அதில் முடங்குவது என் வழக்கம் இல்லை. குறிப்பாக நேரத்தை வீணடிக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பேன். பன்னிரண்டாம் வகுப்பு முடித்துக் கல்லூரியில் சேரும் இடைப்பட்ட காலத்தில் ஆங்கிலம் பழகினேன். அது படிப்புக்கும் சரி, வேலை கிடைத்த பின்பும் சரி உதவிக்கொண்டுதான் இருக்கிறது. அதேபோல, இளநிலைப் படிப்பு முடித்ததும் வேலைக்குப் போகவேண்டிய சூழல். அந்த நிலையில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய போட்டித்தேர்வை எழுதி இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்தேன். அதன்மூலம் மாதந்தோறும் ஆயிரத்திஐநூறு ரூபாய் உதவித் தொகை கிடைத்தது. அதை வைத்துக் கோவை வேளாண்கல்லூரியில் முதுநிலைப் படிப்பில் சேர்ந்தேன். அதை வைத்து மெஸ்க்கான கட்டணம் கட்டினேன். முதுநிலை முடித்து பி.ஹெச்.டி படிக்க டெல்லிக்குச் சென்றேன். நான் நினைத்தமாதிரி நடக்கவில்லை. தனியார் நிறுவனங்களிலும் வேலை கிடைக்கவில்லை. அடுத்து என்ன செய்வது என்று பெரிய குழப்பம்தான். ஏனெனில், சரியாக வழிநடத்த வழிகாட்டிகளும் இல்லாத நிலை. நண்பர்களிடம் பேசிப்பேசி எனது பாதையை உருவாக்கிக்கொண்டேன்.
அரசுப் பணியில் சேர்ந்தது எப்போது?
அப்போது தமிழ்நாடு அரசு வேளாண் துறைப் பணிகளுக்குத் தேர்வு நடத்தியது. அதை ஆர்வத்தோடு எழுதினேன். இடையில் முத்து எனும் நண்பர் சிவில் சர்வீஸ் எழுதத் தூண்டிக்கொண்டிருந்தார். ஒருநாள், அரசு முத்திரையிட்ட இரண்டு கடிதங்கள் எனக்கு வந்தன. ஒன்று, வேளாண் விரிவாக்க அலுவலர் பணிக்கும், மற்றொன்று வேளாண் வேதியியல் அலுவலர் பணிக்கும் சேர்வதற்கான கடிதங்கள். முதலில் நம்பவே முடியவில்லை. வேலையே கிடைக்காத சூழலில் இப்போது எந்த வேலையைத் தேர்ந்தெடுப்பது என்ற நிலை. வேளாண் விரிவாக்க அலுவலர் பணியைத் தேர்ந்தெடுத்தேன்.
அந்தப் பணியைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம்?
மக்களோடு அதிகம் பழக முடியும். அடுத்து சிவில் சர்வீஸ் தேர்வு எழுத இந்தப் பணி உதவும் என்று நினைத்தேன். அதனால், இதைத் தேர்ந்தெடுத்தேன். முதல் அரசுப் பணி திருமானூர் வேளாண் விரிவாக்க அலுவலராகத்தான் ஆரம்பித்தேன்.
முதல் பணி முதல் நாள் எப்படி உணர்ந்தீர்கள்?
முதல் வேலை என்பது திருச்சியில் தேசிய மானாவாரி நீர்ப்பிடிப்புத் திட்டத்தில் வேலைக்குச் சென்றதுதான். தற்காலிக வேலைதான் என்றாலும் மகிழ்ச்சியோடு ஏற்றுகொண்டேன். ஏனென்றால் வறுமை. அப்போதெல்லாம் மூன்று வேளை சாப்பிடுவதே பெரிய விஷயமாக இருந்த காலம். சைக்கிளில் சென்று வேலையில் சேர்ந்தேன். ஊர் ஊராக அலைந்து தகவல் சேகரிப்பதுதான் வேலை அதிலிருந்து பல்வேறு வேலைகள் பல அனுபவங்கள்.
மருத்துவரிலிருந்து ஐ.ஏ.எஸ் எனும் கனவு உருவானது எப்போது?
