நேர்காணல்:
மலையாள எழுத்தாளர்
பி.வி.சுகுமாரன்
சந்திப்பு : யூமா வாசுகி
மலையாள எழுத்தாளர் பி.வி.சுகுமாரன் தமிழறிந்தவர். பாலக்காடு அருகில் உள்ள ‘யாக்கர’ எனும் கிராமத்தில் வசிக்கிறார். மலையாளத்தில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான நூல்களை வெளியிட்டிருக்கிறார். மலையாள எழுத்தாளர் ஒ.வி.விஜயனின் தீவிர வாசகர். தமிழிலிருந்து மலையாளத்துக்கு மொழிபெயர்ப்பவர். மத்திய அரசு நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்று, தற்போது பூச்செடிகள் விற்கும் தோட்டம் நடத்துகிறார். மனைவி, உஷா. பிள்ளைகள், சுபாஷ் (இணையர் ரெஸ்மி, மகன் ரியோன்), காயத்ரி (இணையர் அர்ஜுன்).
-ஹசன் மாலுமியார்
சிறுவர்களுக்காகவும் பெரியவர்களுக்காவும் எழுதும், தமிழ் தெரிந்த மலையாள எழுத்தாளராக உங்களை அறிகிறோம். சிறார் இலக்கிய வகைமையில், ‘தியா’, ‘விடுபடும் சுடர்’, ‘மீளும் நிறங்கள்’ ஆகிய மூன்று நூல்களை தமிழில் மொழிபெயர்த்து ‘பாரதி புத்தகாலயம்’ வெளியிட்டிருக்கிறது. உங்களைப்பற்றி மேற்கொண்டு என்ன பகிர்ந்துகொள்ள விரும்புகிறீர்கள்?
பாரதி புத்தகாலயத்தின் காரணத்தால், என்னுடைய மூன்று மலையாள சிறார் மற்றும் இளையோர் நாவல்கள் இப்போது தமிழில் கிடைக்கின்றன. தமிழ் இலக்கிய உலகிற்கு எனக்கு கதவுகளைத் திறந்திருக்கும் இந்தத் தோழமைக்கு நான் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், சிறந்த தமிழ்ப் புத்தகங்களை மலையாளத்தில் மொழிபெயர்த்து, நம் மொழிகளுக்கிடையே கலாசாரப் பரிமாற்றத்தில் ஈடுபடுவதை நான் மிகவும் விரும்புகிறேன். தமிழின் சிறந்த இலக்கியங்களை மலையாள வாசகர்களிடம் கொண்டுசெல்லவும், அதைப்போன்று மலையாளத்தின் முக்கியமான பிரதிகளை தமிழ் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் பணியாற்றுகிறேன். இதற்கு தமிழ்ப் படைப்பாளிகள் மற்றும் வாசகர்களின் ஒத்துழைப்பு எனக்கு அவசியமாக இருக்கிறது; நல்ல படைப்புகளை இனங்காணும் வகையில்.
கேரள சிறார் இலக்கியச் சூழல் எப்படி இருக்கிறது? இதில் உங்களை மிகவும் கவர்ந்த படைப்புகளையும் படைப்பாளிகளையும் பற்றிச் சொல்லுங்கள். முந்தைய மற்றும் தற்போதைய நிலை குறித்து இந்தக் கேள்வி.
மலையாளத்தில் குழந்தை இலக்கியம் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. முந்தைய கதைகள் தார்மீகப் பாடங்களையும் கலாச்சார விழுமியங்களையும் கற்பித்தன, சமகால சிறார் இலக்கியப் படைப்புகள் பன்முகத்தன்மை கொண்டிருக்கின்றன. இதில் மலையாளத்தில் பல்வேறான பரிசோதனை முயற்சிகள் நடந்து வருகின்றன. தற்கால மலையாள சிறார் இலக்கியம் உள்ளடக்கம் மற்றும் சிக்கலான கருப்பொருள்களில் தீவிர கவனம் செலுத்துகிறது.
ஆரம்பத்தில் நான், சிறார் இலக்கியம் வாசிக்கத் தொடங்கும்போது நாட்டுப்புறக் கதைகள், புராணங்கள் மற்றும் பைபிள் ஆகியவற்றால் கவரப்பட்டேன். என் பாட்டியின் இரவு நேர கதைசொல்லல் என்னை மாய உலகங்களுக்கு அழைத்துச் சென்றது, என் கற்பனையையும் ஆர்வத்தையும் தூண்டியது.
இந்த ஆரம்பகால தாக்கங்கள் புராணங்கள், புனைவுகள் மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தின் மீதான எனது அன்பை வடிவமைத்தன. தலைமுறைகள், கலாச்சாரங்கள் மற்றும் மரபுகளை இணைக்கும் கதைசொல்லலின் சக்தியை நான் கண்டுபிடித்தேன்.
நீங்கள் தமிழிலிருந்து சிறார் இலக்கியத்தை மொழிபெயர்த்திருக்கிறீர்கள். உங்களால் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் நூல்கள் எவை? இந்த அவதானிப்பில் தமிழ் – மலையாள சிறார் இலக்கியப் போக்குகளை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?
