‘மழைக்கண் அம் காதல்” நூலின் வழியாக சங்க இலக்கியத்தை சமகால கவிதை மொழியில் அறிமுகம் செய்யும் பணியை மேற்கொண்டு உள்ளார் கவிஞர் ரேவதி ராம். அகநானூறு பாடல்களின் முதல் 100 பாடல்களை எடுத்து நவீன கவிதை வடிவத்தில் கொடுத்துள்ளார். சங்க மரபில் காதலும் பிரிவும் விரிவாக பேசப்பட்டுள்ளன. அகவெளியில் நாம் எதிர்கொள்ளும் இடர்பாடுகளுக்கு ஏற்ற அருமருந்தாக சங்க இலக்கியப் பாடல்கள் திகழ்கின்றன. அந்த அருமருந்தின் முழு வீச்சும் இளைஞர்களுக்கு கிடைத்திட நவீன கவிதை மொழியை யுக்தியாக மேற்கொண்டு உள்ளார்.
சங்கத்தமிழை இன்று வாசிக்கும்போது அடர்த்தியான செய்யுள் மொழியை நேரடியாக புரிந்துகொள்வதற்கு சிரமமான ஒன்றாகும். இதனால் செய்யுளில் பொருளை அறிய முடியாமல் கடந்து போக வேண்டிய நிலைமை ஏற்படும். தமிழின் சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான அகநானூற்றின் முதல் 100 பாடல்களை உள்வாங்கி புத்தம் புது மொழியில் எளிமையும், தெளிமையும் ஆன வகையில் இளைய வாசகர்களுக்கு வழங்கி இருக்கிறார்.மொழியின் மாற்றம், கால மாற்றம் ஆகியவற்றை கணக்கில் எடுத்து அகநானூற்றை சமகால கவிதை நூறாக நமக்களித்து மிகப் பெரிய பங்களிப்பை செலுத்தியுள்ளார். இயற்கையை கொண்டாடிக் களித்திருக்கும் சங்க இலக்கியங்கள் இழந்த வாழ்வியலின் ஆறாத் தழும்பு என்கிறார் ரேவதி ராம். இந்நூல் இவரின் முதல் முயற்சியாகும்.
மழை இதமாய் பொழிந்து ஒரு நேரம் இன்பம் தருவதும், பெருமழையாகி மறு நேரம் துன்பம் தருவதும்போல காதலும் இரண்டையும் தரவல்லது. மழை ஊறும் மேகம்போல நூல் முழுக்க மனங்களில் உணர்வுகள் ஓடிக்கொண்டே இருப்பதால், மழை போன்றது அழகிய காதலாகும். அக நானூற்றின் 83ஆம் பாடலில் மழைக்கண் எம் காதலி குணனே என்ற வரி மீது ஏற்பட்ட இனம் புரியாத ஈர்ப்பு இந் நூலிற்கு “மழைக்கண் அம் காதல்” என தலைப்பானது.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என சங்க இலக்கியத்தின் அகநானூற்றுப் பாடல்களை சுருக்கியோ, விரித்துரைத்தோ அதனுடைய சாரம் குன்றாமல் ஒவ்வொரு பாடலையும் நமக்களித்துள்ளார். சங்க இலக்கியத்தில் உள்ள சொற்கட்டும் இலக்கண, இலக்கியப் பொருளை உள்ளுணர்ந்து, சொல்லுணர்ந்து சமகால உணர்வாக மாற்றி அளித்துள்ளார்.
குறுங்குடி மருதனார் தோழி தலைமகளுக்கு பருவங்காட்டி சொன்னதை “பைங் காற் கொன்றை மென் பிணி அவிழ, இரும்பு திரிந்தன மா இரு மருப்பின்…” என்பதை “குளிர்மலை தொடங்கி துளிர் இலை அழகால் வனம் புது வனப்பெய்தி” நம் மனதிற்குள் ஆழப் பதிக்கிறார். சொல்லின் ஆழத்தை உரையாக நிகழ்த்தாமல் சொல்ல வந்த விஷயத்தை கச்சிதமாக ஒவ்வொரு பாடலிலும் எடுத்துரைப்பது என நூலில் மேலும் சிறப்பாகும்.
