மலர்கள் அழகு! அந்த அழகைப் பெரிதும் ஆராதிப்பவர்கள் கவிஞர்கள்.
சங்ககால புலவர்கள் முதல் இன்றைய இளங்கவிஞர்கள் வரை மலர்களைப் பாடாத கவிஞர்களே இல்லை என்று கூறலாம். ஆனால், மலர்களைப் பற்றிய கவிதைகள் தினம் தினம் புதிது புதிதாக வந்து கொண்டே இருந்தாலும், மலர்களைப்பற்றி மட்டுமே பேசும் தனித்துவமான கவிதைத் தொகுப்புக்கள் தமிழ்மொழியில் வெளி வந்திருக்கின்றனவா என்று கேள்வி எழுப்பப்பட்டால் சிறிது நேர யோசனைக்குப்பின், ஆம், சில வந்துள்ளன என்றே பதில் கிடைக்கும். ஆனாலும், மலர்களைப் பற்றி மட்டுமே பேசும் தனித்துவமான கவிதைத் தொகுப்புகள் எத்தனை என்பது குறித்து தனி ஆய்வு ஒன்று மேற்கொண்டால் மட்டுமே உண்மையைக் கண்டுபிடிக்க முடியும் என்பதே எதார்த்தம்.
இந்நிலையில், முழுக்க முழுக்க மலர்களுக்காக மட்டுமே அர்ப்பணிக்கப்பட்ட கவிதைத் தொகுப்பு ஒன்றினை அகநி பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளார்கள். ‘எருக்கம்பூக்களைப்பாடுபவன்’ இது நூலின் தலைப்பு. பாடியவர், கவிஞர் அகவி என அறியப்படும் முனைவர்.அ.க.வினாயகமூர்த்தி. சிறந்த கவிஞர், எழுத்தாளர், உரைவீச்சாளார், நல்லாசிரியர் என்ற பெருமைகளுக்குச் சொந்தக்காரர் இந்தப் பன்முக ஆளுமை. 2004 ஆண்டு முதல் கவிதை எழுதிவரும் மூத்தக்கவிஞர். இவர் இதுவரை, ‘சும்மாடு’, ‘தொப்புள்புள்ளி’, ‘காலிப்போத்தலில் நிறைந்திருக்கும் காற்று’ என்ற தலைப்புக்களில் மூன்று கவிதைத் தொகுப்புக்களையும், ‘தலித் கவிதை இயல்’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வு நூலையும் எழுதி வெளியிட்டுள்ளார். இந்த நூல் இவரது ஐந்தாவது படைப்பு. இத்தொகுப்பில் மொத்தம் நூறு கவிதைகள் இடம் பெற்றுள்ளன. ஆன்மீக நாட்டமுடையோர், எருக்கம்பூ மாலையை விநாயகருக்குச் சூட்டி மகிழ்வார்கள், என்றால்: ஈரோட்டுக்கிழவனின் பெருமை பேசும் இந்த விநாயக(மூர்த்தி)ர், தான் புனைந்த எருக்கம்பூ மாலையை வாசகர்களுக்குச் சூட்டி மகிழ்கிறார்.
பொதுவாக, நந்தவனங்களிலும், தோட்டங்களிலும், வீடுகளிலும் கவனத்தோடு வளர்க்கப்படும், முல்லை, மல்லிகை, ரோஜா, தாமரை போன்ற மலர்களையேப் பெண்கள் விரும்புவர்; அதனாலேயே அவை கவிஞர்களின் பெருவிருப்ப பாடு பொருட்களாக இருக்கின்றன. ஆனால், இந்தக்கவிஞர், அந்த பெருவிருப்ப பாடுபொருள்களாக இருக்கும் மலர்களைக் குறித்து இந்நூலில் பாடியிருந்தாலும்கூட, அவற்றைத் தவிர்த்துவிட்டு காடு மேடுகளிலும் கண்ட இடங்களிலும் தானாக வளர்ந்த காட்டுச்செடியில் பூத்துக்குலுங்கும் எருக்கம்பூவைப் பாடியிருப்பதுடன் அதையே தலைப்பாகவும் வைத்திருக்கிறார். அவரது துணிச்சலைப் பாராட்டுவோம்.