யூமா வாசுகி (தூய கண்ணீர், தன்வியின் பிறந்தநாள்), ஆயிஷா நடராசன் (ஆயிஷா), விஷ்ணுபுரம் சரவணன் (ஒற்றைச் சிறகு ஓவியா, வாத்து ராஜா) மற்றும் எஸ். பாலபாரதி (மரப்பாச்சி சொன்ன ரகசியம்) ஆகியோரின் குறிப்பிடத்தக்க தமிழ் சிறார் இலக்கியப் படைப்புகளை நான் மொழிபெயர்த்துள்ளேன், அவர்களின் எளிமையான கதைசொல்லல் முறையும் விஷயத் தேர்வும் என்னைக் கவர்ந்தன. எனது அவதானிப்பில், தமிழ் எழுத்தாளர்கள் சிறார் இலக்கியத்தை தீவிரமாகவும் ஆத்மார்த்தமாகவும் அணுகுகிறார்கள். இளம் வாசகர்களுடன் காத்திரமான, கவிதார்த்தமுடைய எளிய உரையாடலை முன்னெடுக்கிறார்கள். மிக மிக முக்கியமான சமூகப் பிரச்சினைகள் வசம் வாசர்களைத் திருப்புகிறார்கள். அவை குறித்த சிந்தனைக்கான முனைப்பை ஏற்படுத்துகிறார்கள்.
உங்களுக்குப் பரிச்சயமான, தமிழ் தவிர்த்த வேற்றுமொழி சிறார் இலக்கியம் குறித்து உங்கள் பார்வை என்ன?
வளர்ந்த பிறகு, தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்புகள் படிக்கத் தொடங்கினேன். ரஷ்ய செவ்வியல் இலக்கியங்கள், ஐரோப்பிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க இலக்கியங்களில் புழங்கினேன்.
ஆர்.கே. நாராயணனின் ‘மால்குடி டேஸ்’, ரஸ்கின் பாண்டின் படைப்புகள் போன்றவையும் வாசிப்பில் உட்பட்டன.
ஆங்கிலத்திலும் தமிழ் மற்றும் மலையாளத்திலும் மிகச் சிறப்பான வகையில் சிறார் இலக்கிய நூல்கள் வெளியீடு காண்கின்றன. பெரியோருக்கான இலக்கிய வெளியீடுகளில் முற்றிலும் ஆழ்ந்திருந்த பல பதிப்பகங்கள் தற்காலத்தில் சிறார் இலக்கியத்தில் தங்கள் முகங்களைத் திருப்பியிருக்கிறார்கள். அதற்கான ஊர்ஜிதமான, நம்பிகையூட்டும் சான்றுகளாக பலவற்றைச் சொல்லலாம். கலாச்சார வேறுபாடுகளைக் கடந்து, சிறார் இலக்கியம் மனித வாழ்வுக் களங்களில் அகழ்ந்து மிக நுட்பமாக்கவும் செறிவாகவும் அறத்தையும் அன்பையும் அறிவையும் பல்வேறு பாணிகளில் ஊட்டப் பிரயத்தனப்படுகிறது.
கேரளத்தில் சிறார் இலக்கிய மேம்பாட்டுக்கான அரசு மற்றும் தனியார் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன? அங்கே சிறார் இலக்கியத்துக்கு வரவேற்பு இருக்கிறதா? இவ்வகைப் புத்தகங்களின் விற்பனை எப்படி இருக்கிறது?
கேரளாவில், வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் முழு ஆதரவை வழங்குகிறது. வாசிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பள்ளிகளில் ஆண்டுதோறும் ஜூன் 19 முதல் ஜூன் 25 வரை மாநிலம் தழுவிய வாசிப்பு தினம் கொண்டாடுகிறது. சிறார் இலக்கியத்தை ஊக்குவிப்பதில் பல நிறுவனங்கள் முனைப்பாகப் பங்களிக்கின்றன:
பால சாகித்ய நிறுவனம், சாஸ்த்ர சாகித்ய பரிஷத், நூலகப் பேரவை, மாத்ருபூமி புக்ஸ்,
டி சி புக்ஸ் மற்றும் பூர்ணா பப்ளிகேஷன் போன்ற பதிப்பகங்களின் சிறார் இலக்கிய வெளியீடுகளைக் குறிப்பிடலாம்.
எனது அனுபவத்தில், சிறார் இலக்கியத்திற்கு கேரளத்தில் நிறையத் தேவை இருக்கிறது. விற்பனையும் நன்றாக இருக்கிறது. கேரளாவின் செயலூக்கமான அணுகுமுறை வாசிப்பு கலாச்சாரத்தை வளர்க்கிறது. இது, குழந்தை இலக்கியத்திற்கு பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்கிறது.
சிறார் இலக்கிய விருதுகளுக்கான புத்தகத் தேர்வுகள் அங்கே நடுநிலையுடன், படைப்பின் தரத்தை மட்டும் முன்வைத்ததாக இருக்கிறதா?
சிறார் இலக்கிய விருதுகளுக்கான தேர்வு செயல்முறை பெரும்பாலும் பல்வேறு அளவுகோல்களை உள்ளடக்கியது. பல அமைப்புகள் தேர்வில் கறாராக தரத்தின் அடிப்படையில் விருதைத் தீர்மானிக்கின்றன. சிலவற்றை அப்படிச் சொல்ல முடிவதில்லை. ஆனால் சிறார் இலக்கிய விருதுகள் எழுத்தாளர்களின் அர்ப்பணிப்பையும் படைப்பாற்றலையும் அங்கீகரிக்கின்றன; ஊக்குவிக்கின்றன. நல்ல சிறார் இலக்கியத்தை பரவலான மக்களின் கவனத்துக்குக் கொண்டு செல்கின்றன.
