கவிதை உள்ளத்தின் மொழி. ‘நமக்குத் தொழில் கவிதை’ என்ற மகாகவி, அதையடுத்து ‘நாட்டிற்குழைத்தல்’ என்றார். ‘இமைப்பொழுதும் சோராதிருத்தல்’ என்கிற இடம் இன்னும் முக்கியமானது. கவிதை அகநிலை மட்டும் சார்ந்து எழுதப்படுவது, தனது இருப்பு குறித்த கேள்விகளுக்குள் ஆழ்ந்திருப்பது, நிலையாமையின் குவிமையத்திலிருந்து பேசுவது என்கிற ஒரு சிந்தனையோட்டம் எழுபதுகள், எண்பதுகளில் பேசுபொருளாக இருந்தது. எதார்த்த உலகிலிருந்து இழையெடுத்துப் பின்னிய கவிதைகள் சமூகவயம் சார்ந்த குரல்களைக் கேட்கவைத்தன. அரசியல் சமூக பொருளாதார பண்பாட்டுக் களத்தின் நேரடி பரிச்சயம் மிக்க ஓர் இதழாளரின் கவிதை மொழியைப் பருகும் வாய்ப்பை
பொன். தனசேகரனின் அண்மைய தொகுப்பு வழங்குகிறது.
காலத்தைப் பற்றியும், காலம் கடப்பது குறித்தும் பேசுகின்றன கவிதைகள். வாழ்க்கையையும் மரணத்தையும் சமூகம் ஒன்று போலவே அலட்சியமாக அணுகும் தன்மையை விவாதிக்கின்றன வேறு சில கவிதைகள். பொருளற்ற சடங்குகளுக்கும், அடிப்படையற்ற நம்பிக்கைகளுக்கும் அடிமைப்பட்டிருக்கும் மனங்களோடு பேசத் துடிக்கின்றன கொஞ்சம் கவிதைகள். பாசாங்கற்ற முறையில் வெளிப்படும் சொற்கள் கவிதையை இன்னும் நெருக்கமாக உள்ளத்திற்குக் கடத்துகின்றன. நாள்பட்ட வாசிப்பு அனுபவத்தின் களத்தில் அந்தந்த நேரத்து சிந்தனைகளைத் தூவிக் கொண்டே செல்பவரது விளைச்சலாகத் தனக்குரிய வண்ணத்தோடும் மணத்தோடும் வாசகரைச் சென்றடைகின்றன இந்தக் கவிதைகள்.
குழந்தைகளைப் பற்றிய இரு கவிதைகள் ஈர்க்கின்றன. குழந்தைமை குறித்த அக்கறை சார்ந்தவை இரண்டும்.
காகிதங்களில் கிறுக்கட்டும்
குழந்தைகள் விருப்பம் போல்
திட்டாதீர்கள்
என்று தொடங்கும் கவிதை, ‘சுதந்திரமாக வார்த்தைகளைக் கொட்டட்டும் தடுக்காதீர்கள்’ என்கிற இடத்தில் கவனம் பெறுகிறது. எத்தனையோ செய்திகளைப் பேசுகிறது. நிறைவாக, ‘நடைவண்டி இல்லாமலே நடை பழகும் குழந்தைகள்’ என்ற இடத்தில் அவர்களை அவர்களாக இருக்கவும், மலரவும் விடுங்கள் என்று தீர்மானமாகப் பேசுகிறது.
மற்றொரு கவிதை, குழந்தையாக இருந்தால் குழந்தையின் மொழி புரிந்திருக்குமோ என்கிற கேள்வியில் பெரிய மனித தோரணையோடே குழந்தைகளை அணுகும்போது கைநழுவிப் போய்விடும் இன்பங்களை பளிச்சென்று தொட்டுக் காட்டிவிடுகிறது.
‘அவரவர் பார்வை’, தொகுப்பில் சிறப்பான சிற்பங்களில் ஒன்று. இரு வகை கண்ணாடிகளில் ஒன்று, ‘முகத்தைப் பிடித்துவைத்து என்னிடமே காட்டும் தடுப்புச் சுவர்’ என்றும், மற்றொன்று ‘கண்விழிப் படலத்தில் பார்வையைத் தெளிவாக்கிக் காட்டும் ஜன்னல்’ என்றும் எழுதுகிறார் கவிஞர்.
‘காலமும் தூரமும்’ மற்றொரு சிற்பம். தூரத்தை எட்டும் கால அளவு, வேகத்தை வைத்துத் தீர்மானமாகிறது. ‘நேற்று இருந்த நேரம் நேற்றே செலவழிந்தது, இன்றும் அப்படித்தான்’ என்கிற இடத்தில் ஒலிக்கும் பகடி தன்னியல்பானது. ‘நாளும் பொழுதும் கைச்செலவு போக எதுவும் மிச்சமில்லை’ என்று காலத்தை வரையறுக்கும் இடம் தனித்துவமானது. பசியோடு அமர்ந்திருப்பவரின் எதிரே நேரம் உட்கார்ந்திருக்கிறது அகோரப்பசியோடு…
எனக்குக்
கொஞ்சம் கூட
மிச்சம் வைக்காமல்
சாப்பிட்டுக் கொண்டிருந்தது
சாப்பிட்டு முடித்ததும்
நேரம் இருந்தது
நான் இல்லை
என்று கவிதை முடிகிற இடம் ‘அடடா…’ சொல்லவைத்து, மேலும் சிந்தனைகளைத் தூண்டிவிடுகிறது.
