தோழர் சீதாராம் யெச்சூரி. இதுவொரு பெயர் மட்டுமன்று. ஓர் அறிவார்ந்த ஆளுமையின் அடையாளம். சமூக மாற்றத்திற்கான போராட்டங்களில் தனது பன்முகத்திறனை முழுமையாக வெளிப்படுத்திய ஆச்சரியம் அவர். அறிவுக் கூர்மையோடும், இயக்கவியல் கண்ணோட்டத்தோடும் அனைத்தையும் கற்கும் திறமை மட்டுமல்ல, சாமானியர்களுக்கும் புரியும் வகையில் அவற்றை வெளிப்படுத்தும் அபாரமான ஆற்றலையும்கூட அவர் பெற்றிருந்தார். சாதாரண உரையாடலாக இருப்பினும், மேடைப் பேச்சுகளாக இருந்தாலும் அவரது பாணி அதுதான். பின்பற்றுவர்கள் மட்டுமல்லாது, மாற்றுக் கருத்து கொண்டவர்களும் கூட ஏற்றுக்கொள்ளும் வகையில் அவரது பேச்சுக்கள் அமையும். நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரைகள் மூலமாக அதை நாம் புரிந்து கொள்ள முடியும். நாடாளுமன்றத்தில் அவரது சிறந்த உரைகளில் சில…
அவைத் தலைவர் அவர்களே, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் பெருமைகளை நாம் பேசிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் நான் அது குறித்த சில விஷயங்களை நினைவுகூர விரும்புகிறேன். அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விடுதலைப் போராட்ட வீரர்களின் பெயர்கள் அந்த சிறைவாயிலில் எழுதி வைக்கப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். அந்த பட்டியலில் 80% பேர் கம்யூனிஸ்டுகள் என்பதை நான் பெருமையோடு கூறுவேன். 1921ல் அஹமதாபாத் மாநாட்டில் பூரண சுதந்திரம் எனும் முழக்கத்தை முதலாக முன்மொழிந்த மெளலான ஹஸ்ரத் மொகானியும், சுவாமி குமாரானந்தாவும் கம்யூனிசக் கொள்கைகள் வழி நின்றவர்கள். ஒரு முஸ்லிமும், இந்துவும் இணைந்துதான் பூரண விடுதலை முழக்கத்தை முன்வைத்தார்கள். இதுவே இந்தியாவின் அடையாளமாகும். 1942 வெள்ளையனே வெளியேறு போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, இந்தியாவில் இருந்த அதிகாரி பிரிட்டீஷ் அரசாங்கத்திற்கு அனுப்பிய கடிதத்தில் இந்திய கம்யூனிஸ்டுகள் பற்றி குறிப்பிட்டிருக்கிறார் எனில் அதன் மூலமாக விடுதலைப் போரில் எங்கள் பங்கை நீங்கள் புரிந்துகொள்ள முடியும் (அப்போது மணி அடிக்கப்படுகிறது). தலைவர் அவர்களே, இதே போல்தான் காந்தியின் சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு பிரிட்டிஷார் மணியடித்துக் கொண்டேயிருந்தார்கள். ஆனால் காந்தி நிறுத்தவேயில்லை. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைப்போலவே, வறுமையே வெளியேறு, மதவெறியே வெளியேறு என தேசத்திலிருந்து அவற்றை வெளியேற்றும்வரை கம்யூனிஸ்டுகளாகிய எங்களின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
மத்திய காலத்தில் ஐரோப்பாவில் யூதர்களையும், முஸ்லிம்களையும் கண்டறிவதற்காக பன்றி இறைச்சி சூப்பை கொடுத்து குடிக்கச் சொல்லி சோதனை செய்வார்கள். சூப்பை குடிக்காதவர்கள் ஒன்று யூதராகவோ அல்லது முஸ்லிமாகவோதான் இருப்பாரென முடிவு செய்யப்படுமாம். அதைப்போலவே நீங்கள் மாட்டிறைச்சியை வைத்து தேசபக்தர்கள் யார் என்பதை சோதித்துக் கொண்டுள்ளீர்கள். உலகிலேயே மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ள இந்தியாவில் அந்தத் தொழிலில் மட்டும் சுமார் ஐம்பது லட்சம் பேர் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களிடத்தும் இத்தகைய ‘பரிசோதனை’ மேற்கொள்ளப்படுமா..?
நீங்கள் பாரதமாதாவைப் பற்றி குறிப்பிடுகிறீர்கள். யார் உண்மையான பாரதமாதா? இந்துக்களையும், இஸ்லாமியர்களையும், கிறித்தவர்களையும், பார்சிகளையும், புத்த மதத்தினர் உள்ளிட்ட அனைவரையும் பெற்றெடுத்தவரே அந்தப் பாரதமாதா. ஒருபுறத்தில் இந்திய பாரதமாதாவை இந்துத்துவ பாரதமாதாவாக மாற்ற முயல்கிறீர்கள். மறுபுறத்தில் காந்தியும், திலகரும் முன்வைத்த ஜெய்ஹிந்த் முழக்கத்தையோ, பகத்சிங் முன்வைத்த இன்குலாப் ஜிந்தாபாத் முழக்கத்தையோ உங்களால் ஏற்றுக்கொள்ள்வும் மறுக்கிறீர்கள். அவர்களெல்லாம் உண்மையான தேசாபிமானிகள் இல்லையா. தேசாபிமானிக்கான உங்கள் வரையறைதான் என்ன?
