தமிழ் நவீன இலக்கியத்தில் பிராமணர்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு படைப்புகள் வெளிவந்துள்ளன. குறிப்பாக, பிராமணப் பெண்களின் வாழ்நிலையைச் சித்திரிப்பதாகப் பிரதாப முதலியார் சரித்திரம், கமலாம்பாள் சரித்திரம், பத்மாவதி சரித்திரம் தொடர்ந்து கு.ப.ராஜகோபாலன், புதுமைப்பித்தன், தி. ஜானகிராமன், ஜெயகாந்தன் போன்றோரின் புனைவுகள் பிராமணப் பெண்களின் வாழ்க்கைச் சிக்கல்களை வெளிப்படுத்துவதோடு சமூக மாற்றத்திற்கான வழிகளையும் காட்டுகின்றன. இவ்வாறு தமிழ்ச் சூழலில் மட்டுமல்லாமல் இந்தியச் சூழலளவிலும் குழந்தைத் திருமணம், விதவைத் திருமணம், மறுமணம் சார்ந்து விவாதிக்கப்பட்டிருக்கின்றன.
அந்த வகையில், எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித் எழுதிய ‘நான் லலிதா பேசுகிறேன்’ நாவல் குழந்தைத் திருமணம் நடைபெற்று வந்த காலகட்டத்தை முன்னிறுத்துகிறது. ஆறு வயதில் திருமணமாகி ஒன்பது வயதில் விதவையான ‘லலிதா’ என்கிற பெண்ணின் அகவுலகச் சிக்கல்களையும், அவள் சமூகத்தில் எதிர்கொள்கிற சிக்கல்களையும் இந்நாவல் விவரித்துப் பேசுகிறது. புனைவோடு வரலாற்றுப் பாத்திரங்களின் ஆளுமைச் சித்திரத்தையும் வரலாற்று நிகழ்வுகளையும் இந்நாவல் பதிவு செய்துள்ளது.
வரலாற்றுக் கதாபாத்திரங்களான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, ஆர்.எஸ் சுப்புலட்சுமி, டாக்டர் டி.எஸ்சௌந்தரம், ராமச்சந்திரன், ஜெமினி கணேசன் மற்றும் ஐஸ் ஹவுஸ் இல்லத்தில் பால்ய விதவைகளாக வாழ்ந்த, முதன் முதலில் குயின் மேரிஸ் கல்லூரியில் பட்டம் பெற்ற அம்முக்குட்டி, லட்சுமி, பார்வதி போன்றோர் நாவலின் உரையாடலில் இடம் பெறுவதால் ‘லலிதா’ கதாபாத்திரம் மேலும் வலுப்பெறுகிறது. லலிதா பெற்றோரை இழந்தவள். தன் மாமனாரின் உதவியால் மருத்துவர் ஆனவள். தங்கை ராதாவைக் குழந்தைத் திருமண வாழ்க்கையிலிருந்து காப்பாற்றியவள். பிறகு தன் தங்கையையும் இழக்கிறாள். `வெர்ஜின் விடொ`வாக இவளின் அகவய உணர்வுகளை நீல்கமலுடன் ஏற்பட்ட காதலில் புரிந்துகொள்ளலாம். வழக்கறிஞருக்குப் படிக்கும் பெங்காலி பிராமின் நீல்கமல். சட்டம், அரசியல், சமூகச் சீர்திருத்தம் சார்ந்து பேசக்கூடிய ஒரு முற்போக்கு சிந்தனையாளன். இவர்களுடைய காதல் கடிதங்களோடும் கனவுகளோடும் பயணிக்கிறது. பிறகு இந்தியன் நேஷனல் ஆர்மியில் சேர்வதாகக் கூறிய நீல்கமலிடமிருந்து எந்தக் கடிதமும் வராத சூழலில் லலிதா நீல்கமலின் கற்பனையோடு பயணிக்கிறார்.
லலிதாவின் கதை நகர்வைச் சுற்றி சுந்தரி, கல்யாணி, கோமதி, சங்கரி, கௌரி, ராதா இவர்கள் சார்ந்த கிளைக் கதைகளும் நாவலில் இடம் பெற்றுள்ளன. குழந்தைத் திருமணமானாலும் விதவைகள் இறந்த பின்பும் ‘சடங்குகள்’ என்கிற பெயரில் நடக்கும் அவலங்களைச் சுந்தரி கதாபாத்திரத்தின் மூலம் அறிய முடிகிறது. பெரும்பாலும் குழந்தைத் திருமணமான விதவைகள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு அடைக்கலமாக இருந்த ஐஸ் ஹவுஸ் இல்லமும், ஔவை இல்லமும் முக்கியக் களமாக நாவலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நாவலில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி முக்கியமான கதாபாத்திரமாக வருகிறார். சிஸ்டர் சுப்புலட்சுமி நடத்திய ஐஸ் ஹவுஸ் இல்லம் பிராமணர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கியது. பிராமணரல்லாதவர்களுக்கு அனுமதி வழங்காத சூழலில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 1930 ஆம் ஆண்டு அவ்வை இல்லத்தைத் தோற்றுவிக்கிறார். இதில் பிராமணரல்லாதவர்கள், ஆதரவற்ற பெண் குழந்தைகள், குழந்தைத் திருமணமான விதவைகள் போன்றோருக்கு அனுமதி வழங்கியதோடு அவர்களுக்குக் கல்வியும் கிடைக்கும்படி செய்கிறார்.
