நேர்காணல்:
இராஜேஸ்வரி கோதண்டம
சந்திப்பு : நந்தன் கனகராஜ்
பெண்கள் எழுதுவதும் சமூக செயல்பாடுகளில் ஈடுபடுவதும், வினையாற்றுவதும்… இன்னுமே கூட வீடுகளில் இருந்து கட்டி நீட்டிக்கப்பட்ட கயிறுகளின் நீளச் சுதந்திரம் வரை மட்டுமேயுள்ளது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
சங்க இலக்கியங்களில் எழுதிப் போன பெண்களின் மரபுத்தொடர் அறுந்து, மீண்டும் காத்திரமான பெண்ணெழுத்துகள் முகிழ்ந்தெழ இருபதாம் நூற்றாண்டின் கடைசி இருபது ஆண்டுகள் வரை ஆனதையும் சொல்லவே வேண்டும். சமூக நடப்புகளை உள்வாங்கி, குடும்ப அமைப்பைப் பாதுகாத்து, உடலியல் காரணங்களைக் கடந்து தன் நேரத்தை வாசிப்பதற்கும், எழுதுவதற்கும் பெண்கள் கட்டமைப்பு செய்து கொள்வதற்கு பல்வேறு நுட்பங்களை கைக்கொள்ள வேண்டியதிருக்கிறது அத்தனை அக புற காரணங்களையும் தாண்டி பெண்கள் எழுதும் போது எழும் புத்தம் புது அலைகள் முக்கியமானவை.
பல்வேறு புற சிக்கல்கள் நிறைந்த காலத்தில், தன் தீவிரமான வாசிப்பு பிற மொழிகளைக் கற்றறிந்த ஞானம் என்பதிலிருந்து தனது இலக்கிய பயணத்தைத் தொடங்கியவர், எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான திருமதி ராஜேஸ்வரி கோதண்டம் அவர்கள். தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். சாகித்ய அகாதமிக்காக பல்வேறு நூல்களை மொழிபெயர்ப்பு செய்து தந்துள்ளார். கவிதை, நாவல் சிறுகதை, கட்டுரை, சிறார் இலக்கியம் ஆகிய இலக்கிய வகைமைகளில் பல நூல்களை எழுதியுள்ளார். மொழிபெயர்ப்புக்காக தமிழக அரசின் ஜி.யு.போப் விருது பெற்றவர். மேலும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் விருது, நெய்வேலி புத்தகக் கண்காட்சியின் சிறந்த எழுத்தாளர் விருது,நல்லி திசையெட்டும் மொழியாக்க விருது… உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.
உங்கள் இளமைக்காலம் குறித்துச் சொல்லுங்களேன்.
நான் பிறந்தது விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம். எனது அப்பா ராணுவத்தில் பணியில் இருந்தார். திடீர் உடல் நலமின்மையால் இரண்டு வயதில் அப்பா இறந்து விட்டார். எனவே தாய் மாமாவின் ஊரான பட்டுக்கோட்டைக்கு நானும் அம்மாவும் குடி பெயர்ந்தோம். என்னுடைய ஆரம்பக் கல்வியை அங்கு தான் படித்தேன். மாமா வணிகத்தில் ஈடுபட்டிருந்தார். அவரது வணிகம் பல்வேறு சூழ்நிலைகளால் நஷ்டத்திற்கு உள்ளாக நேர்ந்ததால், நானும் அம்மாவும் ராஜபாளையத்திற்கே திரும்பி வரும் நிலைமை ஏற்பட்டது. தஞ்சாவூரிலும், பட்டுக்கோட்டை ஊரிலுமாக சிலகாலம் இருந்தோம். தஞ்சையில் இருந்தபோது சரஸ்வதி மஹால் நூலகத்தைப் பார்த்த ஞாபகம் இன்னும் எனது நினைவில் பசுமையாக உள்ளது.