தலைமகன் பொருள் தேட பிரிந்து செல்லும் போது தலைவி “அழுதல் மேவல ஆகி பழிதீர் கண்ணும் படுவக்குவமன்னே!” என்பதை “நான் அழுது நீ நோகும் செயலை செய்திருக்க மாட்டேன்தானே?!” என எளிய தமிழில் எடுத்து வைக்கிறார். “கழி மழை பொழிந்த பொழுது கொள் அமையத்து சாயல் இன் துணை இவட் பிரிந்து உறையின், நோய் இன்றாக செய்பொருள்!” என்பதை “ஊதக்காற்று வீசும் வேளையில் சாயல் இணையாளைப் பிரிவதால் நீ சேர்க்க விரும்பும் பொருளால் உனக்கு இன்பம் கிட்டும் எனில் தாராளமாய் போய் வா தலைவா” என சங்க இலக்கியப்பாடலை உணர்வுகளாய் மாற்றி வைக்கிறார்.
இருள் கிழிப்பதுபோல் மின்னி வானம் துளி தலைக் கொண்ட நளி பெயல் நடு நாள் மின்மினி மொய்த்த முரவு வாய்ப் புற்றம்… என சங்க இலக்கியம் இயற்கையை பற்றி அழகுற பாடுகிறது. அந்த அழகினை நாமும் பருகும் வண்ணம் இருள் திரை கிழித்து, இதம் தரும் மேகம், பொழியும் நள்ளிரவு கார்காலமிது. என்று வாசிக்கும்போது இயற்கை நம் கண் முன்னே விரிகிறது. சங்க இலக்கியம் போல இயற்கை நேசிக்கும் இலக்கியம் வேறொன்று இருக்கும் என தெரியவில்லை. கவிதை மொழியும், காட்சிப்படுத்துதலும் ஒவ்வொரு சங்க இலக்கியப் பாடலுக்கும் சிறப்பு சேர்ப்பதாகும். அதனை தெள்ளத் தெளிவாக நூலினை வாசிக்கும்போது உள்வாங்க முடியும்.
“ஆடு அமைக்குயின்ற அவிர் துளை மருங்கின் கோடை அவ் வளி குழலிசை ஆக, பாடு இன் அருவிப் பனி நீர் இன் இசை தோடு அமை முழவின் துதை குரல் ஆக…” துவங்கும் கபிலரின் இப்பாடல் இசையும் இயற்கையும் இரு கரம் கோர்த்து மனங்களை குளிரச் செய்யும். இதனை “மூங்கில் துளைகளில் விழும் காற்று மேல் எழுவதால் குழலிசையாகிறது, விழும் அருவியின் ஓசையோ முலவின் இசையானது, கலை மான்களின் தாழ ஒலிக்கும் கடுங்குரல் பெருவங்கியத்தின் இசையானது, வண்டுகளின் ரீங்காரம் யாழிசையானது. கானகத்தின் இனிய பல இசைகளை வியப்புடன் நோக்கின மந்திகள்.” இப்பாடலை வாசிக்கும்போது மனக்கண் முன்னே இசையும் இயற்கையும் ஒவ்வொரு அச்சு அசைவாக காட்சிப்படுத்தப்படுகிறது. புல்லாங்குழலும் அருவியும் கலைமானும் எழுப்பும் செவிகளில் பட்டு மனம் குளிர்கிறது. சங்க இலக்கியத்தை ஏன் ஆற்றுப்படுத்தும் இலக்கியம் என்று சொல்கின்றனர் என பல நேரங்களில் யோசித்தது உண்டு. இதனை வாசிக்கும்போது உணரும் வாய்ப்பு நமக்கு கிட்டுகிறது.
