ஒரு நூலை வாசிக்கும் பொழுது ஏற்படும் எதிர்வினையானது, அந்த நூலைக் குறித்த விமர்சனமாகவோ, மதிப்புரையாகவோ, ஆய்வுரையாகவோ, அணிந்துரையாகவோ அல்லது நூல் அறிமுகமாகவோவென எப்படி வேண்டுமானாலும் வெளிப்படலாம். இதில் எதுவுமே இல்லாமல், இந்திய மண்ணின் வேர் வரை பாய்ந்து ஈரம் குறையாத குருதியென இதயமாகத் துடித்துக் கொண்டிருக்கும் மகாத்மா காந்தியின் படுகொலை நிகழ்வின் உண்மைகளை ஆய்ந்தறிந்து நூலாக வெளியிட்டிருப்பதை வாசித்த போது, ஒவ்வொரு குடிமகனும் அறிந்திருக்க வேண்டிய முக்கிய நூலாக உணர வைத்தது. புலனாய்வு பத்திரிகையாளராக பல பொறுப்புகளை வகித்து ஆய்வு செய்தவரான அப்பு எஸ்தோஸ் சுரேஷ் அவர்களும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முனைவர் பட்டம் பெறுவதற்கு படித்துக் கொண்டிருந்த பிரியங்கா கோட்டம் ராஜு அவர்களும் இணைந்து உருவாக்கிய நூல் மகாத்மா காந்தி படுகொலை- புதிய உண்மைகள் எனும் புத்தகமாகும்.
ஆங்கிலத்திலிருந்து இந்நூலை தமிழாக்கம் செய்திருக்கும் அக்களூர் இரவி அவர்கள் வெகு நேர்த்தியாக மொழியைக் கையாண்டு உண்மைத்தன்மை மாறாமல் நூலாக்கம் செய்திருக்கிறார். மூல நூலில் தொகுக்கப்பட்டிருக்கும் தகவல்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடைய வரலாறுகளை தெளிவாக வெளிப்படுத்தியிருக்கின்றன. மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றவர் யார் என்ற கேள்விக்கு நாதுராம் கோட்சே என்பது யாவரும் அறிந்த பதிலாக இருந்தாலும், எந்த காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதற்கான பதிலும், யாராக இருந்து கோட்சே கொன்றான் என்பதற்கான தெளிவும் இந்த நூலில் விளக்கப்பட்டிருக்கிறது. தேவைக்கு மீறிய பொருளுடையவர்களையும், அடிப்படை வாழ்விற்கே வழியில்லாதவர்களையும் ஒரே தட்டில் நிறுத்த முயன்ற பொருளாதார நிபுணரான மகாத்மா காந்தியை விட, அகிம்சாவாதியை மக்கள் அதிகம் நினைவில் வைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்டவர் ஏன் வன்முறையால் கொல்லப்பட வேண்டும் என்ற கேள்விக்கு, அன்று சர்தார் வல்லபாய் பட்டேல், நேரு போன்றவர்களுக்குக் கூட கிட்டாத பதிலை, இந்த நூலின் ஆசிரியர்கள் இன்று கொடுத்திருக்கிறார்கள்.
1947-இல் தன் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்ட மூன்று லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள், டெல்லி மாநகரத்தை விட்டு பாகிஸ்தானுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். அதே சமயத்தில் மேற்கு பஞ்சாபிலிருந்தும், சிந்து பிரதேசத்திலிருந்தும், வடமேற்கு எல்லைப்புற மாகாணத்திலிருந்தும், முஸ்லிம் அல்லாத மக்கள் அகதிகளாக ஐந்து லட்சத்திற்கும் அதிகமாக டெல்லி மாநகரில் அமைக்கப்பட்டிருந்த முகாம்களுக்கு வந்தடைந்தனர்.