ராஜபாளையத்தில் தங்களது பள்ளிக்கால நினைவுகள்…
எனது ஆறாம் வகுப்பிற்காக ராஜபாளையத்தில் உள்ள ஏ.கே.டி.ஆர். பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்டேன் வகுப்புகளில் கூர்ந்து கவனிப்பதும் ஆசிரியர்களின் கேள்விகளுக்கு உடனடியாக பதில் சொல்வதுமாக எப்போதும் துறுதுறு வென இருப்பேன். எனது ஆசிரியர்கள் கோமதி மற்றும் பிச்சம்மாள் ஆகிய இருவரும் படிப்பு, விளையாட்டு என இரண்டிலும் என்னை ஊக்கப்படுத்தினார்கள். தமிழ் ஆங்கிலம், கணிதம், உள்ளிட்ட பாடங்களிலும், விளையாட்டுப் போட்டிகளிலும் மிகச் சிறப்பாக எனது திறமைகள் வெளிப்பட்டன. வகுப்பில் முதல் மாணவியாக தேர்ச்சி பெறுவேன். ஆறாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை பாடப் புத்தகங்களோடு கூர்மையாக சிந்திக்கும் ஆற்றலையும் வளர்த்துக் கொண்ட காலமாக அன்றைய நாட்கள் அமைந்திருந்தது.
வாசிப்பு எழுத்தின் மீதான ஆர்வம் எப்படி வந்தது?
பத்தாம் வகுப்பு படிப்பு முடிந்ததும் என்னுடைய அம்மாவின் மரணம் நிகழ்ந்தது. மேற்படிப்புக்கு செல்லும் சூழல் அமையவில்லை. 1966 ஆம் ஆண்டு, எனக்கு திருமணம் நடைபெற்றது. ஏற்கெனவே பள்ளிக்கூடத் தமிழ் வகுப்புகளில் செய்யுள்கள், இலக்கியங்கள் மீது ஆர்வம் இருந்தது. எனது இணையர்
திரு கொ.மா. கோதண்டம் அவர்கள் “தெலுங்கு வித்யாலயம்” என்ற பெயரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தெலுங்கு மொழி பயிற்சி வகுப்புகளை நடத்தி வந்தார். கூடவே “திருக்குறள் சிறார் பயிற்சி கழகம்” என்ற பெயரில் மாலை நேர திருக்குறள் வகுப்புகளையும் பயிற்றுவித்துக் கொண்டிருந்தார். நிறைய பெண்களும் குழந்தைகளும் அந்த வகுப்புகளில் கற்றுக் கொண்டிருந்தார்கள். அவருக்குத் துணையாக என்னையும் அப்பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டேன். அவர் அப்போதே பத்திரிகைகளுக்கு சிறுகதைகள் அனுப்பி கொண்டிருந்தார். என்னுடைய அழகான கையெழுத்தில், நான் அவற்றை எழுதிக் கொடுப்பேன். அவற்றை எல்லாம் வாசிக்கும் ஆர்வத்தில் எனக்கும் வாசிப்பில் ஆர்வம் ஏற்பட்டது. அப்படியாக எனது இலக்கியப் பயணமும் தொடங்கிற்று.
அன்றைய நாட்களில் குடும்ப அமைப்புக்கு உள்ளிருந்து கொண்டே, பெண்கள் இலக்கியம் சார்ந்து எழுதவும், அமைப்பாகச் செயல்படவும், பெரும் தயக்கமும், தடையும் இருந்ததை மீறி எவ்வாறு உங்களைத்தகவமைத்துக் கொள்ள முடிந்தது?
அரசியல் ரீதியாகவும், ஆன்மீக கலாச்சார ரீதியாகவும் எங்கள் ஊரில் நிறைய சொற்பொழிவுகளும், இலக்கிய உரையாடல்களும் நடந்து கொண்டே இருக்கும். எங்கள் ஊரைச் சார்ந்த பன்மொழிப் புலவர் திரு.மு.கு.ஜகந்நாதராஜா அவர்கள் அந்த நாட்களில் தீவிர இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்தார். எனது கணவரும் தொடர்ந்து படைப்பிலக்கியத்தில் செயல்பட்டு வந்தார். இருவரும் இணைந்து மணிமேகலை மன்றம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் முதலான அமைப்புகளைத் துவக்கி இலக்கிய நிகழ்வுகளை நடத்த ஆரம்பித்தார்கள். அந்த நிகழ்வுகளின் பொருட்டு தமிழகத்தின் முன்னணி இலக்கியவாதிகள், தமிழ்ச் சான்றோர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள் பலரும் எங்கள் இல்லத்திற்கு வந்து தங்கிச் செல்வது உண்டு. அப்போது அவர்கள் நடத்தும் உரையாடல்கள், விவாதங்களை நான் கேட்டுக் கொண்டிருப்பேன். அதன் வழியாக எனது இலக்கிய ஆர்வம் மேலும் அதிகரிக்கவே செய்தது. ஒருபுறம் எனது சிறு குழந்தைகள், அன்றாட வீட்டு வேலைகள்… என நெருக்கடிகள் இருந்தாலும் இலக்கிய உரைகளைக் கேட்க கூட்டங்களுக்கும் தவறாமல் செல்வேன்.
