28.11.1820 அன்று பிறந்த மாமேதை ஏங்கெல்ஸ்ஸின் 200வது பிறந்த நாளைக் (2020) கொண்டாடியவேளையில், அவருடன் நெருங்கிப் பழகிய நண்பர்களின் நினைவலைகளைத் தொகுத்து, சோவியத் வெளியீட்டகம் ஒரு சிறுநூலை வெளியிட்டிருக்கிறது. அதன் மொழியாக்கமே இச்சிறுநூல். மாமேதை ஏங்கெல்ஸ் பற்றி நண்பர்கள் கூறியுள்ளவற்றைச் சுருக்கமாக்கிக் கீழே தரப்பட்டுள்ளது.
பால் லஃபார்கே; இக்கட்டுரையாளர் ஒரு பிரெஞ்சு மார்க்சிய சோசலிஸ்ட், பத்திரிகையாளர், எழுத்தாளர், போராளி மற்றும் மார்க்ஸின் இரண்டாவது மகள் லாராவின் கணவராவார். இவர் ஏங்கெல்ஸ்ஸுடனான தனது நினைவலைகளைப் பகிர்ந்துகொள்ளும்போது, “நீ இப்போது என் மகளின் காதலன் ஆகிவிட்டதால், நான் உன்னை கண்டிப்பாக ஏங்கெல்ஸுக்கு அறிமுகம் செய்துவைக்கவேண்டும்” என மாமேதை மார்க்ஸ் என்னிடம் கூறி, மான்செஸ்டருக்கு அழைத்துச்சென்றார். அங்கு, ஊருக்கு வெளியே சின்னதாக ஒரு வீட்டில்தான் ஏங்கெல்ஸ் தனது மனைவியுடன் வசித்து வந்தார். ஏங்கெல்ஸைப்பற்றி நினைத்தால், மார்க்ஸைப்பற்றிய நினைவுகள் வந்துவிடும். அதுபோலவே மார்க்ஸைப்பற்றி நினைத்தால் ஏங்கெல்ஸ் நினைவு வந்துவிடும். அந்தளவுக்கு அவர்களது வாழ்க்கை பின்னிப் பிணைந்திருந்தது.
1842 நவம்பரில், ‘ரெயினிஷ் ஜெய்டுங்கின்’ பத்திரிகையின் அலுவலகத்திற்கு ஏங்கெல்ஸ் வந்தபோதுதான் இருவரும் முதன் முதலாகச் சந்தித்துக் கொண்டனர். இப்பத்திரிகை தடை செய்யப்பட்டதும் மார்க்ஸ் பிரான்சுக்குக் குடியேறினார். பிறகு அங்கிருந்தும் வெளியேற்றப்பட்டவுடன் பிரஸ்ஸல்ஸ் சென்றார். ஏங்கெல்ஸும் மார்க்ஸைத் தொடர்ந்து அவ்வாறாகக் குடிபெயர்ந்தார். 1848-49இல் கொலோனிலிருந்து மார்க்ஸை ஆசிரியராகக்கொண்டு ‘1848 புரட்சி ரெய்னிஷ் ஜெய்டுங்’ எனும் புதிய பத்திரிகையொன்று வெளியானது. மார்க்ஸ் இல்லாத நேரங்களில் அப்பத்திரிகைப் பணிகளை ஏங்கெல்ஸ்தான் பார்த்துக்கொண்டார். ஐரோப்பாவில் புரட்சி தோற்றதும் மார்க்ஸ் லண்டனுக்கு குடி பெயர்ந்ததுபோலவே, ஏங்கெல்ஸும் லண்டனுக்கு குடிபெயர்ந்துவிட்டார். அங்கே இருவரும் அரசியல் போராட்டங்களிலும், அறிவியல் ஆய்வுகளிலும் தீவிரமாக ஈடுபட்டனர்.
