சாகித்ய அகாதெமியின் பால புரஸ்கார் விருது பெற்ற நூலான, “ தன்வியின் பிறந்தநாள்” என்கிற சிறார் கதைத் தொகுப்பு எனக்கு பிரமிப்பை உருவாக்கியது என்பதை அந்த நூலை வாசித்தவர்களால் நிச்சயமாகப் புரிந்துகொள்ள முடியும். தி.மாரிமுத்து என்கிற இயற்பெயரைக் கொண்ட இவர் ஏற்கெனவே ஒருமுறை சாகித்ய அகாதெமி விருதைப் பெற்றிருக்கிறார். “கசாக்கிண்ட இதிகாசம்”என்கிற தலைப்பில் மலையாள எழுத்தாளர் திரு. ஓ. வி. விஜயன் அவர்கள் எழுதிய நூலைத் தமிழில், “ கசாக்கின் இதிகாசம்” என்கிற பெயரில் மொழியாக்கம் செய்திருக்கிறார். பிற மொழியில் இருந்து தமிழில் செய்யப்படும் மொழிபெயர்ப்பு நூலுக்கான சாகித்ய அகாதெமி விருதை 2017ஆம் ஆண்டு வென்றுள்ளார்.
கவிதை மற்றும் ஓவியம் போன்ற நுண்கலைகளில் தேர்ச்சி பெற்றவர் என்பதாலேயே நுண்ணிய உணர்வுகளை இவரால் எளிதாகக் கதைகளின் ஊடே பொதிந்து வாசகர்களுக்குக் கடத்த முடிகிறது. கவிஞராக இருந்தாலும் சிறுவர்களுக்காக என்று எழுத வரும்போது தெளிவாக எளிமையாக எழுத வேண்டியது அவசியம். குழந்தைகளுடைய உலகமே தனி. அதில் வினோதமான சம்பவங்கள் அடிக்கடி நிகழலாம். ஏற்றத்தாழ்வு கிடையாது. மனிதர்கள், விலங்குகள், பறவைகள், அசையாப் பொருட்கள் என்று எந்தப் பாகுபாடும் அவர்களுடைய எண்ணங்களில் கிடையாது. என்ன வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் அவர்களுடைய கற்பனையில் நிகழலாம். அழகான கற்பனைகளின் உச்சம், இந்தப் புத்தகம் சிறப்பான பத்துக் கதைகளின் தொகுப்பு. தலைப்பிற்குக் காரணமான கதையே முதல் கதையாக அமைந்தது சிறப்பு. முதல் கதையில் தலைப்புக்கேற்றபடி தன்வியின் பிறந்தநாளன்று அதிகாலை நேரம். தன்வி தனது அறையில் நிச்சிந்தையாகத் தூங்கிக் கொண்டிருக்கிறாள். அவளுடைய பெற்றோர், தன்வி கண்விழிப்பதற்காக அவளுடைய கட்டிலருகே காத்துக்கொண்டிருக்கிறார்கள். அவளுடைய பிறந்தநாளை எப்படியெல்லாம் கொண்டாட வேண்டும் என்று பலவிதமான ஆசைகளுடன் த்திருக்கிறார்கள். தன்வி கண்விழிக்கப்போகும் அந்தத் தருணத்திற்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். தன்வி புரண்டு படுக்கும்போது அவளுடைய மூச்சுக்காறில் இருந்து குருவி, குட்டி யானை, நாய்க்குட்டி உருவாகி வெளியே வருகின்றன. இவற்றைத் தொடர்ந்து ஒவ்வொரு மூச்சிலிருந்தும் விதவிதமான விலங்குகள், பறவைகள், மரங்கள், மலர்த் தோட்டம், மலை, அருவி என்று ஒவ்வொன்றாக வந்து தன்வியைச் சூழ்ந்து நின்றன. அனைத்துமே தன்வியின் பிறந்தநாளன்று அவளுக்கு வாழ்த்துக் கூற விழைகின்றன. இத்தனை விலங்குகள், பறவைகள், அருவி, வனம், சூரியன், நிலவு இவை எல்லாமே தன்வியை வாழ்த்திவிட்டு அவளை முத்தமிட ஆசைப்படுகின்றன. இந்த ஆசைக்குப் பின்னால் இருக்கும் காரணம் என்ன? இவற்றின் ஆசை நிறைவேறியதா? எப்படி நிறைவேறியது?
