பிரேமா இரவிச்சந்திரன்
இவ்வுலகில் இதிகாசங்கள் தோன்றிய காலந்தொட்டு உண்மைக்கும் நேர்மைக்கும், பொய்மைக்கும் கயமைக்கும் இடையேயான போராட்டங்களும் மோதல்களும் இறுதியில் ஏதோவொரு தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டேதான் இருக்கின்றன. காலங்கள் கடந்து சென்று வாழ்க்கை முறைகள் மாறினாலும், வெவ்வேறு கண்டங்களைப் பொறுத்து நாகரீகங்கள் வளர்ந்தாலும், நீதிக்கும் நியாயத்திற்கும், அதிகாரத்திற்கும் சுரண்டலுக்கும், உழைப்பிற்கும் கூலிக்கும் மத்தியில்தான், மக்கள் பாத்திரங்களாகத் தங்களைப் பொருத்திக் கொண்டு இப்புவியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அதிகார வர்க்கத்திற்குக் கீழே மக்கள் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகின்றபோது அவர்களது உரிமைகளைப் பாதுகாக்கின்ற விழிப்புணர்வைச் சில இயக்கங்கள் உலக நாடுகளில் கொண்டு வந்தன. நாம் காணும் யாவற்றையும் செய்தவனாக உழைப்பாளர்கள் விளங்குகின்ற நிலையில் அவர்களுக்கான சுதந்திரத்தை முன்வைத்து கம்யூனிச நாடுகள் இயங்கின. அடிப்படை வசதிகளைக் கோருகின்ற மக்களிடமிருந்து ஆரம்பித்து அதிகாரத்தை ஆட்சியாளர்களுக்குக் கொண்டு செல்கின்ற ஜனநாயகத்தை ஒரு நாடு பெறுவதே ஒவ்வொரு நாட்டின் விடுதலைக்கும் நோக்கமாக இருக்கிறது. ரஷ்யாவின் புகழ்பெற்ற எழுத்தாளரான அந்தோன் செகாவ் அவர்கள் 1896 இல் எழுதி வெளியிட்ட மூல நூலின் அடிப்படையில், “என் வாழ்க்கை” எனும் புத்தகத்தை ஒரு நூற்றாண்டைக் கடந்த பிறகு ச. சுப்பாராவ் அவர்கள் தமிழுக்கு மொழிபெயர்த்து அளித்திருக்கிறார்.
அவர் வாழ்ந்த காலத்தில் நவீனத்துவம் வாய்ந்த இவரது சிறுகதைகள் ஏராளமாக மொழிபெயர்க்கப்பட்டு இருந்தாலும் இன்னும் மொழி பெயர்க்க வேண்டிய கதைகளும் நிறைந்து இருக்கின்றன. இந்த நாவலானது முதன் முதலாக ச. சுப்பாராவ் அவர்களால் தமிழ் உலகுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
மக்களிடம் நிலவி வந்த உழைப்பிற்கும், உழைப்புச் சுரண்டலுக்கும், நீதிக்கும், நியாயத்திற்கும், சுதந்திரத்திற்கும், கட்டுப்பாடுகளுக்கும், விதிகளுக்கும், தனிமனித உரிமைக்கும், உண்மைக்கும், அவை அல்லாதவைக்குமென நடக்கும் மனப் போராட்டங்கள் யாவும் கதை நெடுகிலுமாகப் பயணிக்கின்றன. இதனை ஒரு நாடு சுதந்திரமடைந்து மக்கள் பெறுகின்ற விடுதலையாக மட்டுமல்லாமல், ஒரு பெரிய நாட்டின் சிறிய அலகாகவுள்ள ஒரு வீட்டை மட்டும் மையமாக வைத்து, மூத்தவர்களால் இளையவர்கள் கட்டுப்படுத்தப்படுவதைக் கருவாகக் கொண்டு பல கருத்துகள் விளக்கமளிக்கப்பட்டு