மிக மிகக் குறைவான தகவல்களை மட்டுமே பெற வாய்ப்புள்ள காலகட்டத்தில் அறிஞர் வெ.சாமிநாத சர்மா. பாலஸ்தீனப் பிரச்சனையை அதன் வரலாறு, பண்பாடு, அரசியல். பொருளாதார வளம், ஏகாதிபத்திய தலையீடு என்ற அம்சங்களுடன் வர்க்கரீதியான பார்வைகளையும் உள்ளடக்கி பாலஸ்தீனம் என்ற நூலை எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது. 1938ஆம் ஆண்டு வரை பாலஸ்தீனத்தின் பிரச்சினைகளை ஆய்வு செய்து இந்நூலில் கொடுத்துள்ளார் ஆசிரியர்.
பாலஸ்தீன நிலப்பகுதி எப்படி இருந்தது? யார் யார் ஆதிக்கம் செய்து பேரழிவை ஏற்படுத்தினார்கள் என்பதில் ஆரம்பித்து லண்டனில் நடைபெற்ற சமரச மாநாடுகள் வரை இந்த நூலில் கொண்டுவந்திருக்கிறார்.
யூதர்களான சியோனிசத்தின் நரவேட்டை நடவடிக்கைகளுக்கு உலக ரவுடிகளான அமெரிக்காவும் பிரிட்டனும் ரத்தக் காட்டேரிகளாக மாறி பாலஸ்தீனர்கள் மீது அடக்குமுறை செய்தனர். இஸ்ரேலின் ராணுவம் அமெரிக்க – பிரிட்டன் ஆயுதங்களுடன் பாலஸ்தீனத்தில் நடத்தி வரக்கூடிய இனப்படுகொலையை தங்களுடைய மேலாதிக்கம் நிலைநாட்டப்படுவதாகக் கருதி குதூகலித்து வருகிறார்கள். பாலஸ்தீன மக்கள் நிராயுதபாணிகளாக போர் புரிந்து வருகிறார்கள்.
கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆரம்பித்த போர் எட்டு மாதங்களைக் கடந்து அதாவது 230 நாள்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்தத் தாக்குதல் 200 நாட்களைக் கடந்தபொழுது 1 காசா பகுதியில் 15,000 குழந்தைகள் உட்பட 37,953 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 87,266 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் காணாமல் போய் உள்ளனர். சுமார் 19 லட்சம் காசா மக்கள் இடம்பெயர்ந்து உள்ளனர். இது மொத்த மக்கள் தொகையில் 80 சதவீதமாகும். ராபா, காசாவில் உள்ள ஒரு பகுதி. இந்தப் பகுதியை இஸ்ரேலில் ராணுவம் சமீபத்தில் அழித்தொழித்தது. இங்கு மட்டும் 14 லட்சம் பாலஸ்தீன மக்கள் அகதிகளாக உள்ளனர். 4000 பேருக்கு ஒரு கழிப்பிடம்தான் உள்ளது. ராபா வாழத் தகுதியற்ற நகரமாக மாற்றப்பட்டாலும் பாலஸ்தீன மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்தியா போன்ற சில நாடுகள் தவிர உலகம் முழுவதும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அமெரிக்காவில் பள்ளிக் குழந்தைகளில் ஆரம்பித்து கல்லூரி மாணவர் வரை போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. 45 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டக் களத்தில் உள்ளனர். இந்தியாவிலும் தமிழகத்திலும்கூட பிரபலமான பத்திரிகைகள் பாலஸ்தீனத்தில் நடத்தும் கொடுமைகளைப் பற்றிய செய்திகளை வெளியிடுவது இல்லை. உலக ஏகாதிபத்தியத்தையே எதிர்த்து, ஊடக ஏகபோக அடக்குமுறைகளை எதிர்த்து பாலஸ்தீன மக்களும் அவர்களுக்கு ஆதரவானவர்களும் மீண்டும் போராடிக் கொண்டே இருக்கிறார்கள். இந்தச் சூழலில்தான் அறிஞர் வெ. சாமிநாத சர்மா எழுதிய “பாலஸ்தீனம்” என்ற நூலை பாரதி புத்தகாலயம் மறு வெளியீடாக கொண்டு வந்துள்ளது.
