இந்த ஆண்டு சென்னை புத்தகத் திருவிழாவில் பங்கேற்ற நாளில் திருமிகு ஆயிஷா நடராசன் மாலை ஒரு மிக முக்கியமான நூலை வெளியிடவுள்ளார் என நண்பர்கள் சொல்ல, நானும் அறிவியல் சார்ந்த நூலாக இருக்கும் என அறிமுக அரங்கிற்கு சென்றேன்..
சீதாயணம் எனும் ஒரு நூலை வெளியிட்டார். வெளியிடும் போதே அந்த நூலின் உள்ளடக்கம் பற்றி கோடிட்டுதான் காட்டினார்.. ஆர்வம் மேலோங்கி வாங்கி வாசித்தேன்.. பகிர்கிறேன் என் அனுபவத்தை.. உங்களுக்கும் ஒரு புதிய பரப்பைத் தரிசிக்கும் பெரு வாய்ப்புக் கிடைக்கும் என்பது சர்வ நிச்சயம்.
இராமனை முன்வைத்துப் பலர் இராமாயணம் எழுதினர். ஒவ்வோர் எழுத்தாளரும் தன் கற்பனைச் சிறகுகளைத் தட்டினர்.. வித விதமாக அந்த இதிகாசம் உருவெடுத்தது. ஆனால் அந்த இதிகாசத்தின் நாயகியான சீதையை முவைத்து எவரும் எழுதவில்லை எனும் குறையை மட்டுமல்லாமல் ஒரு பெண்ணின் வழி நின்று ஓர் அற்புதமான புனைவை வங்க மொழியில் தந்தார் மறைந்த எழுத்தாளர் மல்லிகா சென்குப்தா.. அதன் சுவை, கருப்பொருள் மாறாமல் எளிய நடையில் மொழிபெயர்த்துள்ளார்
ஞா.சத்தீஸ்வரன்…மைத்ரி பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.
சீதாயணம் : எழுப்பும் கேள்விகள்
சீதாயணம் பற்றிய உள்ளடக்கத்தைப் பற்றி முழுமையாக இங்கே பகிர்வது என் நோக்கமல்ல.. நான் ஏற்கெனவே சொன்னதைப் போல் நான் வாசித்த போது எம் சிந்தனைக்குள் எழுந்த விசயங்களை மட்டுமே பகிர்கிறேன்.நாம் வாழும் இந்த ஆணாதிக்க சமூகத்தின், சாதியப்படி நிலை வாழ்வைக் கேள்வி கேட்கும் ஒரு புத்தகம் இது. வித்தியாசமான கதைக் களத்தைத் தேர்வு செய்து, அதன் மூலம் ஒரு பெண்ணின் பக்கம் நின்று நியாயமான கேள்விகளை எழுப்பும் ஒரு புனைவு.
இந்த நூலின் முக்கிய சிறப்புகளில் ஒன்று அத்தியாயங்களின் தலைப்புகள்.உதாரணத்திற்கு மூன்றைக் குறிப்பிடுகிறேன். பொறுப்புகள் ஏதுமில்லை- கணவர் அவர் (இராமர்) பெண்களின் விழையாக இருந்தது ஆயதக் குறைப்பு. வைதீகத்தின் குருதியில் மலர்ந்தது வருணாசிரமம் எனும் நச்சு மலர். மூதாதையர் குருதியில் இருந்தது குருட்டுத்தனமான அடிப்படைவாதம். மனிதனுக்கான உரிமையை வேண்டினான் ஓர் ஒடுக்கப்பட்டவன்.
சுட்டெரிக்கும் உரையாடல்கள் :
இந்தப் புத்தகத்தை ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் நூலாசிரியரின் ஆழமான அறிவு, சமூக அக்கறை, அதனின் இந்தக் கதைக்கேற்ற பொருத்தப்பாடு, அதை உரையாடல்களாக இதில் சேர்த்திருக்கும் விதம் உண்மையிலேயே சிலிர்க்கவைக்கும்.
அப்படியான சில உரையாடல்களைத் தங்களின் கவனத்திற்கு அசுரர்கள் எனச் சொல்லப்படும் ஆதி குடிகள் நடத்திக்கொள்ளும் ஓர் உரையாடலில் “ உண்மையில் நாம் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து அதற்குள் ஒடுங்கிகிடக்கிறோம். ஆனால் ஆரியர்கள் அரசு உருவாக்கத்திற்காக ஒருங்கிணைந்து செயல்படுகின்றனர். பிராமணர்கள் மற்றும் நிலவுடமையாளர்களின் நலன்களைப் பாதுகாக்கின்றனர்.
