இராஜபாளையம் வைமா இலக்கிய விருதின் இரண்டாம் ஆண்டில் (2024)சிறந்த சிறுகதைநூலுக்கான விருதைப் பெற்ற நூல் கிணத்து மேட்டுப் பனமரம். வத்திராயிருப்பு புதுப்பட்டியிலுள்ள கிழக்குத் தெரு, மேற்குத் தெரு, வடக்குத் தெரு,தெற்குத் தெரு, ஓடைத் தெரு, சிமெண்ட் தெரு, செக்கடித் தெரு, நாடார் தெரு, நாயக்கர் தெரு, சாலியர் தெரு, வண்ணம்பாறை,
காடுகரை, ஓடை, சேஷாபுரம் ரோடு இப்படி எல்லாப் பக்கங்களுக்கும் இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகளின் வழியாக நம்மைக் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார் நூலாசிரியர்.
மொத்தம் 26 கதைகள் கொண்ட தொகுப்பு நமக்குச் சொல்ல வருவது பனைமரம் பொதுமரம். பனைமரம் இருக்கும் நிலம் தனிப்பட்ட நபருக்குச் சொந்தமாக இருக்கலாம். ஆனால் பனைமரம், மாமரம், கொய்யா மரம், தென்னை மரம் போல யாரும் நட்டு வளர்ப்பதில்லை. களை பறிப்பதில்லை. உரமிடுவதில்லை. தண்ணீர் பாய்ச்சுவதில்லை. தானாக முளைத்து எவருடைய பராமரிப்பும் இல்லாமல் வளரக்கூடிய மரம் என்பதால் பனைமரம் பொதுமரம் ஆகிறது.
மேலும் பனை மரத்தில் நுங்கு வெட்டுவதற்காக ஏறும் முன் அரிவாள் பிடாங்கால் மரத்தில் இரண்டு மூன்று முறை தட்டி மரத்தில் உள்ள பாம்பு மற்றும் இதர பூச்சிகளுக்கு எச்சரிக்கை செய்வது, பனை மரத்தில் உள்ள கருக்கு, புலிவறண்டி முள், மற்றும் மட்டைகளை எப்படி ஒதுக்குவது, மரத்தில் ஏறிய பின்னர் எந்த மட்டையைப் பிடித்துக் கொள்வது, எந்த மட்டையில் கால் வைப்பது, அரிவாளை அரைஞாண் கயிற்றில் தொங்க விட்டுக் கொண்டே மரத்தில் ஏறுவது, கிணத்து மேட்டில் இருக்கும் மரங்களில் நுங்கு வெட்டும் போது குலை சிதறிக் காய்கள் ஓடாதவாறு, வெட்டிய குலையை மரத்தில் இருந்தபடியே கிணற்றுக்கு எதிர்ப்புறம் தூக்கிப் போடுவது, பனைமரம் ஏறும் போது கீழே பார்க்காமல், மேலே இருக்கும் நுங்குக் குலைகளைப் பார்த்துக் கொண்டு ஏற வேண்டும். மாறாகக் கீழே பார்த்தால் பனை மரத்தின் உயரம் காரணமாக நமக்குப் பயம் வரலாம். கருக்கு நம் உடம்பில் காயம் ஏற்படுத்தாதவாறு ஏறி இறங்க வேண்டும். கருக்கால் உடம்பில் உண்டாகும் காயத்திற்குப் பனைப்பூவே மருந்து. பனை மரத்தில் நெஞ்சு படாமல் நெஞ்சில் சிராய்ப்புகள் ஏற்படாமல் ஏறி இறங்க வேண்டும். இப்படிப் பனைமரம் ஏறுவதற்கான பல நுணுக்கங்களை நூலில் குறிப்பிடுகிறார் நூலாசிரியர்.
நம்ம பெணம் கதையில் பனையேறும் தொழில் செய்யும் ஏசுக்கனி அவர்களை அவர் வாழும் காலத்தில் கண்டுகொள்ளாத அவரது சாதி ஆட்கள், அவரோடு நன்கு பழகியதால் உண்டான தார்மீக உணர்வோடு ஏசுக்கனியின் அடக்க வேலைகளைச் செய்த தலித் மக்களுக்குக் கூலி கொடுக்கின்றனர். கூலியை வாங்காது, இறுதிச் சடங்கில் பணியாற்றியதைத் தங்கள் கடமையெனக் கருதிக் கடந்து செல்வதாக எழுதியிருக்கும் முதல் கதையிலேயே மனிதத்தின் முன்னால் சாதியம் இறந்து போனதைக் குறிப்பிடுகிறார்.
