முனைவர். ஜெ. சுடர்விழி
இலக்கியத்தின் உச்ச வடிவம் கவிதை. உள்ளத்து எழும் எண்ணங்களோ உணர்வுகளோ, சொற்கள் வழியாக உயிர் பெறும்போது கவிதையாகவோ கதையாகவோ வடிவம் கொள்கிறது. கதைகளைக் காட்டிலும் கவிதைகள் கூடுதல் சிறகுடையன. அவை பறக்கும் உயரம் எல்லாருக்கும் வசப்பட்டு விடுவதில்லை. கதைகள் பெரும்பாலும் படைப்பாளர் சொல்ல விரும்பியதை வாசகருக்குக் கடத்திவிடும் ஆற்றல் வாய்ந்தன. வேறொரு புரிதல் என்பது அங்கு அருகியே நிகழும்.ஆனால் கவிதைகள் அப்படியல்ல. வாசக மனமும் சூழலும் பலநூறு புதிய புதிய அர்த்தங்களைப் பிரசவிக்கும் தன்மை கொண்டன. கவிதைத்திணையில் இந்தப் புரிதலும் புரிதல்நிமித்தமும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கும். பதின்பருவத்து இளமனங்களில் முளைக்கும் ஆசைகளில் ஒன்று இந்தக் கவிதைக் கடலின் கரையோரத்திலாவது நின்று கால் நனைத்து விடவேண்டும் என்பதுதான். தொடர்ந்து மூழ்குவதும் முத்தெடுப்பதும் கடல் என்னும் ஆகிருதி காட்டும் கருணை. இந்தக் கவிதைக்கடலின் முதல் அலையில் நனைந்து அந்த ஈரத்தை நம் மனங்களிலும் பரவச் செய்திருக்கிறார் மாணவி சௌமியா. பார்க்கும்போதெல்லாம் மின்னல் வெட்டுவது போல் ஒரு பளீர் சிரிப்பில் மனம் கவரும் மாணவி ஒரு “மின்வெட்’டைக் கொண்டு வந்து தந்திருக்கிறார். “எல்லாமுமே எந்திர நிழலானால் அதில் எந்த மரத்தின் கீழ் நாம் இளைப்பாற? எதையாவது விதைத்து வையுங்கள்” என்று தோழர்களுக்கு அறைகூவல் விடுப்பதோடு அவர் நின்றுவிடவில்லை. அவரும் விதைத்திருக்கிறார் அவர் விதைத்த விதைகள் க‘விதைகள்’.
இயற்கைக்குக் காணிக்கையாக்கப்பட்டிருக்கும் இக்கவிதைகள் இயற்கையைப் போலவே நம்பிக்கை தருவனவாய் எந்த மின்வெட்டும் இல்லாமல் ஒளிர்கின்றன. ஒவ்வொரு பாடலிலும் பாடலின் ஒவ்வொரு சொல்லிலும் இயற்கையை உணர்ந்து உணர்ந்து எழுதிய சங்கப்புலவர்களின் கவிதைமரபு கைப்பேசிக்குள் புதைந்து போனதோ என்ற அச்சத்தை இந்த இளம் கவிஞர் நீக்கி இருக்கிறார். வெள்ளை வானமும் கறுப்பு வானமும் வீசிக்கொண்டே இருக்கும் காற்றும் திடீர் மழையும் தூய மரங்களை மலரச் செய்து இதம் தரும் நிலமும் நெகிழியை உருக்காத நெருப்பும் என்று ஐம்பூதங்களுடன் காலநதியும் கனவு மரங்களும் கண்ணீர் பூக்களும் என்று இவரது கவிதைகள் தோறும் இயற்கையின் வாசமும் நேசமும். யார் மீதும் கோபங்களோ விசாரணைகளோ இவருக்கு இல்லை. ஒரு வனத்தையே சுமந்து கொண்டு பறக்கும் பறவையைப் போல் அன்பைச் சுமந்து கொண்டு பறக்கிறார். இவரின் “அதிகபட்ச எதிர்பார்ப்பே குறைந்தபட்ச அன்புதான்.” “எல்லாமுமே கடந்து செல்கிறது. கடக்க முடியாமல் கனமாகிக் கரைவது அன்பு மனம் ஒன்றுதான்” என்று ஏங்கும் கவிஞரின் கரைகின்ற மனதின் வெளிப்பாடுகள் எதையும் குறையாகப் பார்க்கவில்லை மாறாக “விதையும் ஒலியும் காற்றும் நீரும் நம் இதயக்கலனிலேயே காத்திருக்கின்றன. விளைவிக்கவும் அறுவடை செய்யவும் கொஞ்சம் புன்னகைக்கும் தெம்பு வேண்டும்”
என்று மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஓர் எளிய மந்திரத்தைக் கற்றுத் தருகிறார். இவ்வரிகளை வாசித்தவேளை, “கொடுப்பதற்குரியது பணம் மட்டும் என்று நினைக்காதே உன் வார்த்தையும் ஒருவனுக்குத் தாகம் தணிக்கலாம் உன் புன்னகையும் ஒருவன் உள்ளத்தில் விளக்கேற்றலாம்.” கவிக்கோ அப்துல் ரகுமானின் இந்தக் கவிதை வரிகள் நினைவுகளில் வந்து சற்றே மின்னிவிட்டுப் போயின.
போன்சாய் மரங்களாய்க் குறுக்கப்பட்டுவிட்ட வாழ்க்கையில் “மரமாகிக் கிளைகள் விரிப்பதே உத்தமம்” என்ற இவரின் குரல் ஆகப்பெரும் நம்பிக்கை. தடைக்கற்களைப் படிக்கற்களாக மாற்றிப் பார்த்த கவிதை மரபில் “நீங்கள் அறிந்திடாத அறிய முற்படாத பல ஈட்டிகளே ஏணிகளாயின… இன்னும் ஏறிச்செல்லப் பல படிகள் காத்திருக்கின்றன” என்று ஈட்டிகளை ஏணிகளாக மாற்றிய பார்வை துயர அழகியலை அழகாகச் சொல்கிறது.
”வெளிச்சத்தை விளக்குப் பிடித்து விளக்கி விட முடியுமா என்ன?” ரசனைக்குரியதான இந்த உவமையைப் பல பொருண்மைகளுக்குப் பொருத்திக் கொள்ளலாம். நான் இப்படிச் சொல்கிறேன். சௌமியாவின் கவிதைகளில் பொதிந்துள்ள ‘சொற்களைச் சொற்கள் கொண்டே விளக்கி விட முடியுமா என்ன?’.
பலநூறு கவிதைநூல்கள் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. புத்தகக் கண்காட்சியெங்கும் கவிதை நூல்களே நிறைந்திருக்கின்றன. எதைத் தேர்வு செய்வது.? எதை வாசிப்பது? உங்கள் கவிதையிலேயே பதிலைத் தேடினேன். “ஆயிரம் இருந்து விட்டுப் போகட்டும்/ஆயிரமும் இருந்து விட்டுப் போகட்டும்/ஆயிரத்து ஒன்றாவதாய் உன்னையும் அணைத்துக் கொள்கிறேன்” l