ஆரம்பத்தில் ஐ.ஏ.எஸ் கனவு எல்லாம் இல்லை. நாங்கள் சின்ன வயதாக இருக்கும்போது வி.ஏ.ஓ வைத்தான் பார்த்திருக்கிறோம். சாதிச் சான்றிதழ் போன்றவற்றிற்காகத் தாசில்தாரைப் பார்த்திருக்கிறோம். மற்ற அரசு அலுவலர்களைப் பார்த்ததே இல்லை. ஒரு வெள்ள நிவாரணம் தர ஆட்சியர் வந்திருந்தார். அவரைத் தூரத்தில் இருந்துதான் பார்த்திருக்கிறேன். அதனால், ஐ.ஏ.எஸ் ஆகவேண்டும் என்ற உந்துதல் எல்லாம் இல்லை. நான் வேளாண்பணியில் இருந்தபோது முத்து என்ற நண்பர்தான், ‘நாம் சிவில் சர்வீஸ் எழுதலாம்’ என்று சொன்னார். நான் தயங்கினேன். அவர்தான் பலரை ஒப்பிட்டு நம்மால் முடியும் என்று நம்பிக்கை தந்தார். அவரே சென்னை சென்று புத்தகங்கள் வாங்கி வந்தார். தேர்வு எழுதினேன். முதல்முறை தோல்வி. அடுத்து எழுதலாம் என்று நம்பிக்கை தர, மீண்டும் எழுதினேன். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். நேர்காணல் சென்று தோல்வி. மூன்றாம் முறை எழுதினேன். நேர்காணல் சென்றேன், ரயில்வே துறையில் வேலை கிடைத்தது. வேளாண் துறை வேலையை விட அது பெரிய வேலை என்பதால் ஏற்றுக்கொண்டேன். ஆனாலும் கிராமத்தை வளர்த்தெடுக்க அந்த வேலை பெரியளவில் உதவாது என்ற எண்ணமும் இருந்தது. நான்காம் முறை எழுதியபோதும் தோல்விதான். அடுத்துப் பயிற்சி எடுத்து ஐந்தாம் முறை தேர்வு எழுதினேன். இதுதான் கடைசி என்று நினைத்துக் கடுமையான உழைப்பைத் தந்தேன். உழைப்புக்குப் பலன் கிடைத்தது. ஐ.ஏ.எஸ் பணி கிடைத்தது. அப்படிப் போராடினதுக்குக் காரணம், வெற்றிபெற்றவர்களின் சொற்களைத்தான் உலகம் கேட்கும்.
நீங்கள் பிறந்து வளர்ந்தது வெக்கை நிலம்; நீங்கள் ஐ.ஏ.எஸ் ஆனதும் முதல் பணியிடம் கடும்குளிர் நிறைந்த இமாச்சலப்பிரதேசம். எதிரெதிர் நிலங்கள். மொழியும் வேறு. உணவும் வேறு. எப்படிச் சமாளித்தீர்கள்? இப்படி ஒரு நிலத்துக்கு முற்றிலும் வேறுபட்ட ஓர் அலுவரை நியமிப்பது சரிதானா?
எனக்கு இமாச்சலில் பணி ஒதுக்கியபிறகுதான் அதன் இடத்தைத் துல்லியமாகத் தெரிந்துகொண்டேன். ஏனென்றால் என் பயணங்கள் எல்லாமே கல்வி சார்ந்தும் பணி சார்ந்ததுமே. சுற்றுலா என்று தனியாகச் சென்றது கிடையாது. எனது பூர்வீக நிலம் வெப்பம்; மிக வெப்பம்; கூடுதல் வெப்பம். அந்த ஊரோ குளிர்; மிகக் குளிர்; கூடுதல் குளிர். ஒரு செடியைப் பிடுங்கி வேறோர் இடத்தில் நடும்போது அடையும் நிலைதான் எனக்குள் இருந்தது. ஆயினும் பயிற்சிக்காலத்தில் இந்தியாவைச் சுற்றிக் காட்டியிருந்தார்கள். நாட்டையும் மக்களையும் காலநிலையையும் புரிந்துகொள்ளவும் உதவியாக இருந்தது. இருந்தபோதும், இமாச்சலில் பணிக்குச் சேர்ந்தபோது ஒன்றின் மேல் ஒன்றாக ஐந்து உடைகள் போட்டுக்கொண்டுதான் வேலைக்குச் செல்ல