நுங்கு வெட்டி குலைகளோடு வரும் இளைஞர்களிடம் ஆதிக்க உணர்வோடு ஒரு குலை பத்து ரூபாய்க்குக் கொடு எனக் கேட்கும் கிழவிக்கு, குலை 450 ரூபாய் கொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறி உழைப்பிற்கான ஊதியத்தைக் குறைத்து மதிப்பிடும் முதலாளித்துவ மனநிலைக்கு எதிராகக் குரல் எழுப்புகிறார் நானூற்று ஐம்பது கதையில். நுங்கில் வெள்ளக்காச்சிக் காய், மண்டத்தண்டிக் காய் இப்படிப்பல வகைகள் உண்டு. இதில் வெள்ளக்காச்சிக்காய் ஆழமாக இருக்கும். அதில் உள்ள காய் பெரிதாக இருக்கும். அதைச் சாப்பிடும் போதுதான் வயிறு நிறையும். குளிரும் என்ற தகவலைத் தருகிறார் வெள்ளக்காச்சிக்காய் கதையில்.
நுங்கு வெட்டச் சென்ற இடத்தில் தோட்டத்துக்குச் சொந்தக்காரன் அந்த இளைஞர்களைக் கெட்ட வார்த்தையில் திட்டியதற்காக இளைஞர்கள் தோட்டக்காரனை அடிக்கின்றனர். இதை ஊர் நாட்டாமையிடம் வந்து தோட்டக்காரன் பஞ்சாயத்து செய்யும் போது நுங்கு தானே வெட்டினாங்க. வேறு ஏதும் களவு செய்யவில்லையே என்று பேசும் நாட்டாமையின் வழியாகப் பனைமரம் பொதுமரம் என்ற கருத்தை மேலும் ஒரு முறை வலியுறுத்துகிறார் ஆசிரியர் ஊர் நாட்டாமை கதையில். நுங்கு வெட்டச் சென்று திரும்பும் போது தாகம் எடுக்க, சேஷாபுரம் ரோட்டின் மீது யாருமின்றித் தனியாக நிற்கும் டூவீலரின் பெட்ரோல் டேங்கில் தண்ணீர் கேன் இருக்கிறதா என்று தேடுகிறார்கள் இளைஞர்கள். அந்த பெட்ரோல் டேங்கில் 422 ரூபாய் பணம் இருப்பதைப் பார்க்கிறார்கள். பசியோடு இருந்தாலும் பணத்தை எடுக்காமல் செல்லும் அவர்களின் நேர்மையைக் கூறுகிறது நானூற்றி இருபத்தி இரண்டு கதை.
நுங்கு வெட்டச் சென்ற இடத்தில் பனை மரத்திலிருந்து தவறிக் கீழே விழுந்த இளைஞன் கால் உடைந்து விட்டதோ என்று பயந்து அதைப் பரிசோதிக்க இங்குமங்கும் ஓடி, கால் உடையவில்லை, நன்றாகத்தான் உள்ளது என்பதை உறுதி செய்து கொள்கிறான். இதை நகைச்சுவையாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார். கால் வீக்கம் அடைந்தபின் சுளுக்கு தடவும் தாத்தாவிடம் இளைஞனின் தாயார் அவனைத் திட்டிக்கொண்டே அழைத்துச் செல்கிறார். அந்தத் தாத்தா இரண்டு நாட்களில் சரியாகிவிடும் என்று கூறுகிறார். அப்போது கூட அந்த இளைஞன் அவர் அம்மாவின் திட்டுதலையோ அல்லது சுளுக்கினால் உண்டாகும் வலியையோ பொருட்படுத்தாமல் இரண்டு நாட்களுக்கு நுங்கு வெட்டச் செல்ல முடியாமல் போய்விடுமே என்று வருந்துகிறார் தெம்புக்காரன் கதையில்.
