தன் “வாழ்க்கைப் பார்வையையே” மையமாகக் கொண்டு இயங்கும் புதிய புனைகதை முயற்சியே இந்நூல். சிலுவை என்ற ஒருவர் தன் வாழ்க்கையை எப்படிக் கொண்டு சென்றார் என்பதை மொத்தமாகச் சொல்லும் கதை. அவர் பாளையங்கோட்டை சென் சேவியர்ஸ் கல்லூரியில் படித்து ஆசிரியர் வேலைக்கு, தான் கலந்துகொண்ட நேர்முகத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு கதை தொடங்குகிறது.
‘பசங்க மொழிப் பாடத்துக்கு வருவதே ஜாலியா இருக்கத்தானாம். ஏம்னா இதுல நாற்பது மார்க் எடுத்தாலே போதும். பாஸ் பண்ணினா போதும். தமிழ் மொழிப் பாடத்துல பாஸ் பண்ண வாத்தியாரே தேவையில்லை. பஜார் நோட்ஸ் போதும்’ என்கிறார். காரைக்காலில் வேலை கிடைத்த சிலுவை அங்கேயே வேலை பார்க்கிற ஒரே காரணத்தாலேயே தன் இனத்தைச் சேர்ந்த பொன்னம்மாவைத் திருமணம் செய்கிறார். ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் குடி அமர்கிறார்கள். வீட்டு ஓனரம்மா நேரடியாக ‘ நீங்க என்ன வர்ணம்?’ னு கேட்கிறார். சிலுவை ‘நாங்க கிறிஸ்டியனுங்க!’ என்கிறார். ‘அப்போ காரைக்கால் பெரிய கிராமம். அதனால இப்படி வர்ணத்தை முகத்துக்கு நேராகக் கேட்பது இயல்பாக இருக்கிறது. பெரு நகரம்னா சாதியப் பத்தின விசாரணை அமுக்கடியாக இருக்கும்.’
‘ஓஹோ! அவர் உங்க ரிலெடிவ்வா’ ன்னு கேட்பாங்க. அதுதானே நாகரிகம்; இப்படி எழுதி இருப்பது வலியின் வர்ணம். இப்போ நம் மனச்சாட்சியை நாம் கேட்டுக்கொள்வோம்.
வளர்ந்திருக்கிறோமா?? ஹோட்டலில் சர்வர் ‘பொரிச்ச மீனுன்னா ஷீலாதான்’ என்கிறார். சிலுவைக்கு செம்மீன் படக் கதாநாயகி ஞாபகத்துக்கு வருகிறாள். எங்க பக்கம் சீலா மீனுன்னுதான் சொல்வோம். ஆனால் சில இடங்களில் அதை ஷீலா மீனாக்கி விடுகிறார்கள். இது நகைச்சுவையின் வர்ணம். ‘அந்த பாரம்பரிய மரங்களைத் தனது இரண்டு கைகளாலும் அணைக்க முடியாமல் அணைத்து முத்தமிட்டு சிலுவை கிறங்குவதுண்டு. இயற்கையின் வசீகரத்துக்கு முன் நாம் பெண்களாகவோ குழந்தைகளாகவோ மாறி விடுகிறோம் என்று சிலுவை சொல்லுவான். அதாவது மென்மையாகி விடுகிறோம் என்பதைத்தான் இப்படிச் சொல்கிறார் என நினைக்கிறேன். இது காதலின் வர்ணம். சிலுவைக் குடும்பம் ஊர் வந்து சேர்ந்த அன்று எல்லாரும் சந்தோஷமாகச் சமைத்து உண்டு இருக்கிறார்கள். கொஞ்ச நேரத்திலேயே சிலுவை அவன் பெண்டாட்டி ஊரில் இடம் வாங்கி இருப்பது தெரிந்ததும் அவன் அம்மா தெரு மண்ணை வாரி எடுத்து வீசி ‘நீ நல்லாயிருப்பியா? விளங்க மாட்ட!’ ன்னு கரிச்சுக்கொட்டுவதும் அதனாலோ என்னவோ ஒரு வருடம் கழித்து சிலுவையின் இளைய மகள் ஜுரத்தில் படுத்தவள் இறந்து போகிறாள். இது அவலத்தின் வர்ணம்.