தேவையான நேரங்கள் தவிர மற்ற பொழுதுகளில் எளிதில் மனிதர்களால் அலட்சியப் படுத்தப்படும் எருக்கம்பூ ஏழைகளின் எளிய மருத்துவர் என்பது கவனத்திற்குரியது.
தனது அணிந்துரையில், பூக்களைப் பற்றியே ஒரு கவிதை நூல் முதன் முதலில் தமிழில் வெளிவருகிறது என்பது புதுமை மட்டுமல்ல; பாராட்டிற்குரிய ஒரு சிறப்பு முன்னெடுப்பாகவே நான் பார்க்கிறேன் என்று கூறி, நூலில் கண்டுள்ள கவிதைகள் சிலவற்றின் சிறப்புக்களை சிலாகிப்பதுடன், அரிதினும் முயன்று அழகானதொரு மலர்க்கொத்தை இல்லையில்லை கவிதைப் பூங்கொத்தை கவிஞர் தந்திருப்பதாகக் குறிப்பிட்டு, நூலாசிரியர் அகவியை, பேரன்போடு முத்தமிடுகிறார், மூத்தக்கவிஞரும், யுவபுரஸ்கார் விருதாளருமான
மு.முருகேஷ், ‘மனிதவாழ்வு பூக்களின் சிரிப்பைத் தவிர்த்துவிட்டு கடக்கவே முடியாது, கடக்கவும் கூடாது என்று தனது முன்னுரையில் குறிப்பிடும் கவிஞர் அகவி, எவ்வளவு வெயில் அடித்தாலும் பூமியில் பூக்கள் பூத்துக்கொண்டுதான் இருக்கின்றன எனவும், தனக்குக் கிடைக்கும் சொற்ப நீரைக்கூட பூக்களின் முக மினுமினுப்புக்காக அவற்றிற்குக் கொடுத்து விட்டு, மண்ணுக்குள் புழுங்கிக் கொண்டு மழைகாலத்திற்காகக் காத்திருக்கின்றனவாம் வேர்கள் என்றுக் கூறி பூக்களுக்கும் வேர்களுக்கும் உள்ள உறவைக் கண்டு வியக்கிறார். இந்நூலில், அளவில் பெரியதான இந்தோனேசிய நாட்டுப் பூ முதல் அளவில் சிறியதான நம்மூர் நெருஞ்சிப்பூ வரை உள்ள பூக்களைப் பற்றி கவிதைகள் படைத்திருக்கிறார். பாடிய கவிதைகள் நூறு என்றாலும் பாடப்பட்ட பூக்கள் நூறு அல்ல. தான் கண்டதையும் தாண்டி உலகளாவிய பூக்களையும் பேச வைத்திருப்பதாக பெருமிதமும் கொள்கிறார். உலகமயமாக்கல் என்ற மாயவலை இந்த கவிஞரையும் பாதித்திருக்கிறது என்பது புரிகிறது.
முதல் கவிதையே கண்கவர் பட்டாம்பூச்சியாய் சிறகடிக்கிறது. தனது ஊரான நெற்குணத்தின் ஊர்ப்புற அழகினை ஆராதிக்கும் கவிஞர், வகுப்புத்தோழனுடன் இணைந்து பள்ளிக்குச் செல்வது போல பாசாங்கு காட்டி, வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்த புத்தகப்பையை மரக்கிளைகளில் மாட்டிவிட்டு, மரங்களில் தாவி விளையாடியது; காடுமேடுகளில் கண்ட தும்பைச் செடிகளில் பூத்த பூக்களை மொய்த்த பட்டாம்பூச்சிகளைத் துரத்திப்பிடித்து மகிழ்ந்தது; பள்ளி மணி அடிக்கும் நேரத்தில் புறப்பட்டு பள்ளியிலிருந்து வீடு திரும்பும் நல்ல பிள்ளை போல வீடு போய்ச் சேருவது எனத் தனது பால்யகால நினைவுகளையும் குறும்புகளையும் நினைவு மீட்டலாகப் பதிவிடும் கவிஞருக்குத் தனது வீட்டுத்தோட்டத்தில் தும்பைச்செடி ஒன்றைப் பார்த்தவுடன் பட்டாம்பூச்சிகளது நினைவு வந்து விட்டது.