வேண்டியிருந்தது. அதுவே நம் உற்சாகத்தை மட்டுப்படுத்தி விடும். அடுத்து நம் ஊர் உணவைச் சாப்பிட்டுப் பழகியிருந்த எனக்கு அங்கே கிடைத்தது சப்பாத்தியும் உருளைக்கிழங்குதான். அடுத்து மொழிச் சிக்கல். அடுத்து புவியியல் அமைப்பு. கடல்மட்டத்திலிருந்து 14ஆயிரம் அடி உயரத்திற்குச் செல்ல வேண்டியதாக இருந்தது. இன்னும் பலவும் இருந்தாலும் மக்களின் பிர்ச்சனைகள் எங்கும் ஒன்றுதான். வாய்க்கால் வரப்புத் தகராறு, குடிநீர்ப் பிரச்சனை, சாலை வசதி இல்லை போன்ற பிரச்சனைகள்தாம். இந்தியாவை ஒன்றிணைப்பவையே பிரச்சனைகள்தாம். அவர்களுக்குப் பணியாற்றக் கிடைத்த வாய்ப்பாக ஆர்வத்தோடு செய்தேன். ஒருவரின் பிரச்சனையை நமக்குக் கிடைத்திருக்கும் பதவியால் தீர்த்துவிட்டால் அப்போது நமக்குக் கிடைக்கும் திருப்தியே, நாம் எதிர்கொள்ளும் அசெளரியங்களை எல்லாம் மறக்கடித்துவிடும்.
இமாச்சல் மட்டுமல்லாது வட இந்தியாவில் பல்வேறு இடங்களில் பணியாற்றியுள்ளீர்கள். மக்களோடு தொடர்புகொள்ள மொழி ஒரு சிக்கலாக இருந்திருக்கும். ஒருவேளை சின்ன வயதிலேயே இந்தி படித்திருந்தால் உதவியாக இருந்திருக்கும் என எப்போதேனும் நினைத்ததுண்டா?
ஒருபோதும் அப்படி நினைத்தது இல்லை. அதில் தெளிவாகவே இருக்கிறேன். மொழி என்பதைத் தேவைக்கு ஏற்பக் கற்றுக்கொள்ளலாம். 29 வயதில்தான் இந்தி கற்றுக்கொண்டேன். இரண்டு மூன்று ஆண்டுகளில் மக்களோடு பேசுமளவுக்குப் பழக முடிந்தது. ஏனெனில், சுற்றியிருப்பவர்களுடையதும், நிர்வாக மொழியும் அதுவாக இருந்ததால் சீக்கிரமே கற்றுக்கொண்டேன். கொஞ்சம் கடின உழைப்புக் கொடுத்தேன், அவ்வளவுதான்.
விவசாயக் குடும்பத்தில் பிறந்து வேளாண் துறையில் பணியாற்றியதன் அடிப்படையில் சொல்லுங்கள், இந்தியாவில் விவசாயம் ஏன் லாபகரமான தொழிலாக மாறவில்லை?
அதற்குப் பல காரணங்கள் உள்ளன. முதலில், நம் நாட்டில் விவசாயத்தைத் தொழிலாகப் பார்க்க வில்லை. அதை வாழ்வியலாகவே கருதுகிறார்கள். முதலீடு செய்து அதன் லாபம் எவ்வளவு எனக் கணக்கிடுவது எல்லாம் விவசாயத்தில் கிடையாது. அடுத்து விவசாயம் ஒரு பருவகாலச் சூதாட்டம். விவசாயம், “ஒன்னு பெய்ஞ்சி கெடுக்கும்… இல்ல காஞ்சி கெடுக்கும்” என்பார்கள். எவ்வளவு பெரிய துயரை ஒரே வரியில் சொல்லிவிடுகிறார்கள். அந்தளவுக்குப் பருவமழையை ஒட்டித்தான் விவசாயம் இருக்கிறது. பருவமழையின் மாற்றங்களை ஏதும் செய்ய முடியாததால் அதன் விளைவு மகசூலையும் பாதிக்கிறது. அடுத்து, தேவைக்கு அதிகமான நபர்கள் விவசாயத்தில் ஈடுபடுவதும் ஒரு காரணம். இதில் சிலருக்கு முரண்பட்ட கருத்துகள் இருக்கலாம். ஜி.டி.