“அக்கானி” என்னும் பெயரில் அமைந்த இந்த நாவல் பனையேறிகளின் தொழிலில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளையும் சிக்கல்களையும் தீர்வுகளையும் நிறைய பேசுகிறதாவென்றால் அவ்வாறில்லை. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அம்மக்களின் வாழ்க்கையோடு இணைந்திருந்த அவ்விடம் சார்ந்து வளர்ந்த உயிரிகளாக சிட்டுக்குருவிகள் நூற்றுக்கணக்காகப் பறந்து கொண்டிருந்ததையும், இன்னும் பிற பறவை இனங்களையும், விலங்குகளையும், மீன் இனங்களையும், மண்ணில் வளரும் கிழங்குகளையும், மரத்தில் விளையும் பழங்களையும், காய்கறிகளைக் கொடுக்கும் செடி இனங்களையும், ஏராளமாகக் குறிப்பிடுவதோடு மக்களது பல்வேறு வகையான தொழில்களை அறிவிக்கும்படி அவர்களது வெவ்வேறு ஜாதிகளை சொல்லியிருப்பதும், அந்தந்த வயதிற்கே உரிய ஆடை வகைகள் இடம்பெற்றிருப்பதும், வகை வகையான அணிகலன்களின் பெயர்களைக் குறிப்பிட்டிருப்பதும், பல்வேறு சடங்குகளை அறிமுகப்படுத்தியிருப்பதும், இசைக்கருவிகளை இடம்பெறச் செய்திருப்பதும், உறவுகளால் சூழ்ந்திருக்கின்ற நிலையை விளக்குவதுமென இன்னும் பலவும் இடம் பெற்று, அம்மண்ணின் வளத்தைச் சிறப்பாகக் காட்டியிருக்கின்றன.
நமது இலக்கியங்களில் இடம்பெற்றிருக்கின்ற பன்றியை இன்று இழிவாகப் பேசுகின்ற நிலையில், ஏர் கொண்டு உழும் எருது உழவனுக்குத் துணையாக இருப்பதுபோல, பன்றியும் நிலத்தை முகத்தால் உழுகின்ற இயல்பைக் கொண்டிருப்பதை இந்த நூலில் ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார்.
இயற்கையின் செழிப்போடு இணைந்து தங்களது வாழ்வும் செழிக்க வேண்டிய மக்களது வாழ்க்கையில் சிக்கல்கள் மிகுந்திருக்கும் பொழுது, அதிலிருந்து விடுபட போராடுகின்ற மனநிலையில் கல்வியை ஆயுதமாகக் கொள்ள வேண்டிய சூழலை நிர்பந்தமாக உணர்கிறார்கள்.
உண்மையில் பனையென்பது தென்னையைப் போலவே மரத்தின் ஒவ்வொரு பகுதியும் பயன்படுத்தத்தக்கது. அதன் ஓலைகளைக் கொண்டு பாய்கள், கூடைகள் போன்றவற்றை முடைவதுடன் வீட்டின் கூரைகளையும் வேய்கிறார்கள். பனை மரத்திலிருந்து பெறுகின்ற பதநீரும் பனம்பழமும் மட்டுமல்லாமல், இவற்றை மூலப்பொருள்களாகப் பயன்படுத்தி தயாரிக்கின்ற கருப்பட்டி, பனங்கற்கண்டு, பனைமிட்டாய் போன்றவை மனித உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து நோயற்ற வாழ்விற்கு வழி வகுக்கின்ற மருத்துவப் பண்புகளைக் கொண்டவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இருந்தாலும் குழந்தைகளின் உடலுக்கு கெடுதல் விளைவிக்கின்ற வண்ணமயமான உணவுப் பொருள்கள் விற்பனையாகும் அளவிற்கு இப்பனையின் விளை பொருட்கள் சந்தைக்கு வருவதில்லை. மரம் வளர்வதற்கு பெரிய நிலப்பரப்பு கூட தேவைப்படாமல் ஒற்றைத் தண்டில் வானுயற வளர்ந்து நிற்கும் பனையின் வேர்கள், நிலத்தின் ஆழத்தில் பரவலாக வளர்ந்து நிலத்தடி நீரை உயரச் செய்து மழை நீரை சேமிக்கின்றன. இப்படிப்பட்ட சிறப்புகளைக் கொண்ட பனை மரங்களின் வளர்ச்சி இன்றளவும் பனைத் தொழில் இருந்து வருகிறது.
