தமிழ்மொழியின் தொன்மைமிகு இலக்கிய வரலாற்று நீரோட்டத்தில், நமது தமிழ் நிலப்பரப்பின் வாழ்க்கைப் பிரவாகம் ஒன்று மட்டுமே சுத்த சுயம்புவாகப் பெருகியோடிக் கொண்டிருக்கவில்லை. உலகின் எந்த ஒரு மொழியும் இந்தப் போக்கிற்கு விதிவிலக்காக இருக்க முடியாது. அந்தந்த மொழி சார்ந்த மக்களின் வாழ்க்கைப் பதிவுகளோடு, அவர்களுக்கு அண்டை-அயலில் வாழ்கிற மக்களின் வாழ்க்கைப்பாடுகளும்கூட அந்தந்த மொழிகளிலிருந்து பரஸ்பர மொழிபெயர்ப்புகள் மூலம் வந்து கலந்து பெரு நதியாக மாறித்தான் தீரும்.
தமிழ்மொழியைப் பொறுத்தவரை, ‘அதர்ப்பட யாத்தல்’ என்று மொழிபெயர்ப்பிற்குத் தொல்காப்பியம் இலக்கணம் வகுத்துத் தந்திருக்கிறது. கடந்த 2500 ஆண்டுகால இலக்கிய வரலாற்றில் மொழிபெயர்ப்புகள் ஏராளமாகத் தமிழில் செய்யபட்டிருக்கின்றன. மிக நீண்ட நெடிய வரலாற்றுப் பதிவுகளிலிருந்து நாம் கண்டறியும் உண்மைகள் மிகவும் சுவையானவை. உணர்வுப்பூர்வமானவை. பல்வேறு இந்திய மொழிகளில் இருந்தும், ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷிய, அரபி, சீன மொழிகளில் இருந்தும் எண்ணற்ற இலக்கியப் படைப்புகள் ஆங்கிலம் வழியாகவும், நேரடியாகவும் தமிழுக்கு வந்து வளம் சேர்த்துக் கொண்டிருக்கின்றன. மலையாளம், தெலுங்கு, கன்னடம் மொழிகள் வழங்கும் நமது அண்டை தேசங்களில் இருந்தும், தூர தேசங்களில் புழங்கும் அயல் மொழிகளில் இருந்தும் இத்தகைய மொழிபெயர்ப்புப் படைப்புகள் தமிழ் இலக்கியப் பரப்பினுள் நெடுங்காலமாக ஊடாடி வருகின்றன.
இலக்கியங்கள், பொதுவாக மனித மனங்களின் புனைவு வெளியிலிருந்துதான் பிறக்கின்றன. ஆனால், அவை பிறப்பதற்கான ஊற்றுக்கண், மனிதர்களின் அன்றாட நடைமுறை வாழ்க்கைதான். சகல ஆசாபாசங்களும் கலந்தோடிக் கொண்டிருக்கிற மானிட வாழ்க்கை நதியில், புதுவெள்ளம் பெருகும் போது, அக்கம் பக்கம் ஓடிக்கொண்டிருக்கும் ஓடைகள், வாய்க்கால்கள், சிற்றாறுகள், ஏன், சாக்கடைகளும்கூட அந்த நதியோட்டத்தில் கலந்து பெருகுவதுண்டுதான். அப்போது தாய் நதியின் வெள்ள நீரும் மேற்கண்ட துணை நீரோட்டங்களுக்குப் பாய்வதுண்டு. இதை ஓர் உவமையாகக் கொள்வோமானால், இது அப்படியே நூறு சதவீதம் இலக்கிய நதிக்கும் பொருந்தும்.
இவ்வாறாக, தமிழுக்கு வளம் சேர்த்து, தாமும் வளம் பெற்று வளர்ந்து வரும் மொழிபெயர்ப்புப் படைப்புகள் குறித்து, ஒரு வாசகனாகவும், ஓர் எழுத்தாளனாகவும் என்னுடைய சொந்தப் பட்டறிவிலிருந்தும், படிப்பறிவின் பின்புலத்தோ டும் சில செய்திகளைத் தொடராக எழுதலாம் என்பது என் எண்ணம். இந்த இதழிலிருந்து ஒவ்வோர் இதழிலும் குறைந்தது ஐந்து நூல்களையேனும் சுருக்கமாக அறிமுகம் செய்வேன். ஐந்தில் மூன்று நம் அண்டை வீட்டாரின் (மலையாள, கன்னட, தெலுங்கு) இலக்கியங்கள்; மீதி இரண்டு ஆங்கிலம் உள்ளிட்ட அயல் வீட்டாரின் படைப்புகளாக அமையும்.