பியில் வேளாண்துறையின் பங்களிப்பு 14 – 18 சதவிகிதம்தான் என்றால், மக்கள் தொகையில் அத்தனை சதவிகிதம் மட்டுமே ஈடுபட்டால் போதும். ஆனால், தற்போது 50 சதவிகிதத்திற்கு அதிகமானவர்கள் ஈடுபடுகின்றார்கள். உதாரணத்திற்கு 10 ஏக்கர் நிலம் ஒரு குடும்பத்திற்கு இருந்தால், விவசாயத்தில் ஒருவர் ஈடுபட்டாலே போதும். மாறாக, குடும்பத்தில் உள்ள ஆறேழு நபர்களும் ஈடுபடுவதைத் தவிர்க்கலாம். வேறு எந்தத் தொழிலிலும் அளவுக்கு மேல் ஆட்களை வைத்திருப்பதில்லை. அதாவது ஒரு தொழிலுக்கான அலகுகளை விவசாயத்தில் கடைப்பிடிப்பதில்லை. அடுத்து, விவசாயத்திற்கு வங்கிகளில் கடன் வாங்குவது அத்தனை எளிதானது இல்லை. அதனால், தனிநபரிடம் அதிக வட்டிக்குக் கடன் வாங்கி தாங்க முடியாத கடனாளியாக மாறிவிடுகின்றனர். கூடுதலாக, குடும்பச் செலவும் இருக்கிறது. அடுத்து, குறைந்த பட்ச ஆதார விலையை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள். அந்த விலைக்கு நிர்ணயிக்க சட்டப்பூர்வமான அங்கீகாரம் இல்லை. தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் இதைச் சரியாகக் கையாள்கின்றன. இவை இந்தியாவிற்கே உள்ள சிக்கல்கள்தான்.
உங்களின் ’ஹார்வர்டு நாட்கள்’ நூலில், ‘நாம் தேர்ந்தெடுக்கும் அரசியல் பாதை, பொருளியல் பாதை எதுவாக இருப்பினும் நிர்வாகத் துல்லியம் முக்கியம்’ என்று குறிப்பிடுகிறீர்கள். அதேபோல நிர்வாகத் துல்லியம் என்பதை எந்த ஒரு காரியத்துக்கும் அறிவியல் பூர்வச் சிந்தனையின் உள்ளடக்கத்தைக் கொடுப்பதே என்று விவரிக்கிறீர்கள்…. இதைக் கொஞ்சம் விரிவாகச் சொல்ல முடியுமா?
நான் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். அனுபவத்திலிருந்து பலவற்றைக் கணிக்கிறேன். ஒருவர் கடவுளை வழிபடச் செல்வதற்கான பத்துக் காரணங்களைப் பட்டியலிடுங்கள். நிலத்தகராறு, பட்டப்பிரச்சினைகள், உடல் உபாதைகள், குழந்தைகளின் கல்விப் பிரச்சினைகள், கடன் பிரச்சினைகள் எனப் பொதுவானவையாகத்தான் இருக்கும். நிலப்பிரச்சனைக்கு ஒருவர் கிராம நிர்வாக அலுவலரிடம் செல்வார். அங்குத் தீரவில்லை என்றால், உயர் வருவாய் அதிகாரிகள், காவல் துறை நீதிமன்றம் வரை செல்வார். (சிலவற்றில் வேறு சில பிரச்சனைகளாலும் தீர்வு கிடைக்காமல் இருக்கலாம்.) பிரச்சினைகள் தீரவில்லை. கோவிலை நோக்கிச் செல்கின்றார். ஆனால், முறையாக அவருக்குத் தீர்வு கிடைத்திருந்தால் அவர் கோவிலுக்குச் செல்வதற்கான காரணம் ஒன்று குறைந்திருக்கும் அல்லவா? அனைவரின் வளர்ச்சியையும் உள்ளடக்கிய சமூக, அரசியல், பொருளாதார நிறுவனங்கள் தேவை. சாதி, மதங்கள் கடந்த சமத்துவம் தேவை. நகரங்களில் கிடைக்கும் கல்வி, மருத்துவம், குடிநீர், போக்குவரத்து வசதிகள், வேலைவாய்ப்பு போன்றவை