உலக மக்களுக்கு பாலஸ்தீனம் குறித்த பல்வேறு சந்தேகங்களை நூலாசிரியர்
இ.பா.சிந்தன் அவர்கள் இந்நூலில் மிகத் தெளிவாக விளக்கி உள்ளார். பொதுப்புத்தி சார்ந்த, மக்களின் எண்ணங்களை இப்புத்தகம் தெளிவாக்குவதாக உள்ளது. உண்மையில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் உள்ள பிரச்சனை என்ன? என்பதைப் பல்வேறு சான்றுகள் அடிப்படையில் இந்நூலை திறம்பட எழுதி இருக்கின்றார் ஆசிரியர். தோழர் இ.பா. சிந்தனின் இந்நூல் பாலஸ்தீனப் பிரச்சனையை எவரும் புரிந்துகொள்ளத்தக்க வகையில் எளிய மொழியில் விளக்குகிறது.
யூத மக்களின் மனங்களில் விதைத்து யூத இனவாத அரசியலுக்கு வித்திட்டது சியோனிஸவாதிகளின் கெடுமதி. யூத முதலாளிகள் புதிய யூத நாட்டுக்கான இடத்தை ஆப்பிரிக்காக் கண்டத்திலும் அர்ஜெண்டினாவிலும் தேடிச் சலித்து இறுதியாகக் கண்டடைந்த நிலப்பரப்பே பாலஸ்தீனம். அது காலியாக இருந்த நிலப்பரப்பல்ல. அங்கே வாழ்ந்துகொண்டிருந்த மக்களை அடித்து விரட்டிவிட்டு கட்டாயமாக யூதக்குடியிருப்புகளை எப்படி அநீதியாக ஏற்படுத்தினார்கள் என்னும் வரலாறு வாசிப்பவர் மனம் பதறும் வகையில் சொல்லப்பட்டுள்ளது.
பாலஸ்தீனர்கள் குறித்து இஸ்ரேல் அரசு சொல்லும் கருத்து அவர்களது கோரமுகத்தைக் காட்டுகிறது. பாதுகாப்பைத் தக்கவைக்க என்று சொல்லிக்கொண்டு இஸ்ரேல் தொடுக்கும் போர் சரிதானா?
போன்ற பல கேள்விகள் நம் முன்னே இருக்கின்றன. வரலாற்று நிகழ்வுகளையும் உண்மையான ஆதாரங்களையும் எடுத்துவைத்துக்கொண்டு அக்கேள்விகளுக்கான விடையினைத் தேட முயற்சி செய்வோம் வாருங்கள் என்று நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
2023ஆம் ஆண்டின் அக்டோபர் 7 ஆம் தேதிக்குப் பிறகான இந்த காலகட்டத்தில் அதிகாரப்பூர்வமாகவே சுமார் 40,000 பாலஸ்தீனர்கள் காஸாவில் கொல்லப்பட்டிருக்கின்றனர். அவர்களில் 72% பேர் பெண்களும் குழந்தைகளும் என்று சொல்லப்படுகிறது. காஸாவில் இருந்த ஏறத்தாழ 70% வீடுகள் இடிக்கப்பட்டிருக்கின்றன. அதாவது ஒரு இலட்சம் வீடுகள் முழுக்க தரைமட்டமாகவும், சுமார் 3,00,000 வீடுகள் கடுமையான சேதத்துடனும் இடிக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு, 75,000 டன் எடையுள்ள வெடிமருந்துகளை காஸாவிற்குள் இஸ்ரேல் வீசியிருக்கிறது.
“இது எங்கள் நிலம். நாங்கள் இங்குதான் இருப்போம்” என்று யூத உழைக்கும் மக்கள் உறுதியாகக் குரல் கொடுத்தனர். “புந்திசம்”என்கிற புதிய கொள்கையுடன் கிழக்கு ஐரோப்பாவிலும் இரஷ்யாவிலும் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் யூத உழைக்கும் மக்களிடையே ஒரு தத்துவமே உருவாகியது. அதன் அடிப்படையில்; “யூத தொழிலாளர் புந்த்”; என்கிற கட்சியும் உருவானது. பரம்பரை பரம்பரையாக பண்ணையார்களாகவும், பெரும் பணக்காரர்களாகவும், தொழிற்சாலைகள் உருவாகத் துவங்கியபின்னர் முதலாளிகளாகவும் இருந்துவந்த அவர்கள், தங்களது முதலுக்கும் முதலீட்டுக்கும் மோசம் வந்துவிடுமோ என்று அஞ்சினர். அதனால், தங்களுடைய செல்வத்தைப் பாதுகாப்பதற்குத் தகுந்த வேறொரு நிலப்பரப்பிற்கு சென்றுவிடவேண்டும் என்று முடிவு செய்தனர். அதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்தனர். அதற்கான ஆலோசனைகளைப் பெறுவதற்காக பெரும் பணத்தைச் செலவிட்டனர்.
