ஒரு சிறார் புனைவு கதையில் எவ்வளவு செய்திகளை அவர்களுக்கு சொல்ல முடியுமோ அதை சுவைபட, எளிமையாக, நெகிழ்வோடு சொல்லும் நூல்தான் “ஆர்.சி.சியில் அற்புதக் குழந்தைகள்”. நூலாசிரியர் கே.ராஜேந்திரன் அவர்களின் மலையாள அற்புதத்தை அழகு தமிழில் தந்துள்ளர் யூமா வாசுகி. இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள். 88 பக்கங்கள்தான். அந்த பக்கங்களில் ஒவ்வொன்றும் குழந்தைகளுக்குள் மனமாற்றத்தை நிச்சயம் உருவாக்கும்.
கதை கரு என்னவோ “குருதி கொடை”தான்… ஆனால் அந்த நற்சிந்தனையை அறிவியற்பூர்வமாக அழகிய மலர்மாலையாக தொடுத்துள்ளார் நூலாசிரியர். தானத்தில் சிறந்தது இரத்த தானம் எனும் விதையை இளந்தளிர்களின் மனதில் ஆழப்பதிக்க வேண்டும்.. அதோடு மனித நேயம், நோயுற்றவர்களுக்கு உதவுதல், விசாலப் பார்வை கொள்ளுதல், நூல்கள் வாசித்தல், நூலகம் செல்லுதல், நட்பு எனும் மகத்துவத்தைப் புரிதல், மூடநம்பிக்கை ஒழிப்பை, எதையும் நேர்மறையோடு அணுகுதல் என இந்த 88 பக்கத்தில் சிறார்களுக்கு கடத்துகிறார்.
புது சமூகம் மலர்ச்சி பெற குழந்தைகள் தான் அடிப்படை சக்தி என்பதை முழுமையாக உணர்ந்து நூல் வந்துள்ளது. உதாரணமாக சமகால சிறார்கள் காந்தியை பற்றி தெரிந்து கொள்வது அவசியம் என்பதால் ஓர் அத்தியாயம். அறிவுக்கும் அழகுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை மிக அழுத்தமாக நூல் பேசுகிறது. அரசு மருத்துவமனைகளின் சேவை, குருதிக் கொடைக்கு மதம் தடையல்ல, ‘கூடி வாழ்ந்தால் கோடி’ நன்மை எனும் பல அறம் சார்ந்த செய்திகள் மட்டுமல்ல, தீமை செய்தவர்க்கும் நன்மை செய்வது எனும் பெரும் விசயத்தை மிக அற்புதமாக, எதார்த்தமாக சொல்லியுள்ளார்.
குருதி எத்தனை வகை? குருதிக் கொடையின் அவசியம், மதம் கடந்த மனிதநேயம் என நூலில் சொல்லவேண்டிய விசயங்கள் ஏராளம் உண்டு, இடமே பத்தாது. ஆனாலும் ஒரு சில மட்டும்
1 நோய்களுக்கு சாதி, மத வித்தியாசம் இல்லை, ஏழைகளுக்கு வரும் நோய் பணக்காரர்களுக்கும் வரும். 2 படித்தால் விளைவோம்; படிக்காவிட்டால் வளைவோம். 3 கோவிந்தன், சித்திக், ஜோசப் என மூவரும் அளிக்கும் குருதிக் கொடை
நிறைவாக கடைசிப் பக்கத்தில்
ரத்தத்தில் மதம் இல்லை
ரத்தத்தில் சாதி இல்லை
எங்களிடம் இல்லை சாதி, மதங்கள்
எங்கள் ரத்தத்துக்கு ஒரே நிறம்தான்.
எவ்வளவு அருமையான மனித வாழ்வை வாழவேண்டும் என்பதை சொல்லும் உன்னதப் படைப்பு. l
previous post