கிராமங்களுக்கும் சமமாகக் கிடைக்கவேண்டும். இந்த அடிப்படை விஷயங்களை அறிவியல் பூர்வமாகக் கையாள நிர்வாகத் துல்லியம் அவசியம். இதனால் நிர்வாகத்தைக் குறைகூறுவதாகக் கருதக்கூடாது. சமூகக் கட்டமைப்பையே மாற்ற வேண்டும். அரசு, மக்கள், அரசு அலுவலர்கள், கொள்கை வகுப்பவர்கள், சமூகம் என எல்லாமும் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம். அப்படிச் செயல்பட்டால் பொதுமக்களின் பிரச்சனைகளை எளிதில் தீர்க்கலாம். அதைத்தான் நிர்வாகத் துல்லியம் என்கிறேன். மேலும் அறிவியல், பொருளாதார, சுற்றுச்சூழல் சிந்தனையின் அடிப்படையில் சமூகம் கட்டமைக்கப்படவேண்டும். சூரிய, சந்திர கிரகணங்களில் வீட்டைப்பூட்டிக்கொண்டு உள்ளே இருப்பதல்ல அறிவியல். தொலைநோக்கி வைத்து அது எவ்வாறு ஏற்படுகிறது எனபதை மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் விளக்க வேண்டும். அமெரிக்கா அவ்வாறுதான் செய்கிறது. பிறப்பிலிருந்து இறப்பு வரை ஒவ்வோர் இந்தியனும் தேவையற்ற ஏதோ ஒரு சடங்கினாலும் மூடநம்பிக்கையினாலும் கட்டப்பட்டுள்ளான். அதிலிருந்து நாம் விடுதலைபெறவேண்டும்.
பல்வேறு விஷயங்களை வேறொரு கோணத்தில் அணுகி தெளிவான பார்வையை முன் வைக்கிறீர்கள். உங்களின் கருத்தியலின் அடித்தளமாக இருப்பது எது?
சராசரியான பொதுமனிதனின் பார்வைதான் என்னுடையது. நான் இன்று பெரிய பதவியில் இருக்கலாம். கார் இருக்கிறது, எங்கும் செல்லாம். தேவை ஏற்பட்டால் விமானத்தில் செல்லலாம். என் சிக்கல்களை எளிதில் தீர்த்துக்கொள்ளலாம். எனது நிலப்பிரச்சினையையோ, கல்வி, கடன் பிரச்சினையையோ எளிதில் தீர்த்துக்கொள்ளலாம். சிறந்த மருத்துவமனையில் சிகிச்சைபெறலாம். நிர்வாகம் என் கைக்கு எட்டும் தொலைவில் உள்ளது. ஆனால், இதெல்லாம் பொதுமனிதருக்குக் கிடைக்காது என்றே எப்போதும் நினைப்பேன். ஏன் கிடைக்கவில்லை என்று யோசிப்பேன். அதற்கு அடிக்கடி கிராமத்திற்குச் செல்வதும் காரணமாக இருக்கும். என் வேர்களை விட்டு விட்டுப் பயணிப்பதே இல்லை. என் கிராமத்தில் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, பள்ளிக் கழிவறை, குடிநீர்ப் பிரச்சினைகள், மின் வசதி, சாலை வசதி, மருத்துவமனை வசதிகள் உள்ளிட்ட சிலவற்றை ஏற்படுத்த உதவினேன். மற்ற ஊர்களுக்கும் கிடைக்க வைக்க ஏன் முடியவில்லை என்றும் யோசிப்பேன். அதில் இருந்தே அனைத்தையும் பார்க்கிறேன்; தீர்வை யோசிக்கிறேன்.
உங்கள் கிராமப் பகுதியில் வாழ்வாதாரமே கேள்விக்குரியதாக மாறிவிட்ட நிலையில் அங்கே இரண்டு விஷயங்கள் நிகழ்ந்தன… ஒன்று… நக்சல்… மற்றொன்று கள்ளச்சாராயம்… இவை உங்கள் நிலப்பகுதியின் சிக்கலால் மட்டுமே நிகழ்ந்த விளைவா… வேறு காரணங்களும் இருக்கக்கூடுமா?