யூதர்களுக்கு ஒரு தேசம் அமைப்பதற்கான பணியினை மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஒரு தத்துவப் பெயரை உருவாக்கினார் தியோடர் ஹசல். அதுதான் சியோனிசம். யூதம் என்பது வெறுமனே ஒரு மதம்தான். ஆனால், சியோனிசம் என்பது ஓர் இனவெறித் தத்துவம். அடுத்தவர்களின் நிலத்தை ஆக்கிரமித்து அங்கே யூதர்களுக்கான தேசத்தை அமைக்கும் ஓர் அரசியல் தந்திரம். அதன்பின்னர், சர்வதேச சியோனிச அமைப்பையும் உருவாக்கினார். சியோனிச அமைப்பு என்று பெயர் வைப்பதற்குப் பதிலாக ‘சர்வதேச யூத முதலாளிகள் அமைப்பு’ என்று பெயர் வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். அதற்கான மாநாட்டையும் நடத்தினார் தியோடர் ஹசல். அதில் பெரும்பாலும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இருந்த யூத முதலாளிகளையும் செல்வசெழிப்புமிக்க யூதர்களையும் பிரதிநிதிகளாக அழைத்திருந்தார். தங்களது இருப்பிடத்தை உருவாக்க அர்ஜெண்டினா, உகாண்டா, ஜப்பான், ரஷ்யா, என்று சென்று இறுதியில் பாலஸ்தீனத்தை – இஸ்ரேல் உருவாக்க முனைந்தனர்.
ஹிட்லரேகூட யூதர்களுக்கென்று தனியாக ஒரு நாட்டை உருவாக்கிவிட வேண்டும் என நினைத்தார். அதன்படி, மடகாஸ்கர் தீவினை யூதர்களுக்கு வழங்க நினைத்தார். ஆனால், ஹிட்லரால் ஆங்கிலேயர்களை வெல்லமுடியவில்லை. ஆக, கப்பல்களும் கிடைக்கவில்லை. அதனால் மடகாஸ்கர் திட்டமும் தோல்வியடைந்தது. கி.மு. 3761ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏழாம் தேதியன்றுதான் இவ்வுலகமே உருவாக்கப்பட்டது என்கிறது ஹீப்ரு பைபிள். அதாவது, மனிதர்கள் தோன்றியே 5000- 6000 ஆண்டுகள்தான் ஆகிறது என்று சொல்கிறது. எது எப்படியோ, பொய்களையும் புரட்டுகளையும் மதமென்கிற நம்பிக்கையுடன் கலந்து, “பாலஸ்தீன நிலம் என்பது யூதர்களுக்கு கடவுள் அருளியது” என்று கிழக்கு ஐரோப்பிய யூதர்களிடம் பிரச்சாரம் செய்யத் துவங்கியது யூத முதலாளிகளின் சியோனிச அமைப்பு.
தமிழ்நாட்டின் ஏதோவொரு மூலையில் வாழும் நம் வீட்டின் வாசலில் புல்டோசருடன் ஒரு பெரிய ரௌடிக் கூட்டம் வந்துநின்று, “ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எங்க முப்பாட்டன்கள் இந்த இடத்தில்தான் வாழ்ந்தார்கள். என்னுடைய குலதெய்வம் என் கனவில் வந்து இந்த உண்மையை சொன்னது. அதனால் இந்த வீடு எனக்குத்தான் சொந்தம். உடனே நீ வெளியேறு” என்று நம்மிடம் சொன்னால் எப்படியிருக்கும்? அதனை நாம் எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும். அப்படித்தான் கிழக்கு ஐரோப்பிய யூதர்களுக்கு அவர்கள் வாழும் நிலத்தில் ஒரு பிரச்சனை என்பதால், வேறொருவர் நிலமான பாலஸ்தீனத்திற்குச் சென்று, அங்கு வாழும் மக்களை அடித்துவிரட்டப் பார்ப்பது எப்படிச் சரியாக இருக்கமுடியும்?
பாலஸ்தீனர்களின் வரலாற்றை அழிக்கும் பணியினை சியோனிசவாதிகள் செய்தனர். பாலஸ்தீன நூலகங்கள் எரிக்கப்பட்டு வரலாற்றுப் புத்தகங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. மேலும், சூறையாடப்பட்ட வீடுகளில் இருந்த கலைப் பொக்கிஷங்கள், அவர்களின் வாழ்க்கை முறையை “சித்தரிக்கும் ஓவியங்கள் என அனைத்தும் வேண்டுமென்றே நாசமாக்கப்பட்டன. பின்னாளில் வரும் சந்ததியினருக்கு, பாலஸ்தீன பூர்வகுடிகளின் வரலாறு தெரிந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். இனி இஸ்ரேல் சொல்வது மட்டுமே பாலஸ்தீனத்தின் வரலாறு என்றாக வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது. பாலஸ்தீனத்தின் 540 கிராமங்கள் சியோனிசவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, 8,00,000த்திற்கும் அதிகமானோர் அகதிகளாயினர். இஸ்ரேல் இன்று விடுதலை பெற்றது” என்று அறிவித்தார். “இஸ்ரேல் இன்று என்னவென்றால், இஸ்ரேல் என்கிற பெயரில் ஏற்கெனவே ஒரு நாடு அடிமைப்பட்டுக்கிடந்தது போலவும், இவர்கள் அதற்காகப் போராடி சுதந்திரம் பெற்றதுபோவும், தோற்றத்தை உருவாக்குவதாக அமைந்தது அந்த “விடுதலைப் பிரகடனம்”. அதில், பிரபல சியோனிசத் தலைவர்கள் அனைவரும் கையெழுத்திட்டனர். பிரகடனம் கையெழுத்திடும் கூட்டத்தில், டேவிட் பென் குரியனுக்குப் பின்னால் வைக்கப்பட்டிருந்த ஒரு புகைப்படம், 1896 இல் ‘யூத தேசம்’ என்கிற நூலை எழுதிய தியோடர் ஹசலுடையது.