ஏங்கெல்ஸுடனான நட்பு மார்க்ஸின் குடும்பம் முழுமைக்கானதாகும். மார்க்ஸின் குழந்தைகள் அவரது குழந்தைகள்போலத்தான். அக்குழந்தைகளும் ஏங்கெல்ஸை இரண்டாவது அப்பாவாகவே கருதினர். மார்க்ஸின் மறைவுக்குப்பிறகு, ஏங்கெல்ஸ் ஒருவரால்தான் மார்க்ஸின் கையெழுத்துப்பிரதிகளைச் சரி செய்து மூலதனத்தின் இதர பாகங்களை வெளியிட முடிந்தது. பிரடெரிக் லெஸ்னர்: இக்கட்டுரையாளர் ஜெர்மனியைச்சேர்ந்த தையல் தொழிலாளி. கம்யூனிஸ்ட் லீக்கின் உறுப்பினர். 1848 புரட்சியில் பங்கேற்றவர். மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகிய இருவருக்கும் நெருங்கிய நண்பராவார். இவர் ஏங்கெல்ஸைப் பற்றிக்கூறும்போது, 1847 இல் வெளிவந்த ’டொயிட்ஷே – ப்ரூசெலா’, ’ஜெய்டுங்’ பத்திரிகை மூலம் மார்க்ஸ் ஏங்கெல்ஸை அறிவேன். 1847இன் இறுதியில், லண்டனில் சர்வதேச தொழிலாளர்கள் இயக்கம் துவக்கப்பட்ட நாளன்றுதான் அவர்களிருவரையும் முதன்முதலாக கம்யூனிஸ்ட் சொஸைட்டியில் சந்தித்தேன். புதிய இயக்கத்திற்கான கொள்கைகள் நடைமுறைத் தந்திரங்கள் ஆகியவற்றை இறுதி செய்வதற்காக மார்க்ஸ், ஏங்கெல்ஸ், டபிள்யூ.உல்ஃப், டெடெஸ்கோ ஆகியோர் அங்கு வந்திருந்தனர். இந்தக் கம்யூனிஸ்ட் காங்கிரஸ்ஸில்தான் ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ எழுதும் பொறுப்பு மார்க்ஸ், ஏங்கெல்ஸிடம் தரப்பட்டது. 1848 ஜூன் இறுதியில் நான் லண்டனிலிருந்து கொலோன் வந்ததிலிருந்து எனக்கும், ஏங்கெல்ஸ், மார்க்க்ஸுக்குமான உறவு ஆரம்பித்தது. அங்கு அவர்கள் நடத்திவந்த ரெய்னிஷ் ஜெய்டுங் பத்திரிகையானது தடை செய்யப்பட்டபிறகு, மார்க்ஸ் பாரிஸுக்குச் சென்றார். ஏங்கெல்ஸ் அரசியலமைப்பிற்கான இயக்கம் நடந்துகொண்டிருந்த ஜெர்மனியிலுள்ள ஃபால்ஸிக்கு சென்றார். அரசியல் நெருக்கடிகளினால் மார்க்ஸ் பாரிஸிலிருந்து லண்டனுக்கும், பாடனில் புரட்சி முறியடிக்கப்பட்ட பிறகு ஏங்கெல்ஸ் அங்கிருந்து சுவிட்சர்லாந்துக்கும் பின்னர் அங்கிருந்து இங்கிலாந்துக்குச் சென்றார். இந்தக் காலகட்டத்தில்தான் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லீப்னெஃக்ட், வில்ஹெம் உல்ஃப் மற்றும் பல்வேறு அரசியல் போக்குகளைச்சேர்ந்த புலம் பெயர்ந்தோறும் கம்யூனிஸ்ட் எஜுகேஷன் சொஸைட்டியில் சேர்ந்து தீவிரப் பங்காற்றினார்கள்.
