நா. முத்துக்குமார் ஒரு பாடலாசிரியர் என்பதை விடுத்து யாதொன்றும் தெரியாது. பட்டாம்பூச்சி விற்பவன், என்னைச் சந்திக்க கனவில் வராதே, நியூட்டனின் மூன்றாம் விதி, கண் பேசும் வார்த்தைகள், குழந்தைகள் நிறைந்த வீடு என்ற வரிசையில் வேடிக்கை பார்ப்பவன்.
விகடனில் தொடராக வெளிவந்த
நா. முத்துக்குமாரின் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். இதில் மொத்தம் 30 அனுபவக் கட்டுரைகள் உள்ளன. இந்தப் புத்தகம் ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களையும் குறைந்தபட்சம் நூறு எழுத்தாளர்களையும் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. சினிமா, உறவு நிலைகள், வாழ்க்கை சூழலியல்புகள், அன்பு, நம்பிக்கை, விடாமுயற்சி போன்ற பல சாரங்களின் தொகுப்பு வேடிக்கை பார்ப்பவன். ‘சுடலையிலே வேகும் வரை / சூத்திரம் இதுதான் கற்றுப்பார்! உடலைவிட்டு வெளியேறி / உன்னை நீயே உற்றுப்பார்!’என்ற அவரின் கவிதையின் கருத்தே வேடிக்கை பார்ப்பவனில் எடுத்தாளப்பட்டுள்ளது.
ஏதோ ஞானி போல், குழந்தை போல், கடவுள் போல் உடலைவிட்டு வெளியேறி அவரைப்பற்றி எழுதியிருக்கிறார். இவர் கதை கூறும் பாணியால் உடனே தோழனாகிவிட்டார். கதை தரும் கருத்துகளால், அனுபவங்களால் ஆசிரியனாகிவிட்டார். ‘இவன் அவனாகும் அத்தியாயத்தை’ப் படித்தபின் அதைக் கடக்க முடியாமல் அங்கேயே நின்று விட்டேன். ஆண்களின் கண்ணீரைப் பற்றிக் குறிப்பிடும்போது “பால்கனி ரோஜாச் செடி பட்டுப்போனால் அழுவான். அவன் பிள்ளை, இவன் கன்னத்தில் முத்தம் கொடுத்து ‘நீங்கள்தான்ப்பா இந்த உலகத்திலேயே பெஸ்ட் அப்பா’ என்று சொன்னால் அழுவான்” என்று அவரின் தன்னிலை உணர்வை உண்மையாய் பகிர்ந்து நெகிழ வைத்தார். அதனைத் தொடர்ந்து 31 வரிகளில் அம்பை மொழிபெயர்த்த கவிதையொன்றை நம் கண்ணீருக்கு படையலாக்கியுள்ளார்.
‘அப்பா’எனத் தொடங்கி ‘இங்கே நான் ஆற்றங்கரையில் அழுதால் /அக்கiரயில் உன் காதில் கேட்டு நீ வர வேண்டும்!’ என முடியும் அந்த சந்தால் பழங்குடி இனப்பெண்ணின் கவிதை படிக்கும் அனைவர் மனதிலும் நிச்சயம் தங்கிவிடும். ‘துப்பறிந்த காலம்’ தலைப்பின் கீழ் சினிமா பற்றி பேசும்போது, “சினிமா என்பது, ஏணிகளும் பாம்புகளும் அடுத்தடுத்து வரும் ஒரு ராட்சத பரமபதம்”என்று இரண்டே வரியில் மொத்தத் திரையுலக வாழ்க்கைச் சூத்திரத்தையும் சொல்லிவிட்டார்.
‘பசித்த புலியின் வேகம்’ தலைப்பின் கீழ் இயக்குனர் ராமுடன் முத்துக்குமாருக்கு நட்புண்டான கதை சுவாரஸ்யமிக்கது. அவர்களுக்குள் நட்புருவான அதே வனத்தின் நிழலில் நானும் இளைப்பாறிக் கொண்டிருப்பதாலோ என்னவோ எனக்கு இத்தனை களிப்பு. இந்த வாழ்க்கைதான் நமக்காக எத்தகைய இன்பங்களை, ஆச்சரியங்களை வைத்துக்கொண்டு காத்திருக்கிறது!