‘சிலுவை முதுகுக்குப் பின்னே அவன் சுயநலக்காரன், குடிகாரன்போல அவனைப் பற்றிய தீர்ப்புகள் குஷியாக பவனி வருவது அவனுக்குத் தெரியும். தான் அப்படிப்பட்ட ஆள் இல்லை என்று நிரூபிக்க அவசியமில்லை என்பது சிலுவையின் எண்ணம்’ இது சம நிலையின் வர்ணம். சிலுவை வேலை செய்த இடத்தில் கோட்டாவில் அவர் துணைப் பேராசிரியராக வந்ததைப் பெரிசாச் சொல்லும்போது சிலுவையின் எண்ணமாக ஆசிரியர் சொல்வது நம்மை சிந்திக்க வைக்கிறது. ‘பணம், பெரிய இடத்து சிபாரிசு, செல்வாக்கு, உயர்ந்த சாதி உறவுகள், அரசியல் தொடர்பு இதெல்லாம்தான் மெரிட்’ உண்மை. மெரிட் என்பது தேர்வு மதிப்பெண் மட்டுமில்லாமல், இதெல்லாம் சேர்ந்ததுதானே!! இது வீரத்தின் வர்ணம். புதைக்கப்போன இடத்துல திடீர்னு மழை ரொம்பப் பெய்து மழைத் தண்ணீர் பட்டதுல மயக்கம் தெளிந்து குழிக்குள்ள இருந்து முண்டி வந்து அதனால் ‘குழிமுண்டாம்’னு பேர் எடுத்த கதையை சிலுவையின் சம்சாரம் சொல்ல ஊருக்கு ஊர் ஒரு குழிமுண்டான் கதை உலவுவது சிலுவைக்கு ஞாபகம் வருகிறது. நீங்க சொல்லுங்க, இப்படி இறந்ததா நினைச்சுப் புதைக்கப்போன இடத்துல பிழைத்து வந்தவர்கள் கதை ஏதும் உங்களுக்கு ஞாபகம் வருதா? சிலுவையின் அப்பா ஒரு வித்தியாசமான கதாபாத்திரம். சிலுவையின் திருமணத்தின்போது அவன் மாமனார் வீட்டில் தன் குடும்பத்தைச் சரியாய் மதித்து நடத்தவில்லை என்பதால் சாகும்வரை அவர்கள் வீட்டுப்படி மிதிக்காதவர். சிலுவையின் மச்சினன் திருமணப் பத்திரிகையை ஒரு கவரில் போட்டு அவர்களுக்கே திருப்பி அனுப்பியவர். சிலுவையின் முதல் மகள் பிறந்ததைப் பார்க்க வந்த இடத்தில் “உனக்கு சமாதி காரைக்கால்ல தான்”னு ‘நகைச்சுவை’யாகச் சொன்னதாகச் சொன்னவர். இப்போ புரிஞ்சிருக்குமே, பார்ட்டி எப்படிப்பட்டவர்னு.
இப்படி ஓர் ஆளை எல்லாரும் கடந்து தான் வந்திருப்போம். இது கோபத்தின் வர்ணம். ‘செத்துப் போயிடுவோமோங்கிற பயத்துல அன்னைக்கிக் கையெடுத்துக் கும்புட்டு கண்ணீர் வடிச்ச மனுசனுக்கு இப்போ பொழச்சுக்கிடலாம்கிற தெம்பு வந்ததும் ஆளப் பிடிக்க முடியல’ மாற மாட்டாங்க. கடைசி வரை மாறவே மாட்டாங்க. ரசித்த வரிகள். இது அச்சத்தின் வர்ணம். இங்ஙனம் ஒரு நாவலில் நவரசங்களையும் கலந்து வானவில்லின் வர்ணஜாலங்களைப்போல படைத்திருக்கிறார். சிலுவையின் நண்பர் மூர்த்தி புத்தக விற்பனை செய்பவர். குடிக்கு ஆட்பட்டு தொழில் நடத்த முடியாமல், கந்துவட்டிக் காரர்களிடம் கழுத்தைக் கொடுத்து மீள முடியாமல், அமிழ்ந்துபோவதை வாசிக்கும்போது இது புத்தக வியாபாரத்துக்கு மட்டுமல்ல, எந்த ஒரு தொழில் செய்தாலும் அதன் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் தனி மனித ஒழுக்கம் மட்டுமே காரணமாக இருக்கும் என்று நம்மைச் சிந்திக்க வைக்கிறார்.
கஷ்டப்பட்டு முன்னேறி ஒரு கல்லூரிப் பேராசிரியர் நிலைக்கு வந்தாலும் அவர் கடந்து வந்த கடினப் பாதைக்குக் குடி ஒரு முக்கியக் காரணம். தாங்க முடியாத துயரம் வரும்போது சிலர் குடியின் பக்கம் ஒதுங்குகிறார்கள். அது தற்காலிகமானதுதான். எவ்வளவு வலிகள் வந்தாலும் சிலுவை தன் மனைவிமேல் ஆதங்கப்படுவதே இல்லை. அவர்கள் பக்கம் நின்றே சிந்திக்கிறார். எந்தவிதப் பின்புலமும் இல்லாமல் வளர்ந்து வந்த ஒருவர் செய்த நல்லவையும், செய்யக் கூடாத அல்லவையும் சொல்லும் அற்புதமான கதை. l
previous post