இந்த நூலில் பனைத் தொழிலாளர்களின் தொழில் சார்ந்த வாழ்க்கையை விளக்கமாகப் பேசவில்லை. அப்பகுதிவாழ் மக்களின் சூழ்நிலைகளாக அவர்கள் பயன்படுத்துகின்ற கருவிகளும், சமைத்து உண்ணும் உணவு வகைகளும், மருத்துவம் சார்ந்த குறிப்புகளும், நிலம் சார்ந்த சிறுசிறு தொழில்களுமென இன்னும் பலவும் இடம்பெற்றிருக்கின்றன. கடவுள்களோடு பல்வேறு சடங்குகளையும் குறிப்பிட்டு அன்றாட வாழ்க்கையை முழுவதுமாகப் பதிய வைத்த முதல் நூலாக இந்த நாவல் இருப்பதால், இங்கு வாழும் மக்களது வாழ்க்கையை ஆராயும் ஆய்வு மாணவர்களுக்குத் தேவையான தகவல்களைப் பெறும்படி இந்நூல் பயன்படலாம்.
ஆங்கிலேயர்கள் ஆடை இல்லாவிட்டால் அரை மனிதன் ஆகிவிடும் முக்கியத்துவம் மிக்க துணிகளை நெய்யும் கைத்தறி தொழிலாளர்களும் பனையேறிகளின் அதே வாழ்வியல் போராட்டங்களைக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் இந்த நூலில் பேசப்பட்டிருக்கிறது. இப்படியாக இப்பகுதி மக்கள் படும் துன்பங்களுக்குக் காரணங்களாக, அரசாங்கத்தால் குறைந்த அளவு கவனம் பெறுபவர்களாக இவர்கள் இருப்பது மட்டுமன்றி, மதுப் பழக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, பெற்றோர்கள் பொறுப்பற்றவர்களாகத் திகழ்வதும், திருமணமே சிக்கலென அடிமைத்தனமிக்க வாழ்க்கையும், ஜாதிகளால் பிளவுபட்டு ஏற்றத்தாழ்வுகள் மிகுந்திருப்பதும், நெருக்கடியான வாழ்க்கைச் சூழலில் ஒருவருக்கொருவர் வசைப்பாடி மனம் நொந்து போவதும், கைகலப்பிலான பிரச்சனைகளை இன்னும் பெரிதுபடுத்தி வெட்டுக்குத்தில் உயிரை மாய்த்து விடுவதும் கூடுதல் காரணங்களாக வாசிப்பவர்களுக்குப் புலப்படுகின்றன.
நூலில் ஆங்காங்கே இடம்பெற்றவையாக மக்களின் வாழ்க்கைக்குத் திருப்பங்களாக அமைந்த சில வரலாற்றுப் பதிவுகளையும் நாவலில் ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தினார்கள் என்பதோடு, இந்திய மக்களில் தங்களை உயர்ந்த குலத்தவராக பாவித்துக் கொண்டவர்கள், தாழ்ந்த குலத்தினராக முத்திரைக் குத்தப்பட்டவர்களை மேலாடை அணிவதற்குக் கூட தடை விதித்து வதைசெய்து, வரி கொடுப்பவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்திருக்கிறார்கள். குறிப்பிட்ட பிரிவினருக்கான இத்தகைய சட்டத்தை முழுவதுமாக நீக்கிவிட்டு உடலை மறைத்துக் கொள்வதற்கான சுதந்திரத்தைப் பெற, ஆங்கிலேயர்களால் அம்மக்கள் தூண்டப்பட்டு போராடி வென்று விடுதலையைப் பெற்றிருக்கிறார்கள்.