திருவனந்தபுரம், ‘பாலசாகித்ய இன்ஸ்டிட்யூட்’ பற்றியும் அதன் சிறார் இதழான, ‘தளிர்’ பற்றியும் சொல்லுங்கள்.
திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள கேரள பாலசாகித்ய இன்ஸ்டிட்யூட் (Kerala State Institute of Childrens Literature) குழந்தைகளுக்கான இலக்கியம் மற்றும் பயிற்சிகளை மேம்படுத்துவதற்காக நிறுவப்பட்டுள்ளது. இது அரசு நிறுவனமாகும். இந்த நிறுவனம் சிறார்களின் வாசிப்பையும் எழுத்தாற்றலையும் வளர்ப்பதற்கு பல்வேறு வகையான செயல்பாடுகளை மேற்கொள்கிறது. இந்த நிறுவனத்தின் சிறார் மாத இதழ், ‘தளிர்.’ இது சிறாரின் படைப்பாக்கங்களை ஆதரிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, சிறுவர்களின் கற்பனை, படைப்பாற்றல் மற்றும் அறிவுசார்ந்த வளர்ச்சியை ஊக்குவிப்பதை நோக்கமாகக்கொண்டு வெளிவருகிறது. படைப்புகள், கதை, கவிதை, கட்டுரைகள், அருமையான விளக்கச் சித்திரங்கள் ஆகியவற்றைக்கொண்டு தளிர். சிறார்களுக்கு சுவாரஸ்யமான மற்றும் சிந்தனையூட்டும் உள்ளடக்கங்களை வண்ணத்தில் வழங்குகிறது.
மொத்தத்தில், பாலசாகித்ய இன்ஸ்டிட்யூட்டும் தளிர் இதழும் வாழ்க்கையை அணுகுவதற்கு சிறாருக்குப் பயிற்றுவிக்கின்றன.
கேரளத்தில் பெரியவர்களுக்காக எழுதும் பல எழுத்தாளர்கள் சிறுவர்களுக்கும் நல்ல படைப்புகளைக் கொடுத்திருக்கிறார்களே, அவற்றில் நீங்கள் எவற்றைப் பரிந்துரைப்பீர்கள்?
இப்போதைய நிலையைப் பற்றிப் பேசுவோம். பெரியவர்களுக்காக மட்டுமே எழுதி வந்த பிரபல எழுத்தாளர்கள் பலர் இப்போது சிறாருக்கு எழுதுகிறார்கள். இது நல்ல விஷயம்தான். சிறந்த மாற்றம். சிறார் இலக்கியத்தின் சாத்தியத்தையும் அதன் மகத்துவத்தையும் அவர்கள் உணரத் தொடங்கியிருக்கிறார்கள்.
அங்கே ஆண்டுதோறும் சிறார் திரைப்பட விழாவும் நடப்பது உண்டல்லவா?
ஆம், கேரளத்தில் ஆண்டுதோறும் சர்வதேச சிறார் திரைப்பட விழா (International Children’s Film Festival) நடைபெறுகிறது. இது சிறுவர்களுக்கான திரைப்படங்களை கண்டு அனுபவிக்க வாய்ப்பு வழங்குகிறது.
இந்த விழாவில், வெளிநாட்டின் சிறார் திரைப்படங்கள், ஆவணப்படங்கள், மற்றும் குறும்படங்கள் திரையிடப்படுகின்றன. திரைப்பட விழா, சிறுவர்களுக்கான கலை, கலாச்சாரம் மற்றும் கற்பனை வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் 100, 150 பக்கங்களும், இதற்கு மேற்பட்ட பக்க எண்ணிக்கையுமுள்ள சிறார் இலக்கிய நூல்கள் சாதாரணம். நம் பிரதேசத்தில் சிறார் இலக்கியம் என்றால் மிகச் சிறிய புத்தகமாகத்தான் இருக்க வேண்டும் என்கிறார்களே?
ஆம், சில சமயங்களில், நம் பிரதேசங்களில் சிறார் இலக்கியம் சிறிய புத்தகங்களாகவே இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இதற்குக் காரணமாக, மக்கள் அதிகம் வாசிக்கும் அளவிற்கேற்ப அல்லது குழந்தைகளின் கவனத்திற்கேற்ப உள்ளடக்கத்தை எளிதாக்க வேண்டும் என்பதாக இருக்கலாம்.
ஆனால், உலகளாவிய அளவில் சிறார் இலக்கியம், பெரிய பக்கங்களும், ஆழ்ந்த கதாப்பாத்திரங்களும், அடிப்படைக் கருத்துக்களும் கொண்ட நூல்களாகவும் இருக்கிறது. ஆங்கிலத்தில் பல நூல்கள், குழந்தைகளின் மனதுக்கு உரிய கற்பனைகள் மற்றும் கதைப்பாடுகள் கொண்டுள்ளன, மேலும் அவர்களுக்கு வாழ்க்கைமுறை மற்றும் சமூகத்திற்கான முக்கியமான பாடங்களை கற்பிக்கின்றன.