வயதான மூதாட்டியின் வேண்டுகோளை ஏற்று அவளது கர்ப்பிணி மகளுக்காகப் பணம் பெறாமல் நுங்கு வெட்டித் தரும் இளைஞர்களின் பெருந்தன்மையைக் குறிப்பிடுகிறது தேவமார் பாட்டி கதை. எப்போது வேண்டுமானாலும் சாதிக் கலவரம் நிகழலாம். தனியே காடு கரைகளுக்குச் சென்று வருவது ஆபத்து என்று இருக்கும் புதுப்பட்டி ஊரின் சூழலில் பொருளாதாரத்திற்காகத் தான் என்றாலும் தனியே வேலைக்குச் சென்று வருவது சற்றே ஆபத்தானதுதான் . ஆனால் அம்மக்களுக்கு வேறு வழியில்லை. உழைக்கும் மக்கள் தங்கள் உடலே மூலதனம் என்று நம்பி பொருளாதாரத் தேவைகளுக்காக எத்தனை வயதானாலும் தனியே சென்று வருவார்கள். அவர்கள் உழைப்பை வைத்து அவர்களின் வயதைக் கணக்கிட முடியாது என்று குறிப்பிடுகிறது வயசு நாப்பத்தியெட்டு கதை. படிக்கும் வயதில் சிறுவர்களுக்குள் பள்ளியில் நட்பு ஏற்பட்டாலும் வீட்டுச் சூழலில் சாதி கற்றுக் கொடுக்கப்படுகிறது. ஆனால் நண்பர்களுக்கு ஆபத்து அல்லது உதவி என்று வரும்போது சாதியை மீறி நட்பே வெல்கிறது என்பதை உணர்த்துகிறது நட்பு கதை.
கோடை காலத்தில் கத்தரி வெயிலில் நுங்கு வெட்டச் சென்று திரும்பிய இளைஞர்கள் நிழலுக்காக ஒதுங்கிய பிள்ளையார் கோயிலை இடித்துத் தரைமட்டமாக்குகின்றனர் பொதுச் சமூகத்தினர். எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் தலித் மக்கள் ஆலயத்தில் நுழைவதும், ஆலயம் சார்ந்த பகுதிக்குள் நுழைவதும், பொதுத் தெருவுக்குள் நடப்பதும் தீட்டு என்று கூறி இன்றும் கூட தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டு வருவதைக் குறிப்பிடுகிறது பிள்ளையார் கோவில் இடிப்பு கதை. இன்னும் எத்தனை காலம்தான் ஆகுமோ சாதியெனும் வைரஸ் ஒழிந்திட.
அப்பா, தாத்தா சம்பாத்தியத்தில் கிடைத்த குடும்பச் சொத்தை வைத்துக் கொண்டு வெள்ளை வேட்டி சட்டையோடு திரியும் முதலாளிமார்கள், இளைஞர்கள் தம் சொந்த உழைப்பில் படித்துப் பெற்ற பட்டங்களுக்கு மரியாதை தருவதில்லை. சாதியின் அடிப்படையில் தான் இன்றும் மரியாதை தரப்படுகிறது. அதைத் தட்டிக் கேட்கும் இளைஞர்களைப் பற்றிக் கூறுகிறது முதலாளியும் படிப்பாளியும் கதை. புரிதலின்றி சாதிக் கலவரத்தில் எப்போதும் தங்களோடு சண்டையிடும் வேறு சாதியைச் சேர்ந்த பாட்டி ஆசைப் பண்டமாகக் கேட்கும் போது நுங்கு வெட்டித் தரும் இளைஞர்களின் பெருந்தன்மையைக் காட்டுகிறது நீங்க நல்லாயிருக்கணும்யா கதை.