நாவலின் இடையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 1928 மார்ச் 27 அன்று சென்னை மாகாண சட்டசபையில் குழந்தை திருமணத்தை எதிர்த்து ஆற்றிய உரை இடம்பெற்றுள்ளது. இவ்வுரையில் குழந்தைப் பருவத் திருமணத்தின் மோசமான விளைவுகள் சார்ந்து விவாதிக்கிறார். மேலும், சிறிய வயதில் திருமணமான ஆண் பிள்ளைகளின் வாழ்க்கைப் போராட்டங்கள் சார்ந்தும் பேசியுள்ளார். முக்கியமாக, இவ்வுரையில் சுஸ்ருதர், சரகர் ஆகியோரின் விவாதங்கள் இடம்பெற்றுள்ளன. பெண்ணுக்குத் திருமண வயது 16 என்றும், ஆணுக்கு 24 என்றும் வலியுறுத்துகின்றனர். மேலும், இவர்களின் வாதத்தில் சிறுவயதில் திருமணம் புரிவதற்கு எதிராக உள்ள பழங்கால அதிகாரப்பூர்வமான சாஸ்திரங்களைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்திய மரபில் வேதங்கள், புராணங்களைப் பார்க்கும் போது குழந்தைத் திருமணம் நடக்கவில்லை என்றும், சுயம்வரம் மூலமோ அல்லது பெண்களின் விருப்பத்திற்கேற்றாற் போலவே திருமணம் நடைபெறும் வழக்கம் இருந்ததாகவும் குறிப்பிடுகின்றனர். மேலும் சீதை, தமயந்தி, சாவித்திரி போன்ற பெண்கள் தங்கள் கணவரைத் தேர்ந்தெடுக்கக்கூடிய முழுச் சுதந்திரம் அவர்களுக்கு இருந்தது என்கின்றனர். ஸ்மிருதிகள் காலத்தில்தான் இந்த ஒழிக்கப்பட வேண்டிய வழக்குகள் இந்துச் சமுதாயத்தைப் பீடித்தன என்று கூறுகின்றனர். திருமணம் மட்டுமே ஒரு பெண்ணின் வாழ்க்கை லட்சியமாக இருக்க முடியாது என்பதை விஸ்வவாரா, ஷாஷ்வதி, கார்கி, மைத்ரேயி, அபாலா, கோஷா, அதிதி, ரோமாஷா, பானுமதி, லீலாவதி போன்ற கதாபாத்திரங்களின் வழியாக எடுத்துக்காட்டுகின்றனர். குறிப்பாக, நாம் ஒரு வலிமை வாய்ந்த சுயமரியாதை உள்ள நாடாக வளர வேண்டுமென்றால் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் உச்சத்தை அடைய வேண்டுமென்றால் குழந்தைப் பருவத் திருமணப் பழக்கம் ஒழிய வேண்டுமென்று இவ்வுரையில் வலியுறுத்துகிறார்.
சென்னை அரசாங்க மருத்துவமனையில் பணிபுரியும் லலிதாவை உடல் சார்ந்து அணுகக்கூடிய போக்கும் காணப்படுகிறது. கௌரி மாமியின் கணவன், மருத்துவர் விஸ்வநாதன், மருத்துவர் பரிமளாவின் அண்ணன் வேணுகோபாலன் ஆகியோர் லலிதாவிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சிக்கின்றனர். இந்தச் சம்பவங்கள் லலிதாவை வெகுவாகப் பாதிக்கின்றன. இவள் நீல்கமலை நாவல் முழுவதும் தேடுகிறாள். நீல்கமலின் நினைவாக அவ்வை இல்லத்தில் இருந்த ஆதரவற்ற ஆண் குழந்தைக்கு நீல்கமல் என்ற பெயர் சூட்டுகிறாள். நீல்கமலிடம் இருந்து எந்தக் கடிதமும் வராத சூழ்நிலையில் அவள் அந்தக் கடிதத்தைப் பலவிதமாகக் கற்பனை செய்து கொள்கிறாள். பிறகு நீல்கமல் லலிதாவின் நினைவுகளிலிருந்து மறைகிறான். லலிதாவும் மூளையில் கட்டி ஏற்பட்டு இறந்துவிடுகிறாள். இந்நாவலிருந்து சமூகத்திற்கும், உடல் தேவைக்கும் இடையில் சிக்கிக்கொண்ட லலிதாவின் மன உளவியலைப் புரிந்து கொள்ள முடிகிறது.
சமகாலத் தமிழ் நவீன இலக்கியத்தில் வட்டாரம் சார்ந்த படைப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அதாவது, சமூகக் குழுக்களிடையே நிலவக்கூடிய பிரச்சினைகளை மையமிட்ட படைப்புகள் வெளிவரும் சூழலில் குறிப்பிட்ட சமூகப் பெண்களின் உளவியல் சிக்கல்களைப் பற்றி எழுதப்பட்டதில் இந்நாவல் முக்கிய இடத்தைப் பெறும். l