தங்களது இல்லத்திற்கு வந்து சென்ற அறிஞர்களைப் பற்றி சொல்ல முடியுமா?
நிச்சயமாக. ருஷ்ய நாட்டு தமிழறிஞர் வித்தாலி பூர்ணிகா, தீபம் நா.பார்த்தசாரதி, சிலம்பொலி செல்லப்பன், நா.வானமாமலை, திருக்குறள் முனுசாமி, அமுதசுரபி விக்ரமன், தி.க.சிவசங்கரன், பொன்னீலன், வல்லிக்கண்ணன், மறைமலை அடிகள் புதல்வர் மறை. திருநாவுக்கரசு, ராஜம் கிருஷ்ணன், இலங்கை எழுத்தாளர் டொமினிக் ஜீவா இதுபோன்ற எண்ணற்ற அறிஞர்கள் வந்து போயிருக்கிறார்கள் அவர்களோடு இலக்கிய உரையாடல் நிகழ்ந்த நாட்கள் அத்தனை உணர்வு பூர்வமானவை.
உங்களுடைய இலக்கியப் பயணம் குறித்துப் பேசும் போதே, உங்களது இணையர் ஐயா கொ.மா.கோதண்டம் அவர்களது இலக்கியப் பயணத்தையும்… குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் அதைப் பற்றியும் கொஞ்சம் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
எனது கணவர் திரு கொ.மா.கோதண்டம் அவர்களுக்கு வறுமையான குடும்பச் சூழல் காரணமாக, ஐந்தாம் வகுப்பிற்கு மேல் படிக்க வசதி இல்லை. ஆனாலும், படிக்க வேண்டுமென்ற வைராக்கியத்தோடு நூலகங்களுக்குச் சென்று, தனது இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்டார். பன்மொழிப் புலவர் திரு.மு.கு.ஜகந்நாத ராஜா அவர்களோடு கிடைக்கப்பெற்ற நட்பால், இலக்கியத் துறையில் மிகத் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தவர். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, சிறார் இலக்கியம், மொழிபெயர்ப்பு எனப் பல வகைமைகளிலும் நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி இருக்கிறார். மத்திய அரசின் பால சாகித்ய புரஸ்கார், மற்றும் மாநில அரசின் இலக்கிய மாமணி, கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றிருக்கிறார். மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மலைவாழ் மக்கள் பற்றிய அவரது சிறுகதைகளும் நாவல்களும் முக்கியமானவை.
உங்களது எழுத்துப் பயணம் எப்போதிருந்து தொடங்கியது?
1968 இல் “நாட்டுப்புறப் பாடல்கள்” என்ற எனது படைப்பு தாமரை இதழில் பிரசுரமானது. தொடர்ந்து அமுதசுரபி இதழில் சிறுகதைகள் வெளியானது. எனது ஆர்வத்தையும், அக்கறையையும் பார்த்த எனது கணவரும்,
திரு மு.கு.ஜெகநாத ராஜா அவர்களும் தெலுங்கு மொழி புத்தகத்தைத் தந்து மொழிபெயர்த்து தரும்படி கேட்டுக் கொண்டார்கள். இப்படித்தான் எனது இலக்கியப் பயணம் நிகழ்ந்தது.
தமிழும் தெலுங்கும் வீட்டில் பேசப்படும் மொழிகள் என்பதைத் தாண்டி பிற மொழிகளைக் கற்றுக் கொள்ளும் ஆர்வம் எப்படி ஏற்பட்டது?