வில்ஹெம் லீப்னெஃக்ட்: இக்கட்டுரையாளர் ஒரு தையல் தொழிலாளி. மிக முக்கியமான ஜெர்மன் சோசலிஸ்ட். மார்க்ஸ்-ஏங்கெல்ஸின் நண்பர். 1848 பாரிஸ் புரட்சியில் பங்கேற்றவர். இவர் ஏங்கெல்ஸைப் பற்றிக்கூறும்போது, பிரிட்டிஷ் உழைக்கும் வர்க்கம் குறித்த ஏங்கெல்ஸின் புத்தகத்தை முன்பே படித்திருந்ததாலும், அவருடன் நெருங்கிப்பழகும் வாய்ப்பு இருந்ததாலும் அவரது கருத்துகளுக்கு அவரிடம் வலுவான, தீர்மானமான ஆதாரங்கள் உண்டு என்பதை விரைவில் அறிந்துகொண்டேன். இராணுவ விவகாரங்களிலும் அவர் மிகத்திறனுள்ளவர் என்பதையும் அறிந்தேன். ஏங்கெல்ஸ் சுவிட்சட்லாந்து மற்றும் லண்டனில் இருந்த காலங்களில் அவரைச் சந்தித்திருக்கிறேன். விஞ்ஞான சோசலிஸத்திற்கான அடித்தளத்தையும், சோசலிஸத்தின் நடைமுறைகளையும் தனது நண்பர் மார்க்ஸோடு சேர்ந்து உருவாக்கிய அறிவாளியாவார். மேலும், அறிவியல் அணுகல் முறையில் டூரிங்கிற்கு மறுப்பு, குடும்பத்தின் தோற்றம் உள்ளிட்ட நூல்களை எழுதியவராவார்.
எலினார் மார்க்ஸ் அவேலிங்: இக்கட்டுரையாளர் மார்க்ஸின் இளையமகள். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். இளம்வயதிலிருந்தே மார்க்ஸின் செயலாளர் போல உடனிருந்தவர். புகழ்பெற்ற பிரிட்டிஷ் மார்க்ஸியரான எட்வர்ட் அவேலிங்கை மணந்தவர். இவர் ஏங்கெல்ஸைப் பற்றிக்கூறும்போது, நான் பிறந்தது முதல் ஏங்கெல்ஸை எனக்குத் தெரியும். மார்க்ஸ்- ஏங்கெல்ஸ் ஆகியோரின் வாழ்க்கையும், பணிகளும் பின்னிப்பிணைந்தவையாகும். அவர்கள் பற்றி தனித்தனியே எழுத முடியாது. இந்த இரு மனிதர்களும் வெறும் கருத்துகளின் தலைவர்களாக, தத்துவத்தைப் போதித்தவர்களாக, அன்றாட வாழ்வின் உழைப்பிலிருந்து தம்மை ஒதுக்கிக்கொண்ட தத்துவவாதிகளாக மட்டுமே வாழ்ந்துவிடவில்லை. அவ்விருவரும் எப்போதுமே போராளிகளாக இருந்தார்கள்.