சமூகத்தில் சாதிய ஆதிக்கத்தால் பாதிக்கப்படும் தலித் மக்கள் காவல் நிலையம் சென்று குருதி வழியப் புகார் கொடுத்தாலும் செயல்படாமல் வேடிக்கை பார்க்கும் காவல்துறை, பொதுச் சமூகத்தைச் சேர்ந்த நபர்கள் தொலைபேசியில் தெரிவிக்கும் புகார்களுக்குக்கூட உடனடியாக நடவடிக்கை எடுக்கிறது. அரசு ஊழியர்கள் மக்களின் சேவகர்கள். ஆனால் அவர்கள் அதை உணராமல் தாம் சார்ந்த சாதிய மனநிலையோடு தான் செயல்படுகிறார்கள் என்பதை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது சாதிக்கான போலீசு கதை. நுங்கு வெட்டச் சென்ற இடத்தில் தோட்டக்காரரின் ஆதிக்கத்தைத் தட்டிக் கேட்கும் போது இளைஞர்களை அவர் அக்கிரமக்காரர்களாக அடையாளப்படுத்துகிறார். அப்போது இளைஞர்கள் தோட்டக்காரர் சார்ந்த சமூகத்தினர் செய்யும் அக்கிரமங்களைப் பற்றிப் பேசும்போது பதில் இல்லாமல் வாயடைத்து நிற்பதைப் பதிவு செய்கிறது அக்ரமக்காரர்கள் கதை. நுங்கு வெட்டச் சென்று காடு கரையில் சுற்றித் திரியும் தலித் இளைஞர்கள் தண்ணீர் குடிப்பதற்காக ஒரு தோட்டத்திற்கு சென்று திரும்புகின்றனர். தோட்டத்தின் உரிமையாளரான பெண் தனது கணவரிடம் அவர்களைத் திருடர்கள் என்று குற்றம்சாட்டுகிறார். ஆனால் அந்த இளைஞர்கள் அவ்வாறு திருட மாட்டார்கள் தண்ணீர் குடிக்கவே வந்திருப்பார்கள் என்று அவர்களைப் புரிந்து கொண்ட தோட்டத்தின் உரிமையாளரான ஆண் குறிப்பிடுகிறார். தவறு செய்யாதவர்களை முன் முடிவோடு தவறு செய்தவர்களாகத் தெரிவிக்கும் போது கோபத்தினால் அவர்கள் தவறு செய்ய வாய்ப்புண்டு. எனவே உருவம், வாழிடம், பிறப்பு, சாதி, மதம் போன்ற எதையும் கொண்டு ஒருவரின் குணத்தைப் பொதுமைப்படுத்திடக் கூடாது என்பதை இவனுகள அப்பிடியேவிட்ரனும் கதையில் குறிப்பிடுகிறார். நுங்கு வெட்ட மரத்தில் ஏறும் இளைஞர்கள் வரிசையாக இருக்கும் பனை மரங்களில் ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்குத் தாவி சாகசம் செய்யும் நிகழ்வை மரம் தாண்டுதல் கதையில் ஆசிரியர் கூறுகிறார். பனை மரத்தில் ஏறும் பொழுது அம்மரத்தில் சூக எறும்பு இருக்கும். அப்படி சூக எறும்பு இருக்கும் மரத்தில் ஏறிய இளைஞன் நுங்கு வெட்டிவிட்டுக் கீழே இறங்கும் முன் குலையில் இருந்த எறும்புகள் அவன் உடல் முழுவதும் பரவியதால் மரத்தின் பாதியில் இருந்து ஓடை மணலில் குதித்து உடலில் சூழ்ந்த எறும்புகளைத் தட்டி விடுவதற்காக ஆடை முழுவதும் களைந்து நிர்வாணமாக நின்றதை நுங்கு வெட்ட உடன் சென்ற நண்பர்கள் கேலி செய்யும் நிகழ்வை நகைச்சுவையோடு குறிப்பிடுகிறார் ஆசிரியர் சூக எறும்பு கதையில்.