பள்ளிக்கூட நாட்களிலேயே இந்தி மொழியைக் கொஞ்சம் கற்றிருந்தேன். திருமணமான புதிதில், எனது கணவர் நடத்திய தெலுங்கு வகுப்புகளிலும், மீண்டும் இந்தி பயிற்சிக்கும் சென்று முழுமையாகப் படித்துக் கொண்டேன். ஒருமுறை கோட்டயம் புத்தகத் திருவிழாவிற்கு, எனது கணவரோடு சென்று வரும் வாய்ப்பு கிட்டியது. அதைத் தொடர்ந்து நாங்கள் ராஜபாளையத்தில் நடத்திய மணிமேகலை மன்ற விழாவிற்கு மலையாளத்திலிருந்து எழுத்தாளர்கள் வந்து கலந்து கொண்டார்கள். எனவே மலையாளத்தையும் அந்த சமயத்தில் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். இது எல்லாவற்றுக்கும் முன்பே சமஸ்கிருதமும் கற்றுத் தேர்ச்சி பெற்றிருந்தேன்.
இலக்கிய அமைப்புகளின் செயல்பாடுகளில் பங்கு பெற்றிருக்கிறீர்கள். இயக்கங்களையும் நடத்தி இருக்கிறீர்கள். அதன் மூலமாக நடந்த மாற்றங்கள், அனுபவங்கள்…
“வாசுகி மாதர் சங்கம்”, “கோகுலம் சிறுவர் சங்கம்” “அழ.வள்ளியப்பா மணிமலர் மன்றம்” முதலான அமைப்புகளை ஏற்படுத்தி எங்கள் வீட்டில் வாரந்தோறும் நிகழ்வுகளை நடத்திக் கொண்டே இருப்போம். எங்கள் பகுதியில் உள்ள பெண்கள் பள்ளிக் குழந்தைகள், சிறுவர்கள் எல்லோரும் ஆர்வமாக கற்றுக் கொள்ள வருவார்கள். வாசுகி மாதர் சங்கத்தின் முதலாம் ஆண்டு விழாவில் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் கலந்து கொண்டார். திருச்சி, மதுரை வானொலி நிலையங்களின் நிகழ்ச்சிகளுக்காக நிறைய குழந்தைகளைத் தயார் படுத்தி பேச்சு, நாடகம், கதை சொல்லுதல் எனப் பங்கேற்க வைப்போம். வானொலி நிகழ்வுகளில் மாதந் தோறும் எங்களுடைய படைப்பாற்றலை வெளிப்படுத்துவதோடல்லாமல், பெண்களையும், குழந்தைகளையும் ஈடுபடுத்தி பங்கேற்க வைப்போம். வானொலி நிலையத்தில் பணியாற்றிய திரு.இளசை சுந்தரம் அவர்கள், பல்வேறு வகையிலும் எங்களுக்கு உறுதுணையாக இருந்தார். இப்போது நினைக்கும் போது, அன்றைய நாட்களின் இன்பமயமான நினைவுகளால் மனம் நெகிழ்கிறது. இப்படி எத்தனை எத்தனையோ நிகழ்வுகள்.
இளம் வயதில் பக்தி இலக்கியங்களை வாசித்தும், சமய சொற்பொழிவுகளைக் கேட்டும் வளர்ந்த சூழலில்… முற்போக்கு இயக்கங்களோடு ஈடுபாடும் அவ்வாறான மொழிபெயர்ப்புகளுக்குள்ளும் இயங்கியிருக்கிறீர்கள். எப்படி இதைச் சாத்தியப்படுத்திக் கொண்டீர்கள்?