அந்த சமயத்தில் மத வேறுபாடுகள் இல்லாமல் மசூதிகளும், கோவில்களும், குருத்வாராக்களும், பள்ளிக்கூடங்களும், கல்லறைகளும், இன்னும் பலவும் முகாம்களாக தஞ்சம் கொடுத்தன. இம்மாபெரும் இடப்பெயர்வின்போது, அன்புக்குரியவர்கள் ஊனமாக்கப்பட்டும், கற்பழிக்கப்பட்டும், வெட்டிக் கொல்லப்பட்டும், கொடூரமாக நடத்தப்பட்டு எஞ்சியவர்களே மிஞ்சினார்கள்.
சுதந்திரமடைந்த நாட்டில் அகதிகளாக வந்த மக்கள், பசியாலும் குளிராலும் வாடியபடி, கோபமும், அவநம்பிக்கையும், அச்சமும், பாதுகாப்பின்மையும் நிறைந்தவர்களாக பிரிவினையின் வன்முறைகளை எதிர் நோக்கினார்கள்.
ஜனவரி 13 1948 அன்று மனமும் உடலும் சோர்ந்து போன மகாத்மா, சத்தியாகிரகத்தில் அமர்ந்தவாறு, “ஒரு முஸ்லிம் தனியாக மாநகரத்தில் நடந்து செல்லக்கூடிய நிலை ஏற்பட்டால்தான் அதை கைவிடுவேன்” என்று சபதம் செய்தார். முஸ்லிம் எவரையும் துன்புறுத்த வேண்டாமென இந்துவையும் சீக்கியரையும் கேட்டுக் கொண்டார். அத்துடன் பாகிஸ்தானுக்கு கொடுக்க வேண்டிய ரூபாய் 55 கோடியை இந்திய அரசாங்கம் விடுவிக்க வேண்டுமென்றும் விரும்பினார். அந்த நேரத்தில் காந்தியின் மரணத்தை விரும்பிய ஏராளமான இந்து மற்றும் சீக்கிய அகதிகள் இருந்தனர். ஜனவரி 20 1948 அன்று மதன்லால் பக்வா, காந்தியை கொல்ல முயன்று அதில் தோல்வியுற்றான். அடுத்த 10 நாட்களில் ஜனவரி 30 அன்று நாதுராம் கோட்சே மகாத்மாவை நோக்கி மூன்று முறை சுட்டதில், தோட்டாக்கள் அவரது மார்பையும் வயிற்றையும் இடுப்புப் பகுதியையும் துளைத்ததில், இரண்டு குண்டுகள் மறுபுறம் வெளியேற, மார்பைத் துளைத்த ஒரு குண்டு உடலில் தங்கியிருந்தது. 78 வயது சத்தியாகிரகியான மகாத்மாவை வன்முறையில் கொன்ற கோட்சேவின் காந்தி யார்? இந்த நூலில் உள்ளபடி, “டெல்லி செங்கோட்டையில் காந்தியின் கொலை வழக்கு விசாரிக்கப்படுகிறது. தனக்கென வழக்காட வக்கீல் வைத்துக் கொள்ளாமல் தானே வாதாடுகிறான் நாதுராம் கோட்சே. நீதிபதியாக அமர்ந்திருந்த ஜி.டி. கோஸ்லா எழுதிய நூலில் குறிப்பிட்டபடி, “பளிச்சிடும் கண்களுடன் நெருக்கமாக வெட்டப்பட்ட கிராப்புடன் அஞ்சாத சிறிய உருவத்துடன் அமர்ந்திருந்த நாதுராம் கோட்சே, தன்னை ஒரு அச்சமற்ற தேசபக்தனாகவும், ஹிந்து சித்தாந்தத்தின் தீவிரமான ஆதரவாளனாகவும் காட்டிக் கொள்வதற்காக தானே வாதாட முன் வந்தான்”என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும் “ஒரு நியாயமான மனிதனுக்கு இருக்க வேண்டிய கடமையின் இயல்பு, ஒரு மனிதனுக்கு உரியதென இந்து வேதங்கள் குறிப்பிடும் தர்மம், ஆகியன அவனது வாதத்தின் முக்கியக் கருவாக இருந்தன. நெகிழ்வு தரும் வரலாற்று நிகழ்வுகளைக் குறிப்பிட்டான்.
