நேர்காணல்: சேது சொக்கலிங்கம், தலைவர்- பபாசி
சந்திப்பு: இரா.தெ.முத்து
48ஆவது சென்னைப் புத்தகக் காட்சியின் சிறப்பு அம்சங்கள் என்னவாக இருக்கும்?
சிறப்பு அம்சங்கள் நிறைய இருக்கின்றன. விரைவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து தெரிவிப்போம்.
இந்த டிசம்பரில் பபாசி ஒருங்கிணைக்கும் சென்னைப் புத்தகக் காட்சியைப் பொங்கலுக்கு முன்பாக முடிக்க வேண்டிய காரணம் என்ன?
இது புதிய முயற்சி அல்ல. 10 ஆண்டுகளுக்கு முன்பாக நான் தலைவராகப் பணிபுரிந்த காலத்தில் பொங்கலுக்கு முன்பாக மிகவும் வெற்றிகரமாகப் புத்தகக் காட்சியை நடத்தி இருக்கிறோம்.
சென்னைப் புத்தகக் காட்சி, சர்வதேசப் புத்தகக் காட்சி ஏன் வேறு வேறு இடங்களில், வேறு வேறு தேதிகளில் நடைபெறுகிறது.
பன்னாட்டுப் புத்தகக் காட்சியும், பபாசியும் இணைந்து நடத்த வேண்டிய நிகழ்வு. காலமும் சூழலும் ஒத்துவர முடியாத நிலை.
நான்கு ஆண்டுகளாக பதிப்பகங்களின் நூல்களைப் பொதுநூலக இயக்ககம் கொள்முதல் செய்யாமல் இருப்பதற்கான காரணம் என்ன?
நான்கு ஆண்டுகளாகப் பதிப்பாளர்களுக்கு நூலக ஆணை கிடைக்கப்பெறவில்லை. பதிப்பாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பபாசி தொடர் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது. விரைவில் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம்.
இது பற்றி பதிப்பகங்களுக்குத் தலைமை தாங்கும் (Book publishers and sellers association of south india) – பபாசி சங்கம் மற்றும் இதன் தலைவரான உங்கள் தலையீடு என்னவாக இருக்கிறது?
பபாசியின் முன்னெடுப்புகள் அனைத்தும் தாங்கள் அறிந்தவையே. தலைவர் என்ற முறையில் நானும் எங்கள் செயலர், பொருளாளர் அனைவரும் தமிழ்நாடு அரசு மாண்புமிகு முதலமைச்சர், மாண்புமிகு கல்வி அமைச்சர், திருமிகு பொது நூலக இயக்குனர் அவர்களையும் நேரில் சந்தித்து நமது கோரிக்கை மனுக்களையும் கொடுத்திருக்கிறோம்.
விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என நம்புகிறோம்.
பொதுநூலக இயக்ககம் வெளி்ப்படையான கொள்முதல் கொள்கை என இளம்பகவத் பொறுப்புக்காலத்தில் அறிவித்தார்களே? அது நடைமுறையில் இருக்கிறதா? இது கடந்த தேர்வுக்குழு முறையிலிருந்து எப்படி மாறுபடுகிறது?
வெளிப்படையான கொள்முதல் கொள்கைப்படி புத்தகங்கள் தேர்வு நடைபெறுவதாக பொதுநூலக இயக்குனர் அவர்களை சந்தித்தபோது கூறினார்கள்.
மாவட்ட நூலகங்களின் வாசகர்கள்தாம் வெளிப்படையான நூல் கொள்முதல் கொள்கைப்படி நூல்களைத் தேர்வு செய்வதாக அறிகிறோம். எந்த வாசகர்கள் எவ்வாறு தேர்வு செய்வார்கள்?
அரசு விதிகளின் படி தேர்வுமுறை ரகசியம். நம் வாசகர்கள் நல்ல நூல்களைத் தேர்வு செய்வார்கள் என நம்பலாம்.
ஊராட்சி முதல் பெருநகர மாநகராட்சி வரை மக்களிடம் வசூலிக்கப்படுகிற நூலக வரி வழியாகத்தானே நூல்களைக் கொள்முதல் செய்கிறார்கள்? இவ்வாறிருக்க, ஏன் இந்தத் தாமதம்? புதிய திமுக அரசிலும் இந்தத் தாமதம் தொடரும் காரணம்தான் என்ன?
வீட்டு வரி வசூலிக்கும்போது நூலக வரி 10% இருந்தது. அனேகமாக வரி உயர்வு காரணமாக 12% வரி உயர்ந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் சொல்வது சரி. ஆட்சி மாற்றம் காட்சி மாற்றத்திற்கும் வாய்ப்பிருக்கிறது.
9) சாதாரணத்தாள், மேப்லித்தோ போன்ற தாள்களில் அச்சடிப்பு மற்றும் தரமான தயாரிப்பு கொண்ட நூல்கள் என வகைமை இருக்கையில் அனைத்து நூல்களுக்கும் தட்டையான பாரத்திற்கு ₹5.50 என்ற கொள்முதல் விலை பயனுள்ளதாக இருக்கிறதா? இதில் மாற்றம் செய்ய வேண்டும்தானே? இதில் செய்யப்படும் விலை மாற்றம் தரமான நூல் தயாரிப்பிற்கு உதவுமா?
தற்போது தயாரிக்கப்படும் நூல்கள் மிக நல்லதாள் 70 GSM, N.S , போன்ற பேப்பர்களை பெரும்பாலும் பதிப்பாளர்கள் பயன்படுத்துகிறார்கள். நேர்த்தியான அச்சு, நல்ல பைண்டிங், பிரபல ஓவியர்களின் முகப்பு ஓவியம் என ஆங்கில நூல்களை விஞ்சும் அளவுக்கு அச்சு அசல் பதிப்பாக நூல்கள் வருகின்றன. தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மிக கணிசமான நூல் விலை ஏற்றம் செய்திருப்பதால் நமக்கும் நல்ல விலை நிர்ணயம் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். l