எதையும் அவர்களின் இடத்தில் இருந்தும் பார்க்க வேண்டும். நல்ல வாழ்க்கை கிடைத்தால் அவர்கள் ஏன் துப்பாக்கி தூக்கவும் சாராயம் காய்ச்சவும் நினைப்பார்கள். ஒருவேளை அவர்கள் வெளியே இருப்பதும் உள்ளே இருப்பதும் ஒன்றாகக்கூட நினைக்கலாம். அவர்கள் மேற்கொண்ட வழிமுறை நிச்சயம் தவறான பாதைதான். அதில் சந்தேகமில்லை. தங்கள் வறுமையை வேறு வழியில் சரி செய்திருக்கலாம். போராடுவது என்றால் வேறு வகையில் போராடியிருக்கலாம். அதற்கு வழிகாட்ட சரியான நபர்கள் இல்லாமல் போயிருக்கலாம். கள்ளச்சாராயம் எனில், அங்கிருப்பவர்களுக்குச் சரியான படிப்பும் இல்லை; வேளாண்மையும் இல்லை, பொருளாதாரமும் இல்லை. அதனால் தவறான வழியைத் தேர்ந்தெடுத்துச் சாராயம் காய்ச்சத் தொடங்கினார்கள். அப்படி ஈடுபட்ட குடும்பம் வீணாகப் போனது. வறுமை கோரமாக இருந்த இடங்களில் இப்படி ஆனது என்றும் சொல்ல முடியும். அரசு இயந்திரம் எட்டாத இடமும் கூட. நீட் தேர்வுக்குப் படிப்பதற்கான வசதி சென்னையில் இருப்பவருக்கும் கிராமத்தில் இருப்பவருக்கும் ஒரே மாதிரிக் கிடைக்காது அல்லவா?
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது பற்றி…
என் வாழ்வில் பல விஷயங்கள் திட்டமிடாமல் நடந்தவைதான். இதுவும் அப்படி ஒன்றுதான். டெல்லியில் ஏழெட்டு ஆண்டுகள் பணியாற்றி விட்டோம். பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தும் பணியில் ஈடுபடுத்திக்கொண்டு விட்டேன். ஆயினும் சில கேள்விகள் இருந்தன. வீடு கட்டும் திட்டம் உள்ளது. ஆனால், மனையே இல்லாதவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்களே, அவர்களுக்கு என்ன செய்வது என்ற கேள்வி மனதில் உறுத்திக்கொண்டே இருக்கிறது. கொள்கை வகுப்பதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் உள்ள சிக்கல்கள் தெரிந்தன. அடுத்து என்ன என்ற எண்ணம் எழுந்தது. வெளிநாட்டில் படிக்க அரசு உதவி செய்தது. கூட இருந்தவர்கள் ‘ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படி’ என்று ஆலோசனை சொன்னார்கள். நம்மால் முடியுமா என்றுதான் முதலில் தோன்றியது. முதல் ஆண்டு விண்ணப்பித்தபோது கிடைக்கவில்லை. அடுத்த ஆண்டு இந்தியாவில் இருந்து இரண்டே பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் நானும் ஒருவன். தேர்வாவது அத்தனை சிரமமான ஒன்று. நாம் பணிபுரிந்ததை வைத்து மட்டுமல்ல… நம் பணி சமூகத்தில் எந்தளவு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதைப் பொறுத்தே அவர்கள் தேர்வு செய்கிறார்கள். அப்படியான தேர்வில் தேர்வானதே நாம் சரியாக வேலை செய்துவருகிறோம் என்ற மனநிறைவும் மகிழ்ச்சியும் தந்தது.
ஹார்வர்டில் கற்றதில் மிக முக்கியமானதாக ஒன்றை மட்டும் சொல்லச் சொன்னால் எதைச் சொல்வீர்கள்?
என் சிந்தனையில் பெரும் மாற்றத்தை ஹார்வர்டு நாட்கள் தந்தன. மனிதநேயம் தழைக்க வேண்டும் எனும் ஒற்றைக் குறிக்கோளில் அந்நிறுவனம் வளர்ந்துள்ளது. இது தமிழனின் ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என்ற கோட்பாட்டுடன் இணைந்திருப்பதை என்னால் பொருத்திப் பார்க்கமுடிந்தது. இதை உதட்டளவில் அல்ல. உள்ளத்தளவில் சொல்கிறேன். ஏனெனில், அங்கு கற்பிக்கும் முறையே அப்படித்தான் இருக்கிறது. நியூயார்க்கில் குடிநீர்ப் பிரச்சனையைப் பற்றி என்றால், அங்கு எப்படித் தீர்க்கப்பட்டது என்று மட்டும் இருக்காது. டெல்லியில் எப்படித் தீர்க்கப்பட்டது என்பது தொடங்கி உலகம் முழுவதும் எப்படி இது தீர்வு காணப்பட்டது என விரிந்து ஒப்பிட்டளவில் விவாதிக்கும் வகையில் போதிக்கும் முறை இருக்கிறது. அங்கு பணிபுரியும் ஒவ்வொரு பேராசிரியரும் ஒரு பல்கலைக்கழகம்தான். அவர்களுக்குப் பாடத்தில் இருப்பதையும் நடைமுறையில் இருப்பதையும் சமமாகப் பார்க்கிறார்கள். இரண்டுக்கும் இடைவெளி கிடையாது. உதாரணத்திற்கு, பேச்சுவார்த்தை பற்றிப் பாடம் எடுக்கும் பேராசிரியர் இஸ்ரேல்- பாலஸ்தீனம் போன்ற நாடுகளில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றவராக இருப்பார். அங்கு, தான் படித்தது எப்படி உதவியது என்பதையெல்லாம் விவரிப்பார். வெளியுறவுக் கொள்கை பற்றி பாடம் எடுப்பவரும் அப்படியான துறையில் ஈடுபட்டவராக இருப்பார். அதைக் கேட்கும் நமக்கு இன்னும் தெளிவான புரிதல் கிடைக்கும்.