இது, சிறார்களின் படைப்பாற்றலை வளர்ப்பதற்கான, கற்பனையைத் தூண்டும், அவர்களின் அறிவை விரிவுபடுத்தும் ஒரு வழியாக அமைகிறது. எனவே, சிறார் இலக்கியம் குறைந்த பக்கம் மட்டுமே இருக்க வேண்டும் என்ற எண்ணம் தவறானது, அது மேலும் வளமாகவும் விவரமானதாகவும் அதிக பக்கங்கள் உடையதாகவும் இருக்க முடியும்.
மலையாள சிறார் இலக்கியத்தின் தோற்றம் வளர்ச்சி பற்றி…
“நாடோடி கலாசாரத்தின் ஊற்றுகள்தான் நம் மலையாள சிறார் இலக்கியத்தின் தோற்றுவாய்” என்பது, கேரளத்தின் புகழ் பெற்ற எழுத்தாளரும் மொழி அறிஞருமான பன்மன ராமச்சந்திரன்நாயர் அவர்களின் கூற்று. பழைய காலத்தில் பெரியவர்களுக்கு எழுதப்பட்ட நூல்களைத்தான் சிறுவர்களும் படிக்க வேண்டிய நிலை இருந்தது. 1824ல் ‘சிறுகுழந்தைகளுக்கு உதவிகரமாக ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட கதைகள்’ வெளிவந்தன. பிறகு கேரளவர்மா எழுதிய ‘மகாசரித சங்கிரகம்’, ‘சன்மார்க்க தீபம்’ ஆகிய நூல்கள் மலையாள சிறார் இலக்கியத்தின் தொடக்கமாக இருந்தன. ஆயினும் பலர், குஞ்சன்நம்பியாரின், ‘பஞ்சதந்திரம் கிளிப்பாட்’டைத்தான் மலையாளத்தின் முதல் சிறார் இலக்கிய நூலாக அங்கீகரிக்கின்றனர். 1880ல் தோபியாஸ் சக்கரியாஸின் ‘சிந்துபாத்தின் கப்பலோட்டம்’, 1897ல் கல்யாணிக்குட்டியம்மாவின் ‘ஈசாப் கதைகள்’, 1899ல் கொட்டாரத்தில் சங்குண்ணியின் ‘விஸ்வாமித்ர சரிதம்’ என்று சிறார் இலக்கியம் வளம்பெறத் தொடங்கியது.
பாட்டி கதைகள், இதிகாசக் கதைகள், மோகினிக் கதைகள், பிராணிக் கதைகள், சாகசக் கதைகள், அறிவியல் கதைகள், தொழில்நுட்பம் சார்ந்த கதைகள், வரலாற்றுக் கதைகள், பலவகைப்பட்ட அபுனைவு சிறார் நூல்கள் என்று சேகரங்கள் பெருகின.
செறுகாடு, பி.டி.பாஸ்கர பணிக்கர், எம். என். குருப்பு, குஞ்ஞுண்ணி, உள்ளூர்
எஸ். பரமேஸ்வரன், ஜி. சங்கரக்குருப்பு, சுமங்களா, பேராசிரியர் சிவதாஸ், பிரபாகரன் பழச்சி உள்ளிட்ட மிகப் பலர் இத்துறையைச் செழுமையடையச் செய்திருக்கிறார்கள். தற்காலத்திலும் பெரும் எண்ணிக்கையிலான எழுத்தாளர்கள் மிகவும் தீவிரத்துடனும் அர்ப்பணிப்புடனும் செயல்புரிந்து மிகச் சிறந்த சிறார் இலக்கிய நூல்களை உருவாக்கிவருகிறார்கள்.
கேரளத்தில் நூலகச் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன?
கேரள லைப்ரரி கவுன்சிலின் செயல்பாடுகள் மிகவும் மேம்பட்ட தன்மையில் இருக்கின்றன. கேரள அரசு, நூலகங்கள் மூலம் அறிவியல் மற்றும் கல்வி வளர்ச்சிக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கிறது. இதற்காக, பல்வேறு திட்டங்கள் முனைப்புடன் செயற்படுத்தப்படுகின்றன. நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன. நூலகங்கள், வாசிப்பை ஊக்குவிப்பதற்கான நிகழ்ச்சிகள், நூல் வெளியீடுகள், பண்பாட்டு நிகழ்வுகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்கின்றன. புதிய வாசகர்கள் மற்றும் மாணவர்களுக்கு நூலகச் சேவைகள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. கேரள மின் நூலகத்தில் இணையம் மூலமாக புத்தகங்களையும் தகவல்களையும் பெற முடியும். கல்வி, ஆராய்ச்சி மற்றும் சமூக அடிப்படையில் பல திட்டங்கள் நூலகங்கள் வாயிலாகச் செயல்படுகின்றன. இந்தத் திட்டங்களில் பொதுமக்களும் மாணவர்களும் ஆராய்ச்சியாளர்களும் ஈடுபடுகின்றனர்.
கேரள அரசின் லைப்ரரி கவுன்சில்
14 மாவட்டங்களிலும் வருடம்தோறும் புத்தகக் காட்சிகளை நடத்திவருகிறது. அரசின் இந்த செயல்பாட்டில் பதிப்பகத்தினர் கட்டணம் செலுத்தி கலந்துகொள்கின்றனர். கேரள அரசு நூலங்களுக்கு புத்தகங்கள் வாங்கும்போது
35 சதவிகிதக் கழிவில் பதிப்பாளர்கள் புத்தங்கள் தர வேண்டும். உயர்கல்வித்துறை அமைச்சர்தான் லைப்ரரி கவுன்சிலின் பொறுப்பாளர்.