என்னுடைய இளம் வயதிலும், பள்ளிக்கூட நாட்களிலும், அவ்வாறான சூழல் இருந்தது. பின்னர் திருமணமான புதிதில் எனது கணவரின் இலக்கியச் செயல்பாடுகள், அவரது தோழமை நட்புகளின் வழியாக முற்போக்கு இலக்கியங்களும் அறிமுகமானது. கம்பராமாயணம், கைவல்ய நவநீதம், மணிமேகலை, நாலாயிர திவ்ய பிரபந்தம், தேவாரம், திருவாசகம்… முதலியவற்றில் எனக்கு ஆழமான வாசிப்பு இருந்தது. பின் நாட்களில் எனது கணவர் மூலம் அறிமுகமான முற்போக்கு இலக்கியங்கள், எனது வாசிப்பிலும், எழுத்திலும் ஆர்வத்தைக் கூட்டியது. எழுத்தாளர்கள் பொன்னீலன், தனுஷ்கோடி ராமசாமி முதலானவர்களோடு எனது கணவர் த.க.இ.பெருமன்ற அமைப்பின் கிளையை, எங்கள் ஊரில் துவக்கி நடத்தத் தொடங்கினார். அதன் மூலமாகவும் எனக்கு இது சாத்தியமானது. அன்றைய நாட்களில் தமிழில் முக்கியமான திறனாய்வாளர்களாகவும், பேராசிரியர்களாகவும் இருந்த ந.வானமாமலை, நா.முத்துமோகன், ஆ.சிவசுப்பிரமணியன், தோதாத்திரி ஆகியோரோடு நாங்கள் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று இருக்கிறோம். இலங்கையிலிருந்து “மல்லிகை” என்ற இதழை நடத்திய, டொமினிக் ஜீவா மற்றும் காவலூர் ஜெகநாதன் முதலான எழுத்தாளர்களும் எங்கள் வீட்டிற்கு வருவதும், எங்களது நிகழ்வுகளில் பங்கேற்பதுமாக இருந்தனர். எதையும் ஆழமாக கற்க வேண்டும். வெறுப்பு இலக்கியத்தையும் நச்சு இலக்கியத்தையும், இனங்கண்டு ஒதுக்க வேண்டும். படைப்புகளில் உள்ள நல்ல விஷயங்களையும், சிந்தனைகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே, எனது அடிப்படை பண்பாகவும் இருந்தது.
சாகித்ய அகாதெமிக்காக புத்தகங்களை மொழிபெயர்ப்பு செய்துள்ளீர்கள். அப்படைப்புகள் குறித்த உங்களது பார்வைகள்.
தெலுங்கு மொழியின் முக்கியமான கவிஞர் வேமனரின் பாடல்களை “வேமண பதிகங்கள்” என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளேன். அதனைத் தொடர்ந்து சாகித்ய அகாதெமி நிறுவனத்திற்காக எழுத்தாளர் “பலிவாட காந்தாராவ்” அவர்களது சிறுகதைகளைத் தொகுத்து “கற்சிலைகள்” எனத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டிருக்கிறேன். தெலுங்கில் சாகித்ய அகாதெமி விருது பெற்ற திரு.பி.கணபதி சாஸ்திரி எழுதிய
“ஸ்ரீ ராமானுஜரை” கதாபாத்திரமாகக் கொண்ட புரட்சிப் படைப்பான காவியத்தை, “கருணை விழிகள்” என்ற தலைப்பில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டு இருக்கிறேன்.
மொழிபெயர்ப்பில், உங்களது பிற ஆக்கங்கள் குறித்து…
இந்தி மொழி. கவிஞர் திரு.ஆஸாவரி காகடேவின் கவிதைகளை “நடுவேயுள்ள தொலைவு” என்ற தலைப்பிலும், திருமதி. சீலா சுபத்ராதேவி தெலுங்கில் எழுதியுள்ள நெடுங் கவிதையை “உள்ளக்குமுறல்” என்ற தலைப்பிலும், தமிழில் தொகுத்து புத்தகங்களாக வெளியிட்டுள்ளேன். குறிப்பாக “உள்ளக்குமுறல்” என்ற நெடுங்கவிதை நூல், ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்கா இடையே நடந்த யுத்தத்தின் அவலங்களைச் சித்தரிக்கும் நீள் கவிதையாகும்.
தெலுங்கில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட, உங்களது நூல்கள் “மைனா”, “சாம்பய்யா” போன்ற நாவல்களும், “பால்மடி” “மசூதிப் புறா” முதலான சிறுகதை நூல்களும் நல்ல கவனம் பெற்றவை. அம்மொழிபெயர்ப்பு அனுபவங்களைக் கூற முடியுமா?