பட்டாம் பூச்சியைத்தேடுகிறார்: எங்கள் வீட்டுத்தோட்டத்தில்/தும்பைச்செடியொன்று/பூப்பூத்தவாறு இருக்கிறது/எங்கேனும் /ஒரு பட்டாம் பூச்சியைக் கண்டாலும் கொடுத்தனுப்புங்கள்/எங்கள் வீட்டின்/முகவரியை நமது ஊர்களில் பூத்துக்குலுங்கும், ஆராதனைக்குரிய பூக்கள், அழகுக்காகச் சூட்டப்படும் பூக்கள், மருத்துவப் பயன்பாட்டுக்குரிய பூக்கள் மற்றும் உண்ணும் பழங்கள் மற்றும் காய்கறிகளுக்குரிய பூக்கள் என்று ஒவ்வொரு கவிதையிலும் ஒவ்வொரு பூவைப்பற்றிப் பாடிய இவரது கவிதை மனம், இன்றைய காலகட்டம் தேசிய கோஷங்களுக்கும் உலகலாவிய செயல்பாடுகளுக்குமானது என்பதை உணர்ந்து விட்டது போலும். ஆதலால், இவரது பார்வை தமிழ்மண் தாண்டி, இந்திய ஒன்றியம் தாண்டி, உலகின் பலநாடுகளிலும் பூக்களைத் தேடியிருக்கிறது. அன்று முதுகிழவன் கபிலன் வகைப்படுத்திய மலர்களின் பெயர்களை அறிய தாத்தன் சாமிநாதன் காடு மேடெல்லாம் அலைந்து திரிந்ததைப்போல சிரமப்படாமல், வெகு எளிதாய் உட்கார்ந்த இடத்திலிருந்தே கூகுலாண்டவர் உதவியுடன், பயணச்சீட்டோ கடவுச்சீட்டோ இல்லாமல், காஷ்மீர், மணிப்பூர் வாடிகன், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, கம்போடியா, ஈரான், இங்கிலாந்து, இந்தோனேசியா, மியன்மர், ஐரிஸ், ஈக்வேடர் என்று பல மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் பயணித்து பூக்கள் சிலவற்றைக் கண்டறிந்து பாடியுள்ளார். ஆனாலும் அவை கவிஞரோடும் உறவாடவில்லை; நம்மோடும் ஒட்டவில்லை. அந்நியம் எப்போதும் அந்நியமே.