அவையிலே ராமானுஜரைப் பற்றி குறிப்பிட்டீர்கள். ஆகவே நானும் அது குறித்த சில விவிரங்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். பக்தி இயக்கங்களை உருவாக்கியத்தில் ராமானுஜருக்கு ஒரு முக்கிய இடம் உள்ளது. கடவுள் விஷ்ணுவை முன்னிறுத்தி வைணவத்தை பரப்பியவர் அவர். ஆகவே சைவத்தைப் பின்பற்றிய குலோத்துங்கன் சோழனால் ராமானுஜர் நாடு கடத்தபட்டார். அன்றைய காலத்தில் நாடு கடத்தப்படுதல் என்பது மோசமான தண்டணையாக கருதப்பட்டது. குலோத்துங்கள் சோழன் பாணியில், இன்றைக்கும் இதர மத நம்பிக்கையாளர்களையும், பிற கடவுளை வழிபடுவர்களையும் இந்தியாவிற்கு எதிரானவர்கள் எனக் கருதும் நிலைமை நீடிக்கிறது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
நமது பிரதமர் மோடி நான் SCAM
(ஊழல்)ற்கு எதிரானவன், அதை ஏற்றுக்கொள்ளாதவன் என அடிக்கடி சொல்வதைப் பார்த்தால் அது ஒரு வகையில் சரிதான் எனத் தோன்றுகிறது. SCAM எனும் ஆங்கில வார்த்தையின் முதல் இரண்டு எழுத்துகள் SC (Shceduled Caste) என்பதாகும். அதாவது பட்டியலின மக்களைக் குறிப்பவை. கடைசி எழுத்தான M (Minority) என்பது சிறுபான்மையினரை குறிப்பதாகும். எனவே பிரதமர் மோடி SCAM ற்கு எதிரானவர் என்று சொல்லும்போது ஆம், அவர் Scheduled Castes and Minoritiesற்கு எதிரானவர் எனும் உண்மையை ஏற்றுக்கொண்டு விட்டார் என்றே தோன்றுகிறது.
பெரும் முதலைகளைப் பிடிக்கவே பணமதிப்பு நீக்க நடவடிக்கை என பிரதமர் சொல்கிறார். ஒரு குளத்தில் உள்ள நீரையெல்லாம் அப்புறப்படுத்தி விட்டால் முதலைகளை பிடித்துவிடலாம் எனும் யோசனையை போன்றதுதான் இதுவும். பணமதிப்பு நீக்கம் எனும் நடவடிக்கையாக நீரையெல்லாம் அப்புறப்படுத்திவிட்டு பார்த்த போது, முதலைகளெல்லாம் தப்பித்துச் சென்று விட்டன. ஏனெனில் முதலைகளை நீரில் மட்டுமல்ல, நிலத்திலும் வாழ்பவையாகும். ஆனால் நீரை அப்புறப்படுத்தியதால் செத்து மிதந்தவையெல்லாம் சின்னச் சின்ன மீன்கள் தான். பண்மதிப்பு நீக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்கள் மீன்களைப் போன்ற அப்பாவி மக்கள்தான்.
பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது சமூக ஊடங்களில் வந்த ஒரு நகைச்சுவையை பகிர விரும்புகிறேன். நீண்ட வரிசையில் நின்றிருந்த மக்கள் கூட்டத்தில் வந்து ஒருவன் கேட்டானாம்.. “இங்கு அருகில் இருக்கும் வங்கிக்கு எப்படிப் போவது, நடந்து போகலாமா? அல்லது ஏதேனும் வாகனத்தில் போக வேண்டுமா?” எனக் கேட்டபோது கூட்டத்தில் நின்றிருந்த ஒருவர் இவ்வாறு பதிலளித்தாராம். “ரெண்டுமே வேண்டாம், எனக்குப் பின்னால் வந்து நில், இரண்டரை கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் வங்கிக்குதான் நானும் வரிசையில் நின்று போய்க்கொண்டிருக்கிறேன்” என்று.
நமது கல்வியும், அதன் கட்டமைப்பும் Quality, Quantity, Equity (தரம், அளவு, சம வாய்ப்பு) ஆகிய மூன்று அம்சங்களை பிரதானமாக கொண்டிருந்தது. ஆனால் தற்போது அவை, Centralisation, Commulisation, Commercialisation (மத்தியப்படுத்துவது, மதவெறிமயமாக்குவது, வியாபாரமாக்குவது) ஆகிய மூன்று அம்சங்களைக் கொண்டதாக மாற்றப்பட்டிருக்கிறது. இது மிகவும் ஆபத்தானதாகும். ஆர்யபட்டாக்கள் நம்மிடமிருந்து உருவாகியிருக்கிறார்கள். ‘0’ விற்கான மதிப்பை கி.பி. ஆறாம் நூற்றாண்டில் நாம்தான் உலகிற்கு சொன்னோம். ஆனால் அதற்குப்பிறகு வந்த ஆரியர்கள் கல்வியை நால்வர்ண முறைக்குள்ளாக பொருத்தினார்கள். ஏகலைவன் அதற்கான உதாரணம்தான். இன்றைய கல்வி முறையை அதன் நீட்சியாகவே மாற்றவே நீங்கள் விரும்புகிறீர்கள்.
ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தின் பின்னே நின்று கொண்டு சுவாமி விவேகானந்தரைப் பற்றி பேசுகிறீர்கள். ஆனால் 1893இல் நடைபெற்ற உலக மதங்களின் மாநாட்டில் பங்கேற்ற விவேகானந்தர் என்ன பேசினார் தெரியுமா? தங்கள் மதத்தை உயர்வாக கருதிக்கொண்டு, பிற மதங்களை இழிவாகக் கருதி அழிக்க முயல்பவர்களைப் பார்த்தால், நான் அவர்களுக்காக எனது இதயத்தின் ஆழத்திலிருந்து கவலை கொள்கிறேன். அனைத்து நதிகளும் கடலில் கலப்பதைப்போல எல்லா மதங்களும் மானுடத்தையே நேசிக்கின்றன என்று சொன்னவர் சுவாமி விவேகானந்தர்.
ஆனால் அவர் ஆர்.எஸ்.எஸ். எனும் இப்படியான அமைப்பு ஒன்று உருவாகும் என்பதை நினைத்திருக்கக்கூட மாட்டார். கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் கூற்றை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். “ஆரியர், திராவிடர், முகலாயர், சீக்கியர், பவுத்தர் என அனைத்து மதங்களாலும் ஆன ஒரே உடல் உண்டென்றால் அதுவே நமது இந்தியாவாகும்” என்றார் அவர். நீங்கள் தூக்கிப் பிடிக்கும் பகவத் கீதையின் அத்தியாயம் 7ல் உள்ள சுலோகம் 21 என்ன சொல்கிறது தெரியுமா? எந்தவொரு பக்தனும் தனது கடவுளை எந்த வடிவத்தில் காண விழைகிறானோ அந்தந்த வடிவத்திலேயே அவனுக்கான கடவுள் இருக்கிறார். ஆனால் நீங்கள் இவற்றையெல்லாம் முற்றாக புறக்கணிக்க முயல்வதோடு, ஒற்றைச் சிந்தனையை புகுத்த நினைக்கிறீர்கள்.
புகழ்மிக்க ஜவஹர்லால் பல்கலைக்கழக மாணவர்களை தேச விரோதிகள் என சித்தரித்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய முயல்கிறீர்கள். விடுதலைப் போராட்ட வீரர்களையும் இதே தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்தான் கைது செய்தது பிரிட்டீஷ் அரசு. அப்படியெனில் பல்கலைக்கழக மாணவர்கள் தேசவிரோதிகளா என்ன. அந்தப் பல்கலைக்கழகத்தில் படித்த பலர்தான் இன்றைக்கும் இந்தியாவில் பல துறைகளில் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்கள் என்பது தெரியுமா. இந்த அரசாங்கத்தின் உள்துறையும், அயல்துறையும், இதர பல துறைகளும்கூட ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களால்தான் வழிநடத்தப்படுகிறது எனும் உண்மையேனும் தெரியுமா உங்களுக்கு..?
இன்னமும்கூட சொல்லிக்கொண்டே போகலாம். மிகச்சிறப்பான அவரது நாடாளுமன்ற உரைகளுக்கான ஒரு சில உதாரணங்கள் மட்டுமே இவை. நாடாளுமன்றத்தில் அவர் இருந்த பன்னிரண்டு ஆண்டுகளும் இத்தகைய ஆழமான உரைகளால் அவையின் மாண்பைகளையும், ஜனநாயகக் கூறுகளையும் மெருகேற்றியவர் தோழர் யெச்சூரி. ஆழமான விஷயங்களையும் கூட எளிமையாகவும், இழையோடும் நகைச்சுவையோடும் சாதாரணமானவர்களுக்கும் புரியும் வகையில் முன்வைப்பதில் அவருக்கு நிகர் அவரே.
இன்று அவர் நம்மோடு இல்லாவிட்டாலும்கூட நாடாளுமன்றத்தில் இருந்து விடைபெறும் நாளில் அவர் ஆற்றிய அந்த அற்புதமான உரையும், அவர் எழுப்பிய கேள்விகளும் இந்த சமூகத்தின் மனசாட்சியை என்றென்றும் உலுக்கிக்கொண்டேதான் இருக்கும். ஆம். காத்திரமான உரைகள், அர்த்தம் பொதிந்த எழுத்துகளின் வாயிலாக இன்னமும் நம்மோடு வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார் தோழர்களின் தோழர் சீதாராம் யெச்சூரி. l
previous post