தங்கள் உயிரைத் தந்தும் தாய் நாட்டை பாதுகாக்க வேண்டுமென்று இந்துக்களை நோக்கி உணர்வுவயப்பட்ட வேண்டுகோளை அவன் வைத்தான்.
பகவத் கீதையின் ஸ்லோகங்களை உச்சரித்து உணர்ச்சி வசப்பட்ட தனது உரையை முடித்தான். பார்வையாளர்கள் நெகிழ்ந்து போனார்கள்” என்று கோஸ்லா எழுதியிருக்கிறார். கோட்சே உரையின் பொருத்தப்பாடின்மையை நீதிபதி சுட்டிக்காட்டினார் எனினும், “பார்வையாளர்கள் கொலைகாரனின் பேச்சைக் கேட்டனர், வசியம் செய்தது போல் அமர்ந்திருந்தனர்” என்றும் குறிப்பிடுகிறார். மக்களுக்கான சுதந்திரத்தை மன்னர்களுக்கானதாக மாற்ற மகாத்மா காந்தி விரும்பவில்லை. 11 11 1947-இல் தேசப்பிதாவானவர் சாஸ்திரிக்கு எழுதிய கடிதத்தின்படி, அவரது எண்ணமாக, “சுதந்திர இந்தியாவில் தேச முழுவதும் மக்களுக்கே சொந்தமாக இருக்க வேண்டும். மன்னர்கள் மக்களின் பிரதிநிதியாக, தர்மகர்த்தாக்களாக மாற வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
சுயராஜ்யத்தையும் ஒற்றுமையையும் விரும்பிய காந்தி, அகிம்சை முறையில் போராடி வெல்ல நினைத்த கருத்திலிருந்து மாறுபாடு கொண்டிருந்த குழுவினர், “ஆயுதங்களைக் கொண்டு தாக்குகின்ற வன்முறைக்கு அகிம்சை தீர்வாகாது” என்ற கருத்தோடு, வீரமற்ற கோழை நிலைக்குத் தள்ளப்படுவதாக அச்சம் கொண்டனர். காந்தியத்தை கொள்கையாகக் கொண்ட குழுவினர் ஏற்றுக் கொண்ட தேசியக் கொடியிலும், தேசிய கீதத்திலும், தேசிய மொழியிலும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. கஜினி முகமதுவின் படையெடுப்பினால் தாக்கப்பட்டதை நினைவுபடுத்துவதோடு, வீர சிவாஜியின் வீரத்தை ஆதரிப்பவர்கள் அகிம்சையை ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்திய பொருளாதாரத்தை சமன்படுத்த முயன்றும், இந்திய மக்களுக்கு அகிம்சை முறையில் விடுதலையை பெற்றுக் கொடுத்தும், மகாத்மாவாக உயர்ந்து நிற்கும் காந்தியின் புன்சிரிப்புடனான முகத்தை பணத்தாள்களில் இடம்பெறச் செய்து உலகத்திற்கேயான எடுத்துக்காட்டாக விளங்கும் தேசப்பிதாவிற்கு மரியாதை செலுத்தி வருகிறோம். இந்த நூலில் இடம் பெற்ற செய்தியாக, “பாகிஸ்தான் காஷ்மீரில் ஊடுருவியபோது, காஷ்மீர் மகாராஜா இந்தியாவிடம் உதவி கேட்ட சமயத்தில், நேரு காந்தியிடம் ஆலோசனை செய்தார். அவரின் சம்மதத்திற்குப் பிறகு இந்தியப் படைகளை அனுப்பி வைத்தாரென்று கூறி, காந்தியின் அகிம்சைக் கோட்பாட்டில் வெளிப்படும் உறுதியற்ற நிலையாக இதனை கோட்சே தனது