நமது நாட்டில் குடியேறிய வேற்றுநாட்டவர் தங்களது பழக்கவழக்கங்களை நம்மிடையே விதைத்தனர். அந்தப் பண்பாட்டின் தாக்கங்கள் நம் நாட்டில் மேலோங்கி உள்ள நிலையிலும் நாம் யார், அதாவது தமிழர்கள் என்பவர் யார், அவர்களின் பண்பாட்டு அடையாளங்கள் யாவை, அவர்களின் தோற்றம், குடியேற்றங்கள் எங்கு எப்போது, ஏற்பட்டன என்று எழும் பலவிதமான கேள்விகளுக்கு பதில் அளிப்பதாக இந்த ‘தமிழரைத் தேடி’ என்னும் நூல் அமைகின்றது. தமிழர்களின் பண்பாட்டில் முதன்முதலில் நுழைந்தது ஆரியப் பண்பாடுகள். சமஸ்கிருதத்தை முதன்மைப்படுத்தி அதிலிருந்துதான் தமிழ் மொழியானது செம்மை அடைந்தது என்று கூறும் சில வரலாற்று ஆசிரியர்களின் வாதங்களுக்கு இந்நூல் ஆசிரியர் தக்க பதிலடி கொடுத்துள்ளார். எடுத்துக்காட்டாக சமஸ்கிருதத்தில் உண்டான வேதங்களின் மரபுகளை ஏற்றுக்கொண்டதன் மூலம்தான் தமிழ் மொழியானது செம்மொழி தகுதியைப் பெற்றது என்று கூறுபவர்களுக்கு தகுந்த சான்றுகளின் மூலம் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய அரசுகளின் சூழ்ச்சிகள்:
இந்தியாவிற்கு காலணி அமைக்க வந்த ஐரோப்பியர்கள் இந்தியர்களை ஆள வேண்டும் என்றால் அவர்களின் கலை, பண்பாடு, அரசியல், வரலாறு போன்றவற்றை புரிந்துகொள்ள வேண்டும் என்பதை அறிந்தனர். ஆனால், துவக்கத்தில் ஐரோப்பிய அரசுகள் இம்முயற்சியில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. இதுதான் 1857ல் நடைபெற்ற சிப்பாய் கலகத்திற்கு காரணமாக அமைந்தது. பின்னர்தான் இந்தியர்களின் பண்பாடு குறித்த தங்களின் அறியாமையை எண்ணி பிரிட்டிஷார் சிந்தித்தனர். அதன் பிறகு இந்திய வரலாற்று ஆய்வை மேற்கொள்ள ஐரோப்பிய அறிஞர்கள் பெரிதும் முனைந்தனர். பல வெளிநாட்டு அறிஞர்கள் இந்திய மக்களின் தேசிய உணர்ச்சியின்மையையும், அவர்கள் அரசியல் அறிவு இல்லாமல் இருப்பதையும், பல அதிகாரங்களின் கீழ் துன்புறுவதையும் குறிப்பிட்டுள்ளனர். இந்த அறியாமையை வைத்துத்தான் உங்களை நல்ல முறையில் நாங்கள் ஆள்வோம் என்று ஐரோப்பியர்கள் இந்திய மக்களை நம்ப வைத்தனர்.
அன்றைய இந்தியா பல்வேறு மொழிகளையும், பல்வேறு பண்பாடுகளையும், பல இன மக்களையும் கொண்டதாக இருந்ததால் அவர்கள் ஒரு முகத்தோடு ஒரே சமூகமாக வாழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்று ஐரோப்பியர்கள் இந்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயன்றனர். ஆனால், இந்தியர்களுக்கு பழங்காலத்திலேயே மிகத் தெளிவான அரசியல் அறிவு இருந்தது என்பதை நமது ஆய்வாளர்கள் ஆய்ந்து கண்டறிந்துள்ளனர். ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என்று நமது சமூகம் ஒன்றிணைந்து இருந்தது அதுவே நமது பண்பாட்டின் சிறப்பு என இப்பரப்புரைக்கு நம்மவர்கள் எதிர்ப்புக் காட்டினர். இவ்வாறு நமது அறியாமையை பயன்படுத்தி ஐரோப்பியர்கள் வைக்கும் ஒவ்வொரு வாதத்திற்கும் நமது ஆய்வாளர்கள் தக்க சான்றுகளோடு பதில் அளித்த விதத்தை இந்நூல் ஆசிரியர் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளார்.