சிறார் நூல்களில் ஓவியத்துக்கும் உள்ளடக்கத்துக்குமான ஒத்திசைவு பற்றி என்ன கருதுகிறீர்கள்?
சிறார் நூல்களில் ஓவியத்துக்கும் உள்ளடக்கத்திற்குமான ஒத்திசைவு மிகவும் முக்கியமானது. இது இரண்டுவிதமான கலை வடிவங்களின் இடையே ஓர் உறவை உருவாக்குகிறது. ஓவியங்கள், நூலின் உள்ளடக்கத்தை மேலும் விளக்குகின்றன. கதாபாத்திரங்களை, சூழல்களை மற்றும் கதையினூடான உணர்வுகளையும் உயிர்ப்புடன் முன்வைக்க உதவுகின்றன. சிறார் இலக்கியத்திற்கு மெருகூட்டி அதன் முக்கியத்துவத்தை உறுதி செய்வதில் பங்காற்றுகின்றன. பின்னணியின் துலக்கத்திற்கும் சிந்தனைக் கூர்மைக்குமான மேலான வழி. கதை கூறலின் நுட்பங்களுக்குள் வாசகரை ஈர்க்கும் முயற்சி. கதையும் ஓவியக் கலையும் வாசிப்பில் ஒன்றிணைந்து பிரதியைக் குறித்து ஒரு முழுமையை உருவாக்குகின்றன.
சிறந்த ஓவியங்கள் சிறார் நூல்களில் இடம்பெறும்போது அது கலை இலக்கியச் செயல்பாடாகிறது. இது, வாசகர்களுக்கு ஒரு பரந்த அனுபவத்தை வழங்குகிறது.
மலையாள எழுத்தாளர் ஒ.வி.விஜயனின் நாவல், ‘கசாக்கின்டெ இதிகாசம்’ உங்களை மிகவும் கவர்ந்த படைப்பு என்று தெரிகிறது (காலச்சுவடு பதிப்பகம் இதை ‘கசாக்கின் இதிகாசம்’ எனும் தலைப்பில் தமிழில் வெளியிட்டிருக்கிறது). இந்த நாவலின் கதை நடந்த இடத்தில் (தஸ்ராக்: பாலக்காட்டுக்கு அருகில் உள்ள கிராமம்) ஒரு வீடு வாங்கி, அதற்கு அந்த நாவலின் பிரதான பாத்திரங்களில் ஒருவனாகிய அப்புக்கிளியை நினைவுகூரும் விதமாக, ‘அப்புக்கிளி வீடு’ என்று பெயர் வைத்திருக்கிறீர்கள். இந்த வீட்டைப் பற்றிய செய்திகள் மலையாள ஊடகங்களில் நிறைய வெளியாகியிருக்கின்றன. இந்த நாவல் இந்தளவு உங்களைக் கவர்ந்ததற்கான காரணம் என்ன?
‘கசாக்கின் இதிகாசம்’ எனும் நாவல் ஒ.வி.விஜயனின் திறமையான எழுத்தால் அற்புதமான அனுபவத்தை வழங்குகிறது. இந்த நாவல் வாசகர் மனதிற்குள் வலுவானதோர் உரையாடலை நிகழ்த்துகிறது. வாழ்வின் வினோதப் போக்குகளை, உறவுச் சிக்கல்களை அபாரமான கலைத்துவத்துடன் எடுத்துக் காட்டுகிறது. 1969ல் வெளிவந்த இந்த நாவல் இன்றைக்கும் அதன் கதையம்சம், சொல்முறை, அழகியல், நவீனப் பாங்கு ஆகியவற்றால் இந்திய இலக்கிய உச்சங்களுள் ஒன்றாக நிலைத்திருக்கிறது. மலையாளத்தில் பொதுவாக நாவல் இலக்கியம் குறித்த சர்ச்சைகளில் கசாக்கின் இதிகாசத்துக்கு முன், கசாக்கின் இதிகாசத்துக்குப் பின் என்று அளவிடுவதுண்டு.
கேரளத்தின் பாலக்காட்டுக்கு அருகிலுள்ள தஸ்ராக் கிராமம்தான் கதை நிகழும் களம். அந்தக் கிராமத்தின் வாழ்வியலை அத்தனை இயற்கையுடன் ஒளிரும் ஜீவனுடன் இந்த நாவல் ஒரு நெடுங்கவிதைபோன்று வண்ணமான வண்ணங்களுடன் வரைந்திருக்கிறது.வாசிப்பிற்குப் பிறகும் இந்த நாவல் நம் வாழ்வின் அன்றாடத்தின் பல சந்தர்ப்பங்களில் காமெல்லாம் உடன் வரக்கூடியதாக இருக்கிறது.
இந்த நாவல் வந்த காலத்தில் கடும் எதிர்ப்புக்கு உள்ளானது. விஜயன் கடும் கண்டனங்களுக்கு ஆளானார். ஆனால் இப்போது அது இலக்கியத்தின் பிரகாசக் கோபுரமாக உயர்ந்து நிற்கிறது. ஒட்டுமொத்த கேரள மக்களால் கொண்டாடப்படுகிறது.