உள்ளூர் மலர்களைப்பற்றிப் பாடும்போதெல்லாம் கவிஞர் உற்சாகமடைகிறார்; அப்பாடல்களில் பூக்களைப்பற்றிய செய்திகள் மட்டுமல்லாமல் அவரது பால்யகாலப் படிமங்களும், பள்ளிப்பருவத் துள்ளல்களும், உறவுகளின் மேன்மையும், உள்ளூர் நிலவரங்களும், களைப்பறியா காடு மேடு சுற்றல்களும் வெகு இயல்பாக அழகியலோடு வெளிப்படுகின்றன. தனது பால்ய காலத்தில் அப்பாயி வைத்த புளியம்பூ ரசத்தின் சுவையை இன்றும் தன் நாக்கில் தேக்கியிருக்கும் கவிஞர், அப்பாயி புளியம்பூவில் குந்தியிருப்பதாக நம்புகிறார்:
தாமரையில்/சரஸ்வதி இருக்கா என்பது நிசம்னா/மஞ்சளும்/சிவப்புப் புள்ளியும் கலந்த/புளியம்பூவில் கட்டாயம்/குந்தியிருப்பாள்/பூவில் ரசம் வைத்த/எங்கள் அப்பாயி./பாம்புக்குட்டிகளை ஈனுகின்றனவாம் முருங்கைப்பூக்கள்; மனிதகுல நன்மைக்காக இனிப்பைத் தேனீக்களுக்குத் தந்துவிட்டு புளிப்பை மனிதனுக்கு வழங்குகிறதாம் எலுமிச்சை பூக்கள்: மற்ற வசந்தகாலப் பூக்களுக்கு வரவேற்பு அளிப்பதற்காகவே முதலில் பூக்கிறதாம் கருவேல மரப்பூக்கள்; காலமெல்லாம் காட்டில் இருக்கும் சிறுகண்பீளை பூ பொங்கல் கொண்டாட மட்டும் நமது வீடுகளுக்கு வருகை தருகின்றனவாம்; நீரைக் கட்டுச்சோறாக்கி சூரியனுக்குத் தருகின்றனவாம் கற்றாழை; இயற்கையாகப் பூத்துக்குலுங்கும் தன்னை விடுத்து, தன்னைத்தாங்கி நிற்கும் செடிகளின் இலைகளைப் பறித்து அரைத்து கைகளில் செயற்கையாய்ப் பூ வரைந்து கொள்ளும் பெண்கள்மீது வருத்தமுறுகிறதாம் மருதாணிப்பூக்கள் தனது மணத்தை வெளிக்காட்டாது தன்னுள்ளேயே பொத்திவைத்து தனது காய்களுக்குத் தருகின்றனவாம் ஏலக்காய்ப் பூக்கள்; சம்பளமில்லா மருத்துவராம் செண்பகப்பூ; இப்படி நாம் அறிந்த ஏராளமான பூக்களின் இயற்கையான செயல்பாடுகளை யெல்லாம், அழகியலோடும் கவி நயத்தோடும் நம் முன்னே காட்சிப்படுத்தி நம்மை ஆச்சரியப்பட வைக்கிறார் கவிஞர்.
இவர் தலைப்பாக வைத்து முக்கியத்துவப்படுத்தும், எருக்கம்பூ மூக்குத்தி, தோடு ஆகியவை செய்பவர்களுக்கு மட்டுமல்லாமல், திருவாரூர் ஆழித்தேர் செய்த தச்சருக்கும் கூட மாடலாம்; அறுபது ஆண்டுகள் கழித்தே பூ பூக்குமாம் மூங்கில் மரங்கள் போன்ற அரிய செய்திகளை விவரிக்கும் கவிஞர், பூக்களின் தன்மைகளையும் கவிதையாகப் பதிவு செய்கிறார். சமைந்து குலுங்கும் தாவரங்கள்/ பூக்களால் மினுமினுக்கும்./ தானியங்களைப்/ பழங்களை விளைவிக்காத/ பூக்களுக்கு/ வசீகரம் அதிகம்./
பூவின் பதவிஉயர்வில் முகிழ்ப்பதே/ காய் கனி விதைகள்/ தனிப்பட்ட பூக்களைப்பற்றி மட்டுமல்லாமல், பூக்களின் பொதுத் தன்மைகள் பயன்பாடுகள் குறித்த சிறப்பான கவிதைகளும் இடம் பெற்றிருக்கின்றன.
பூக்களைப்பற்றி மட்டும் அழகுணர்வுகளுடன் பேசும் தனித்துவமான இந்தக் கவிதைக்கொத்து, பல வண்ணப் பூக்களும் பூத்துக்குலுங்கி மணம் வீசும் ஒரு அழகிய கண்கவர் நந்தவனமாய் மிளிர்கிறது. கவிஞர் அகவி பெரும் பாராட்டிற்குரியவர். கவிஞரின் கண்களில் படாமல் விடுபட்டுப்போன நம்மண்ணின் மலர்கள் இன்னும் உண்டு. அவற்றையும் அடுத்து பாடுவார் என நம்பி காத்திருப்போம். அகவியும் அகநியும் இணைந்த இந்நூல் வெற்றிபெற வாழ்த்துக்கள். l