இந்தியாவின் மூலப்பண்பாட்டை அறிதல்:
ஆரியர்கள் எங்கிருந்து வந்தனர், அவர்கள் எந்தக் குடும்பத்தை சேர்ந்தவர்கள், அவர்களின் பழக்க வழக்கங்கள் பண்பாடுகள் என்ன என்று பல்வேறு விதமான அறிஞர்கள் பல்வேறு விதமான கருத்துக்களை முன்வைத்தனர். அவற்றுக்கு எல்லாம் விடையளிக்கும் விதமாக அவர்களின் கலாச்சாரப் பழக்கங்கள், அவர்களின் பூர்வீகம் என அனைத்தையும் தொல்லியல் ஆய்வை முன்வைத்து நூலாசிரியர் இந்நூலில் தெளிவுபடுத்தி உள்ளார்.
ஆரிய சமூகத்திற்கும் தமிழ் சமூகத்திற்கும் பொதுவான பண்பாட்டு கூறுகள் பல உள்ளன. அரசியல், மொழி, இலக்கணம், எழுத்து, நாட்டியம், இசை, மருத்துவம், போர்க்கலை போன்ற பல பண்பாட்டுக் கூறுகளில் ஒரு பொதுத் தன்மையைக் காண முடிகிறது. இந்த மாதிரியான ஒப்புமைகளின் மூலமாக ஆரியரின் முயற்சியினால்தான் சங்ககால தமிழ் சமூகம் உருவாகியது என்ற தவறான கருத்தை உருவாக்கி விட்டனர். ஆனால் தமிழுக்கும் ஆரியத்திற்குமான பொதுவான மரபு இந்தியாவில் இருந்திருந்தாலும் பல வேற்றுமைகளையும் நாம் காண முடிகின்றது. இவ்வளவு வேற்றுமைகளையும் காணும்போது தமிழின் திரிந்த பண்பாடு தான் ஆரியத்தின் வளர்ச்சிக்கு காரணமாக அமைந்து, அதிலிருந்துதான் பொதுத்தன்மையும் உருவாகியது என்பதை நூலாசிரியர் பல இலக்கியச் சான்றுகளுடனும் தொல்லியல் சான்றுகளுடனும் எடுத்துக்காட்டி உள்ளார்.
சுமேரியரின் இந்தியக் குடியேற்றம்:
வட ஆப்பிரிக்காவையும் மேற்காசியாவையும் பூர்வீகமாகக்கொண்டு வாழ்ந்த கருப்பு நிறக் குடிமக்கள்தான் உலகிலேயே முதன்முதலில் விவசாயத்தைக் கண்டுபிடித்தனர். இந்த இரண்டு குடிகளும் தங்களது பண்பாட்டில் ஒன்று கலந்து மூதாதைய சுமேரியர் மற்றும் மூதாதை எகிப்தியர் என பரிணமித்தனர். இதில் மூதாதை எகிப்தியர் மூதாதை சுமேரியருடன் இணைந்து ஒரே வணிகக்குடிகளாக மாறியிருந்ததால் இவ்வணிகக்குடிகளை ‘மூதாதை சுமேரியர்’ என்றே இந்நூல் குறிப்பிடுகிறது.சுமேரியரின் இந்தியக் குடியேற்றத்தை மூன்று கட்டங்களாகப் பிரித்து இந்நூல் விளக்குகிறது. முதல் குடியேற்றம் (கி.மு. 2500 முதல் – கி.மு. 2000 வரை), இரண்டாம் குடியேற்றம் (கி.மு. 1500 முதல் – கி.மு. 1400 வரை) மற்றும் மூன்றாம் குடியேற்றம் கி.மு. 1200 காலகட்டத்தில் நடைபெற்றது என வரிசைப்படுத்துகிறது. குஜராத் பகுதியில் செம்பு பயன்பாட்டு கருப்பு சிவப்பு மண்பாண்டப் பண்பாடு, தென்னிந்திய புதிய கற்காலப்பண்பாடு, தென்பாண்டிய நாட்டின் ஆதிச்சநல்லூர் பண்பாடு ஆகிய மூன்று பண்பாடுகளும் முதல் குடியேற்ற காலகட்டத்தில் மத்தியதரை கடலோர வணிகக் குழுக்கள் சார்பாக குடியேறி இருந்ததையும், இரண்டாம் கால கட்டத்தில் வணிகக் குழுக்கள் பாண்டியர் என்ற வணிகக் குழுவின் தலைமையில் கூட்டணி அமைத்து ஆப்கானிஸ்தான் வரை பரவி இருந்ததையும், மூன்றாவதாக இந்தியாவிற்கு குடியேறி பாண்டியரின் தலைமையில் இயங்கியதையும் தெளிவாக இந்நூல் எடுத்துரைக்கிறது.