குழந்தைகளுடன் விளையாட யாருக்குத்தான் பிடிக்காது. அவர்களுடனே குழந்தையாகி மீண்டும் துள்ளிட எந்த மனம் மறுக்கும். இவரின் ஞாயிறுகள் விடிவதே இவரின் குழந்தை உருவைக் காணத்தானோ என்னவோ? குழந்தைகளை எளிதில் ஏமாற்றி விடலாம். இந்தத் தந்தை அதை என்றும் செய்ததே இல்லை என்றுதான் நினைக்கிறேன். ‘பௌர்ணமி காலம்’ தலைப்பின் கீழ் இவரை ஆகச்சிறந்த தந்தையாக காண முடிந்தது. கிணற்றில் மிதக்கும் வெள்ளிக்கிண்ணத்தைக் காட்டி ஒரு தந்தையாக வெற்றி பெற்றார். கிணற்றில் முளைத்த கவிதையால் தலைசிறந்த கவிஞனும் ஆனார். இக்கட்டுரையில் அனுபவத்தின் சுவை மட்டுமே எடுத்துக்கொள்வதற்கில்லை. நாம் கற்றுக்கொள்ளவும் நிறைய இருக்கிறது.
‘குட்டிப் புத்தரின் கேள்வி’ முத்துக்குமாரைப் போலவே வாசகர்களையும் சிந்திக்க வைக்கும். இந்த ஒரு கட்டுரையில் மட்டுமே ஆறு எழுத்தாளர்களின் சிந்தனைகளை பகிர்கிறார். வேடிக்கை பார்ப்பவன். ‘வெந்து தணிந்தது காடு’ என்று பாரதியின் குரலை கேட்டிருப்போம். முத்துக்குமாரின் காட்டில் தணியாது வெந்துகொண்டிருக்கிறது ஒரு சிறு பிள்ளையின் பெரும் உருவம். இவர் ‘புன்னகைக்க மறந்த கதை’யைப் படிக்கையில் நானும்கூட மறந்தே போனேன் புன்னகைக்க. ‘இவன் இவனான கதை’யில் ரியலிசம், மேஜிக்கல் ரியலிசம், போஸ்ட் மார்டனிசம், ஸ்ட்ரக்சுரலிசம் என இவர் கற்றுக்கொண்டதைப் பகிர்ந்து, கற்றல் ஆர்வத்தையும் தூண்டியுள்ளார். ‘அன்புடன்’ என்று கையெழுத்திட்டுப் புத்தகப் பரிசுகள் வழங்கி அறிவுரைகள் வழங்க ‘இலக்கிய வட்டம்’ நாராயணன் சார் போல் மனிதர்கள் அருகில் இருந்தால் வாழ்க்கை எவ்வளவு அர்த்தமாகிவிடுகிறது.
‘இவன் நானாகும் அத்தியாயம்’ நெஞ்சம் நனைக்கும் அத்தியாயம். இயக்குநர் பாலுமகேந்திராவின் இறப்பைப் பற்றியது அந்த அத்தியாயம். ‘நான் இல்லாமல் போகிறேன் / ஆனால் வசந்த காலம் /என்னுடைய நினைவுகளுடன் / இருந்துகொண்டே இருக்கும்.’
என்று இறக்கப் போகிற கடைசி நிமிடத்தில் ஜப்பானியக் கவிஞர் பாஷோ எழுதிய ஹைக்கூவுடன் தொடரும் அந்த அத்தியாயத்தில் ஈடு இணை இல்லா மாபெரும் கலைஞரின், ஆசிரியரின், மனிதரின் இன்மையை, சொல்லவே இயலாத நிரந்தரப் பிரிவின் வலியை வார்த்தைகளில் கோர்த்திருக்கிறார் முத்துக்குமார். ‘மரணம் ஒரு மோசமான சதுரங்கம். எத்தனை பேர் சுற்றி நின்று பாதுகாத்தபோதிலும் அது எங்கள் பிரியத்திற்குரிய அரசனை அழைத்துச் சென்றுவிட்டது’ என்ற வரிகள் போதாதா பாலுமகேந்திராவின் பிரிவு வேடிக்கை பார்ப்பவனை எப்படி வாட்டி இருக்கிறதென்று அறிந்துகொள்ள.
‘திரும்பி வருகையில் வடக்கு உஸ்மான் ரோட்டில் உள்ள நியூ லேண்ட்ஸ் புத்தகக் கடைக்கு அழைத்துச் சென்று அன்று புதிதாக வந்த அத்தனை கவிதைத் தொகுப்புகளையும் வாங்கி ‘அன்புடன்’ என்று கையெழுத்திட்டு எனக்குக் கொடுப்பீர்கள்’இவருக்கு அன்புடன் என்று எழுதிப் புத்தகங்கள் கொடுத்த இவரும் பிரிவைப் பரிசாக்கிச் சென்று விட்டார்.