இருக்கின்றன. நேர்மையற்ற வழியில் பணம் ஈட்டுபவன் நாட்டின் நலனுக்கான சிந்தனையின்றி மக்களது உழைப்பை உறிஞ்சுபவனாக வாழ்வதையும், உடல் உழைப்பைக் கொடுத்துப் பணி செய்பவன் முக்கியமானவனாக இருந்தாலும், நேர்மையாகவே வாழ்ந்தாலும், அவனைச் சூழ்ந்திருக்கும் உறவுகளும் நட்புகளும் கல்வியால் பொருளீட்டும் பொழுது, அவனை உறவென்று கூடச் சொல்லிக் கொள்ள விரும்பவில்லை என்பதையும் இந்த நாவலில் ஆசிரியர் பதிய வைத்திருக்கிறார். மொழிபெயர்ப்பு நாவல் என்னும் வகையில் நமக்குச் சாதகமில்லாத பல சூழ்நிலைகள் இந்த நூலில் இடம் பெற்றிருந்தாலும், சுவாசக்காற்றானது இவ்வுலக உயிர்கள் யாவற்றிற்குமே உரியதாக உணர்வுகளால் ஒன்றிணையும்படி, விருப்பத்தின் அடிப்படையில் உழைப்பை மேற்கொண்டாலும், நம் நாடு மட்டுமல்லாமல் வேறுபட்ட நிலத்திலும் விவசாயிகளின் மாறாத நிலையும், அவன் சந்திக்கின்ற துன்பங்களையும் இந்த நாவல் நன்கு வெளிப்படுத்தி இருக்கிறது.
தொடர்ந்து வாசிக்கும் பொழுது கதையை ஆங்காங்கே வெட்டி ஒட்டியதைப் போலத் திருப்பங்களைத் திடீரென இணைத்திருந்தாலும், தொடர்ச்சி இல்லாததைப் போல நம்மை உணர வைத்தாலும், முக்கியக் கருவாகக் கொண்டு இந்த நாவல் எதைப் பற்றிப் பேசுகிறது என்பதை நம்மால் கண்டடைய முடிகிறது. கதாபாத்திரங்கள் மூலமாகக் கதையின் ஓட்டத்தில் கொடுத்திருக்கின்ற விவாதங்களும் அதன் விளைவாக விளைகின்ற கருத்துகளும் எந்த நாட்டு மக்களுக்கும் பொருந்துவனவாக இருக்கின்றன.
நமது மண்ணில் உழைக்கின்ற விவசாயிகளை நம் மனதில் கொண்டு வந்து நிறுத்தினால் அவர்களது உருவமாக, மேலாடையற்ற அரை நிர்வாணமும், இடுப்பில் கட்டிய கசங்கிய வேட்டியும், சில நேரங்களில் தலையில் தலைப்பாகையாகவும், பல நேரங்களில் அவன் வியர்வையைத் துடைக்கும் துணியாகவும் இருக்கின்ற கைத்தறித் துண்டும், காலணியற்ற கால்களில் சேரும் சகதியுமே கவசமாவதையும், நாம் அவனைக் காணும் காட்சியாக இருப்பதோடு, கண்களை இடுக்கித் தனது கையை நெற்றியின்மீது கிடையாக வைத்து, வானத்தை உற்று நோக்கி நேரத்தை அறிவதையும், கருமேகத்தைக் கணக்கிடுவதையும் நாம் அறிவோம். அதே விவசாயி ரஷ்யாவில் ஓட்ஸ் விதைக்கும் காலம் வந்தபோது நிலத்தை உழுது, பரம்படித்து விதை விதைத்து, உழவு வேலைகளினால் மிகவும் களைப்படைந்து, அப்போது பெய்த மழையாலும் பனிக்காற்றாலும் பல மணி நேரங்களுக்குப் பின்பும் முகமும் பாதங்களும் எரிந்து கொண்டிருப்பதாக இந்த நூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
