‘சமகால சுற்றுச்சூழல் சவால்கள்’ என்கிற நூல் பல்வேறு சூழல் சார்ந்த நெருக்கடிகளையும் சவால்களையும் விவாதிக்கிறது. இத்தொகுப்பில் அமைந்துள்ள 28 கட்டுரைகளும் காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய விளைவுகளை முன்வைக்கிறது. மேலும் வளர்ச்சி, புவிவெப்பமடைதல், அமில மழை, கார்பன் உமிழ்வு, மரபணு தொழில்நுட்பம், அயல் படர் உயிரினங்கள், நவீன வேளாண்மை, மருத்துவக் கழிவுகள், நுண் நெகிழிகள், ஒளி மாசு, பெருங்கடலின் சூழலியல், நகரமயமாதல், நிலத்தடி நீரின் சிக்கல்கள் எல்லாவற்றையும் விவாதிக்கத் தவறவில்லை.
இந்நூலினை, எஸ்.விஜயன், த.வி.வெங்கடேஸ்வரன், ஆயிஷா நடராசன், செ.கா, ஸ்ரீகுமார், டயானா ஆகியோர் தொகுத்து சூழல் சார்ந்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்துவதில் மிக முக்கிய பங்காற்றியுள்ளனர். 28 கட்டுரையாளர்களும் அறிவியல்ரீதியான நுணுக்கத்தோடு சமகால சுற்றுச்சூழல் சவால்களை எடுத்துரைத்துள்ளனர்.
சூழலியல், சுற்றுச்சூழல் கேடுகள் பற்றி மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் கருத்துகள் வெங்கடேஷ் ஆத்ரேயா மற்றும் எஸ்.வி. ராஜதுரை ஆகியோரின் கட்டுரைகளில் வெளிப்படுகிறது. வெங்கடேஷ் ஆத்ரேயா வளர்ச்சி மற்றும் சூழல் சார்ந்து மார்க்சியப் பார்வையில் விவாதிக்கும் போது, “அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி லாப நோக்கில் மட்டுமே நிகழும்பொழுது இயற்கை அழிவும் உழைப்பாளி மக்கள் முன்பைவிட அதிகமான அளவில் சுரண்டப்படுவதும் விளைவுகளாக முன் வருகின்றன. இதனை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் அறிவியல் வளர்ச்சியும் தொழில்நுட்ப முன்னேற்றமும் நம்மைப்போன்ற வளரும் நாடுகளுக்கு மிக அவசியம் என்பதையும் நாம் அங்கீகரிக்க வேண்டியுள்ளது.” என்பதை முன்வைக்கிறார். இன்று எல்லா விதமான சூழலியல் பிரச்சினைகளுக்கும் தொடக்கப்புள்ளியாக இருக்ககூடிய வளர்ச்சியை, ஆயிஷா.இரா நடராசன் மொழிபெயர்த்த ‘அறிவியல் வளர்ச்சி மற்றும் வன்முறை’ எனும் நூல் கேள்விக்கு உட்படுத்துகிறது. ‘வளர்ச்சி’ என்பது சூழல் அறத்தோடு செயல்பட்டால் பல்வேறு சூழலியல் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். முதலாளித்துவ அமைப்பில் ‘உற்பத்தியாளரே பொறுப்பேற்கும் கொள்கை’ தீவிரப்படுத்தப்பட வேண்டும். சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பவர்கள் அவர்கள் உருவாக்கும் கழிவுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும் என்பது இக்கோட்பாடாகும்.
