வாச்சாத்தி என்னும் கிராமத்தில் மக்களுக்கு இழைக்கப்பட்ட வன்கொடுமைகள் தொடர்பான வழக்கில் இவர்களுக்கு எவ்வாறு நீதி கிடைத்தது. அங்குள்ள மக்களுக்கும் இளம் வயது பெண்களுக்கும் இழைக்கப்பட்ட வன்கொடுமைகள், இக்கொடுமைகள் நடந்த காலத்தில் யாருடைய ஆட்சி நடந்து கொண்டிருந்தது. வாச்சாத்தி கிராம மக்களுக்கு தீர்ப்பு கிடைப்பதற்காக யாரெல்லாம் பாடுபட்டனர், நீதி கிடைக்க இவர்களுக்கு எத்தனை ஆண்டு காலம் ஆயிற்று, அதற்கிடையில் எத்தனையோ ஆட்சி மாற்றம் செய்யப்பட்டாலும் இவர்களுக்கான நீதி கிடைத்த பின்பு. குற்றவாளிகளுக்கு எந்தச் சட்டத்தின் அடிப்படையில் தண்டணை வழங்கப்பெற்றது என்பதனை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் அவர்கள் அவரது வாச்சாத்தி வன்கொடுமை என்னும் புத்தகத்தில் பேசியுள்ளதைக் காணலாம்.
அது மட்டுமல்லாமல் அம்மக்களுக்காக எத்தனை பேர் ஆதரவாக இருந்தனர். எத்தனை நீதிபதிகள் யாருடைய ஆட்சிக் காலத்தில் இவர்களுக்கு இந்த கொடுமை நடந்தது இவர்கள் மீது என்ன குற்றம் சாட்டப்பட்டு இவர்கள் வன்கொடுமைக்கு ஆளானார்கள் இறுதியில் இவர்களின் இழப்புகள் அனைத்திற்கும் அரசாங்கம் நிதி வழங்கியதா, இவர்களுக்கான நீதி கிடைக்க இவர்களின் போராட்ட குணம், மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் மிகப் பெரும் பலம் இவர்களுக்கு ஆதரவாக இருந்ததைப் பற்றியும் இப்புத்தகத்தில் பேசியுள்ளார். தமிழ்நாடு மலைவாழ் மக்களின் பொதுச் செயலாளரான பெ . சண்முகம் அவர்கள் வாச்சாத்தி பற்றிய அனைத்து தகவல்களையும் இங்கே தொகுத்துக் கூறியுள்ளார்.
வாச்சாத்தி வழக்கின் தீர்ப்பு குறித்து உலகம் முழுவதும் பேசப்படுவதற்கான காரணம் சீருடைப் பணியில் உள்ளவர்களால் 1992 இல் அம்மக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல்கள்தான். சீருடைப் பணியில் உள்ளவர்கள் அதிக எண்ணிக்கையில் இதுவரை யாரும் தண்டிக்கப்பட்டதில்லை; வாச்சாத்தி வன்கொடுமையில் இளம் பெண்கள் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டனர், மேலும் நினைத்துப் பார்க்க இயலாத கொடுமைகள் அவர்களின் மீது அரங்கேற்றப்பட்டன.13 வயது சிறு குழந்தைக்கு என்ன நிகழக்கூடாதோ அவை எல்லாம் நடந்தது, கர்ப்பிணிப் பெண்களில் இருந்து குழந்தை பெற்ற பிஞ்சு உடம்புக்காரி வரை அனைத்து இளம் பெண்களும் சீருடைப் பணியில் உள்ளவர்களால் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டனர். எந்த ஒரு தவறுமே செய்யாத வாச்சாத்தி கிராம மக்கள் சந்தனமரக் கடத்தல் செய்ததாகக் கூறி அம்மக்கள் அனைவரும் கொடூரமாகத் தாக்கப்பட்டனர் அவர்களின் சொத்துக்கள் நில உடைமைகள் அனைத்தையும் அழித்து சூறையாடி உள்ளனர். இம் மக்களின் வளர்ப்புப் பிராணிகளான ஆடு கோழி அனைத்தையும் லாரியில் ஏற்றிச் சென்று சமைத்து சாப்பிட்டுள்ளனர். இம்மக்கள் மீது சந்தன மரக் கடத்தல் குற்றம் சாட்டப்பட்டு அவர்களை கடுமையாகத் தாக்கியுள்ளனர். வயல் வெளியில் ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த நபர்கள், ஒன்றுமே தெரியாத வீட்டுப் பெண்கள், சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்த பெண்கள், பள்ளிக்கு செல்லாமல் விடுமுறையில் வீட்டில் இருந்த 13 வயது சிறுமி வரை அனைவரையும் அவர்களின் தலைமுடியைப் பிடித்து இழுத்து ஊர்ப் பொதுவில் உள்ள ஆலமரத்தின் கீழ் அனைவரையும் ஒன்று சேர்த்து; அதில் இளம் பெண்களை எல்லாம் பொறுக்கி எடுத்து சந்தன மரக் கடத்தலை அடையாளம் காட்டுவதற்குக் கூட்டிச் செல்வதாக லாரியில் ஏற்றிச் சென்று ஏரிக்கரையோரம் பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளனர்.
