பொதுவாக தமிழில், திரையிசை பற்றிய நூல்கள் நூலாசிரியரின் இசை ரசனையை ஒட்டி, பாடல் வரிகளை விதந்தோதும் ஓர் அனுபவப் பதிவாகத்தான் அமைகின்றன. திரையிசைப் பாடல்கள் வழியாக கர்னாடக இசையைப் புரிந்துகொள்ள உதவும் வகையில், ராகங்களை அடையாளம் கண்டு ரசிக்க உதவும் வகையில் அவை அமைவதில்லை. அந்தக் குறையைப் போக்கும் வண்ணம் டாக்டர்.ஜி்ராமானுஜம் அவர்கள் இந்து தமிழ் திசையில் எழுதிய தொடர் உயிர்மை வெளியீடாக, இசைபட வாழ்தல் என்ற தொகுப்பாக வந்துள்ளது.
22 கட்டுரைகளில் முதல் மூன்று கட்டுரைகள் இசை பற்றியும், கர்னாடக இசை பற்றியும் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் விதமாக எளிமையாக எழுதப்பட்டுள்ளன. எஞ்சிய கட்டுரைகள் அனைத்தும் பிரபலமான சில ராகங்கள் திரையிசையில் எவ்வாறு பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதை விளக்கும் விதமாக அமைந்துள்ளன.
பெரும்பாலும் இதற்கு ஆசிரியர் இளையராஜாவின் பாடல்களைத்தான் பயன்படுத்தியிருக்கிறார். கட்டுரைகளின் தலைப்பும் பெரும்பாலும் கட்டுரையில் விளக்கப்படும் ராகத்தில் அமைந்துள்ள ஒரு பிரபல பாடலின் வரியாகத்தான் இருக்கிறது. தேர் கொண்டு வந்தவன் யாரென்று சொல்லடி என்று ஹம்சத்வனி ராகத்தை விளக்குகிறார். நீ சின்ன நி, நான் பெரிய நீ என்று பிருந்தாவன சாரங்கா பற்றிச் சொல்கிறார்.
காற்றினில் வரும் கீதமே என்ற கட்டுரையில் விதவிதமான கல்யாணிகள். மிக மிக எளிமையாக ஒரு ராகத்தின் ஆரோகண அவரோகணத்தில் ஒவ்வொரு சுவரமும் மாறும்போது அது என்ன ராகமாக உருவெடுக்கிறது என்பதை விளக்கியிருக்கிறார்.
கல்யாணியிலிருந்து லதாங்கி வருகிறது. லதாங்கியிலிருந்து சரசாங்கி வருகிறது. ஒரு சுவரம் மட்டும் மாறியதில் தென்றல் வந்து என்னைத் தொடும் பாட்டும், ஆடாத மனமும் உண்டோவும், ராசாவே சித்தெறும்பு என்னைக் கடிக்குதும், மல்லிகையே மல்லிகையே தூதாகப் போவும் உருவாகும் மாயத்தை அவருக்கே உரிய நகைச்சுவையான பாணியில் சொல்லிக்கொண்டே போகிறார். மல்லிகையே, மல்லிகையே பாடலில் அந்தக் கால ரிஷி பத்தினிகள் கெட்டப்பில் வரும் கனகாவைப் பற்றி ஒரு வரிகூட டாக்டர் குறிப்பிடாததற்கு கனகா ரசிகர் மன்றத்தின் உச்சப்பரம்பு மேடு கிளை சார்பாக கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
தெரிந்த, தெரியாத பாடல்கள், தெரிந்த, தெரியாத ராகங்கள், திரையிசை பற்றி தெரிந்த, தெரியாத தகவல்கள் என எல்லோரையும் கால இயந்திரத்தில் முன்பின்னாகப் பயணிக்க வைக்கும் மிக அருமையான சிறு புத்தகம் இது. கலைகளை ரசிக்க பயிற்சி தேவை. எனக்கு ராகம் எல்லாம் ஒண்ணும் தெரியாதுங்க.. நா நல்ல ரசிகன் என்று சொன்னால் பரவாயில்லை என்று ஏற்றுக்கொள்ளலாம்.
ஆனால், ஒரு கலையை ரசிப்பதற்கு அதைப் பற்றிய technical knowledge இடையூறாக இருக்கும் என்றும் சிலர் கூறுவதுண்டு. அது பெரிய அபத்தம் என்கிறார் டாக்டர் ராமானுஜம். கலையை அறிவியல்பூர்வமாக அணுகி அதன் தொழில்நுட்பங்களை அறிந்து கொண்டால், அக்கலையை மேலும் ரசிக்கவும், மேம்படுத்தவும் முடியும் என்று முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.
இசை குறித்த நுட்பங்களை அத்துறை சாராதோர் அறிந்துகொள்ள உதவும் நூல்கள் தமிழில் மிகவும் குறைவு. அக்குறையை இந்த நூல் போக்குகிறது. l