தமிழ்கூறும் நல்லுலகிற்கு வெ. சாமிநாத சர்மாவைப் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. இவர் ஒரு தமிழறிஞர், அறிவியல் தமிழின் முன்னோடி, பன்மொழி அறிஞர், இதழாசிரியர் எனப் பல ஆளுமை கொண்டவர். வெ.சாமிநாத சர்மாவின், “பாலஸ்தீனம்” என்ற நூல் பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம் என்ற பதிப்பகத்தால் 1939ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரங்கோனில் (இன்றைய யாங்கூன்) வெளியிடப்பட்டுள்ளது. இன்று பல்வேறு விதமான தகவல்கள் நமக்கு எளிதில் கிடைத்தாலும் சமகாலத்தில் வாழ்ந்த ஒருவர் அன்றைய நிலைமைகளை விளக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
அந்த நூலின் விவரங்களை இந்த முன்னுரையில் விவரிப்பது பொருத்தமாக இருக்காது. அறிஞர் சாமிநாத சர்மாவின் எழுத்துக்களில் அவற்றை வாசித்து உள்வாங்குவதுதான் பொருத்தமாக அமையும். அவர் தனது முன்னுரையில் முடிக்கிற பொழுது “வெளிநாட்டு விவகாரங்களில் தமிழர்களாகிய நாம் இன்னும் அதிகமான சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே என் கோரிக்கை” என்று முடித்துள்ளார்.
இந்த ஏகாதிபத்திய நாடுகள் ஏன் இஸ்ரேலை ஆதரிக்கிறார்கள் அதற்கான 1920ஆம் ஆண்டுகளில் என்ன தேவை ஏற்பட்டது? 1938ஆம் ஆண்டுகளில் என்ன தேவை ஏற்பட்டது? என்பதை எல்லாம் அறிஞர் சாமிநாத சர்மா அவர்கள் இந்தப் புத்தகத்தில் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார். அது மட்டுமல்ல, இஸ்ரேலின் சியோனிசக் கொள்கைகளையும் அதன் முதலாளி வர்க்க நலன்களையும் அரபுப் பகுதியில் எப்படி செயல்படுத்தினார்கள் என்பதை வர்க்கரீதியான உதாரணங்களுடன் அறிஞர் சாமிநாத சர்மா விளக்கி இருக்கிறார். 1939ஆம் ஆண்டு வெளிவந்தாலும் வரலாற்றின் அரசியலை, சமாதானப் போர்வையில் நடக்கும் யுத்தங்களை தெள்ளத் தெளிவாக விளக்கி இருக்கிறார். இந்த நூலை வாசிப்பது பாலஸ்தீனப் பிரச்னை பற்றிய புரிதலை மேலும் மேம்படுத்தும். – அ.பாக்கியம் அவர்கள் நூலின் பதிப்புரையில் கூறியுள்ளார்.