இத்தொகுப்பில் அதிகமாக விவாதிக்கப்பட்ட பொருண்மை புவி வெப்பமடைதல். இவற்றால் பல்வேறு பிரச்சினைகளை நாம் சந்தித்து வருகின்றோம். புவி வெப்பமடைதல் குறித்து ஊடகங்களும், சூழலியலாளர்களும், ஆய்வாளர்களும் விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டுதான் வருகிறார்கள். வளிமண்டலத்தில் கரிய அமிலவாயு அடர்த்தி அதிகரிக்கிறது. நிலக்கரி, பெட்ரோல், டீசல் எரிவாயு, மீத்தேன், கார்பன் டை ஆக்சைடு போன்ற வாயுக்களின் அதீத வெளியிட்டால் இந்த வெப்பநிலை உயர்தல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. புவி வெப்பமயமாதல் தொடர்ந்து அதிகரித்தால் கடந்த நூற்றாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த பேரிடர்கள் இனிமேல் சாதாரணமாக ஒவ்வொரு ஆண்டும் நிகழும் என்பது எச்சரிக்கையாக இருக்கிறது. புவி வெப்பமயமாதலால் ஏற்படும் பிரச்சினைகளைக் கட்டுக்குள் கொண்டுவர உலக அளவில் ஐக்கிய நாடுகள் சபை 1992ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. ஆதி வள்ளியப்பன், காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் இரண்டிற்கும் இடையேயான தொடர்பினை விளக்கும்போது, “காலநிலை மாற்றமும் புவி வெப்பமயமாதலும் நெருக்கமாக பின்னிப்பிணைந்தவை. அதே நேரம் இரண்டும் ஒன்று கிடையாது. காலநிலை மாற்றம் நடைபெறுவதற்கு பல காரணிகள் உள்ளன. அதில் புவி வெப்பமாதல் முதன்மைக் காரணம்” என்று விளக்குகிறார். ஆதி வள்ளியப்பன், டி.ரகுநந்தன், பிந்து பூமா கட்டுரைகளில் சென்னை இன்று சந்தித்து வருகின்ற சூழலியல் நெருக்கடிகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. கிராமப்புறப் பகுதியைவிட நகர்ப்புறப் பகுதியில் புவி வெப்பம் அதிகம் உணரப்படும். காரணம் நகர்ப்புறப் பகுதிகளில் போதிய மரங்கள் இல்லை. சென்னையில் கடந்த மாதம் முழுவதும் இரவில் அதிக வெப்பம் உணரப்பட்டது. இதற்குக் காடுகள், நீர்நிலைகள், தாவரங்கள் குறைந்ததும் குளிர்சாதனப் பெட்டிகளை அதிகமாக பயன்படுத்துவதும்தான் காரணம். சென்னையின் வெப்ப உயர்வுக்கு அதிக பசுமைப் பரப்பு இல்லாததே காரணம். ரகுநந்தன் கூறியுள்ள தகவல்களின்படி, இந்தியாவில் சென்னையில்தான் மிகக் குறைவான பசுமை பரப்பு உள்ளது என்கிறார். மொத்த நிலப்பரப்பில் 12 சதவிகிதம் அளவில்தான் மரங்கள் உள்ளன. ஆனால் பெங்களூருவில்
20 சதவிகிதமும் சிங்கப்பூர் போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளில்கூட 47 சதவிகிதமும், ஐரோப்பாவில் 30 சதவிகிதமும் மரங்கள் வளர்ந்துள்ளன என்கிற தகவலைத் தருகிறார். சென்னையில் நீர்நிலைகள் தாவரங்கள் ஆகியவை பெருமளவு அழிக்கப்பட்டதன் விளைவுதான் இன்றைய வெப்ப அதிகரிப்பிற்குக் காரணமாகும். இந்தக் காலநிலை மாற்றம் ஏழை மக்களைத்தான் அதிகம் பாதிக்கிறது என்பதை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். மாநகராட்சிப் பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள ‘மியாவாக்கி காடுகள்’ போன்ற முன்முயற்சி பாராட்டத்தக்கது. ‘மியாவாக்கி’ என்பது காடு வளர்ப்புமுறை. இது ஒரு குறிப்பிட்ட இடத்தின் மண் வளம், காலநிலை, பருவ மாற்றங்கள் என அனைத்தையும் சார்ந்து தனித்துவமாக உருவாக்கப்படும் காடு வளர்ப்பு முறையாகும். இந்த முறையில் மிகவும் அடர்த்தியான காடுகளைக் குறைந்த காலகட்டத்தில் உருவாக்கி விடமுடியும். சென்னையில் 2020 ஆம் ஆண்டில் இந்த மியாவாக்கி வகைக் காடுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
காலநிலை மாற்றத்தால் மனிதர்கள் மட்டுமின்றி, பறவைகளும் விலங்குகளும் தாவரங்களும் பாதிப்பிற்குள்ளாவதை முனைவர் சுபஸ்ரீ, முனைவர் வெ. கிருபாநந்தினி, நாராயணி சுப்ரமணியன், நன்மாறன் திருநாவுக்கரசு ஆகியோரின் கட்டுரைகளில் காண முடிகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பினால் உடனடியாக பாதிப்பிற்கு உள்ளாவது பறவைகள்தான். எனவே பறவைகள் உயிர்க் குறிப்பான்கள் மற்றும் எச்சரிக்கை மணிகள் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பருவச் சிள்வண்டு, சிட்டுக்குருவி, பாம்புத்தாரா, வெண்முதுகுக்கழுகு, மயில் போன்ற பறவைகள் சூழல் மாற்றத்தால் பாதிக்கப்பட்டு அழிந்து வருவதை சுட்டிக்காட்டியுள்ளனர்.