கசாக்கின் இதிகாசம் நான் என் பதினெட்டாம் வயதில் வாசித்தேன். பிறகு அது என் மனதை விட்டு அகலவில்லை. மறுபடியும் மறுபடியும் வாசித்தேன். அப்போது அழகி மைமுனா மட்டுமல்ல, அனைத்துக் கதாபாத்திரங்களும் என்னில் கலந்தன. இந்தப் புத்தகத்தை எத்தனை முறை படித்தேன் என்று நினைவில்லை. நான் மட்டுமல்ல, பலரும் இப்படிப் படித்திருக்கிறார்கள்; படிக்கிறார்கள். மலையாளத்தில் இது நூறு பதிப்புகளைத் தாண்டிவிட்டது. தஸ்ராக்கில் ஒரு வீடு என்பது பதினெட்டு வயதில் நான் கண்ட கனவு. அதனால்தான் தஸ்ராக்கில் நான் வாங்கிய வீட்டுக்கும் ‘அப்புக்கிளி’ என்று பெயர் வைத்தேன். நாவலில் ஒரு முக்கியமான கதாபாத்திரம் ஒருவனின் பெயர் இது. மனவளர்ச்சி குன்றியவன் அவன்.
வெளிவந்தபோது ஏன் இந்த நாவலை எதிர்த்தார்கள்?
‘கசாக்கின் இதிகாசம்’ வெளிவந்தபோது, அதன் உள்ளடக்கத்திற்காக கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தது. இதற்கான சில காரணங்கள்:
ஒ.வி.விஜயனின் எழுத்து நவீனமாகவும், வெளிப்படையானதாகவும் இருந்ததால், பலர் அதை எதிர்த்தனர். இந்த நாவல் வழக்கமான இலக்கிய மரபுகளை முறியடித்தது. அது மட்டுமல்ல, நாவலின் கதையில் உள்ள சில அம்சங்கள் இளைய வாசகர்களைத் தவறாக வழி நடத்தும் என்று நினைத்தார்கள். அது உண்மையல்ல என்பதை காலம் நிரூபித்துள்ளது. அதுவே நாவலின் பலம்.
தஸ்ராக்கில் உள்ள ஒ.வி.விஜயன் நினைவு இல்லத்தில் (கேரள அரசு நிறுவனம்) கமிட்டி உறுப்பினராகவும் அங்குள்ள நூலகத்தில் துணைத் தலைவராகவும் இருக்கிறீர்கள். ஒரு பெரும் எழுத்தாளருக்கான இந்த நினைவு இல்லத்தைப்போன்ற ஒரு செயல்பாடு தமிழ்நாட்டில் இல்லை. சொல்லுங்கள்,
ஒ.வி.விஜயன் நினைவு இல்லம் எப்படி அமைக்கப்பட்டது? எப்படிச் செயல்படுகிறது? அதன் திட்டங்கள் என்ன? இதற்கான நிதி ஆதாரம் என்ன?
ஒ.வி. விஜயன் நினைவு இல்லம் கேரள மாநிலத்தின் முக்கியமான கலாசார மையங்களுள் ஒன்றாக இருக்கிறது. பரந்த நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட இந்த நிலையம், ஒ.வி. விஜயனின் எழுத்துக்களைப் பற்றிய ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதற்கும் அவருடைய படைப்புகளின் மேன்மைகளை நினைவுகூர்வதற்குமான ஒரு முக்கிய இடம். இது கேரள அரசு நிறுவனம். இது ஆழ்ந்தரீதியிலான கலை இலக்கிய அமர்வுகளுக்கான களமுமாகும். மக்களின் பயன்பாட்டுக்காக இங்கே நூலகம் உண்டு. கருத்தரங்குகள், கலைநிகழ்ச்சிகள், திரைப்பட விழாக்கள், நூல் வெளியீடுகள்போன்ற நிகழ்வுகளெல்லாம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஒ.வி.விஜயன் எனும் இலக்கிய ஆளுமையை மக்கள் அறியும்விதமாகவும் அவரது படைப்புகள் மீதான ஆர்வத்தைத் தூண்டும்விதமாகவும் இந்த நிறுவனம் தன் செயல்பாடுகளை அமைத்திருக்கிறது. விஜயனின் உரைகளும், அவரைப் பற்றிய ஆவணப்படங்களும் இங்கே பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. அவரது படைப்புகளைக் குறித்த ஓவியக்காட்சிகளும் நடப்பதுண்டு. அரசு இந்த நிறுவனத்தின் மீது அக்கறை செலுத்துகிறது. நிதி உதவி செய்கிறது. எழுத்தாளர்கள் வந்து தங்கி படைப்பு முயற்சிகளில் ஈடுபடுவதற்கு ஏதுவாக தங்குமிடங்கள் அமைக்கும் திட்டமும் உண்டு. இலக்கியப் பாரம்பரியத்தை வளர்க்கும் ஒரு பிரதான இடம் இது. இன்று, எழுத்தாளர்கள், கலைஞர்கள், வாசகர்களின் புனிதத் தலம்போல மாறி வருகிறது ஒ.வி. விஜயன் நினைவு இல்லம்.
இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் செயல்பாடுகளுக்கும் முக்கிய காரணம், இதன் செயலர் டி.ஆர்.அஜயன் அவர்களின் தலைமைத்துவம்தான். பெருங்கலைஞர் ஒருவரின் நினைவு இல்லம் எப்படி இருக்கவேண்டும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். அவர் இந்த நிறுவனத்தை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்ற முயற்சிக்கிறார்.