நம் நாட்டில் மிக முக்கியச் சிக்கல்களில் ஒன்று நதிநீர்ப் பங்கீடு… அமெரிக்காவில் கடைமடைப் பயன்பாட்டிலிருந்தே அதன் பகிர்வு தொடங்குவதாகக் குறிப்பிட்டிருப்பீர்கள். நம் நாட்டில் இது சாத்தியம் ஆகாததுக்கு என்ன காரணம்?
முன்பு சாத்தியமாகி இருக்கிறதே. சோழர்கள் வரலாற்றைப் படிக்கும்போது ஏரிகளைப் பொறுத்தவரை தலைப்பகுதியில் இருந்து கடைப்பகுதி வரை இணைத்திருந்தார்கள். கடைமடைப் பகுதி விவசாயி பயிர் நட்டதும்தான் தலைப்பகுதி விவசாயி தனது வேலையைத் தொடங்குவார். அந்தப் பண்பு இங்கும் இருந்திருக்கிறது. இடைப்பட்ட காலத்தில் மாறிவிட்டது. புதிய மாநிலங்கள், புதிய மாவட்டங்கள் உருவாகின. அதன்பின் நதிநீர்ப் பங்கிட்டில் சிக்கல் ஏற்படுகிறது. ஒரு மாநிலத்திற்குள்ளேயும் ஓர் இடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்குச் செல்ல சண்டை நடப்பதையும் பார்க்கிறோம். இதை நிச்சயம் சரி செய்ய முடியும். மெக்சிகோ – அமெரிக்கா இடையேயான நதிநீர்ச் சிக்கலை 15 மாகாணங்களுடன் இணைந்து பேசிச் சரிசெய்துவிட்டார்கள். இந்தியா- பாகிஸ்தான் சிந்து நதிநீர்ப் பிரச்சினையும், இந்தியா -பங்களாதேஷ் கங்கையில், பர்க்கா அணையின் மூலம் இரு நாடுகளுக்கிடையே நதிநீர்ப் பிரச்சினைகள் மிகத்தெளிவாக வரையறுக்கப்பட்டுத் தீர்க்கப்பட்டுள்ளன. முன்பே சொல்லியதைப் போல அறிவியல் பூர்வமாக அணுகிப் பேசித் தீர்க்கப்பட்டுள்ளது. எவ்வளவு நீர் கிடைக்கிறது; யாருக்கு எவ்வளவு தேவை இருக்கிறது என்று ஆராய்ந்து தீர்க்கலாம். தீர்க்கமுடியாத பிரச்சனை என்பதே இல்லை.
நமது கல்வி முறையில் என்னவிதமான மாற்றங்கள் நிகழ்ந்தால் இன்னும் ஆரோக்கியமானதாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?
