நாட்டார் சாமிகள் பற்றிய வாய் மொழிக் கதைகள் ஏராளம். அவற்றில் ஒரு கணிசமான பகுதி நா.வானமாமலை தொடங்கி பல்வேறு ஆய்வாளர்களால் எழுத்து மூலம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் நிறையக் கதைகள் பொது வெளியில் எளிய மக்களின் நினைவுக்கிடங்குகளில் சேகரமாகி அப்படியே உறைந்து போயிருக்கின்றன. சமீப காலமாக இளம் ஆய்வாளர்களின் கவனம், இந்த நாட்டார் இலக்கியங்களின் பால் திரும்பியுள்ளது மகிழ்ச்சிக்குரிய விஷயம். இந்த வகையில்,சமீபத்தில் வெளியாகியுள்ள ‘எழுத்தில் எங்க சாமிகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பு ஒரு முக்கியமான ஆவணம். மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் நாட்டுப்புறவியல், பண்பாட்டு ஆய்வுகள் துறையில் பணி செய்யும் தி.மரியதனராஜ் அவர்கள் 20 கதைகளைத் தொகுத்துத் தந்திருக்கிறார். இதில், முன்னோடிப் படைப்பாளியான ந.பிச்சமுர்த்தி தொடங்கி, கார்த்திக் புகழேந்தி வரை இருபது எழுத்தாளர்களின் கதைகள் அடங்கியுள்ளன.
நம் சிறுவயது முதல், அவரவர் ஊர்களின் பெருந்தெய்வங்களை விடவும் நமது மனங்களுக்கு நெருக்கமாக விளங்குபவை சனங்களின் சாமிகளே. காரணம், அவை உண்ணும் படையலும், பருகும் பானங்களும், அவற்றின் இருப்பிடங்களும், நடையுடை பாவனைகளும் எல்லாமும் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையில் இடம் பெற்றிருக்கும் விஷயங்களாகவே இருப்பதுதான். அவற்றின் புகழ் பாடும் நாட்டார் பாடல்களும், கதைகளும் அந்த மக்களின் இயல்பான பேச்சு மொழியி லேயே காலங்காலமாக வழங்கி வருபவையாக உள்ளன.
இந்த விஷயம்,மூத்த எழுத்தாளர்கள் ந.பிச்சமுர்த்தி, தொ.மு.சி.ரகுநாதன், நாஞ்சில்நாடன், அறிஞர் அண்ணா, பிரபஞ்சன், சி.எம்.முத்து, இமையம், கண்மணி குணசேகரன், கவுதம சித்தார்த்தன் தொடங்கி இன்றைய சமகால இளைய படைப்பாளிகளான சந்திரா, தேன்மொழி, கார்த்திகைப் பாண்டியன், மு.ஆனந்தன்,கார்த்திக் புகழேந்தி, என். ஸ்ரீராம், மயிலன் ஜி. சின்னப்பன், சாத்தன் குன்றன் வரை பத்தொன்பது எழுத்தாளர்களின் இருபது கதைகளாக வடிவங் கொண்டு வெளிப்பட்டுள்ளது. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதம். முத்தாலம்மன், மந்தையம்மன், காளியம்மன், கருப்பண்ணசாமி, புலைமாடன், புலைமாடத்தி, கன்னி, ஏழு கன்னிமார், ஓலையக்கா, பெருமாயி, வேடப்பர் – இப்படி நமது கிராமப்புறங்களில் சனங்களோடு சனங்களாய் மொட்டை வெய்யிலில் திறந்த வெளிகளில் பீடங்களில் நின்றும், அமர்ந்தும் அருள் பாலித்துக் கொண்டிருக்கும் நாட்டார் தெய்வங்களை மையமாகக் கொண்ட கதைகள். ஒரு வகையில், சனங்களின் சாமிகளின் கதைகள். சமீபகாலமாக சனாதனப் பாரதப் பெருமை பேசும் ஆதிக்க சக்திகளால் இந்தச் சாமிகள் அருள்மிகு ஸ்ரீ மகாதேவியர் அன்னபூரணி நாகபூஷணி அம்மன்களாக உருமாற்றமும், பெயர்கள் மாற்றங்களும் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் அவலங்களை நெஞ்சில் அறைவதைப் போல் இக்கதைகள் பதிவு செய்கின்றன.
மக்கள் மொழி, மரபுகள், பண்பாட்டுக் கூறுகள், வழிபாட்டுச் சடங்குகள், படையல் வகைகள், உயிர்ப்பலிகள், பின்னணிக் கதைகள் என ஒவ்வொரு கதையிலும் வெளிப்படும் உக்கிரங்களைப் பற்றி சும்மா ஒவ்வொரு வார்த்தை சொல்லிக் கொண்டு வந்தாலும் கூட ஏராளமான பக்கங்களுக்கு நாம் எழுத வேண்டி வரும். அவ்வளவு ஆற்றல்மிக்க மொழியில் இக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. படிக்கப்படிக்க நம் கனவுகளில் துண்டிக்கப்பட்ட கால்களுடன் இரத்தம் வழிய வந்து கன்னி, கைகளைக் கூப்பிக்கொண்டு இறைஞ்சுவாள். நமக்குப் புரியுமா என்பதே என் மனதில் எழும் கேள்வி. அனைவரும் வாசித்துப்பார்த்து மறுமொழி தேடுவோமாக. l