இதைப்போன்று எழுத்தாளர்களுக்கான நினைவு இல்லங்கள் கேரளத்தில் வேறு என்னென்ன இருக்கின்றன? அவற்றுக்கான செயல்பாடுகள் உண்டா?
கேரளத்தில் தற்போதைய அரசு எழுத்தறிவுக்கு முன்னுரிமை அளிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அதனால் கலாச்சார மைங்கள் கட்டுவதில் ஆர்வம் காட்டுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் கலாசார மையங்கள் அமைக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
முக்கியமான நினைவிடங்களாக, துஞ்சன் நினைவிடம், சங்கம்புழா நினைவிடம், குமாரனாசன் நினைவிடம், மேல்பத்தூர் நினைவிடம், உள்ளூர் நினைவிடம்,
பி.குஞ்ஞிராமன் நாயர் நினைவிடம், மூலூர் பத்மநாப பணிக்கர் நினைவிடம், குஞ்சன் நம்பியார் நினைவிடம், மொயின்குட்டி வைத்தியர் நினைவிடம், வி.டி.பட்டதிரிப்பாடு நினைவிடம், வைக்கம் முகமது பஷீர் நினைவிடம், எஸ்.கே.பெற்றேகாடு கலாச்சார மையம், தகழி நினைவிடம், கமலா சுரய்யா (மாதவிக்குட்டி) நினைவிடம் ஆகியவற்றைச் சொல்லலாம். இவை தமக்கான கலாச்சார செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றன.
பெரியவர்களுக்காக எழுதப்பட்ட மலையாள இலக்கியங்களில் உங்களுக்குப் பிடித்த சில?
என்னைப்பொறுத்தவரை வாழ்க்கையில் மிக விருப்பத்திற்குரியதும் முக்கியமானதுமான செயல்பாடு வாசிப்புதான். கதைகள், நாவல்கள், கவிதைகள், வாழ்க்கை வரலாறுகள் முதலியவை என் ஆர்வத்திற்குட்பட்டவை. நெருக்கடியான என் இளமையில் எனக்கு அடைக்கலம் கொடுத்த நூல்களில் ஒன்று ஆனந்த்தின், ‘ஆள்கூட்டம்.’ வாசிப்பு சிகிச்சைபோல (Bibliotherapy).
சமீபத்தில் படித்த நாவல் 1112 பக்கமுள்ள சுஸ்மேஷ் சந்த்ரோத்தின் (Susmesh Chandroth) ‘வழிச்செண்ட’ (Vazhichenda) என்ற நாவல்.
மலையாளத்தின் அனைத்து தலைமுறை எழுத்தாளர்களின் நல்ல புத்தகங்களை இப்போதும் வாசிக்க முயற்சிக்கிறேன். பெரும்பாலும் மொழிபெயர்ப்புப் படைப்புகளையும், தமிழ் நாவல்களையும் வாசித்து வருகிறேன். தற்போது தமிழ்நதியின் ‘பார்த்தீனியம்’, ‘மாயக்குதிரை’ஆகிய நூல்களை வாசித்துவருகிறேன்.
KSSP (கேரள அறிவியல் இயக்கப் பேரவை: தமிழ்நாடு அறிவியல் இயக்கம்போன்றது)யைப் பற்றிச் சொல்லுங்கள்.
KSSP (Kerala Sasthra Sahitya Parishad) என்பது கேரளத்தில் அறிவியல், இலக்கியம், தொழில்நுட்பம் மற்றும் சமூக விழிப்புணர்வை வளர்க்கும் அமைப்பாகும். இது 1962-ல் நிறுவப்பட்டது. சமூக மேம்பாட்டில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. சமூகத்தை எதிர்மறையாகப் பாதிக்கும் விஷயங்களை எதிர்த்து இது தீவிரமாகச் செயல்படுகிறது. சிறுவர்களுக்காகவும் இளைஞர்கள் மற்றும் பெரியோர்களுக்காகவும் மிகச் சிறந்த அறிவியல் நூல்களை வெளியிட்டுவருகிறது. முதலும் முற்றிலுமாக இளையோர் மற்றும் சமூக உயர்வை முன்வைத்து ஆற்றலுடன் செயல்பட்டு வருகிறது.
மலையாள நாளிதழ்கள் மற்றும் வார இதழ்களில் சிறுவர் படைப்புகளுக்கான பக்கங்கள் ஒதுக்கப்படுகின்றனவா?
ஆம், மலையாள நாளிதழ்கள் மற்றும் வார இதழ்களில் சிறுவர் படைப்புகளுக்கான பக்கங்கள் ஒதுக்கப்படுகின்றன. இந்தப் பகுதிகள் சிறுவர்களை ஊக்குவித்து அவர்களது கற்பனை, இலக்கியம் மற்றும் கலைத் திறமைகளை வளர்க்க உதவுகின்றன. இந்தப் பக்கங்களுக்கு சிறுவர்கள் தங்கள் படைப்புகளை அனுப்பலாம்.
அங்கே, சிறார் இலக்கியம் மற்றும் சிறார் நிகழ்த்துக்கலை தொடர்பான தீவிர செயல்பாட்டாளர் என்று யாரைக் குறிப்பிடுவீர்கள்?