மிக சமீபத்திய செய்தியிலிருந்து தொடங்கலாம். இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் விருது, தென் கொரியப் படைப்பாளி ஹன் காங் (Han kang) என்பவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. பத்துக்கு மேற்பட்ட நாவல்களை இவர் எழுதியிருக்கிறார். அவற்றுள் மூன்று நாவல்கள் முக்கியமானவை என்று தன் கட்டுரையில் (இந்து தமிழ் திசை- 13.10.2024) குறிப்பிடுகிறார் பிரெஞ்சு மொழிப் பேராசிரியரும், மொழிபெயர்ப்பாளருமான எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி. அவரின் ‘புலால் மறுத்த பெண்’ என்ற நாவலைத் தமிழில் ‘மரக்கறி’ என்ற பெயரில் கவிஞர் சமயவேல் மொழிபெயர்த்து, அது தமிழ்வெளி வெளியீடாக வந்துள்ளது. மிக சமீப நாள்களில் தமிழில் அறிமுகமாகியிருக்கும் ஹன் காங் என்ற தென் கொரியப் பெண் படைப்பாளி, நோபல் இலக்கியப்பரிசு பெற்றிருக்கிறார் என்ற செய்தி நமக்கு உற்சாகமளிப்பதாக இருக்குமென நம்புகிறேன்.
மலையாள மொழியில், அம்பிகா சுதன் மாங்காடு எழுதியுள்ள ஒரு சூழலியல் நாவல், ’என்மகஜெ’ என்பது. இது 25 பதிப்புகள் கண்ட வெற்றிகரமான படைப்பு. பல விருதுகளை வென்ற அம்பிகாசுதன் மாங்காடு நேரு கல்லூரியில் மலையாள மொழிப் பேராசிரியர். சூழலியல் சார்ந்த இயக்கங்களில் தீவிரமான பங்களிப்புகளைத் தரும் போராளி என அறிமுகக்குறிப்பு கூறுகிறது. இரண்டு நாவல்கள், எட்டு சிறுகதைத் தொகுப்புகள், பல திறனாய்வு நூல்களின் ஆசிரியர் இவர். பல விருதுகளை வென்றவருமாவார். இந்த நாவலை, அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையத்தின் இயக்குநர் கவிஞர் ‘சிற்பி’ பாலசுப்பிரமணியம் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
கேரளத்தின் வடகோடியிலிருக்கும் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள ஓர் ஊராட்சிதான் என்மகஜெ. அந்த வார்த்தையின் பொருள், எட்டுப் பண்பாடுகள் அல்லது எட்டு மொழிகள் வழங்கும் இடம் என்பதாம். மராத்தி, அரபி, மலையாளம், கொங்கணி, பியாரி கன்னடம், துளு எனப் பல மொழிகளும், அவற்றின் பின்புலப் பண்பாடுகளும் உள்ள ஒரு பகுதி. அங்குள்ள இயற்கை எழில் பொங்கும் நீரூற்றுகளும், ஓடைகளும், காடுகளும் நிறைந்த பகுதிகள் அழிக்கப்பட்டு முந்திரித் தோட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அந்த முந்திரி மரங்களில் கொசு பரவி விளைபயிர்களின் பரவலைத் தடை செய்வதாகக் கருதி அரசு எண்டோசல்பான் என்ற சிற்றுயிர்க்கொல்லி மருந்தை முப்பது ஆண்டுகள் வரை ஹெலிகாப்டர்கள் மூலம் தெளித்து வந்ததாம். அதன் விளைவாக நீரில் மீன்கள் அழிந்தன. மற்ற உயிரினங்களும் காணாமற் போயின. மலைகளில் தெளிக்கப்பட்ட அந்த விஷ மழை, நதிகளில், ஓடைகளில் கலந்து மக்களின் உடல்களில், தாய்மார்களின் தாய்ப்பாலிலுங் கலந்துள்ளது. அதன் விளைவால் அங்கே ஒரு நரகம் உருவாகியிருக்கிறது.