இந்தக் கதையின் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால் மனிதனுடைய தேவைகள் அதிகரிக்கும்போது இயற்கையை எப்படி அழிக்கிறான் என்று மறைமுகமாகச் சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர். அடுத்த கதை சற்றே மாறுபட்டது. தலைவர் ஜெய் செய்தது சரியா என்கிற கேள்வி, கதையின் தலைப்பாக அமைந்திருப்பது ஆர்வத்தைத் தூண்டியது. ஜெய்யின் நண்பன் ஒரு செம்பூனை. செம்பூனை என்கிற பெயருக்கான காரணமும், அந்தப் பூனை ஜெய்யைத் தலைவர் என்று அழைப்பதன் காரணமும் சுவாரஸ்யமானவை. நீங்களே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
அம்மாவிற்காகத் தேநீர் வாங்க, ஃப்ளாஸ்க்கை எடுத்துக்கொண்டு ஜெய், சைக்கிளில் பூனை நண்பனுடன் கிளம்புகிறான். தேநீர் வாங்கப் போனவன், கடைக்காரருக்கு உதவி செய்ய வேறோர் இடத்துக்கு, அங்கிருந்து மற்றோர் இடத்திற்கு என்று தொடர்ச்சியாகப் போய்க்கொண்டே இருப்பதுதான் கதை.இறுதியில் வீடு செல்லும்போது அம்மாவின் கோபத்திற்கு ஆளாகிறான் ஜெய். கதையில் வரும் கதாபாத்திரங்களை ஜெய், சித்தப்பா, மாமா என்று விதவிதமான உறவுகளை வைத்து அழைப்பது வாசிக்கும்போது மனதிற்கு இதமாக இருந்தது. அடுத்த கதையின் தலைப்பும் ஒரு கேள்வியாகவே அமைந்திருக்கிறது. குட்டி நாய்க்குப் பெயர் கிடைத்தது எப்படி? இதிலிருந்தே கதை என்னவாக இருக்கும், எப்படி இருக்கும் என்று ஓரளவு யூகிக்க முடிந்தது. இருந்தாலும் கதை சொல்லும் பாணி சுவாரஸ்யமாக இருந்ததால் தொடர்ந்து படிக்க முடிந்தது. இந்தக் கதையிலும் ஜெய் என்கிற பெயரைக்கொண்ட சிறுவன் வருகிறான். தாயை இழந்து வாடுகிறது அந்தக் குட்டி நாய். சாப்பிடும் உணவிற்காக மற்ற பெரிய நாய்களுடன் போட்டி போட முடியாமல் ஒதுங்கி நிற்கிறது. பணக்கார வீட்டு நாய்களை அவற்றின் எஜமானர்கள் பெயர்சொல்லி அழைப்பதைக் கண்டு மனதுக்குள் மருகுகிறது. தனக்கும் ஒரு பெயர் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று அந்தக் குட்டி நாய் யோசிக்கும்போது சிறுவன் ஜெய் அதனைப் பார்த்து வீட்டுக்கு அழைத்துப் போக முடிவு செய்கிறான். அவனுடைய பெற்றோர் அதனை வீட்டில் வளர்க்க ஒத்துக் கொள்வார்களா என்கிற கேள்விக்கும், குட்டி நாய்க்கு இறுதியில் பெயர் கிடைக்கிறதா? என்ற கேள்விக்கும் பதில் பெற கதையை முழுமையாகப் படித்துப் பாருங்கள்.
அடுத்ததாக தன்வியின் பூந்தோட்டம். செடிகளை வளர்க்க ஆசைப்படும் தன்வி, சிறிய அளவில் ஆரம்பித்து மிகப்பெரிய பூந்தோட்டத்தை வீட்டில் அமைக்கிறாள். அனைவரும் பாராட்டுகிற அளவில் அமையும் தோட்டத்திற்கு ஒரு புதிய அபாயம் உருவாகிறது. செடிகளுக்கு அருகில் மண்ணைத் தோண்டிப்போட்டு வெயில் நேரத்தில் இளைப்பாறும் நாய் வடிவில் அவளுடைய தோட்டத்தைச் சோதனை ஒன்று நெருங்குகிறது. இந்த அபாயத்தில் இருந்து தன்வி தன்னுடைய தோட்டத்தை விடுவிக்க என்ன முயற்சி எடுக்கிறாள் என்பதையும், அவளுடைய முயற்சி வெற்றி அடைகிறதா என்பதையும் கதையின் முடிவில் தெரிந்துகொள்ளலாம். ஐந்தாவதாக வருகிறது ‘எண்ணல்’ என்கிற தலைப்புடைய கதை. இந்தக் கதையில் தன்வியே வருகிறாள். அவளுடன் சேர்ந்து செம்பூனையும் வருகிறது. தன்னுடைய தோட்டத்தில் அரளிச் செடியில் பூத்திருக்கும் பூக்களை எண்ண முற்படுகிறாள் தன்வி. ஒவ்வொரு முறையும் இடைஞ்சல் ஏற்படுகிறது. எண்ணுகிற வேலை தடைப்படுகிறது. புதிய கோணத்தில் எழுதப்பட்ட கதையாகத் தோன்றியது எனக்கு. கதையோடு ஒன்றிப்போகும் நாமும் தன்வியோடு சேர்ந்து பூக்களை எண்ண ஆரம்பித்து விடுகிறோம். இங்குதான் கதாசிரியரின் எழுத்து வன்மை வெற்றிகரமாகப் பிரகாசிக்கிறது. அடுத்த கதை ‘அன்பளிப்பு’. தன்வி, ஜெய் இருவரைப் பற்றிய