மரணங்களை விதவிதமாக வரைந்து செல்கின்றன தொகுப்பின் கவிதைகள் சில. இறக்காமலே ‘செத்த’ என்ற அடைமொழியைப் பெற்றுக்கொண்டு வாழ்ந்த தாத்தா, ரசிப்புக்குரிய கவிதையின் நாயகராகிறார். அந்தப் பொல்லாத மனிதர், சின்னத் தகராறில் கோபித்துக் கொண்டுபோய்விடும் மனைவியைத் திரும்ப வீட்டுக்கு அழைக்கச் செய்யும் குயுக்தி, தான் இறந்துவிட்டதாக அனுப்பி வைக்கும் செய்தி. கல்யாண வீடொன்றில் பாயசம் கிண்டிக் கொண்டிருந்தபடி சிரித்துப் பேசிக் கொண்டிருக்கும் தாத்தாவை அலறியடித்துக் கொண்டு வரும் ஊரே கடுங்கோபமாய்ப் பார்க்கிறது என்று சொல்லும் கவிதை, பாட்டியைக் குறித்து ஒன்றும் சொல்வதில்லை, அவளைத் தடுத்தாட்கொண்ட தாத்தா வீறாப்பாகச் சிரித்ததைப் பதிவு செய்யுமிடத்தில் இருவருக்குமிடையே காதல் பொங்கிவிட்டிருந்ததைச் சொல்லாமல் சொல்லிவிடுகிறது.
இன்னொரு கவிதை, உயிருக்கு உத்தரவாதம் இல்லையென்றாலும், பிணப்பரிசோதனை நடவாமல் உடலைப் பெற்றுக்கொள்ளும் உபாயம் இல்லை என்று அறைகிறது ‘நேரலை’ கவிதை. கோவை மத வெறியில் மாய்க்கப்பட்ட அப்பாவிகளின் கதையைப் பேசும் திலீப் குமாரின் ‘ஒரு குமாஸ்தாவின் கதை’ எனும் சிறுகதையின் கடைசி வரி உள்ளபடியே ஒரு துயரக் கவிதை, அதை அசாத்தியமாகக் குறிப்பிட்டு முடியும் ஒரு கவிதை, கொரோனா காலத்துக் கொடுமையான மரணங்களை வலியோடு எடுத்துப்பேசுகிறது.
குவிந்து கிடைக்கும் வேலைகளோடு ஒருவர் மரணத்திற்காகக் காத்திருக்க முடியுமா, வாழ்க்கையின் கொடுமையைப் பேசுகிறது, ‘வாழ்விலே ஒரு முறை’ கவிதை. மரண பரியந்தம் கவிதை, மரணத்தைப் பேசுவது அல்ல, அடக்குமுறையைத் தீட்டுகிறது. அத்துமீறலைப் பேசுகிறது.
‘கடவுளின் விண்ணப்பம்’ கவிதை, சலிப்புறும் கடவுளைப் பேசுவதாக, விஷயங்களை எதிர்முனையில் இருந்து நோக்குகிறது. பஞ்சாங்கத்தில் புதையும் அடகு போன மனம் எனும் ‘மரபு’ உள்ளிட்ட கவிதைகள் கால காலமாக நிலவும் மூட நம்பிக்கைகளை எடுத்துப் பேசுகின்றன. ஏமாற்றங்களைப் பேசுகின்றன சில கவிதைகள். கவிதைகளைப் போலவே ஈர்ப்பானவை அவற்றுக்கான தலைப்புகளும். , ‘மயான காண்டம்’, ‘தனி நபர் இடைவெளி விட்டு’, ‘குற்றம் தன் கடமையைச் செய்யும்’ என்ற வரிசையில், ‘காட்சிப் பிழை’, ‘காக்காய் பார்லிமென்ட்’ போன்றவை மகாகவியின் மீதான பற்றுதலைப் பேசுபவை.
வாசிப்பனுபவம் வழங்கும் தொகுப்பின் தலைப்பு, இளவயதில் ஆர்வத்தோடு ஆடிய பரமபத சோபன படம் விளையாட்டின் நினைவை மீட்டுத் தருகிறது. 106ம் கட்டத்தில் காத்திருக்கும் பெரிய பாம்பு கடித்தால் ஆட்டத்தை மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டிய இடத்திற்குக் கொண்டு நிறுத்திவிடும். அதனாலென்ன, தொகுப்பை மீண்டும் மீண்டும் வாசிக்க முடியும்! l
previous post