தெலுங்கு எழுத்தாளர் திரு.சிலார் வீரராஜு எழுதி சாகித்ய அகாடமி விருது பெற்ற “மைனா” நாவல், மியான்மர் நாட்டிற்கு வியாபார நிமித்தம் செல்லும் ஒருவனுடைய அவலங்களைச் சொல்லும் கதை.
அதைப்போலவே திரு.வாசிரெட்டி சீதாதேவி எழுதியுள்ள நாவல் “சாம்பய்யா”. அவர் தெலுங்கின் புரட்சிகர எழுத்தாளர். தன்னுடைய படைப்புகளுக்காகத் தடை செய்யப்பட்டவர். தெலுங்கின் பல முன்னணி எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு தொகுப்புகள் பால்மடி மற்றும் மசூதிப் புறா ஆகியவை.
சுதந்திரப் போராட்ட காலத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒரு குடும்பத்தில் பிறந்த இரு ஆண் பிள்ளைகளின் வேறுபட்ட குணநலன்கள், கொள்கைகளை எடுத்துச் சொல்லும் நாவலாக திரு.கமலேஷ்வர் இந்தியில் எழுதியுள்ள புதினத்தை “அம்மா” என தமிழுக்கு அறிமுகம் செய்து வெளியிட்டிருக்கிறேன். நிச்சயம் வாசிக்க வேண்டிய நூல்.
ஐம்பது ஆண்டுகளுக்கும் முன்பே சிறார்களுக்காக அமைப்பை ஏற்படுத்தி நடத்தியிருக்கிறீர்கள். உங்களது கணவரும், அதைப் போலவே… புதல்வர்,
திரு.கொ.மா.கோ. இளங்கோவும் சிறார் இலக்கியத்தில் நிறைய படைப்புகளை எழுதியுள்ளார்கள். உங்களது சிறார் நூல்கள் மற்றும் மொழிபெயர்ப்பு நூல்கள் என்னென்ன?
நல்ல சிந்தனைகளோடு வளரும் தலைமுறையினரே, நம் நாட்டின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமான அடித்தளம். அதனாலேயே நாங்கள் குடும்பமாக, அதில் கவனம் செலுத்தினோம். சிறார்கள் மட்டுமல்லாது, அவர்களது பெற்றோர்களையும் நாங்கள் நடத்திய நிகழ்வுகளில் பங்கேற்கச் செய்தோம். அதன் மூலமாக நிறைய பெற்றோர்களை வாசிக்கவும், எழுதவும் ஊக்கப்படுத்தினோம்.
இந்தியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட சிறுவர் கதைகள் “அப்பாவின் கடிதம்” என்ற நூலாக உருவானது. அறிவியல் கருத்துக்களையும், அறிஞர்களையும் குழந்தைகளிடம் அறிமுகம் செய்யும் நோக்கில் “அம்மு உனக்காக”, “அம்முவிற்கு” என்ற இரு நூல்களையும் எழுதியுள்ளேன். கர்மவீரர் காமராசரின் வரலாற்றைக் குழந்தைகளுக்குச் சொல்லும் விதமாக “குழந்தைகளே உங்களுக்காக காமராஜர்” என்ற நூலும் வெளியாகி உள்ளது.
உங்களுடைய சமீபத்திய மொழிபெயர்ப்பான “பேம்பி” நாவல் வன உயிர்களைப் பற்றிய சிறப்பு கொண்டது. பரவலான வாசக கவனமும் பெற்றது. அதை மொழிபெயர்க்கும் எண்ணம் எப்படி ஏற்பட்டது?
ஆம். “பேம்பி” மிக முக்கியமான நல்ல நூல். 1924 இல் “பெலிக்ஸ் சால்டன்” என்பவரால், ஆஸ்திரிய மொழியில் எழுதி வெளியிடப்பட்ட நாவல். திரு.நளின மோகனராவ் அவர்களது, தெலுங்கு மூலத்திலிருந்து, தமிழுக்கு நான் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறேன். கானுயிர்களைக் கதை மாந்தர்களாகக் கொண்ட நூல். “பேம்பி கப்” என விளையாட்டிலும், “பேம்பி பாலம்” என்ற பெயரில் வெளிநாட்டில் இடங்களும் உள்ளது இந்த நூலின் சிறப்பம்சங்களாகும்.
