ஊர் சுற்றுதலே புதிய இடங்களை நமக்கு அறிமுகம் செய்கிறது என்பதை உணர வைக்கும் பயணக் கட்டுரைகள். உள்ளூரில் மிதிவண்டியில் தொடங்கிய உற்சாகப் பயணம் வானூர்தியில் வெளிநாடுகளை எட்டிப்பார்க்கவைத்து பரவசமடைகிறது. மதுரையை பிறப்பிடமாகக்கொண்டு பல இதழ்களில் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியவர், தொலைக்காட்சிகளில் பல விவாத மேடைகளில் பங்கேற்றவர், இலக்கியக் கூட்டங்களில் நூல் விமர்சனம், பள்ளி, கல்லூரிகளில் உரையாற்றல், சிறுகதைக்கான பயிற்சிப் பட்டறை, பழங்குடியினப் பெண்களிடையே விழிப்புணர்வு ஊட்டும் முகாம்களில் கலந்துகொள்ளுதல் என தொடர்கிறது இவரின் பயணம். மாணவர்கள், மகளிர் என முக்கியத்துவம் கொடுத்து உரையாற்றி வரும் தீபா நாகராணி அவர்களின் பயணம் சார்ந்த கட்டுரைகள் நம்மையும் பயணத்திற்கு அழைத்துச் செல்கின்றன.
குழந்தைகளை மால்களுக்கு அழைத்துச் சென்று செலவிடும் நேரத்தைவிட மலைகளுக்கு அழைத்துச் சென்று வரலாற்றை நேரடியாக அறியச் செய்வது பள்ளியில் சொல்லித்தராத அவசியமான பாடங்களை சொல்லித்தரும் என்பதில் சந்தேகம் இல்லை என்ற வரிகள் போதும் இந்த நூலின் பயனை நாம் அறிந்து கொள்வதற்கு. மதுரையில் காணக் கிடைக்காத எத்தனையோ இயற்கை வளங்களும் மலைகளும் வீற்றிருக்க… அவற்றை பட்டியலிட்டு பயணத்தின் வழியே காணத்தரும் இவரின் தேடல் இன்னும் இன்னும் நீண்டு வெளிநாடுகளுக்கும் பயணித்து முழுமையான உலகை சுற்றுவதற்கு நம்மைத் தயார்படுத்துகிறது. மிதிவண்டிப் பயணம், இருசக்கர வாகனப் பயணம், பேருந்துப் பயணம், ரயில் பயணம், வானூர்திப் பயணம், கப்பல் பயணம் என பயணத்தின் அனைத்து திசைகளிலும் பயணித்துப் பார்த்து அதன் வழியே உற்சாகத்தையும் உலகத்தின் வேட்கையையும் அறிந்து வந்து அதை நமக்கும் காட்சிப்படுத்தி இருக்கும் விதம் மிக அருமை.
மதுரை அரிட்டாப்பட்டி மலை விருதுநகர் மங்களூர் பெங்களூரு விசாகப்பட்டினம் திருவனந்தபுரம் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி சிங்கப்பூர் கன்னியாகுமரி கோவளம் ஆலப்புழா என, தான் கண்ட இயற்கை எழில் சூழ்ந்த இடங்களையும் அதை ஒட்டி காணப்படும் கோவில் தலங்களையும் விவரித்துச் சென்று ஒவ்வொன்றில் உள்ள அனுபவ அறிவை நமக்கு கடத்தி இருக்கும் எழுத்தாளரின் எண்ணம் பயணத்தின் வழியே நம் மனதை இலகுவாக்கி வாழ்வின் நகர்தலை சிறப்புற வைத்துக்கொள்ள முடியும் என்பதே. உடலும் உள்ளமும் உற்சாகமடைந்திடவும் உவகையின் வழியே எண்ணங்கள் உயர்ந்திடவும் உதவிடும் மருந்து என அமைவதே பயணம். புதியவை பார்த்தலும் புதுமைகள் அறிதலும் அறிமுகம் இல்லா மனிதர் உணர்வில் அன்பை விதைத்திலும் பயணத்தின் வழியே பண்பாடுகள் பிறத்தலும் சிறப்பான அனுபவங்களில் சிந்தை நிறைத்தலும் வாழும் காலத்தை வசந்தமாக்கிடும் நல்வழிகள்தானே? மாறும் தட்பவெட்ப நிலைகளைக்கண்டு மாற்றத்தின் தன்மையை மனதினில் கொண்டு நகர்ந்திடும் வாழ்வில் நிம்மதி நாடும் நற்பொழுதுகளை அறிந்திடும் மந்திரம் கற்கலாம்.
அறியா இடங்களின் அருமை பெருமைகளைக் காண்கையில் வாழும் இடத்தின் வரலாறுகளை உணர்ந்து எதிர்வரும் காலத்தின் இடர்பாடுகளைக் கலைந்திட எண்ணிலா யோசனைகள் பிறந்திட பயணிக்கலாம். மிதிவண்டியில் பயணம் சுற்றுப்புறத்தை அறிந்திட அண்மை இடங்களை அகத்தினில் நிறைக்கலாம். நிலத்தின் பயன் என்பது வாழும் மனிதர்களின் உழைப்பின் பெருமை தானே? காடுகளும் தரிசுகளும் மேடுகளும் பள்ளங்களும் மேனியில் நிலைத்திட உயிரை வளர்த்திடும் மனிதனின் உழைப்பில் நிலமும் நெகிழ்ந்து கட்டிடங்களாகவும் வயல்களின் பரப்பில் பயிர்களாகவும் உயர்ந்து நிற்பதை மனங்கள் அறிந்திட பயணம் உதவிடும். இயற்கையின் எழுச்சி அருவியாக மலைகளின் மேனியில் வழிந்திடும் பொழுதினில் தன்னைத் துறந்திடும் தத்துவம் உணரும் மனிதன் மனதில் உலகையே பேரன்பில் நிறைத்திடும் உத்வேகம் பிறந்திடும். நிலத்தின் வழியே நீளும் பயணமே நீரின் மேலே நடந்திடும் கனவை நிஜமாக்கிப் போக காற்றைக் கிழித்து சடுதியில் ஏறிடும் வானூர்திகளின் வழியே வலம் வரும் நாடுகளில் கண்டிடும் அழகும் கவர்ந்திடும் மனதை! உள்ளூர் தொடங்கி வெளிநாடு எட்டிய பயணத்தின் திசையில் பண்பாடுகளைக் காண்பதும் மனிதர்களின் நாகரிகம் அறிவதும் நம்பிக்கையும் உழைப்புமாய் நகர்ந்திடும் மக்களின் எதிர்காலம் தெரிவதும் பயணத்தின் இன்ப விளைவுகள் அல்லவா?
அழுத்திடும் மனதை அசைத்துப் பார்த்து அமைதிப்படுத்திடும். நெருக்கிடும் வேலையின் நெருக்கடி நீக்கி நிம்மதி கூட்டிடும். கற்றது கையளவு என கல்லா மனதில் அனுபவங்கள் சேர்த்திடும். செலவென எண்ணி சிக்கனத்தில் நிறுத்தாமல் உலகினைப் படித்திட இக்கணத்தில் பயணிப்போம் என்பதை பயணம் நமக்கு அறியத் தருகிறது. மேலும் மேலும் இவரின் பயணம் புதுப்புது பாதைகளை உருவாக்கி எல்லோரது பாதங்களையும் பதித்திட உதவட்டும். l