காஸாவை முழுவதுமாக இஸ்ரேல் மயமாக்குவது குறித்து இஸ்ரேலிய அமைச்சரவை கூடி விவாதித்தது. காஸாவில் வாழும் மக்களின் நீர் ஆதாரத்தை முழுமையாகக் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு, அங்கே ஒரு செயற்கையான தண்ணீர்ப் பஞ்சத்தை உருவாக்கினால், தானாகவே காஸாவைவிட்டு பாலஸ்தீனர்கள் வெளியேறிவிடுவார்கள் என்று அமைச்சரவையில் பேசிக்கொண்டார்கள். இஸ்ரேல் உருவானபோதே இலட்சக்கணக்கான பாலஸ்தீனர்கள் இஸ்ரேலின் எல்லைக்குள் வாழவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டார்கள்.
அகதிப் பாலஸ்தீனர்கள்- இதுவரை நாம் பார்த்த காஸா பாலஸ்தீனர்களும் அல்லாத, மேற்குக் கரை பாலஸ்தீனர்களும் அல்லாத, இஸ்ரேலிய பாலஸ்தீனர்களும் அல்லாதவர்கள்தான் இந்த அகதிப் பாலஸ்தீனர்கள். 1948ஆம் ஆண்டில் பாலஸ்தீன நிலத்தை ஆக்கிரமித்தபோது, தங்களது சொந்த நிலங்களை இழந்த அனைவரும் அகதிப் பாலஸ்தீனர்கள்தான் என்றாலும், காலப் போக்கில் இஸ்ரேலிலோ அல்லது காஸாவிலோ அல்லது மேற்குக் கரையிலோ சிலர் தங்கிவிட்டனர். ஆனால், இவர்களைத் தாண்டி சிலருக்கு, அக்கம்பக்கத்து நாடுகளிலோ அல்லது அகதி முகாம்களிலோ தங்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதேபோல, 1967ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆறு நாட்கள் போருக்குப் பின்னர் மேலும் சிக்கலாகி, இன்னும் ஏராளமானோர் அகதிகளாகினர்.
சுமார் ஆயிரம் பேரையாவது இந்த வகையான நிர்வாகக் ‘கைது செய்து எந்த விசாரணையும் செய்யாமல், சும்மாவே மாதக் கணக்கிலோ அல்லது ஆண்டுக் கணக்கிலோகூட சிறையில் அடைத்துவைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறது இஸ்ரேலிய அரசு. “எதற்காக கைது செய்தீர்கள்?” என்று கேட்டால், “அதெல்லாம் இராணுவ இரகசியம்” என்பார்கள். “எப்போது விடுவிப்பீர்கள்?” என்று கேட்டாலும், அதே பதில்தான். ஒவ்வொரு ஆண்டும் ஆயுதங்கள் விற்பனை செய்வதன்மூலம் இஸ்ரேலுக்கு கிடைக்கிற வருமானம் உயர்ந்துகொண்டே இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் மட்டும் அது இருமடங்கு அதிகமாக உயர்ந்திருக்கிறது. 2023ஆம் ஆண்டில், ஆயுதங்களை நேரடியாக விற்றதன் மூலமாக மட்டுமே சுமார் ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேலாக இஸ்ரேலுக்குக் கிடைத்திருக்கிறது. எத்தனை இலட்சம் உயிர்களைக் குடித்துப் பெற்றது அந்த ஒரு இலட்சம் கோடி ரூபாய் என்பது குறித்தெல்லாம் இஸ்ரேலுக்கோ, சர்வதேச அரசுகளுக்கோ கவலைப்பட ஏதுமில்லாமல் இருக்கலாம். ஆனால், நமக்கு நிச்சயமாக இருக்க வேண்டும்.
நாம் சொல்லவேண்டியதெல்லாம் “என் வரிப்பணத்தைக்கொண்டு பாலஸ்தீனர்களைக் கொல்வதை நான் அனுமதிக்கமாட்டேன். Not on my name. Not on my tax money” என்பதாக இ.பா.சிந்தன் அவர்கள் இந்நூலை முடித்திருப்பது கவனத்திற்கு உரியது. இந்நூலை மிகச் சிறப்பாக தகுந்த நேரத்தில் நல்ல முறையில் எழுதிய இ.பா.சிந்தன் அவர்களுக்கும் நன்முறையில் வெளியிட்ட பாரதி புத்தகாலயத்திற்கும் வாழ்த்துகள் பாராட்டுகள். l