பரணி பாடுதல் என்பது சங்க இலக்கியத்தில் போரில் வென்றதற்குப் பாடப்படும் பாடல் எனப் பொருள். ஜெயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், தத்துவராயர், சீனிப்புலவர் இப்படிப் பல்வேறு புலவர்கள் பரணி பாடிய வரிசையில் நானிலம் பயனுற ஓடித் தன் நீரால் வளம் சேர்த்த ஒரு நதி கொண்ட பெருவெள்ளச் சேதத்திற்குப் பிறகான நகரமைப்பை, புனரமைப்பைப் பாடும் பரணி இது எம். எம். தீன் எழுதிய “நீர்ப்பரணி”.
தாசில்தார் மாணிக்கம் பிள்ளையின் கோப்புகளின்படி 1869இல் வந்த வெள்ளம்
20 1/2 அடி உயரமும், 1877இல் வந்த வெள்ளம் ஸ்ரீவைகுண்டத்தை கடும் சேதத்திற்கு உள்ளாக்கியதும், அதையெல்லாம் தாண்டி 1920 மற்றும் 1921ம் வருடம் பெய்த நூறுநாள் மழை என்பது கொடிதினும் கொடிது.
அப்படியான மழையை நூறு வருடங்களுக்குப் பிறகு சென்ற ஆண்டு (2023) பெய்த சிலநாள் மழையே பெய்து கெடுத்ததை நாம் கண்கூடாகப் பார்த்தோம். இத்தனைக்கும் இப்போது நீர் தேக்கும் எட்டு அணைகளும் கால்வாய்களும் பல தடுப்பணைகளும் கட்டப்பட்ட பிறகான வெள்ளச் சேதம் இது என்றால் அன்றைக்கு நூறாண்டுக்கு முன்பு நினைக்கவே பதற்றமாகிறது.
அன்றைக்கு ஆறுபேர் சேர்ந்தாலும் அசைக்கக்கூட முடியாத ஒழுக்கரைப்பெட்டி வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படுகிறதென்றால் வெள்ளத்தின் சீற்றத்தை எண்ணிக்கொள்ளலாம். சென்ற ஆண்டு (2023)ல் வந்த வெள்ளச் சேதத்தினைக் கண்கூடாகக் கண்டோம். கட்டிடங்களின் முதல்தளத்திற்கு, பனை உயரத்திற்கு என்று அடித்துச்சென்ற வெள்ளம் ஆங்காங்கே ஒதுக்கித்தள்ளிய நான்கு சக்கர வாகனங்களும் டிராக்டர்களும் பீரோக்களும் கிரைண்டர்களும் என பதற்றமானோம். எடுத்தவுடன் முதல் அத்தியாயத்திலேயே விடலிப்பனையில் சுடப்படும் வாசமிகு அவிசட்டிக் கிழங்கை நாவூற வைத்துவிட்டு அதைத் தின்னக்கூட விடாமல் வெள்ளைப்பூதம் அதாவது வெள்ளம்வந்து அடித்துக்கொண்டுபோகிற புதுமணத் தம்பதியோடு நாவல் தொடங்குகிறது. இது நடப்பதாகச் சொல்லப்படும் ஆண்டு
கி.பி.1850 இப்படி முன்னெப்போதோ வெள்ளம் அடித்துச் சென்று தன்னுள் புதைத்துக்கொண்ட புதையல் வடக்குக்கால்வாயில் தோண்டி எடுக்கப்பட்டதை அதில் இருந்த அரேபிய மற்றும் கீழைநாட்டு பழங்கால தங்கக்காசுகள் ஆறுபடி அளவில் இருந்ததாகச் சொல்கிறார் கலெக்டர் பக்கிள்துரை. அது அரசாங்கத்துக்குச் சொந்தமானது, அதனால் எடுத்தவர் திரும்ப ஒப்படைக்கவேண்டும் என்று தண்டோரா போடப்படுவது வழக்கம் எனினும் தோண்டி எடுத்தவர் தாங்களே அனுபவிக்கும் பாத்தியதையை வைத்துக்கொண்டார்கள் என்பதும் இதில் சொல்லப்படுகிறது.
நாவலில் விதவிதமான மரங்கள் செடிகள் கொடிகள் பூக்கள் பறவைகள் என எண்ணற்றவை அணிவகுக்கின்றன. அது மட்டுமின்றி, விதவிமான வாசனையும் அவிசட்டிக்கிழங்கு தொடங்கி மஸ்கோத் அல்லவா வரையிலும் நாவூற வைக்கின்றன. அதிலும் அந்த “ராணி” சோப் ஆரம்பம் முதல் கடைசி வரை ஆமாம் அந்த சோப்பைப்போலவே கடைசி வரையிலும் மணத்துக் கிடக்கிறது. சவராமங்கலம் குட்டிக் கொழும்பாக மாறத்தொடங்கியதைச் சொன்னதும் இப்போதெல்லாம் கொழும்புத் தேங்காய் எண்ணெய் வரத்து முன்போல இல்லையே என்ற ஏக்கம் எழுவது இயல்பு.