கதை. அண்ணனும், தங்கையும் ஆட்டுக்குட்டிகளுக்குத் தினமும் உணவு தருவதில் கதை தொடங்குகிறது. ஆட்டுக்குட்டிகள் மேல் திடீரென அவர்கள் மனதில் எப்படிக் கருணை பொங்கியது என்பதை ஒரு கடந்தகால சம்பவம் விளக்குகிறது. மற்ற கதைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது சற்றே நீண்ட கதை இது. ஆனால், எந்த இடத்திலும் தொய்வில்லாமல் குழந்தைகள் மற்றும் ஆட்டுக்குட்டிகளின் பிணைப்பை மையமாக வைத்து இறுதி வரை செல்லும் கதையோட்டத்தைப் படித்து மகிழுங்கள். அடுத்து, ‘குணசுந்தரியின் தேர்வு’ என்கிற கதை மிகவும் உணர்ச்சிபூர்வமாக இருந்தது. படித்து முடிக்கும்போது மனம் கனத்துப் போனது. சொல்லத் தெரியாத உணர்வுகள் மனதில் பொங்கின. குணசுந்தரி என்கிற மூளை வளர்ச்சி குன்றிய சிறுமியின் ஒரு நாள் பள்ளி அனுபவம். அரசுப் பள்ளியில் படிக்கும் குணசுந்தரியை அவளுடைய ஆசிரியர்களும், உடன் படிக்கும் மாணவர்களும் அன்புடன் அணுகுகிறார்கள். பொறுமையைக் கடைப்பிடித்து அவளுடைய செயல்களைச் சகித்துக்கொள்கிறார்கள். இப்படிப்பட்ட பள்ளியும், சக மாணவர்களும் மனநலம் குன்றிய குழந்தைகள் அனைவருக்கும் கிடைத்தால் நன்றாக இருக்கும். ஆனால் உண்மையில் நடைமுறையில் சாத்தியமில்லை என்றாலும் கற்பனையிலாவது நடத்திக் காட்டுவோமே என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. குணசுந்தரிக்குக் கதைகள் கேட்கப் பிடிக்கிறது, நடனமாடப் பிடிக்கிறது, செடி, கொடிகளைப் பராமரிக்கப் பிடிக்கிறது, தன்னுடைய இடத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ளப் பிடிக்கிறது. எவ்வளவு நல்ல சிந்தனைகள் அந்தச் சிறிய உள்ளத்தில் என்று வியந்து நின்றேன். கடவுளால் வஞ்சிக்கப்பட்ட இந்தக் குழந்தைகளை நன்றாகப் பார்த்துக்கொள்ளவேண்டிய அவசியத்தை அனைவரும் உணரவேண்டும். இவர்களுக்குத் தேவை பரிதாபம் இல்லை. அன்பு நிறைந்த நட்பு மட்டுமே இவர்களுக்கு மகிழ்ச்சி தரும் என்பதைப் புரிந்து கொள்வோம்.
அடுத்த கதை ‘சிறகுத்தேள்.’ ஜெய்தான் இதிலும் முக்கிய கதாபாத்திரம். மழை பெய்து கொண்டிருக்கும் இரவில் தங்கைக்காக மருந்து வாங்கிவரும் சமயத்தில் கோபக்கார ஆசிரியரின் வீட்டு வாசலில் கிடக்கும் வினோதமான பூச்சியைப் பார்த்ததும் என்ன செய்கிறான் என்பதே கதை. அடுத்து வரும் கதையின் தலைப்பு, ‘குழிக்குள் விழுந்த கோழிக்குஞ்சு.’ குழந்தைகள் சேர்ந்து குழிக்குள் விழுந்த கோழிக்குஞ்சைக் காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் மற்றும் தாய்க் கோழியின் தவிப்பு ஆகியவை சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளன. ஆனால், கதையின் முடிவு நம்மைக் கலங்க வைக்கிறது. இறுதியாக ‘வரும் வலியினால் அல்ல’ என்கிற கதையில் இரண்டு சிறுமிகளின் நட்பும், பிரிவும் அழகாகக் கையாளப்பட்டுள்ளன. அனைத்துக் கதைகளையும் அலசியபோது கள்ளமில்லாக் குழந்தைகளின் மனங்களில் நிறைந்திருக்கும் மனிதநேயம் மற்றும் அன்பைப் பற்றித் தெரிந்துகொள்ள முடிகிறது. விலங்குகள் மற்றும் பறவைகள் மீது அவர்கள் கொண்டிருக்கும் அன்பும், நட்பும், கருணையும் புலப்படுகின்றன. இயற்கையைக் குழந்தைகள் நேசிப்பதும், இயற்கையை மாசு படியாமல் பாதுகாக்க அவர்கள் காட்டும் அக்கறையும் தெளிவாகத் தெரிகின்றன. இயல்பான எளிமையான நடையில் அறிவுரைகளை மறைமுகமாகத் தங்களுக்குள் பொதிந்து வைத்துக்கொண்டு குழந்தைகளை நோக்கி நட்புக்கரம் நீட்டும் இந்தக் கதைகள் அதிக அளவில் சிறார்களை அடையவேண்டும். ஆசிரியரின் நற்சிந்தனைகளுக்கும், எழுத்து வன்மைக்கும், கருத்துள்ள சிறந்த கதையாக்கத்திற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள். l
previous post