கேரளாவில் குழந்தைகளின் மனதில் ஒளி பாய்ச்சும் கலை இலக்கியப் பாரம்பரியத்தின் முக்கிய ஆளுமைகளாக பலரைக் குறிப்பிடலாம். அவர்களில் பி.நரேந்திரநாத், மாலி, காரூர், சுமங்களா, லலிதாம்பிகா அந்தர்ஜனம், குஞ்ஞுண்ணி மாஸ்டர் முதலிய முன்னோடிகளை இப்போது நினைவுகூர்கிறேன்.
சிறு வயதிலிருந்தான உங்கள் வாசிப்பைப் பற்றிப் பேசலாமா?
சிறு வயதில் பல்வேறு கதை நூல்கள், காவியங்கள், சிறுவர் இலக்கியங்களை வாசித்தேன். இந்த வாசிப்பு, என் கற்பனைத் திறனை வளர்க்கவும், புதிய உலகங்களை ஆராயவும் உதவின.
குறிப்பாக, மலையாள மொழிக் கதைகள், என் கலாச்சாரத்தைப் பற்றிய விழிப்புணர்வையும், அதன் அடிப்படையில் உருவான சமூகத்தைப் பற்றிய ஆர்வத்தையும் உண்டாக்கின. அப்போதும் இப்போதும் வாசிப்பு என் ஆர்வத்துக்குரியதாக இருக்கிறது.
பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு நீங்கள் பூச்செடிகள் விற்கும் ‘நர்சரி கார்டன்’ நடத்தி வருகிறீர்கள். இதில் எப்படி உங்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது?
பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு ‘நர்சரி கார்டன்’ நடத்துவதில் ஆர்வம் ஏற்பட்டதற்கான காரணம் கொரோனாதான். நான் 2020இல் பணியிலிருந்து ஓய்வு பெற்றேன். அந்த நேரத்தில் கொஞ்சம் மனச்சோர்வு ஏற்பட்டது. எழுதவோ, படிக்கவோ முடியவில்லை. அந்தக் காலத்தில் என் பிள்ளைகள் தந்த ஆலோசனைதான் ‘பிளான்ட் ஸ்டோரிஸ்’ என்ற நர்சரி. என் மனைவி உஷாவுக்கு இதில் அதிக ஆர்வம் உண்டு. அதனால் நர்சரி நல்லமுறையில் நடந்து வருகிறது. உஷா, BSNL நிறுவனத்தில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.
எங்கள் இருவருக்குமே இயற்கை மீது ஆர்வம் இருந்ததால், பூச்செடிகள் வளர்ப்பதிலும் விற்பதிலும் ஈடுபட்டோம். இதில் பணம் மட்டுமே முக்கியம் இல்லை. செடிகள் வளர்ப்பது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அவற்றின் சாந்தம் எங்கள் மனங்களிலும் படர்கிறது. மேலும், நான்கு பேருக்கு வேலை கொடுக்க முடிகிறது. இந்தத் தோட்டத்துக்கு வந்தால் இசை கேட்கலாம், புத்தகம் படிக்கலாம், போட்டோ எடுக்கலாம். செடிகளும் வாங்கலாம். ‘உங்களிடம் தோட்டமும் நூலகமும் இருந்தால் உங்களுக்குத் தேவையான எல்லாமும் கிடைக்கும்’ எனும் பிரபலமான வாசகத்தை நீங்கள் அறிந்திருக்கலாம். இவை இரண்டும் என்னிடம் இருக்கின்றன. இதுதான் முக்கியம்.
பூச்செடிகள் வளர்க்கும் செயல், என் கலைத்திறன்களைப் பயன்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பு. இதற்கான திட்டமிடலும் உருவாக்கப் பணிகளும் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இதன் மூலம், நான் என் ஓய்வு வாழ்க்கையை கற்பனை, அறிவியல், இயற்கை சார்ந்த அனுபவமாக மாற்ற முடிகிறது.
சிறார் உலகத்தில் திறன்பேசிகள் (Smartphone)?
திறன்பேசி இன்று மிக மிக முக்கியமான கருவியாகக் கருதப்படுகிறது. இது இல்லாவிட்டால் வாழ்க்கை இல்லை என்பதுபோல ஆகிவிட்டது. தகவல் பரிமாற்றத்துக்கு அப்பாற்பட்டு பல வகையில் படைப்பாற்றலுக்கு உதவிகரமாகவும் இருக்கிறதுதான். ஆனால் திறன்பேசியும் குழந்தைகளும் என்று வரும்போது மிகத் தீவிரமான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அதன் அபரிமிதப் பயன்பாட்டால் குழந்தைகளின் உடலும் மனமும் பாதிக்கப்படுகின்றன. மிகப் பல குழந்தைகளுக்கு இதை சரியாகப் பயன்படுத்தத் தெரியவில்லை. உலகளாவிய பிரச்சினை இது. சமூக நெருக்கடி. முன்னேற்றத்துக்கான இந்தக் கருவியை மிகச் சரியாகப் பயன்படுத்த குழந்தைகள் ஆழ்ந்த முறையில் பயிற்றுவிக்கப்பட வேண்டும். இந்த விஷயத்தில், பெரியவர்களான நமக்கு, கூட்டானதொரு எச்சரிக்கை மனோபாவம் தேவைப்படுகிறது. l