1845ல் மார்க்ஸைத் தொடர்ந்து ஏங்கெல்ஸ் பிரஸ்ஸல்ஸ் சென்றார். அங்குதான் அவர்களது கூட்டுப்பணி துவங்கியது. அங்கே இரு நண்பர்களும் சேர்ந்து ஜெர்மன் தொழிலாளர் சங்கத்தை ஆரம்பித்தார்கள். ஆனால், அதைவிட முக்கியமானது அவர்கள் “லீக் ஆஃப் த ஜஸ்ட்” டில் (League of the just) இணைந்ததுதான். இதிலிருந்துதான் தன்னுள் அகிலத்தைக் கருக்கொண்டிருந்த புகழ்பெற்ற ‘கம்யூனிஸ்ட் லீக்’ (Communist League) பின்னர் உருவானது. 1847இல் பிரஸ்ஸல்ஸில் வசித்துவந்த மார்க்ஸும், பாரிஸில் வசித்துவந்த ஏங்கெல்ஸும் ‘லீக் ஆஃப் த ஜஸ்ட்’ டின் ஆசிரியர்களாக இருந்தார்கள். அந்த ஆண்டில்தான் லீகின் முதல் காங்கிரஸ் லண்டனில் நடைபெற்றது. இரண்டாவது காங்கிரஸ் நடைபெற்றபோது மார்க்ஸும் கலந்துகொண்டார். அப்போதுதான் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கைக்கு விதை ஊன்றப்பட்டது. லண்டனிலிருந்து இரு நண்பர்களும் கொலோன் திரும்பியபிறகு, உடனடியாக நடவடிக்கைகளில் இறங்கினார்கள். அவர்களது நடவடிக்கைளின் விவரங்கள் ‘ரெய்னீஷ் ஜெய்டுங்’ மற்றும் மார்க்ஸின் நூலிலும் வெளியாகின. இதன் விளைவாகவே பத்திரிகைத் தடையையும், மார்க்ஸின் நாடு கடத்தலையும் எதிர்கொள்ள நேரிட்டது.
எட்வர்ட் அவேலிங்: கட்டுரையாளர் ஆங்கிலேய சோசலிஸ்ட், எழுத்தாளர், மார்க்ஸின் மகள் எலினாரை மணந்தவர். இவர் ஏங்கெல்ஸ் பற்றிக்கூறும்போது, கார்ல் மார்க்ஸ், சார்லஸ் டார்வின், ஏங்கெல்ஸ், ஆங்கில நடிகரான ஹென்றி இர்விங் ஆகியோர் மனதில் நிற்கக்கூடிய ஆளுமைகளாவர். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் கார்ல் மார்க்ஸ் வீட்டில் நடக்கும் கலந்துரையாடல்களில் ஒருமுறை கலந்துகொள்பவர்கள்கூட, அதை எந்நாளும் மறக்கமாட்டார்கள். அங்கே கலந்துகொள்ளும் அனைவரிடமும் அவரவர்களுடைடைய மொழிகளில் ஏங்கெல்ஸ்ஸால் உரையாட முடியும். அன்றாடம் தபாலில் பல மொழிகளில் வரப்பெறும் பத்திரிகை மற்றும் கடிதங்களைப் படிக்கவும், ஒழுங்குபடுத்தவும், குறிப்புகள் எடுக்கவும் ஏங்கெல்ஸ்ஸால் முடிந்தது. ஏங்கெல்ஸின் அனைத்து நண்பர்களும் அவரிடம்தான் வழிகாட்டுதல்களைக் கேட்பார்கள். ஏனெனில், ஒவ்வொரு நாட்டின் பொருளாதார, வரலாறு, அரசியல் இயக்கம் மற்றும் பொதுவான விஷயங்கள் மட்டுமின்றி, ஒவ்வொரு நுட்பமான தகவல்களையும் ஏங்கெல்ஸ் அறிந்து வைத்திருப்பார்.