ஆரோக்கியமான கல்வியின் அடிப்படை என்பது, பள்ளிக்கல்லூரிகள் திறன் கண்டறியும் மற்றும் திறன் மேம்பாட்டு நிறுவனங்களாக இருக்க வேண்டும். பழைய பாணியில் தகவல் தெரிவிப்பதாக இருக்கக்கூடாது. ஏனெனில் தகவல்கள் தேவைக்கு அதிகமாகக்கொட்டிக் கிடக்கின்றன. அமெரிக்கா போன்ற நாடுகளில் குழந்தைகளின் திறனைக் கண்டறிந்து, அதனைத் தொடர்ந்து கண்காணிக்கிறார்கள். அதை மேம்படுத்த உதவுகிறார்கள். பிறகு, புதிய சிந்தனையை நடைமுறைப்படுத்தவும் உதவுகிறார்கள். ஆசிரியர்கள் எப்படி மாணவர்களை மதிப்பீடு செய்கிறார்களோ, அதைப்போலவே மாணவர்களும் ஆசிரியர்களையும் மதிப்பீடு செய்வார்கள். அதனால் ஆசிரியர்கள் தங்களைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆசிரியர் – மாணவர் உறவுமுறை சமமானதாக இருக்கும். அனைத்துக் குழந்தைகளுக்கும் சம வாய்ப்புகள் கொடுக்கப்படுகின்றன. ஒரு வகுப்பில் 35 குழந்தைகள் இருந்தால் ஒருவர் நடனம், ஒருவர் கீபோர்டு, ஒருவர் ஓவியம், ஒருவர் விளையாட்டு என எல்லாருக்கும் திறமைக்கு ஏற்பப் பயிற்சியும் வாய்ப்பும் கொடுக்கப்படுகிறது. நமது நாட்டில் ஒரு பையன் ஐந்தாம் வகுப்பில் பேச்சுப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றால், அவனை மட்டுமே தொடர்ந்து 12ம் வகுப்புவரை தயார் செய்து போட்டிகளில் கலந்துகொள்ள வைக்கும் முறை இருக்கிறது. அதேபோல மனனம் செய்யும் முறையே முதன்மையாக இருக்கிறது. மனனம் தேவைதான், கூடவே பிராக்டிக்கல் நாலட்ஜும் வேண்டும். வெளிநாடுகளில் அகாடமிக், நான் – அகாடமிக் இரண்டும் சமமாகப் பார்க்கப் படுகிறது. படிக்கும் காலத்தில் என்ன பொதுச்சேவை செய்தாய் என்று பார்த்து அவை மதிப்பீட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது. இப்படியான மாற்றங்களும் நமக்குத் தேவை. ஐன்ஸ்டீன் சொல்வதுபோல மீனின் திறமையை நீந்த விட்டுத்தான் முடிவு செய்ய வேண்டும். மரத்தில் ஏறச் சொல்லி அல்ல. ஆசிரியர்கள் தங்களைப் புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும். பெற்றோர்களும் தங்கள் கருத்துகளைத் திணிப்பதையும் மாற்றிக்கொள்ள வேண்டும். அரசு உள்ளிட்ட எல்லாமும் சேர்ந்தே மாற்றத்தில் ஈடுபட வேண்டும்.
வாசிப்பு எந்த வயதில் கைகூடியது… உங்கள் கதையை எழுதும் முடிவை எப்போது எடுத்தீர்கள்?
பாடத்திட்டம் கடந்த வாசிப்பு என்பது பல தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படித்ததில் இருந்து தொடங்கியது. அவர்கள் பட்ட சிரமங்களப் பார்க்கையில் நாம் பட்ட பாடு ஒன்றுமே இல்லை என்று தோன்றியது. பல தலைவர்களின் வாழ்க்கையைப் படித்ததில், சமூகத்திற்கு நான் நிறையத் திரும்பச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை வலுப்படுத்தியது. கொரோனா காலத்தில் கிடைத்த நேரம், எழுதும் வாய்ப்பை ஏற்படுத்தியது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்தாலே எழுதத் தொடங்கிவிடுவார்களே என்று நண்பர்கள் பகடியாகச் சொன்னார்கள். என் வாழ்க்கையைப் ‘பனையடி’ என்று எழுதக் காரணமே பின் தங்கிய கிராமம், கல்வி இல்லாத பெற்றோருக்குப் பிறந்த என்னால் இந்த இலக்கை எட்ட முடியும் என்றால் அனைவராலும் முடியும் என்ற நம்பிக்கை விதைக்கவே! ஹார்வர்டு நாட்கள் நூலைப் பொறுத்தவரை உலகில் பல நாடுகளைச் சுற்றிப் பார்த்திருக்கிறேன். நிர்வாக ரீதியாக என்னவெல்லாம் சீர் செய்துகொள்ள உதவும் வழி முறைகளைப் பகிரும் விதமாக எழுதினேன். l