பெ. சண்முகம் அவர்கள் ஒரு குழு அமைத்து ஜூலை 14ஆம் தேதி அந்த கிராமத்திற்குச் சென்று விசாரித்த பொழுதுதான் வாச்சாத்தியில்நடைபெற்ற கொடுமைகள் வெளி உலகத்திற்குத் தெரிய வந்தது. அதன்பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஏ.நல்லசிவன் அவர்கள் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதன் பிறகு தான் இவ்வழக்கு நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளது. அம் மக்களுக்கு அதிக அளவு தன்னம்பிக்கையும் கொடுத்தது, அவர்களுக்கு போராடும் மனப்பான்மையைக் கொண்டு வந்ததும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர ஈடுபாடு என்றே கூறலாம். முதன் முதலில் இந்த வழக்கில் தான் பழங்குடி மக்களுக்கான பிரிவினை.எஸ்.சி,
எஸ்.டி. என்கிற பிரிவு முறையைக் கொண்டு வருகின்றனர். இதன் அடிப்படையில் இம்மக்களுக்கு தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்று இந்த வழக்கில் திருப்புமுனையாக இருந்த திருமதி பாமதி ஐஏஎஸ் அவர்கள் வாச்சாத்திக்கு சென்று நேரில் மக்களைச் சந்தித்து விசாரித்து அதன் பிறகு தான் இவர் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பியுள்ளார். சந்தன மரக் கடத்தலைத் தடுக்கிறோம் என்கிற பெயரில் இவ்வளவு கொடுமையும் நடந்துள்ளது இப்பிரச்சனை நடந்து கொண்டிருந்த நேரத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்றது.
அந்த ஆட்சியில் உள்ள அனைவரும் இப்பிரச்சனையை மூடி மறைக்கவே பார்த்தனர் அன்றைய சூழலில் நடந்த கொடுமைகள் அனைத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமல்படுத்தியது இதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் ஏ. நல்லசிவன் அவர்களை அதிமுக அரசனது கேவலப்படுத்தியது. அதிமுக அரசு விசாரிக்க கூட தயாராக இல்லாத நிலையில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் தோழர் பெ.சண்முகம் அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட முதல் பெண் நீதிபதி பத்மினி ஜேசுதுரை அன்றைய காலகட்டத்தில் பொதுநல வழக்குகளை கவனித்துக் கொண்டு வந்துள்ளார் ஆனால் அரசு பணியில் உள்ளவர்கள் இது போன்ற தவறுகளை செய்ய வாய்ப்புகள் இல்லை என்று மனுவை தள்ளுபடி செய்து விட்டார். பத்மினி அவர்களுக்கு மறைமுகமான மிரட்டல்களோ அல்லது வேறு
வழிகளில் ஏதேனும் தொந்தரவுகள் நடத்தப்பட்டிருக்கலாம்; இக்காலத்தில் இருந்த அதிமுக அரசால் கூட அவர் பொதுநல மனுவை விசாரிக்காமல் தள்ளுபடி செய்ய காரணமாக இருந்திருக்கலாம்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பொழுது வாச்சாத்தி வழக்கில் நடந்த மாற்றம்:
தி.மு.க ஆட்சி மாற்றத்திலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்காமல் பல கடுமையான பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டிருந்த குற்றவாளிகளை எந்தவிதமான நீதிமன்ற நடைமுறைகளைப் பற்றியும் கவலைப்படாமல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு அன்றைய திமுக தலைவர் மு.கருணாநிதி அவர்கள் விடுதலை செய்துள்ளார்.
நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையில் ஆறு பிரிவுகளுக்கு வழங்க வேண்டிய இடைக்கால நஷ்ட ஈடு தொகையாக 2,54,00,250 கேட்டும் நீண்ட போராட்டத்திற்கு பிறகு 1,24,00,600 ரூபாய் மட்டுமே மக்களுக்கு பெற்றுத் தரப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சட்டம் ஆதரவாக இருந்தாலும் அதை அமல்படுத்த விடமாட்டோம் என்ற முறையில் திமுக இருந்துள்ளதை காணப்படுகிறது. வாச்சாத்தி மக்களின் 20 ஆண்டுகால போராட்டம் என்றே கூறலாம்.
வாச்சாத்தி மக்களுக்கு தீர்ப்பு சாதகமாக வெளிவந்த பிறகு ஃப்ரன்ட்லைன் என்ற ஆங்கில பத்திரிகையின் சிறப்பு நிருபர் திரு துரைராஜ் அம் மக்களிடம் பெரும் எண்ணிக்கையிலான அரசாங்க அதிகாரிகளை எதிர்த்துப் போராடுவதற்கான தைரியம் உங்களுக்கு எப்படி வந்தது என்று கேட்கும்போது பறந்தாயி என்கிற பெண் இதோ “இந்த செங்கொடி தான் இந்த செங்கொடிதான்” எங்களின் போராட்டத்திற்கான உந்துவிசையாக இருந்தார்கள் என்பதை “செங்கொடி” என்ற ஒற்றைச் சொல்லில் எல்லாவற்றையும் சொல்லி வெளிப்படுத்தி விட்டனர். குற்றவாளிகள் சார்பில் 12 வழக்கறிஞர்கள் இருந்தாலும் வாச்சாத்தி மக்களுக்காக போராடுவதற்கு ஒரே ஒரு அரசு தரப்பு வக்கீல் மட்டுமே இருந்துள்ளார் அவரும் இம்மக்களுக்காக பல குறுக்கு விசாரணைகளையும் வாதங்களையும் எதிர்கொண்டார். எதிர் வக்கீல்களைளே பாராட்டும் அளவுக்கு இவ்வளவு திறமையா என்பது போல அவருடைய செயல்கள் அமைந்திருந்தன இவர்களின் அனைவரின் பங்கில்லாமல் இத் தீர்ப்பில்லை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இவர்களை அடுத்து இதில் முக்கியமான நபர் சி ஐ டி யு தலைவர் தோழர் அ சௌந்தரராஜன் பேருந்து நிலையங்களில் உண்டியல் குலுக்கி பல்லாயிரக்கணக்கான ரூபாய்களுக்கு பண்ட பாத்திரங்கள் வாங்கி வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அவர்களின் குடும்பத்திற்கும் வழங்கினார். அதிலிருந்து மீதம் ஐந்தாயிரம் ரூபாயை வழக்கு நிதியாக வழங்கினார்.
தமிழ்நாடு மலைவாழ் சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் அம்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி, அவர்களுக்கு நீதி கிடைப்பதற்காக அவர்கள் போராடிய விதம் அவர்களுக்கு உதவியாகவும் ஆதரவாகவும் இருந்த நபர்கள் எத்தனை குற்ற பிரிவுகளின் அடிப்படையில் தண்டனை வழங்கப்பட்டது என்பதும், இறுதியில் செங்கொடி மூலமே அவர்களுக்கு நீதி கிடைத்தது என்பதனைப் பற்றி அவர்களுடன் ஒன்றாகத் தங்கி அவர்களின் போராட்டங்களில் கலந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவாக பெ. சண்முகம் அவர்களும் உறு துணையாக இருந்து இறுதியில் எவ்வாறு நீதி கிடைத்தது என்பதை பற்றி தெளிவாக கூறியுள்ளார். இது மிகச் சிறந்த போராட்ட வரலாற்று ஆவணமாகும். l
previous post