சங்க இலக்கியப் பாடல்களில் ஆண், பெண் இருவருக்கும் உள்ள கருப்பொருட்கள், புழங்குவெளி, வலி, பிரிதல், காதல், பொருள் தேடுதல் என ஒவ்வொன்றும் வெவ்வேறாக இருப்பதை எடுத்துரைக்கிறது. பொருள் தேடச் செல்லும் போது தலைவன், தலைவியின் பிரிவும் வெவ்வேறு இடத்தில் வெவ்வேறு உணர்வுகளையும் சூழலையும் எப்படி வாழ்கின்றனர் என்பதை துல்லியமாக காட்சிப்படுத்துகிறது. மதுரை எழுத்தாளன் எழுதிய பாடலில் “அருந் திரை கொடுப்பவும் கொள்ளான், சினம் சிறந்து, வினைவயின் பெயர்க்கும் தானை, புனைத்தார், வேந்தன் பாசறையே! என்பதின் விளக்கமாக அதை பகை நாடு திரை தர சம்மதித்தும் சினம் தனியாது போரிலேயே குறியாக இருக்கம் எம் மன்னனால் இன்னும் பாசறையிலேயே இருக்கிறேன். தலைவனை பிரிந்த துயரம், காத்திருத்தல், குடும்பத்தினரின் வற்புறுத்தல் பெண்ணுக்கு நினைவெல்லாம் சுமையாக மாறியிருக்கும் சூழலில் விளங்குபகல் உதவிய பல் கதிர் ஞாயிறு வளம் கெழு மா மலை பயம் கெடத் தெறுதலின், அருவி ஆன்ற பெரு வரை மருங்கில் சூர்ச் சுனை துழை நீர்ப்பயம் காணாது.” என்ற மாமூலனாரின் பாடல். அதாவது பகல் தந்த சூரியனே மலையின் வளம் கெட காய்வதைப்போல எனை காதலில் திளைக்கச் செய்தவனே பிரிவின் வழியை தந்திருக்கிறான் என்று பதிவு செய்து உள்ளார். இன்னும் இயற்கையுடன் இணைந்த உணவும் வாழ்வும் அதன் சூழலும் என அனைத்தும் ஒரு கனவைப் போல இருக்கிறது சங்க இலக்கிய பாடல்களின் தொகுப்பாகும்.
இந்நூலில் பண்டைய கால கவிஞர்கள் அனைவரையும் நவீன கால கவிஞராக நம்மிடையே உலாவ விடுவதே இந் நூலின் சிறப்பு என அணிந்துரையில் சங்க இலக்கியப் பேரறிஞர் ஆர்.பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார். இந்நூலின் மீதான மனங்கொள்ள தக்க மதிப்பாகும் பனியிரவு எனும் பெருவெள்ளம் என்ற ராசி பன்னீர்செல்வனின் முன்னுரையும், யாழியின் வாழ்த்துரையும், நூலின் ஆசிரியர் ரேவதியின் என்னுரை என அத்தனையும் வாசிப்பதற்கான சிறந்ததொரு தூண்டுதலாக அமைந்துள்ளது.
சங்க இலக்கியம் பழந்தமிழரின் இலக்கியச் சான்றாகும். இதனை வாசிக்கும்போது கீழடியில் தொல்லியல் சான்றுகள் மெய்ப்பித்து வருகிறது. சங்க இலக்கியத்தை நேசிப்பதற்கு எளிய முறையில் வாசிப்பதற்கு சிறந்த நூலாக ரேவதி ராமின் “மழைக்கண் அம் காதல்” திகழ்கிறது. இன்னும் உள்ள அகநானூற்றுப் பாடல்களை நவீன கவிதையாக வழங்குவது தமிழ் கூறும் நல்லுலகின் இளைய தலைமுறையினருக்கு பெரும் பேறாக அமையும். l
previous post
