‘சோசோவின் விசித்திர வாழ்க்கை’ எனும் அழகான சிறு புத்தகம் …ஒரு ஒன்பது அத்தியாயங்களில் ஒவ்வொரு சிறார்களுக்கான நற்சிந்தனையை கடத்துகிறார். ஒரே நாயகன் ஆனால் ஒவ்வொரு கதையிலும் வெவ்வேறு பரிமாணங்கள். அடுத்தவர் பொருளை களவாடுவது தீய பழக்கமே என்று தொடங்கி இயற்கையின் மீதான அன்பு, காதல், பற்று அவசியம் என்பதை உணர்த்தும் கதை வரை எல்லாமே மெல்லிய இறகால் வருடும் அறம் சொல்லும் ஒரு பாணி. சிறார் எழுத்தாளர் உதயசங்கருக்கு இது கை வந்த கலை.
எதையும் கேள்வி கேள் எனும் தத்துவத்தை மிக அழகாக கையாண்டுள்ளார், சோசோ பள்ளிக்கூடம் செல்கிறான் கதையில்.
பூக்களுக்கு எப்படி கலர் வந்தது? என வினவுகிறான் சோசோ. ஆசிரியர் கடவுள் கொடுத்தது என பதிலளிக்கிறார்.
எந்தக் கடவுள் கொடுத்தார்? யேசுவா? அல்லாவா? பிள்ளையாரா? என சிக்சர் கேள்வியை சோசோ மீண்டும் கேட்க… புத்தகத்தைப் படிக்கும் சிறார்கள் நிச்சயமாக யோசிப்பார்கள்தானே? இயற்கையை ஆண்டவனே படைத்தான் எனும் கருத்தை உடைக்குமல்லவா?
அடுத்த கதை இயற்கையை பற்றிய புரிதல் உருவாக்கும் சோசோவின் வனம்… அதில் ஓர் இடத்தில் அவனின் அண்ணன் ஒரு கேள்வி கேட்க… இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமானதில்லை… என மிக மிக அவசியமான விசயத்தை சிறார்களுக்கு சொல்கிறார்.
சோசோ ஏமாந்து விட்டான் கதையில் கிழிந்த சட்டையோடு வந்த ஒருவன் ரோல் துப்பாக்கியை தூக்கிக் கொண்டு ஓடிவிடுவான்… முதலில் அவன் மீது கோபம் கொள்ளும் சோசோ அவனின் நிலை குறித்து யோசித்து மகிழ்ச்சியாக விட்டுக் கொடுப்பான். விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுபோவதில்லை எனும் நல்ல சிந்தனையை மிக லாவகமாக சொல்கிறார்.
இன்னொரு கதையில் மக்களை ஏமாற்ற வேண்டும் என்றால் காவி உடையணிந்து சாமியாராக மாறுகிறான் சோசோ… எவ்வளவு பெரிய விசயம்… எத்தனை பெரிய வேலை பாருங்கள்… வாழ்க்கை ஒரு பயணம் கதையில் குழந்தைகளுக்குள் போட்டி எனும் சூழலில் ஓர் இடத்தில் போட்டியிட்டால்தான் டாக்டர், என்ஜினீயர், கலெக்டர் ஆக முடியும்… போட்டியே போட முடியாதவர்கள் பற்றி யோசிக்க வேண்டாமா? இந்த நூலின் அறம் கடத்தும் செய்திகளில் உச்சமே இதுதான் என சொல்வேன். இப்படி இளம் தளிர்களின் வாழ்க்கை சிந்தனைக்கு வாழ்வியல் அறம் சொல்லும் இதைப் பல நூறு குழந்தைகளிடம் கொண்டு செல்வோம். l
previous post