அணி நடை எருமை எனும் நூல்
ஆர்.பாலகிருஷ்ணன் நிகழ்த்திய சங்கச் சுரங்கம் பற்றிய இரண்டாம் பத்து உரைகளின் தொகுப்பாகும்.இன்றைய சூழலில் பசுவை முன்னிலைப்படுத்தி மதமும், அரசியலும் இயங்கும் மோசடிகளுக்கு மத்தியில், இந்நூலில் அணி நடை எருமை குறித்துப் பேசுவது மிக முக்கியமான அரசியலாகும். சமகாலத்தில் நிறமும்,உடல் உழைப்பும் என்ற இரண்டு அம்சங்களும் இரண்டாம் தரமாகச் சித்தரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் சங்ககாலத்தில் நிலவிய சமூகச் சூழலில் குயவனுக்கும், எருமைக்கும் இருந்த நிலையை எடுத்துக் காட்டியுள்ளார். சங்க இலக்கியம் பேசும் போது பழம் பெருமைகளைப் பேசி மட்டும் சுருங்கி விடக்கூடாது. சங்ககாலத்தில் நிலவிய சமூகச் சூழல், அதில் மனிதனின் வாழ்வும், இயற்கையின் தன்மையும் எப்படி இருந்தன என்பதை அறிவதற்கான வாய்ப்பையும் நமக்கு அளித்திருக்கிறது. சங்ககாலத்தில் இருந்து சமகாலத்தைப் புரிந்து கொள்ளவும், சமகாலத்தில் உள்ள சிக்கல்களைச் சீர் தூக்கிப் பார்க்கவும் சமூக நோக்கில் முக்கியமானதாகும்.
சங்ககாலச் சூழலிலும் சமூகம், பாலினம், இயற்கை உயிரினங்கள் என ஒவ்வொன்றும் அக்காலகட்டத்தில் இருந்த புறநிலைகளைப் பற்றித் திட்டவட்டமாகப் புரிந்து கொள்வதற்கு இம்மாதிரியான நூல்களை வாசிப்பது அவசியம் ஆனதாகும்.
குடகாற்று எறிந்த குப்பை…
சங்ககாலத்தில் காற்று எப்படி எல்லாம் பேசப்படுகின்றது. சங்ககாலத்தில் நிலவிய இயற்கைத் தட்பவெட்ப நிலைகளை அறிய அன்று வீசிய பருவக்காற்றுகளை விரிவாக குறிப்பிடுகிறார். மேற்கு மலையில் இருந்து வீசிய காற்றில் நெற்கதிரைச் சூல் அடித்துப் போடும்போது நெல் குவியும். இதனை நெற்குப்பை அதாவது நெற் குவியலை வடக்கே உள்ள செம்பொன் மலை என்ற இமயமலைச் சாயலில் இருப்பதாகப் பெரும்பாணாற்றுடைப்படை குறிப்பிடுகிறது. பட்டறிவின் இன்னொரு பெயர்தான் பகுத்தறிவு எனப்படுகிறது. அக்காலத்தில் காற்றும், மழையும் ஏற்படுத்திய தாக்கத்தையும், வருகின்ற திசையையும் வைத்து வகைப்படுத்திப் பெயரிட்டுள்ளனர்.
இதனை அடிப்படையாகக் கொண்டு சங்க இலக்கியம் முன் வைக்கும் நிலப்பகுதியைச் சிந்து சமவெளியின் மீள் நினைவுகள் என்கிறார் நூலாசிரியர் ஆர்.பாலகிருஷ்ணன். இந்தக் கருதுகோள் சங்க இலக்கியத்தைப் புதிய கோணத்தில் அணுகுவதாக அமைந்துள்ளது.இது குறித்த ஆய்வுகள் இன்னும் விரிவாகத் தேவைப்படுகின்றன.
விளையாட்டும் விரும்பார் கொல்…
துன்பம் இல்லாத இன்பம்தான் விளையாட்டு என்கிறார் தொல்காப்பியர். உழைப்பைப் போலவே ஓய்வும் நாகரிகத்தின் வெளிப்பாடாகும். ஓய்வில்லாத உழைப்பைச் சுரண்டல் சமூகம் விரும்புகிறது. ஓய்வு என்பது கூட ஒரு வகையில் உழைப்புக்கான முன்தயாரிப்புதான். ஓய்வு நேரம் எப்படிச் செலவிடப்படுகிறது என்பதிலிருந்து அச்சமுகத்தின் உயரிய தன்மையை அறிய முடியும்.
விளையாட்டு அணி சார்ந்ததாகவும், தனியாகவும் இருந்துள்ளது. தொல்லியல் முலம் கண்டறிந்த பகடையை எடுத்துச் சிந்துவெளி, லோத்தல், கீழடியென அதனுடைய ஒற்றுமையை எடுத்து இயம்புகிறார். சு.சிவகாமசுந்தரி எழுதிய சங்க இலக்கிய விளையாட்டுக் களஞ்சியம் எனும் நூலில் 37 விளையாட்டுகளை எடுத்துக்கூறியுள்ளார். அதில் ஆண்களுக்காக 10 விளையாட்டுகளும், பெண்களுக்காக 15 விளையாட்டுகளும், ஆண்களும் பெண்களும் இணைந்து 12 விளையாட்டுகளாகவும் இருந்துள்ளன. விளையாட்டு என்பது பண்பாட்டின் ஒரு பகுதியாகும்.அன்றைய கால கட்டத்தில் எத்தகைய பண்பாடு இருந்தது என்பதை அறிய ஏதுவாகிறது. விளையாட்டும் ஆரோக்கியமும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை.