வாதத்தில் முன் வைத்தான்” என்றாலும், “நவகாளியிலும், பீகாரிலும், அதன் பின் டெல்லியிலும், வன்முறையாளர் வெறுப்பாலும், சந்தேகத்தாலும், சேதமுற்ற நகரங்களிலும், மாநகரங்களிலும், அகிம்சைக் கொள்கையை பின்பற்றியதன் மூலம் காந்தி அமைதியை மீட்டெடுத்தார்.” என்ற நிலையும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்தப் புத்தகத்திலுள்ள தகவல்கள் கோர்வையாக இருந்தாலும், அவை அந்தந்தக் காலத்தில் பத்திரிக்கையில் இடம் பெற்றிருந்ததை சேகரித்தும், தலைவர்களுக்கிடையே கடிதங்களின் பரிமாற்றங்கள் மூலம் செய்திகள் பதிவானதை அடிப்படையாகக் கொண்டும், நடந்தவற்றை ஊர்ஜிதம் செய்து இந்த ஆய்வினை மேற்கொண்டு நூலாகப் படைத்திருக்கிறார்கள். சுதந்திரமடைந்த இந்தியாவில் பல ஆண்டுகளுக்குப் பிறகும் மக்கள் அறிந்து கொள்ள வேண்டியதின் அவசியமாக நமது வரலாறு எவற்றின் தொடர்ச்சியாக நீட்சியடைந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்து செயல்பட ஏதுவாக இந்த நூல் இருக்கிறது. வரிக்கு வரி தகவல்கள் அடங்கிய இப்புத்தகம் காந்தியையும் அவரைச் சார்ந்தவர்களையும் குறித்து அதிகமாகப் பேசுவதை விட, அவரைக் கொன்ற நாதுராம் கோட்சேவையும் அவனது செயலுக்கு காரணமாக அமைந்த குழுவினரையும் பெயருடன் குறிப்பிடுவதோடு, அவர்கள் தங்களுக்கான நியாயத்தை எவ்வாறு வடிவமைத்துக் கொண்டு தங்களை தேச பக்தர்களாக வெளிப்படுத்திக் கொண்டார்கள் என்பதற்கான விவரமான விளக்கங்கள் அதிகபட்சமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. காந்திக்கு மக்கள் கொடுக்கும் அந்தஸ்துக்கு சமமாக கோட்சேவை சார்ந்தவர்கள் அவனுக்குக் கொடுத்தார்கள் என்றும் இந்த நூலில் பதிவில் இருக்கிறது. கோட்சேவும் அவனது சகாக்களும் கொன்றது எந்த காந்தியை? என்ற கேள்விக்கு புத்தகத்தின் இறுதிப் பக்கத்தில் இடம்பெற்ற வரிகளாக, “அரசுக்கு எதிரி அல்லாத; தேச விரோதி அல்லாத காந்தியை அவர்கள் கொன்றனர். சமத்துவவாதியான காந்தியை அவர்கள் கொன்றனர். ஒரு ஹிந்துவாக இருந்த, அகிம்சையை உறுதியாகப் பின்பற்றிய, ஆழ்ந்த ஆன்மீக மனிதராக இருந்த ஒரு காந்தியை அவர்கள் கொன்றனர். சுருக்கமாகச் சொன்னால், கோட்சேவும், அவன் யாரை பிரதிநிதித்துவம் செய்தானோ அவர்களும், அவர்கள் முற்றிலும் புரிந்து கொள்ளாத ஒரு காந்தியைச் கொன்றனர். அல்லது அவரை புரிந்து கொள்வதற்கு அவசியமான அறநெறி சார்ந்த உணர்ச்சிகளும், ஆன்மிக கற்பனையும் முதலாவதாக அவர்களுக்கு என்றும் இருந்ததில்லை.” என்றவாறு இந்நூல் நிறைவு பெறுகிறது. l
previous post