1936ஆம் வருஷத்திற்கு முன்னர் யூதர்களும் அராபியர்களும் நட்புடனேயே பழகி வந்தார்கள். ஆனால் இப்பொழுது இந்தப் பழக்கமெல்லாம் நின்றுவிட்டன. இரு ஜாதியினரும் ஒரே நகரமாயிருந்தாலும் தனித் தனி இடங்களிலேயே வசிக்கிறார்கள். யூதர்கள், தங்கள் ஜாதியினருடைய ஹோட்டல்களில்தான் சாப்பிடுகிறார்கள்; மோட்டாரில் ஏறிச் செல்கிறார்கள்; சிகரெட் பிடிப்பதும், தீப்பெட்டி உபயோகிப்பதும்கூட யூதருடையதுதான். இங்ஙனமே அராபியர்களும், தங்கள் ஜாதியினருடைய சாமான்களையே உபயோகிக்கிறார்கள். இரு ஜாதியினருக்கும் தனித்தனிப் பள்ளிக் கூடங்கள் இருக்கின்றன. அந்தந்த ஜாதிப் பிள்ளைகள், அந்தந்த ஜாதிப் பள்ளிக்கூடங்களுக்கே செல்கின்றன. பாலஸ்தீனம் எப்பொழுதுமே ஒரு சமூகத்தாருக்குச் சொந்தமாயிருந்ததில்லை. இனியும் அநேகமாக அப்படியிராது என்று ஸர் ஜார்ஜ் ஆடம் மித் என்ற ஓர் ஆங்கிலேய அறிஞன் கூறினான். பாலஸ்தீனத்தின் தலைநகரம் ஜெருசலேம். இங்கு கிறிஸ்தவர் களுக்குப் புனிதமான ஒரு தேவாலயமும், முஸ்லீம்களின் முக்கிய மசூதியொன்றம், யூதர்களின் அழுகைச் சுவரும் சரித்திரப் பிரசித்த மான சின்னங்களாக இலங்குகின்றன. உலகத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் மிகப் புராதனம் வாய்ந்த தேவாலயம் பெத்ல் ஹெம் என்ற நகரத்தில் இருக்கிறது. நாஜெரெத் என்ற நகரத்தில் தான் கிறிஸ்துநாதர் தமது இளமையைக் கழித்தாரென்று விவிலிய நூல் கூறுவதாக ஆசிரியர் கூறி இருக்கின்றார்.
பாலஸ்தீனத்தை யூதர்களுக்கு உரிம நாடாக்கிக் கொடுக்கவேண்டுமென்ற கிளர்ச்சிக்கு, பதினெட்டாவது பத்தொன்பதாவது நூற்றாண்டுகளிலிருந்தே பிரிட்டிஷார் ஆதரவு காட்டி வந்ததற்குக் காரணங்கள் என்ன என்ற விவரங்களைப் பற்றி நாம் இந்த நூலில் ஆராய்ச்சி செய்யவேண்டியதில்லை. யூதர்களின் சாசனமென்று கருதப்படுகிற பால்பர் அறிக்கை (Balfor Decleration) பிறந்ததற்குரிய முக்கிய காரணத்தை இந்நூலில் வெ. சாமிநாத சர்மா அவர்கள் பதிவு செய்துள்ளார்.
பால்பர் அறிக்கையை எதிர்த்து வந்த அராபியர்கள், பாலஸ்தீனத்தில் ஏற்பட்ட மாண்டேரி அரசாங்கத்திற்கு விரோதமாகவும் கிளர்ச்சி செய்யத் தொடங்கினார்கள். இந்தக் கிளர்ச்சி பல சமயங்களில் பெரிய கலகங்களாகப் பரிணமித்து அநேக உயிர்ச் சேதங்களையும் பொருள் நஷ்டத்தையும் உண்டுபண்ணியிருக்கிறது. பாலஸ்தீனத்தில் தேசிய இயக்கத்தோடு மத உணர்ச்சியும் பிணைக்கப்பட்டிருக்கிறது. பாலஸ்தீன அராபியர்கள் தேசப்பற்று நிரம்பியவர்கள். தேசம் ஒன்றுதான் இவர்களுக்குத் தெரியும். அரசியல் சம்பந்தமான நுணுக்கங்கள் இவர்களுக்குத் தெரியாது; தெரிந்துகொள்ளவும் இவர்கள் விரும்புவதில்லை. தேசத்திற்காக, தங்கள் தலைவர்கள் சொல்கிறபடி எதையும் செய்ய இவர்கள் சித்தமாயிருக்கிறார்கள். யூதர்கள் குடியேற்றத்திற்கு முன்னர், அராபியர்கள், ஏதோ அற்ப சொற்பமாக, தங்களுடைய அன்றாட ஜீவனத்திற்குப் போதுமான அளவு சிறு சிறு துண்டு நிலங்களில் விவசாயம் செய்து வந்தார்கள். இந்த நிலங்களும் இவர்களுக்குச் சொந்தமாயிராது. லச்சுவான்தாரர்களிடமிருந்து குத்தகைக்கோ, வாடகைக்கோ பெறப்பட்டதாக இருக்கும். மகசூலில் ஏறக்குறைய ஐந்தில் ஒரு பாகம் முதல், மூன்றில் ஒரு பாகம் வரை, நிலச்சொந்தக்காரர்களுக்குக் கொடுத்து விடுவார்கள்.