மொழிபெயர்க்கும் பணியில் நீங்கள் சவாலாக நினைக்கும் அம்சங்கள் என்ன.
நம் அன்றாட வாழ்வில் ஒவ்வொரு விஷயங்களும் நமக்கு சவால் தான். ஆனால் ஒவ்வொன்றையும் நாம் எவ்விதம் அணுகுகிறோம், என்பதை பொறுத்தே, அதன் தன்மை ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது. நான் ஏற்கெனவே சொன்னது மாதிரி, எதையும் ஆழமாக கற்க வேண்டும்.எதைத் தொடங்கும் போதும் முழு ஈடுபாட்டோடு தொடங்க வேண்டும். இலக்கியத்தில் மேன்மைகளும் கீழ்மைகளும் பல்வேறு விதங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.
நாம் நல்ல விஷயங்களையே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதையே நான் அளவீடாகக் கொண்டிருக்கிறேன். நமது எழுத்து இச்சமூகத்தில் ஒருவருக்கு வாசிக்க கிடைக்கும் போது, அது நிச்சயம் அவரை நல்ல விதமாக சிறிது தூரம் கொண்டு சென்று விட வேண்டும் என்பதையும் நான் எப்போதும் எனது சிந்தனையில் வைத்திருக்கிறேன். அந்த வகையிலேயே படைப்புகளை அணுகுகிறேன், மொழிபெயர்ப்பும் செய்கிறேன். எனவே எடுத்துக் கொள்ளும் படைப்பை நேர்மையாக அணுகுவது, அதை நேர்மையாக இன்னுமொரு பிரதி செய்து தருவது இதையே கடமையாகவும் கொண்டிருக்கிறேன்.
உங்களுக்குப் பிடித்த தமிழ் எழுத்தாளர்கள்.
அந்தப் பட்டியல் மிகப்பெரியது. இருந்தாலும்….என்னுடைய தற்போதைய நினைவில் இருந்து சொல்ல முயற்சிக்கிறேன். எழுத்தாளர்கள் லஷ்மி, சிவசங்கரி, வாஸந்தி, ராஜம் கிருஷ்ணன், நா.பார்த்தசாரதி, வல்லிக்கண்ணன், பொன்னீலன், தி.க.சிவசங்கரன், கலாப்ரியா, வண்ணதாசன், தனுஷ்கோடி ராமசாமி… ஆகியோரை இந்த சமயத்தில் சொல்ல முடிகிறது.
ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி இருக்கிறீர்கள். முக்கியமான விருதுகளையும் பெற்றுள்ளீர்கள். இளைய தலைமுறைக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்.
தமிழின் இலக்கிய வளம் நீண்ட நெடிய மரபு கொண்டது. நம்முடைய பழந்தமிழ் இலக்கியங்களையும், காப்பியங்களையும் ஆழமாக படிக்க வேண்டும். பிற மொழிகளில் எழுதப்பட்ட இலக்கியங்களையும் அடையாளம் கண்டு, தொடர்ந்து வாசிக்க வேண்டும். தொடர் வாசிப்பில் இருப்பவர்கள் எழுத முனைய வேண்டும். மகாகவி பாரதி தன்னுடைய காலத்தில் பல்வேறு மொழிகளை அறிந்திருந்தார். பல்வேறு புதிய முயற்சிகளைத் தன்னுடைய காலத்தில் நடத்திப் பார்த்தார்.
நாம் ஒவ்வொருவரும் நம்முடைய அன்றாடப் பணிகளுக்கு இடையே வாசிப்பதற்கும், எழுதுவதற்கும் நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும். நல்ல இலக்கிய உரைகளைக் கேட்க வேண்டும். ஆர்வமான இலக்கிய வகைமை ஒன்றில் தொடர்ந்து வாசிப்பதும், தொடர்ந்து பயிற்சி எடுத்துக் கொள்வதும் முக்கியம். இலக்கியம் மனிதனை மேம்படுத்தும் கருவி என்பதை நினைவில் கொள்ள வேண்டும். l