அந்தப் பகுதிக்கு வரும் இருவர்- கணவனும், மனைவியும்- மேற்கண்ட பகுதியில் தங்களின் குழந்தையும் நோய்வாய்ப்படும்போது என்ன காரணம் என்று அறிந்து எண்டோசல்பானுக்கு எதிராகப் போராடத் தொடங்குகிறார்கள். ஆனால், அரசு, கார்ப்பரேட் நிறுவனம், சில சுயநலமிகளான அறிவியலாளர்கள் ஆகியோரின் கூட்டு மோசடியால் போராட்டம் தோல்வியை அடைகிறது. எதிர்காலம் என்ன என்று தெரியாத நிலையில், நாவல் நிறைவில்லாத நிறைவை அடைகிறது. பிற்பாடு எண்டோசல்பான் தடை செய்யப்பட்டது என்பது வேறு கதை. ஆனால், அதற்குள் அங்கு ஏற்பட்ட அழிவுகள் ஏற்பட்டவைதாமே?
மலையாள இலக்கிய உலகின் மூலவர்களில் ஒருவர் எம். டி. வாசுதேவன் நாயர். அவருடைய பல நாவல்கள் தமிழில் ஏற்கெனவே வந்துள்ளன. அவருடைய ‘வாராணசி’ என்ற நாவலை சிற்பி தமிழில் மொழிபெயர்த்துள்ளார். நாவலின் தலைப்பில் ஏதோ தவறு இருக்கிறதோ என்று எனக்குப் பார்த்தவுடன் முதலில் தோன்றியது. ஆனால், வாரணாசி என்று நாம் சாதாரணமாகக் குறிப் பிட்டுக் கொண்டிருக்கும் நகரின் பெயரை வாராணசி என்றுதான் மலையாள மொழியில் சொல்ல வேண்டுமாம். நாவலின் முன்னுரையில் சிற்பியே விளக்கியிருக்கிறார். இந்த நாவலை சிற்பி 22 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழில் மொழிபெயர்த்திருந்தாராம். அது இத்தனை ஆண்டுகள் கழித்து மறுபதிப்புக் கண்டுள்ளது. வருண், அசி என்ற இரண்டு ஆறுகள் சங்கமிக்கும் இடம் என்பதால், வடமொழியில் ஆதி நீடலாக அந்தம் மாறாமல் ‘வாராணசி’ என ஆனதாக சிற்பி கூறுகிறார். கங்கைக் கரைக்கே நம்மை எம் டி. வாசுதேவன் நாயர் அழைத்துப்போய் விடுகிறார் என்று சொல்கிறது முன்னுரை. சுதாகரன் என்ற இளைஞனின் கதை இது. அவன் மிகப் பெரிய ஆய்வாளன்.
நாவலின் இறுதியில், ஆனந்த வனமும், மகாமயானமுமாகிய அந்த நகரம் அவனுக்கு ஓர் இடைக்காலத் தங்குமிடமாக இருக்கிறது. மறுநாள் அவனுடைய பயணம் மீண்டும் தொடங்குகிறது. மற்றொரு இடைக்காலத் தங்குமிடம் நோக்கிய பயணம் அது! அக்டோபர் இரண்டாம் நாள் அன்று, மகாத்மா காந்தி- அருட்செல்வர் நா. மகாலிங்கம் நினைவுநாள் நிகழ்வு சென்னையில் நடந்தபோது, மேற்கண்ட நூல்கள் உட்படப் பத்து நூல்கள் வெளியிடப்பட்டன. அவற்றில் மூன்றை சிற்பிதான் தமிழில் நமக்குத் தந்திருக்கிறார்! அவருடைய வயதைக் கருத்திற் கொண்டு பாருங்கள், அது எவ்வளவு மலைக்க வைக்கும் செயல் என்று! நமக்கு இவற்றைப் படிக்கக்கூட நேரமில்லாமல் போகிறதே, என்ன செய்யலாம்? l
previous post