ஃபேனி க்ராவ்சின்ஸ்கி: இக்கட்டுரையாளர் லண்டனில் புலம்பெயர்ந்த ரஷ்யப் புரட்சியாளரான செர்கெய் ஸ்டெப்னியாக் க்ராவ்சின்ஸ்கியின் மனைவியாவார். ஸ்டெப்னியாக் ஒரு ரஷ்ய ரகசிய போலீஸின் தலைவரை நடுத்தெருவில் கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டுத் தப்பிச்சென்ற புரட்சியாளர். இவர் ஏங்கெல்ஸைப் பற்றிக்கூறும்போது, பிளக்கனோவிற்கு எனது கணவர் செர்கெய்யைத் தெரியும். பிளக்கனோவ் ஒருமுறை எழுதிய கடிதத்தில், நீங்கள் லண்டனில் வசிக்கிறீர்கள். ஏங்கெல்ஸ் அங்குதான் வசிக்கிறார் எனவும் அவரிடம் பழக்கம் ஏற்படுத்திக்கொள்ளவும் வேண்டினார். ஒரு ஞாயிறன்று நாங்கள் மார்க்ஸின் மகள் எலினாருடன் ஏங்கெல்ஸ் வீட்டிற்குச் சென்றோம். அந்த அழகிய கிழவரைப் பார்த்ததுமே என் மனதில் அவர் குறித்து நல்ல அபிப்பிராயம் விழுந்தது. நான் மிகவும் கூச்சப்பட்டேன். அவர் என் சங்கடத்தைப் புரிந்துகொண்டு, என்னருகில் அமர்ந்துகொண்டு மிக இயல்பாக உரையாடத் துவங்கினார். ஒருமுறை ஏங்கெல்ஸ் உடல் நலம் குன்றியிருந்தபோது, எனது தோழி காட்ஸ்கிதான் உடனிருந்து கவனித்துவந்தார். காட்ஸ்கி அச்சமயத்தில்தான் எங்கோ செல்லவேண்டியிருப்பதால், ஒரு சில மணி நேரத்திற்கு ஏங்கெல்ஸை உடனிருந்து கவனித்துக்கொள்ளவேண்டும் என்றார். அப்போது மூன்று மணிநேரம் ஏங்கெல்ஸை கவனித்துக்கொண்டேன். அவர் உடல்நலம் குன்றியிருந்தபோதிலும், மார்க்ஸ் வழக்கமாக வந்து அமரும் நாற்காலியை எனக்குக் காண்பித்தார். மேலும் மார்க்ஸ் தனக்கு எழுதிய கடிதங்கள், புகைப்படங்கள், தன்னை வைத்து வரையப்பட்ட கேலிச்சித்திரங்களை எனக்குக் காண்பித்தார்.
மாமேதை வி. ஐ. லெனின்: ஏங்கெல்ஸ் 1895 ஆகஸ்ட் 5 அன்று மறைந்தார். அவர் பற்றி மாமேதை லெனின் கூறும்போது, ஏங்கெல்ஸ் பாட்டாளி வர்க்கத்திற்கு என்ன செய்தார் என்பதைப் புரிந்துகொள்ள மார்க்ஸின் போதனைகளின் முக்கியத்துவம் பற்றியும், சமகால உழைப்பாளி வர்க்க இயக்கத்தின் வளர்ச்சிக்காக அவர் செய்தது பற்றியும் நாம் தெளிவாக அறிவது அவசியம். மார்க்ஸும் ஏங்கெல்ஸும்தான் முதன்முதலாக உழைக்கும் வர்க்கமும், அதன் கோரிக்கைகளும் இன்றைய பொருளாதார அமைப்பின் ஓர் அவசியமான விளைவு என்பதையும், அது பூர்ஷ்வாவுடன் இணைந்து தவிர்க்கமுடியாத வகையில் உழைக்கும் வர்க்கத்தை உருவாக்கி அணிதிரட்டுகிறது என்பதையும் காட்டினார்கள். மனித இனத்தை இன்று ஒடுக்கிவரும் தீங்குகளிலிருந்து காப்பாற்ற ஒன்றுதிரட்டப்பட்ட பாட்டாளி வர்க்கப்போராட்டத்தால்தான் முடியும் என்பதைக் காட்டினர். மார்க்ஸும், ஏங்கெல்ஸும் முதன்முறையாக “சோசலிஸம் என்பது கனவு காண்பவர்கள் கண்டுபிடிப்பல்ல, மாறாக நவீன சமூகத்தில் உற்பத்திச்சக்திகளின் அவசியமான விளைவு இறுதி நோக்கம்” என்பதை விளக்கினார்கள். எழுதப்பட்ட அனைத்து வரலாறுகளும் வர்க்கப்போராட்டங்களின் வரலாறே என விளக்கினார்கள். l
previous post