நன்மாறன் திருநாவுக்கரசின் ‘சுற்றுச்சூழலும் அயல் படர் உயிரினங்களும்’ எனும் கட்டுரை முக்கியமானதாகும். இன்றைக்கு உலகம் முழுவதும் தாவரங்கள், விலங்குகள் அழிவில் 60 சதவிகிதப் பங்கு அயல் படர் உயிரினங்கள்தான் என்கிற ஆய்வு வியப்பளிக்கிறது. உலகமயமாக்கல் இன்றைக்கு இந்த அயல் படர் உயிரினங்களின் பரவலுக்கு முக்கிய காரணமாக அமைகிறது என்கிறார். சீமைக் கொன்றை, ஆப்பிரிக்க கெளுத்தி, ஆப்பிரிக்க நத்தைகள், சீமை கருவேலம், ஏடிஎஸ் கொசு, உண்ணிச்செடி, தைல மரம் போன்ற அயல் படர் உயிரினங்கள் இன்றைய சுற்றுச்சூழல் சீரழிவிற்குக் காரணமாக அமைகிறது என்பதை நன்மாறன் தன் கட்டுரையில் விவாதிக்கிறார். மனிதனின் பொறுப்பற்ற செயல்களின் காரணமாக கடல் வளமும் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகிறது, நகர்மயமாதல், மனிதக் கழிவுகள் கடலில் கலத்தல், தொழிற்சாலைக் கழிவுகள், தேவைக்கு மிகுதியாக மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துதல், அதிக நெகிழிப் பயன்பாடு, நீர்வாழ் உயிரினங்களுக்குத் தீங்கிழைக்கும் பொருட்களைப் பயன்படுத்துதல் போன்ற பல்வேறு காரணங்களால் கடல் மீன் உற்பத்திக்கும், மீனவர்களின் வாழ்வாதாரங்களுக்கும் பெரிய சவாலாக இருக்கின்றன என்பதை முனைவர் இல.சுருளிவேல் தன் கட்டுரையில் முன் வைக்கிறார்.
அடுத்ததாக, ஒளி மாசு குறித்தான சிக்கல்களையும் சவால்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒளி மாசு தாவரங்களைப் பல வகைகளில் பாதிக்கிறது. “கடல் ஆமைகளில் பெண் ஆமைகள் ஒளிமங்கிய கடற்கரைகளில் முட்டையிட்டு கடலுக்குள் திரும்புவது வழக்கம். ஒளி மாசால் அடர்இருள் நிறைந்த கடற்கரைகளைக் கண்டுபிடிப்பதில் கடல் ஆமைகள் சிரமத்தை எதிர்கொள்கின்றன. முட்டையிலிருந்து வெளிவரும் ஆமைக்குஞ்சுகள் ஒளிவிளக்கால் ஈர்க்கப்பட்டு குழம்பி கடலுக்குள் திரும்பாமல் நிலத்திற்குள் ஊடுருவதால், விபத்தில் சிக்கி உயிரிழந்து விடுகிறது. இதனால் ஆமைகளின் எண்ணிக்கை வீழ்ந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்” என்பதை தன் கட்டுரையில் நந்தசிவம் புகழேந்தி குறிப்பிட்டுள்ளார்.
மேற்கண்ட சவால்களோடு மருத்துவக் கழிவுகளும் நுண் நெகிழிகளும் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இத்தகைய சுற்றுச்சூழல் சவால்களுக்கு செய்யறிவு தொழில்நுட்பத்தை பா.ஸ்ரீகுமார் தன் கட்டுரையில் அறிமுகப்படுத்துகிறார். செய்யறிவுப் பயன்பாடு காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் சிறந்த பங்களிப்பைத் தருகிறது. தற்போது வானிலை, துருவப் பகுதிகளில் பனிப்பாறைகளைக் கண்காணிக்க மற்றும் மாசுபாட்டைக் கண்டறியும் கருவிகளில் செய்யறிவு பயன்படுத்தப்படுகிறது என்பதை முன்வைக்கிறார். சமகால சுற்றுச்சூழல் சவால்களை முன்வைக்கக்கூடிய இத்தொகுப்பு, முன்னுரையில் குறிப்பிட்டதுபோல பள்ளிக்கூட மாணவர்கள், ஆசிரியர்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், சூழலியல் போராளிகள், ஆர்வலர்கள் மற்றும் அனைவரது கைகளிலும் இருக்கவேண்டிய முக்கியமான ஆவணமாக கவனத்தில் கொள்ளவேண்டும். l
previous post