இந்தியாவில் கிடைக்கும் தொல்லியல் எச்சங்களையும், சுமேரியாவில் கிடைக்கும் கட்டடங்களின் இடிபாட்டு எச்சங்களையும் ஒப்பிட்டு சுமேரியாவிற்கும் தமிழகத்திற்கும் இடையே குடியேற்றங்கள் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்திருக்கும் என்பதை ஆய்வுபூர்வமாக எடுத்துக்காட்டி, தொல்லியல் என்பது தொன்மத்தின் எச்சங்கள் அல்ல, அது பண்பாட்டின் அடையாளம் என்பதை இந்நூல் மிக நேர்த்தியாக நிரூபிக்கிறது. மேலும், ஆதிச்சநல்லூர் பண்பாட்டினர் 4000 ஆண்டுகளுக்கு முன்பே தென் தமிழகத்திலிருந்து நேரடியாக கப்பலில் பயணித்து ஆஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளனர் என்றும், இவர்கள் மூலம் தமிழ்ச் சொற்கள், தமிழரின் மரபணுக்கள், டிங்கோ நாய், பூமராங் ஆகியவை ஆஸ்திரேலியா சென்றடைந்தன என்றும் இந்நூல் விளக்குகிறது.
தமிழ் மொழியின் பரிணாமம்:
மத்தியதரைக் கடலோர வணிகக் குழுக்கள் தென்னிந்தியாவில் குடியேறி இங்கு வாழ்ந்த பூர்வ குடிகளோடு இரண்டறக் கலந்து தமிழ் சமூகமும் தமிழ் மொழியும் பரிணமித்தன. ஒவ்வொரு குடியேற்ற காலகட்டத்திலும் தமிழ்மொழியில் ஏற்பட்ட மாறுதல்களை இந்நூல் எடுத்துரைக்கிறது. பாணினியின் இலக்கணத்தை அடியொற்றியே தமிழ் மொழிக்கு மட்டுமல்லாமல், பிராகிருத மொழிக்கும் இலக்கணம் வகுக்கப்பட்டதாக பலரும் நம்பி வருகின்றனர். ஆனால் இந்தக் கூற்றை மறுக்கும் வகையில் கி.மு. 5ஆம் நூற்றாண்டில் இருந்தே தமிழ் மற்றும் பிராமி எழுத்துகள் கிடைக்கின்றன என்றும், அதற்கு முன்பே பாணினியின் இலக்கண நூல் தோன்றியது எனக் கூறுவது ஆதாரமற்ற தவறான திரிபுகள் என ஆதாரத்துடன் மறுப்பு கூறப்பட்டுள்ளது.
மேற்காசிய வணிகக் குழுக்களின் முதல் இரண்டு கட்ட இந்தியக் குடியேற்றங்களில் மொழிகளுக்கு குறியீடுகளே பரவலாக பரவியிருந்தன. அதற்கு முன்பு கி.மு. 1700 வாக்கில் பாலஸ்தீனத்தில் புதிதாக உருவாகிய கானான் வணிக அரசுகள் ஓர் எழுத்துக்கு ஓர் உச்சரிப்பு என்ற நெடுங்கணக்கு எழுத்துமுறையை உருவாக்கினர். இந்நெடுங்கணக்கு முறையை உருவாக்கிய பாலஸ்தீனத்தின் வணிகக் குழுக்கள் இந்தியாவில் மூன்றாவது கட்டத்தில் க.சி.ம பண்பாடாகக் குடியேறினர். இந்த பாலஸ்தீன மொழி எழுத்துகளை தமிழ் எழுத்துகள் ஒத்துள்ளபோதிலும், ஒலிப்புகளிலிருந்து வேறுபடுகின்றன. இதிலிருந்து தமிழ் மொழியானது எவ்வாறு தனித்து நின்றது, தமிழ் மொழிக்கு ஏற்றவாறு ஒலிபுகள் எவ்வாறு மாறியது போன்றவை இந்நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்நூலில் பல புதிய கருத்துகள், பல புதிய ஆய்வு நோக்கிய பார்வைகள், சான்றுகள் போன்றவை பொருந்தும் விதத்தில் பொருத்திப் பார்த்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. உலகப் பண்பாடுகளின் பயணங்களை ஆராய்ந்து, அதன் படிநிலைகளை உற்று நோக்கி அது இந்தியப் பண்பாட்டோடும் தமிழகப்பண்பாட்டோடும் எவ்வாறு ஒன்றிப் போகிறது மற்றும் வேறுபடுகிறது என்பதை மிகத் தெளிவாக இந்நூல் எடுத்தாண்டுள்ளது. மேலும், இலக்கிய ஆதாரங்கள் கொண்டும், தொல்லியல் ஆதாரங்கள் கொண்டும் தமிழர் யார், அவர்களின் வரலாறு என்ன, அவர்களின் தொன்மை எவ்வளவு காலங்கள் முந்தியது போன்றவை மிக நேர்த்தியாக இந்நூலில் நூலாசிரியர் த.தங்கவேல் பேசியுள்ளார். l
previous post