வனத்தில் சீதை தனியாகக் குழந்தைகள் (லவன், குசன்) ஆகியோரோடு வசிக்கிறாள்.. வால்மீகியின் ஆசிரமத்தில்தான் குழந்தைகள் வளர்கின்றனர். இந்த இரு குழந்தைகளோடு வால்மீகி உரையாடும் போது குசன் வால்மீகியிடம் “அறிவுத் தேடல் என்றால் என்ன?” என வினவுகிறான். அதற்கு அந்த முனிவர் “உனது கேள்வி மூளையிலிருந்து பிறந்தது. இது தான் அறிவுத் தேடல்…” எனச் சொல்கிறார். ஒரு பொருள்முதல்வாதப் பார்வையை முன்னெடுக்கும் விசயம் இது.
வால்மீகியின் ஆசிரமத்தைப் பற்றிய ஓர் உரையாடல் இப்படிப் பதிவாகிறது. அவரின் தபோவனத்தில் நடக்கும் பயிற்சிகளை உற்று நோக்கியுள்ளேன். அங்கு பிராமணர்கள் செய்யும் தந்திரங்களைப் பார்த்துள்ளேன். போரில் மட்டுமல்ல, அனைத்திலும் தந்திரங்களைக் கையாளுகின்றனர். அவர்கள் சொல்லும் வருணாசிரமம் ஓர் ஒழுங்கமைப்பட்ட தந்திரமே… பிறர் பாடுபட்டு உழைத்து விளவித்த தானியங்கள், உலோகப்பொருட்கள் என் அனைத்தையுமே அவர்கள் அனுபவிக்கின்றனர். அடுத்து ஒரு விவாதம் நடக்கும் பகுதியில் “சிறு வயதிலிருந்தே பிராமணர்கள் அவர்களிடம் பயில்பவர்களீடம் தங்கள் கருத்துகளைத் திணித்து விடுகிறார்கள். பிராமணர்களின் மூளைச்சலவை செய்யும் தந்திரத்தால் ஒன்றாக இருக்கின்றனர்.” தற்போதுள்ள சமூக ஒழுங்கை மிகத் துல்லியமாகச் சொல்லும் இடமிது.
வால்மீகியும் அகத்திய முனிவரும் பேசிக் கொள்ளும் ஓர் உரையாடலில் வரும் இந்தப் பத்தி மிக முக்கியமானது ..அதாவது அகத்தியர் ‘மேல் சாதி ஆதிக்கம் சரியானது, சமூகத்தில் கீழ் நிலயில் இருப்பவர்களுக்கு எதையும் செய்யத் தெரியாது’ என வாதிடுகிறார். அதற்குப் பதில் அளிக்கிறார் வால்மீகி எனும் பிராமணர்: “பகவானே.. இந்த ஏற்பாடு பரம்பரை பரம்பரையானது. அதில் அநீதி தொடர்கிறது. எந்த சூத்திரனுக்கும் காவியம் இயற்றுகின்ற ஆற்றல் இல்லையென யாரால் சொல்ல முடியும். சம்பூகனுக்கு சூத்திரப்பட்டத்தை அருளுவதற்காக நாம் யோசித்துக் கொண்டிருக்கிறோம். வாய்ப்புக் கிடைத்தால் ராமச்சந்திரனை விடச் சிறந்த ஆட்சியாளராக வரமுடியாது என்று யாரால் சொல்ல முடியும். பிறப்பின் மீது மனிதர்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை…” ஒரு மிக சமூக நீதிக் கோட்பாட்டை வால்மீகியை வைத்தே நூலாசிரியர் சொல்ல வைக்கிறார்.
பெண்கள் இதைத்தான் செய்ய வேண்டும் எனும் ஒரு சொல்லப்படாத விதியைத் திட்டமிட்டு உருவாக்கினார்கள்.. அதை இந்தப் புனைவு மூலம் உடைக்கிறார் நூலாசிரியர்.. சன்னியாசிகளாகப் பெண்களும் இருக்க முடியும் எனும் விசயத்தைக் கடத்த ஒரு பெண் துறவி ஸ்வயம் பிரபா எனும் கதா பாத்திரம் வரும்.. அவருக்கும் சீதைக்கும் நடக்கும் ஓர் உரையாடல் அவசியம் வாசிக்க வேண்டிய பகுதி… பெண்களால் சாத்தியமில்லாத விசயத்தைக் கூட சாத்தியமாக்க முடியும் என்று சீதையின் மனதில் தோன்றும் அளவிற்கு இந்தப் பகுதி மிக முக்கியமானது.