“தண்ணீராய்ப் பிறந்த தமிழ் வடிவம் அவள்” எனும் வரிகளை வாசித்ததும் அதனைக் கடக்க இயலாமல் மனம் செதில்கொண்ட மீனாய் நதியோடு பயணித்து திருவாங்கூர் சமஸ்தானத்து வழிச்சென்று அப்படியே சிலோன் வழி அரபிக்கடலுக்குள் ஓடி அரேபிய பூமியின் அடிவயிற்றில் ஓடி ஒளிந்துகொள்ளத் தோன்றியது. கண்ணும்மா சொன்ன கதைகள் அத்தனை வசீகரம்.
பெண்ணைப்பற்றி வர்ணிப்பதில் ஆண்கள் வஞ்சனையற்ற பெருந்தன்மைக்காரர்கள். இவர் எழுதிய சந்தனத்தம்மை, யாசகம், கிரகம் இப்படி எல்லாக் கதைகளிலும் பெண்ணை அத்தனை அழகாக வர்ணித்தவராயிற்றே! தாமிரபரணியை பெண்ணாக உருவகித்துச் செய்யும் வர்ணனைகள் அத்தனையும் வெகுசிறப்பு. அதுபோல பரத்தை மோகனா பற்றி ஒரு வர்ணனை, இடைக்கும் கைக்கும் இடையில் சிறிய துண்டு நிலா இடைவெளி என்று அவளின் வடிவழகைச் சொல்கிறார். சாதியும் மதமும் இங்கேயும் பாகுபாடு பார்க்கப்படுவது மோகனாவின் வார்த்தைகளில் “எந்த சூத்திரனுக்கும் இங்கு அனுமதியில்லை. ஒரு மிலேச்சன் என் வீட்டுப்பக்கம் அண்டினால் என் ஆசாரம் கலைந்து என் அழகு குலைந்து போகும். நான் பெரிய ஆட்களுக்கு படைக்கப்பட்டவள்” என்றெல்லாம் வெளிப்படுகிறது.
உதுமான் மைதீனின் வீட்டு கண்ணும்மா சொல்லும் அவர்கள் குடும்பத்துப் பொண்ணு கதையாக ஒன்று சொல்கிறார். பாத்திமா எனும் பதின்ம வயதுப் பருவப்பெண் ஆறடி நீளக்கூந்தலும் நீளக்கண்களுமாகப் பேரழகியாக இருப்பதைப் பார்த்த வெள்ளைக்காரன், தான் கட்டிக்கொள்வதற்காகப் பெண் கேட்கிறான். வெள்ளைக்காரனுக்கு, வேற்று மதக்காரனுக்கு எப்படித் தருவது என்று நடுவீட்டில் குழிதோண்டி அவளுக்குப்பிடித்த மிட்டாயும் பூந்தியும் தந்து உள்ளே இறங்கச்செய்து, வெள்ளைக்காரன் வந்துசென்றதும் வெளியே அழைத்துக் கொள்வதாகச் சொல்லி பலகையிட்டு மண்ணால் மூடியதில் மூச்சுப்போக வழியின்றி இறந்து போகும் அவலம் வாசிக்கையில் சென்ற ஆண்டு வெளிவந்த “ஆகஸ்ட் 16 / 1947” திரைப்படம் மனதில் ஓடியது.
1934ல் சவராமங்கலத்திலிருந்து புலம்பெயர்ந்து புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கேம்பலாபாத் எனப்படும் கேம்பல் மாநகரம் நம் கண்களில் காட்சியாக விரிகிறது. உதுமான் மைதீனுக்கு பூனைப்பெத்தாவின் மூலமாக அமானுஷ்யமாகத் தோன்றும் காட்சிகளும் கேட்கும் நற்சேதிகளும் எதிர்காலத்திற்கான நம்பிக்கை… அதாவது நாற்பது ஆண்டுகள் கழித்து நடக்கப்போகிற சம்பவங்கள் எனும்போது அதெல்லாம் நிகழ்ந்தவையாக இருந்திருக்கிறது. நாவல் முழுக்க எல்லா வகைமையிலான உணர்வுக் குவியலுமாக நதிகொண்ட வரலாற்றையும் நகராக மீண்ட கதையையும் சொல்கிறது. l
previous post