நமது வள்ளுவரது வாய்மொழியாக, “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றோரெல்லாம் தொழுதுண்டு பின் செய்பவர்”- என்ற உண்மையைக் குறிப்பிட்டிருந்தாலும், கலப்பையால் நிலத்தை உழுத விவசாயி கரடுமுரடான அருவருப்பான ஒரு சக்தியாகத் தென்படுவதாகவும், நெருப்பின் உபயோகம் அறியப்படாத அந்தப் பழங்காலம் நினைவிற்கு வருவதாகவும், மந்தையிலிருந்து வெறுத்து ஓடும் முரட்டுக்காளையும் குதிரையும் அச்சமூட்டுகின்றபடி முரட்டுச் சக்தியை நினைவுபடுத்துவதாகவும், முக்கியத்துவமற்றவர்களாக விவசாயிகள் பார்க்கப்படுவதாக அன்றைய ரஷ்ய இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அடிமைத்தனத்தைக் குறித்துப் பேசுகின்ற பத்திகளில், அன்றைய நாளில் அடிமைப்படுத்தும் கலையும் படிப்படியாக வளர்க்கப்படுவதாகக் குறிப்பிட்டு, அடிமைகளை முன்பு போல் தொழுவத்தில் கட்டி வைத்துச் சவுக்கடி தருவதில்லை என்றாலும், அதன் வேறு வடிவமாக மோசமான, உடல்ரீதியான செயல்பாடுகளின் சுமையை, உழைக்கும் வர்க்கத்தின் மீது சுமத்துவதாக வரிகள் இடம்பெற்றிருக்கின்றன. ஒருவன் தொழிலாளியாக மாறிய பிறகு அவனோடு சக மனிதராக அதுவரை இருந்தவர்கள், இப்பொழுது அவனைக் கீழ்த்தரமாக நடத்துவதையும், கடைகளில் கூட காய்ந்து போன இறைச்சிகளையும் நாற்றமடிக்கும் மாவையும் தள்ளி விடுவதாகவும், தேவாலயங்களிலும் காவலர்கள் துரத்துவதாகவும், மருத்துவமனைகளில் உதவியாளர்களும் செவிலியர்களும் லஞ்சம் தருவதற்குக் கூட வக்கற்ற ஏழைகளாகக் கருதித் தூய்மையற்ற பாத்திரங்களில் உணவு தந்து பழி வாங்குவதாகவும், தபால் அலுவலகங்களில் கடைநிலை ஊழியர்கள் கூடத் தொழிலாளர்களை விலங்குகளைப் போல நடத்திய பண்பில்லாதவர்களாக நடந்து கொண்டதையும் அன்றைய நாளில் ரஷ்யாவின் வரலாறாக இந்த நாவலில் காண முடிகிறது.
இன்றைய நாளில் அன்றாடத் தொலைக்காட்சிகளில் அரசாங்கத்தின் செயல்பாடுகளுக்கு இடையூறாக லஞ்சம் வாங்குபவர்களைக் குறித்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணமாக இருந்து, அவர்கள் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுவதை நாம் காண்கிறோம். இந்தக் குற்றங்களுக்கு க்காரணமாக இந்த நூலில் முக்கியமாக சொல்லப்பட்டிருக்கும் குற்றவாளிகளாக, தனது காரியத்தை எப்படியாவது அதிகாரத்தின் கீழ் சாதித்துக் கொள்ள முயலும் லஞ்சம் கொடுப்பவர்களே உள்ளார்கள். குற்றம் விளைவதன் முதல் புள்ளியாக லஞ்சம் கொடுப்பவர்களே இருக்கிறார்கள். இந்த நூலில் உள்ளபடி, அன்றைய ரஷ்யாவில் பணத்தை லஞ்சமாகப் பெற்றுக் கொண்டவர்கள் தமது நல்ல குணங்களை மதித்து மரியாதையின் காரணமாகத் தங்களுக்குக் கொடுக்கப்பட்டதாக கற்பனை செய்திருக்கிறார்கள்.