பெண்கள் மீதான குடும்ப வன்முறை எவ்வளவு கொடூரமானது என விவரிக்கும் அதே உரையாடல் பகுதியில் ஆணாதிக்கத் திமிரைச் சீதையின் கதாபாத்திரம் மூலம் மல்லிகா சென் குப்தா விவரிக்கிறார். சீதையைச் சந்தேகப்பட்டு வனத்துக்கு அனுப்பும் ராமனின் முடிவைப் பற்றிய உரையாடலில் இது முக்கியப் பகுதி,,, சீதை தன்னால் பழைய நினைப்பை மறக்க முடியாமல் தவிக்கிறாள். அதற்கு ஸ்வயம் பிரபா மூலம் பதிலளிக்கிறார்… “இராமச்சந்திரன் துண்டித்துக் கொள்ளவில்லையா? ஒரு கணத்தில் அவன் நிரந்தரமாக உன்னைப் பற்றிய நினைவுகளை ஒரே நாளில் தூக்கி எறிந்து விடவில்லையா? அவனது குலத்தினர் அனைவரும் ஏற்றுக்கொள்ளவில்லையா?” “சீதா.. நீ சாதாரணமானவள் அல்லள்.. எதையும் எதிர் கொள்ளும் துணிவும் தைரியமும் உள்ளது” எனப் பழமைவாதக் கருத்துகளுக்குச் சாட்டையடி கொடுக்கிறார். சமூகத்தில் வழிபாட்டு முறையில் கூட எவ்வாறு மேல் சாதியினர் ஆதிக்கம் செய்தனர் என்பதை ஒரு வரியில் (பக்கம் 141) சொல்லி இருக்கிறார்.சம்பூகன் எனும் கதாபாத்திரம் இராமாயணத்தில் மிக முக்கியமானது என்பதை அறிவோம்… குலத்தொழில் முறையைச் சமூக விதியாக மாற்ற நினைக்கும் ஒரு கூட்டத்துக்கு எதிராகச் சமர் புரிந்த வீரன் சம்பூகன்.. அவனின் ஒரு கோபம் தோய்ந்த பதிலை இப்படி எழுதுகிறார் நூலாசிரியர்.. “எனக்கு அருவருப்பாக இருக்கிறது. ஆரியர்களுக்குச் செருப்புத் தைக்கவும், கழிவுகளைச் சுத்தம் செய்யவும் மட்டும். சம்பூகன் பிறக்கவில்லை..” என உள்ளக் குமுறலைச் சொல்லுகிறான்.
மறுபிறப்பு, சடங்கு, சம்பிரதாயங்கள், எனும் பழமைவாதக் கருத்துகளைச் சாடும் பல பகுதிகள் இருக்கின்றன. இப்படி சமூகத்தில் முற்போக்கு விழுமியங்கள் பலமடைய வேண்டும் எனும் என்ணம் விதைக்கும் பல விசயங்களை இந்தப் புனைவில் கடத்துகிறார்.
துவக்கம் முதல் இறுதி வரை:
சீதாயணம் நூலில் துவக்கம் முதல் கடைசிப் பக்கத்தின் கடைசி வரி வரை எல்லாமே முற்போக்கின் முகங்களே.. சீதை எனும் கதாபாத்திரத்தின் மூலமும், இராமாயணத்தின் பல கூறுகளைக் குறுக்கு வெட்டாக அலசி, பெண்ணியத்தின் மேன்மைகளை, சமூகத்தின் அழுக்குகளை, சாதிய அடுக்குகளாகப் பிரிக்கும் சூழ்ச்சிகளை, வருணாசிரமக் கொடுமைகளை, எனப் பல்வேறு விசயங்களைச் சொல்லியுள்ளார். இந்த பக்கத்தில் முக்கியமாக எதுவும் இருக்காது என எந்தப் பக்கத்தையும் விட முடியாது.
இந்த நூலை வாசிப்பதற்கு உகந்ததாக, நெஞ்சுக்கு நெருக்கமாக மாற்றியதற்கு முக்கியக்காரணம் மொழியாக்கம்தான். வங்காள மூலத்திலிருந்து மிக நேர்த்தியாக ஒட்டுமொத்தக் கதையை உள்வாங்கி தமிழின் அழகுச் சொற்களால் இதை நேர்த்தியாகச் செய்திட்ட ஞா.சத்தீஸ்வரன் பாராட்டத்தக்கவர். அவரின் மொழியாக்கத் திறன் மேலும் மேம்பட்டு தமிழுக்கு மேலும் பல வங்க மொழி இலக்கியங்கள் வரவேண்டும் என விழைகிறேன். இராமாயணம் எனும் கதை தேவைக்கேற்பத் திரிக்கப்பட்டுள்ள காலமிது. இதில் சீதாயணம் எனும் இந்தப் புனைவு எல்லாரும் வாசிக்க வேண்டிய மிக முக்கிய நாவல்.. மேலும் இந்த நாவலைப் பரவலாக்கி வாசிக்க வைக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் உள்ளது. இந்த நல்ல புனைவை வெளியிட்ட அணங்கு பதிப்பகத்திற்கும் தோழர் மாலதி மைத்ரிக்கும் கோடானு கோடி நன்றிகள். l