மனிதனாகப் பிறந்தவர்களில் உழைத்துச் சலிப்பவர்களை தாழ்ந்த ஜாதியென்றும், இவர்களது உழைப்பை தந்திரமாகப் பெற்றுக்கொண்டு உறிபவர்களை உயர்ந்த ஜாதியென்றும் குறிப்பிடுவதற்குக் காரணமாகவிருந்த மனுநீதியை ஒழிக்க பாடுபட்டுக் கொண்டிருந்த பெரியாரைப் பேசுவதோடு, அவர் வாழ்ந்த காலத்திற்கும் நூறாண்டுகளுக்கு முன்பே போராடிய வைகுண்டசாமியையும் இந்தப் புத்தகத்தில் நினைவுபடுத்தி இருக்கிறார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றுவதில் முக்கியப் பங்கு வகித்த டாக்டர் அம்பேத்கர் அவர்களையும் மு. வரதராசனார் அவர்களது நூல்களையும் குறித்து நாவல் போகிற போக்கில் சொல்லிச் செல்கிறது. புத்தகக் கடைக்கு அருகில் செல்லும் போது எழுந்த வசனமாக, “பிறப்பதும் இறப்பதுமாக சுழலும் மானுட வாழ்வில் மனிதர்களோடு பிறந்தும் இறவாதிருப்பது அவர்தம் பண்பாடு. அவற்றைச் சுமந்து நிற்பவை கலை இலக்கியங்களே!” என்பது போன்ற கருத்துக்களும் இடம் பெற்றிருக்கின்றன.
இந்தப் புத்தகம் முழுவதும் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் வரிக்கு வரி இடம்பெற்றவையாக கிறிஸ்தவம் முழுமையாகப் பரவியிருக்கிறது. பைபிளை மட்டும் வாசிக்காமல், காரல் மார்க்ஸ், லெனின் ஆகியவர்களது படைப்புகளையும் வாசிக்க வேண்டுமெனும் ஊக்கத்தை அப்பகுதிவாழ் மக்களுக்குக் கொடுத்து, மார்க்சியம், சமத்துவம் ஆகியவற்றைப் புரிய வைக்கிறார்கள். அவ்வப்போது ஒரு சில கோவில்களும் வருகின்றன.
வழக்கம்போல இளமையான இருபாலினத்தவர் சந்திக்க நேர்கையில் அவர்களுக்கிடையே காதல் அரும்புவதும், அதில் ஒரு சிலர் மணமுடித்துக் கொள்வதும், மற்றும் சிலர் மனமுறிவு கொள்வதும், இயலாதவர்கள் மரணிப்பதுமாக சில ஜோடிகளை வைத்து உண்மைகளை இந்த நாவல் பேசியிருக்கிறது. குறித்த வயதில் பூப்படையாத பெண்ணைப் பார்த்து, அவளது நடமாட்டத்தைக் குறைக்கும் அளவிற்கு கூனிக் குறுகச் செய்கின்ற புரணிப் பேச்சுகளும் பெண்களால் வீசப்படுவதை இந்தக் கதை பதிவில் கொண்டிருக்கிறது.
மொத்தத்தில் “அக்கானி” எனும் அழகிய தலைப்பைக் கொண்ட இந்த நாவலானது, பனையின் சுண்ணாம்பு தடவிய கலயங்களில் வடியும் கள்” என்கிற பொருளைக் கொண்டிருப்பதால் அவர்களது வாழ்வியலை மட்டும் பேசும் நூலாக எதிர்பார்த்து வாசிப்பவர்களுக்கு, மரத்தில் ஏறிக் கள்ளெடுக்கும் பொழுது கீழே விழுந்து உயிரிழந்தவர்களது குடும்பத்திற்கு அரசிடமிருந்து ஐந்தாயிரம் ரூபாயை இழப்பீடாகப் பெறுவதற்கு, மீனவர்களோடு தங்களது வாழ்க்கையை ஒப்பிட்டு அவர்களது நிலையைப்போல தாங்களும் பெற வேண்டுமென்று போராடுகின்ற ஒரே ஒரு கோரிக்கையைத் தவிர, பிற துன்பங்களை நேரடியாக எங்குமே குறிப்பிடவில்லை.
இயற்கைவளங்களோடு இணைந்து வளமாக வாழ வேண்டிய மக்களது வாழ்க்கையானது, துன்பங்களுக்கு மத்தியில் உழன்று கொண்டிருப்பதற்குக் காரணமாக எவையெல்லாம் இருக்கின்றன என்பதை, நூலை வாசித்து அறிபவர்கள் ஆய்ந்து அறிந்து கொள்ள வேண்டியபடி நாவல் அமைந்திருக்கிறது. l
previous post