இங்ஙனம் இவர்கள் ஒழுங்காகக் கொடுத்துக்கொண்டு வந்தபோதிலும், சாசுவதமாக ஒரே நிலத்திலேயே சாகுபடி செய்து கொண்டிருக்கலாம் என்ற நிச்சயம் இல்லை. நிலச் சொந்தக்காரர்கள், தங்கள் இஷ்டப்படி நிலத்தைப் பிரித்தோ, மாற்றியோ வேறு யாருக்கேனும் கொடுத்து விடுவார்கள். இங்ஙனம் விவசாயிகள் தங்கள் உழைப்பின் ஊதியத்தில் ஒரு பகுதியை நிலச் சொந்தச்காரர்களுக்குக் கொடுத்து விடுவதோடு தாங்கள் கடன்பட்டிருக்கும் முதலாளிக்கும் ஒரு பகுதியைக் கொடுத்து விடுவார்கள். விவசாயிக்குத் தேவை இருக்கிறதோ இல்லையோ, தேவையை உண்டுபண்ணியோ, அதிகப்படுத்தியோ விடுகிறான் முதலாளி. இந்தச் சாபக்கேட்டிற்கு பாலஸ்தீன அராபிய விவசாயிகள் புறம்பாகவில்லை. இங்கிலாந்து, எப்படி இங்கிலீஷ்காரர்களுக்குச் சொந்தமானதோ, பிரான்ஸ் எவ்வாறு பிரஞ்சுக்காரர்களுக்குச் சொந்தமானதோ அப்படியே பாலஸ்தீனமும் அராபியர்களுக்குச் சொந்தமானது. அராபியர்களிடையே யூதர்களைக்கொண்டு புகுத்துவது தவறு; மனிதத் தன்மையற்றது. இப்பொழுது பாலஸ்தீனத்தில் நடைபெறும் விவகாரங்களை எந்தவிதமான தர்மநியாயத்தைக் கொண்டும் சரியென்று சொல்ல முடியாது. மாண்டேடரி நிருவாகத்திற்கு எவ்வித ஆதாரமுமில்லை. சென்ற யுத்தம்தான் இதற்கு ஆதாரம். பாலஸ்தீனம் முழுவதையுமோ அல்லது அதில் ஒரு பகுதியையோ யூதர்களின் தேசீயத் தலமாக்க வேண்டுமென்பதற்காக, பெருந்தன்மை வாய்ந்த அராபியர்களை அடக்குவதென்பது, மனித சமூகத்திற்கு இழைக்கிற ஒரு குற்றமாகும் என்று நூலாசிரியர் தம் கருத்தை நூலில் குறிப்பிட்டிருப்பது அவரது சமூக நிலைப்பாட்டை வெளிகாட்டுகிறது. இந்நூலை மிகச் சிறப்பாக நல்ல முறையில் எழுதிய வெ. சாமிநாத சர்மா அவர்களின் நூலை மறுவெளியீடாக நன்முறையில் வெளியிட்ட பாரதி புத்தகாலயத்திற்கும் வாழ்த்துகள் பாராட்டுகள். l
previous post