தங்களை நேர்மையானவர்களாக மதித்துக் கொள்வதிலிருந்து பணத்தைப் பெற்றுக் கொள்பவர்கள் கொஞ்சமும் பின்வாங்கவில்லை. அந்த காலத்தில் நீதித்துறையில் உயர்ந்த பொறுப்புகளில் இருப்பவர்கள் மட்டுமே லஞ்சம் வாங்காதவர்களாக இருந்திருக்கிறார்கள். பெரும் சீமாட்டிகளை மணந்து கொண்டு குடியும் சீட்டாட்டமுமாகக் குறுகிய பார்வையில் நாசகரமான வேலையில் ஈடுபடுபவர்களே நேர்மையற்ற செயல்களைப் பணத்தால் சாதிக்க நினைப்பவர்களாக இந்த நாவலில் சொல்லப்பட்டிருக்கிறார்கள். பின்னாளில் இது படிப்படியாக மாறி லஞ்சம் கொடுத்தால்தான் வேலை நடக்குமென்று மிரட்டுகின்ற அளவிற்குப் புரையோடிப் போயிருக்கிறது என்றே கொள்ள வைக்கிறது.
இவற்றைப் பற்றி மட்டுமல்லாமல் இன்னும் பலவாக, மாற்றிக்கொள்ள மனமில்லாத நேர்மையற்ற மனிதர்களையும் முயன்றாலும் மாற்ற முடியாத, கல்வி பெறாத உழைப்பாளர்களையும், ஊரில் வாழும் மக்களது பிற்போக்குத்தனங்களையும் குறித்து, ரஷ்ய நாட்டு இயற்கை அமைப்புகளையும் சூழலையும் விளக்கியவாறு, அன்றைய அரசியல் நிகழ்வுகளையும் வெளிப்படுத்தப் பாத்திரங்களை அமைத்து, தந்தை மகளுக்குமான உரையாடலிலும், அண்ணன் தங்கைக்கிடையேயும், காதலன் காதலிக்கு மத்தியிலுமாக இன்னும் சில உறவுகளுக்கிடையே நேரிடுகின்ற சூழ்நிலைகளைக் கொண்டு கதையை அமைத்து உருவாக்கிய இந்த நாவலின் இறுதியில், “எதுவும் கடந்து போகும்” என்ற வரிகளைக் குறித்து மாற்றுக்கருத்து இடம்பெற்றிருக்கிறது. இதனை மன ஆறுதலுக்காக நாம் பயன்படுத்துகிறோம் என்றுதான் கொள்ள வேண்டியிருக்கிறது.
அப்படியெல்லாம் எளிதாக எதுவுமே கடந்து போவதில்லை என்கிறார் அந்தோன் செகாவ். அவரையே நாம் எடுத்துக்காட்டாகக் கொண்டாலும் டால்ஸ்டாயின் தாக்கங்கள் அத்துடன் கடந்து போய்விடவில்லை. அது அவரைத் தொடர்ந்து, இதன் மூலநூலின் ஆசிரியருக்குக் கடந்து வந்திருக்கிறது. அவரது கருத்துகளையும் மூத்த எழுத்தாளர்களின் நூலின் மீதான தாக்கங்களையும் இந்த நாவலில் கடத்தி வந்து கொடுத்திருக்கிறார்.
ஆங்காங்கே தத்துவங்கள் மிளிர்கின்றன. மொழிபெயர்ப்பின் வாசம் புத்தகம் முழுவதும் விரவியுள்ளது என்றாலும், இதிலுள்ள கருத்துகள் நமக்கும் பொருந்தும் என்பதால் வாசிக்கலாம். l