தந்தையென பாலுவை நினைத்த உள்ளம் ‘என் ஞானத் தகப்பனே நீங்கள் இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையில்தானே, என் தகப்பன் ஏழு வருடங்களுக்கு முன்பு என்னை விட்டுவிட்டு இறந்து போனான்.’ என்று அழுகிறது. இவர் இழப்பை ஏற்காத குழந்தை மனம் ‘இப்போதுகூட நீங்கள் வானத்திலிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையில்தான் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்’என்று தன்னை ஆற்றுப்படுத்திக்கொள்கிறது. இவ்வாறான வரிகளின் அலைவரிசையில் அவரின் வலி நம்மையும் ஒட்டிக்கொள்ளும். வேடிக்கை பார்ப்பவனில் அறியலாகும் இன்னொரு முக்கிய நபர் வேடிக்கை பார்ப்பவனாய் உலகை ரசிப்பவனாய், இவரை உருவாக்கிய இவரின் தந்தை. இந்தக் கட்டுரைத் தொகுப்பில் ஆங்காங்கே வெளிப்படும் இவரின் தந்தை அன்பும், இவர் தந்தையாக மகனுக்கு கொடுத்த அன்பும் அத்தனை அழகு. ‘பட்டாம்பூச்சி விற்ற கதை’யில் ‘வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் பண்ணப்பார்….. என்று சொல்வார்கள். அந்தப் பழமொழியில் பின் இணைப்பாக ‘கவிதைப் புத்தகம் வெளியிட்டுப்பார்’ என்பதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்’ என்று மனதின் பெரு வலியை மிக இயல்பாய் பகிர்ந்திருந்தார். பதிப்பகங்கள் புதுப்பாதை காட்ட களைத்துப்போகவில்லை நம் கவிஞன். அவன் உழைப்பெல்லாம் ஆவியாகி அறிவுமதி அண்ணனைச் சேர்ந்தது போல. அறிவுமதி அண்ணன் அணைத்துக்கொள்ள, இயக்குனர் பாரதிராஜா வார்த்தைகளுடன் புத்தக வெளியீடு செலவின்றி நிகழ்ந்தது. முத்துக்குமார், உன் முதல் கவிதை தொகுப்பு ‘தூசிகள்’. அதைப் பற்றி கூறுகையில் ‘உண்மையில் தூசிகளின் இருப்பிடம் பரண்கள்தானே!’ என்றாய். நிச்சயம் நீ எங்கேயோ இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறாய் என்ற நம்பிக்கையில்தான் சொல்கிறேன் தெரிந்துகொள், இப்பொழுது உன் கவிதைகள் கலக்காத காற்றே இல்லை. ‘வயதென்னும் ரயில் வண்டி’ கட்டுரை புதுவித அனுபவத்தைத் தரும். இவரின் உவமைகளும் உருவகங்களும், ஓர் உச்சத்தில் தொடங்கி நம்முடன் இணங்கி நடக்கத் தொடங்கும் தன்மையும் படிப்போரை இன்னும் ஆழமாய் உள்ளிழுக்கும். அனுபவங்களினூடே இவரின் புனைவுகளும், ஆங்காங்கே கடவுளும் சிறுவனும் வருவது வேடிக்கை பார்ப்பவனின் தனிச்சிறப்பு.
வாழ்வின் அனைத்துச் சாரங்களையும் தன்னுள் வைத்திருக்கிறது வேடிக்கை பார்ப்பவன். ஒவ்வொரு தலைப்பினுள்ளும் அத்தனை கருத்துகள், அழகான நினைவுகள். முத்துக்குமாருக்குக் கிடைத்த நண்பர்கள் போல் எமக்கில்லையே என்ற விரக்தி கூட வந்தது. ஒருவன் உலகறியும் புகழைப் பெற எத்தனையைக் கடந்து வந்திருக்கிறான் என்பதை உணர்த்துகிறது வேடிக்கை பார்ப்பவன். கவனித்து ஆழமாய் இந்நூலை வாசித்து உணர்ந்தால், நாம் எடுத்துக் கொண்டு பயணிப்பதற்கு நிறைய உள்ளன. “வேடிக்கை பார்ப்பவன்” என்னும் கடலின் சில துளிகளை இங்கே நான் பகிர்ந்திருக்கிறேன். அன்பர்களின் மத்தியில் அரும்பிய இக்கவிஞனை, வேடிக்கை பார்ப்பவனை நாம் ஏன் படிக்க வேண்டும் என்பதற்கான மூன்று குறிப்புகள். ஒன்று, இவன் கவிதை எழுதுகிறான். இரண்டு, அதைக் கிழிக்காமல் இருக்கிறான். மூன்று, நம்மிடம் படிக்க கொடுக்கிறான். l
previous post