இன்றைக்கும் உலக விளையாட்டுப் பதக்கப் பட்டியலில் இந்தியாவின் நிலையை ஒப்பிடும்போது கவலைக்குரியதாகும்.ஆரோக்கியமும், வாழ் நிலைமையும் மிகவும் பின்தங்கியுள்ளன. மானுட வாழ்வு மாறிவரும் சமூகச் சூழலில் மேலும் மேலும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது.
கலம் செய் கோ…
கலங்கள் பல வகையாகும். சுடுமண் கொண்டு தயாரிக்கப்பட்ட மட்பாண்டங்கள் கொண்டு தொல்லியல் வரலாற்றை அறிய முடிகிறது.
அதிலுள்ள கீறல்கள் வரலாற்றை எடுத்து இயம்பும் மொழியாகத் திகழ்கிறது. கருப்பு சிவப்பு மண்பாண்டம் தென்னிந்தியாவில் கீழடி, பொருந்தல், ஆதிச்சநல்லூர், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனைச் செய்த குயவர்களைக் கலம் செய்த கோ என்று சங்க இலக்கியம் பாடுகிறது. பண்டைய அறிவு பொருந்திய குயவன் “முதுவாய் குயவ” என்று பெருமைப்படுத்துகிறது.
அத்தகைய மதிப்பு வாய்ந்த குயவர்கள் இன்றைய சமூகத்தில் மழையிலும், வெயிலிலும் படும் பாடு சொல்லி மாளாது. அத்தகைய பெருமைக்குரிய கலைஞர்களையும், மருத்துவர்களையும் மதிப்பிழக்கச் செய்யும் சமூகமாகத் தற்காலச் சூழல் நிலவி வருகிறது. சிந்துவெளி, லோத்தல், கீழடி, ஆதிச்சநல்லூர்,பொருநை என மண்பாண்டத் தளத்தின் வழியாகச் சங்க வரலாற்றை ஆய்வுக்கு உட்படுத்தக்கூடிய அணுகுமுறையையும் கொண்டுள்ளார்.
அணி நடை எருமை…
மேய்ச்சல் காலத்திலேயே இந்தியத் துணைக் கண்டத்தின் வளர்ப்புப் பிராணியாக எருமை இருந்துள்ளது. சங்க இலக்கியங்களிலும் எல்லா இலக்கியங்களிலும் எருமையைப் பற்றிய குறிப்புகள் பாடல்கள் உண்டு. எருமை பற்றி மட்டும் ஓரம் போகியார் பத்துப் பாடல்களை எழுதியுள்ளார்.அதில் அகநானூற்றுப் பாடலில் போரில் வென்று மதர்ப்புடன் ஒரு திமிர் இருக்கக்கூடிய சண்டியர் நடந்து செல்வது போன்று செல்கிறது என்கிறார்.
திராவிடப் பழங்குடிகளின் வாழ்வோடு வழிபாட்டோடு முக்கியமான புனித விலங்காக எருமை இருக்கிறது. சிந்துவெளியிலும் காளையும், எருமையும், கொம்புகளும் காணப்படுகின்றன. நமது வாழ்வு முழுவதும் உடன் இருக்கும் எருமை எப்போது தாழ்த்தப்பட்டது? காளையோ, எருமையோ பண்பாட்டுச் சின்னங்களாகப் பாடல்களில் வருகின்றன. அத்தகைய சின்னங்கள் பசுவை அடையாளப்படுத்தவில்லை. எருமை எப்படி எமனின் சின்னமாக மாறியது? சங்க காலத்திற்கும், சமகாலத்திற்கும் இடையே ஏற்பட்ட பண்பாடு,உளவியல் மாற்றங்களை ஆய்வுக்கு உட்படுத்தக்கூடிய தன்மையில் இக்கட்டுரை அமைந்துள்ளது.
மதுரையின் வரலாறு…
தமிழ்கெழு கடல் என வைகை ஆற்றின் கரையோரத்தில் பல வகையான மக்கள் வாழ்ந்துள்ளனர். அந்தணரும், வேத ஒலிகளும், சமணர்களும் இருந்த பன்மீயத் தன்மையை எடுத்துக்காட்டுகிறது.
மதுரையின் வடிவமைப்பு,வணிகம், நாகரிகம், வரலாறு தொடர்ந்து வருவதை உணர வைக்கிறது. இத்துடன் சங்க இலக்கியத்தில் மரம், ஏர், காடு, கடையெழு வள்ளல்கள், பண்பு, திசை என ஒவ்வொரு கட்டுரையும் தனிச்சிறப்பானதாகும். சங்க இலக்கியத்திலிருந்து தொடங்குகின்ற கட்டுரைகள் சமகாலத்துடன் நிறைவு பெறுகின்றன. இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்டுள்ள பண்பாட்டு மாற்றங்களை நம் கண் முன்னே எடுத்துக்காட்டுகின்றன. l
previous post