உடைந்த தெருக்குழாயில் தண்ணீர் வீணாகும்போது அதைத் தெருவில் கிடைக்கும் பாலிதீன் கவர் மற்றும் குச்சியை வைத்துச் சரி செய்யும் இளைஞன், உடனடியாகப் பஞ்சாயத்து அலுவலகம் சென்று அது தொடர்பாகப் புகார் எழுதி வைக்கிறான். அந்த உடைந்த குழாயின் எதிர் வீட்டில் உள்ள ஒரு பாட்டி இந்த இளைஞனைக் குழாயைத் தொட விடாது கத்தும்போது, “நான் தொட்டுட்டேன். அது தீட்டு தான். இனிமே இதுல நீங்க வேணா தண்ணி பிடிக்க வேண்டாம் பாட்டி” என்று கேலியாகச் சொல்லிச் செல்வதை ஒடஞ்ச திருகுழாய் கதையில் குறிப்பிடுகிறார் ஆசிரியர். பார்த்தால் தீட்டு, தொட்டால் தீட்டு என்று இன்னும் எத்தனை காலத்திற்கு இதையே சொல்லிக் கொண்டு இருக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. நவீன வகையிலான தீண்டாமையின் வடிவமாக தலித் வீட்டில் உணவு உண்டோம் எனப் பெருமையாகப் புகைப்படம் எடுத்துப் பதிவிடுகிறார்கள். அவர்களை நோக்கித்தான் தோழர் ஆதவன் தீட்சண்யா கேட்கிறார்: “தலித் வீட்டில் உணவு உண்டீர்கள். சரி. உங்கள் வீட்டில் என்ன உண்டீர்கள்” என்று?
வயல்வெளிகளில், ஓடைக் கரைகளில் இப்படிப் பல இடங்களில் இருக்கும் பனை மரங்களில் நுங்கு வெட்டுவது எளிது. ஆனால் கிணத்து மேட்டில் இருக்கும் பனை மரத்தில் நுங்கு வெட்டும் போது குலை கிணற்றுக்குள் விழ வாய்ப்பு அதிகம். அப்படிப்பட்ட மரத்தில் ஏறி லாவகமாக நுங்குக் காய்கள் சிதறாமல் குலைகளைக் கிணற்றுக்கு மறுபுறம் எப்படித் தூக்கிப் போடுகிறார்கள் இளைஞர்கள் என்று விளக்குகிறார் ஆசிரியர் கிணத்து மேட்டுப்பனமரம் கதையில். சாதிய மனநிலையோடு இருக்கும் தோட்டக்காரர் அந்தத் தோட்டத்தில் நுங்கு வெட்டச் செல்லும் இளைஞர்கள் அண்ணா என்று அழைக்கும் போது, ‘அண்ணா என்று அழைக்காமல் ஐயா என்று அழையுங்கள்’ என கூறுகிறார். “வயதில் பெரியோர்களை மரியாதைக்காக அண்ணா என்று அழைக்கலாம். ஐயா என்றெல்லாம் அழைக்க முடியாது” என்று இளைஞர்கள் வாதிடுகிறார்கள். இதனால் கோபமடைந்த இளைஞர்களைத் தோட்டக்காரர் ஒருமையில் மரியாதை இன்றிப் பேசும் போது நுங்கு வெட்டுவதற்காக எடுத்துச் சென்ற அரிவாளைத் தூக்கிக் காட்டிய பின்பு அந்தத் தோட்டக்காரர் இளைஞர்களிடம் மரியாதையோடு நடந்து கொள்வதை அய்யா அண்ணா கதையில் குறிப்பிடுகிறார் ஆசிரியர். இக்கதையில் வரும் தோட்டக்காரரைப் போல சாதியை உடலை மூடும் தோலைப் போல எப்போதும் சுமந்து செல்பவர்களைப் பார்த்துக் கேட்கிறார் தோழர் ஆதவன் தீட்சண்யா: “இந்தப் பக்கம் நான் மனிதன் இருக்கிறேன். அந்தப் பக்கம் யாராவது இருக்கிறீர்களா” என்று. அடர்ந்த காட்டுப் பகுதியில் இருக்கும் ஒரு தோட்டத்தில் 40, 50 ஆண்டுகளாகக் காவலுக்கு இருக்கும் ஒரு தாத்தா, நுங்கு வெட்டியபின் தண்ணீர் குடிப்பதற்காக அந்தத் தோட்டத்திற்குச் செல்லும் இளைஞனோடு உரையாடும் போது, அந்தத் தாத்தாவின் தனிமையைப் புரிந்து கொண்ட இளைஞன் அவருக்கு நுங்கு எடுத்துச் சென்று அவர் சாப்பிடுவதற்காக நுங்கைச் சீவிக் கொடுத்துவிட்டு வரும் அன்பை, மனிதத்தைக் கூறுகிறது உடையார் தாத்தா கதை. l