உழைக்கும் மக்கள் அவரவரது இடம் சார்ந்த வாழ்வையும், சமூகம் சார்ந்த சிக்கல்களையும், அதற்கான தீர்வையும், அவர்களது வெற்றியையும், அங்கு வாழ்பவர்களில் படைப்பாற்றல் மிக்கவர்களும், அவர்களை ஆராய்ந்து பதிய வைக்கும் எழுத்தாற்றல் மிக்கவர்களும், தங்களது நூல்களின் வாயிலாக வெளியுலகுக்கு வெளிப்படுத்துபவர்களாக இருக்கிறார்கள். அவ்வாறாக நிலம் சார்ந்த கதைகள் அடங்கிய புத்தகங்கள் ஏராளமாக இருக்கின்றன. கடல் புரத்துக் கதைகள் அடங்கிய நூல்களாக, தேசம்மா – க. அரவிந்த் குமார், கடல் சொன்ன கதைகள், வேழம், பழவேற்காடு முதல் நீரோடி வரை, மன்னார் கண்ணீர் கடல், – வறீதையா, கடல் (நிலம் நீர் வானம்) – சமஸ், கடல் நீர் நடுவே – கடிகை அருள்ராஜ், நெய்தல் சிறுகதைகள் – பெர்லின் என இன்னும் பல்வேறு புத்தகங்கள் உருவாகியிருக்கின்றன. இவ்வரிசையில் இந்த ஆண்டு வெளிவந்திருக்கும் நூல்களில் ஒன்றாக ரா. பி. சகேஷ் சந்தியா அவர்கள் தொகுத்த, “கடலும் போராளிகளும்” சிறுகதைத் தொகுப்பு நூலானது, பத்து கதைகளை உள்ளடக்கியிருக்கிறது. ஒவ்வொரு கதையையும் வெவ்வேறு படைப்பாளிகள் தங்களது நிலம் சார்ந்த அனுபவங்களைக் கொண்டு படைத்திருக்கிறார்கள். இந்த நூலில் இடம் பெற்றிருக்கும் சொற்கள் யாவும் குறிப்பிட்ட நிலப்பரப்பை அடையாளப்படுத்தும்படி அமைந்து, ஒவ்வொரு கதையும் ஒன்றுக்கொன்று இணையானவையாக இருக்கின்றன. வெவ்வேறு நபர்கள் எழுதிய கதைகளாக நம்மால் அடையாளப்படுத்த இயலாத வண்ணம், கடலைச் சார்ந்து வாழும் மக்களது ஒரே மாதிரியான வாழ்வில், அவர்களுக்கு நிகழும் பல்வேறு போராட்டங்களை கருவாகக் கொண்டு வெவ்வேறு கதைகளாகப் படைத்திருக்கிறார்கள். தொகுப்பாசிர் எழுதிய ஒரு கதையும் இந்த நூலில் இடம் பெற்றிருக்கிறது.
கடலைச் சார்ந்து வாழும் மக்களது சிக்கலான சூழ்நிலைகளாக, அரசாங்கத்தால் தாங்கள் கண்டுகொள்ளப்படாத நிலையையும், குறைவான பொருளாதாரம் கொண்ட வாழ்க்கையையும், குடும்ப உறுப்பினர்களின் அடிப்படை வாழ்க்கைக்கு ஆதாரமான தந்தை, மதுவுக்கு அடிமையாவதால் ஏற்படும் மரணத்தையும், கூடையில் மீன் விற்று குறைந்த வருமானம் பெறும் மீனவக் குடும்பத்து விதவைக் கோலத்தையும், தன் உடன் பிறந்த பெண்பிள்ளைகளின் வாழ்க்கைக்காக தனது கல்வியை இழக்கும் ஆண்பிள்ளைகளின் போராட்டத்தையும், பெண் என்பதால் அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையுமென இன்னும் பலவற்றையும் ஒவ்வொன்றாக கருவாகக் கொண்டு கதைகள் அமைக்கப்பட்டிருந்தாலும் இவை யாவற்றிற்கும் ஒரே தீர்வாக அவர்கள் பெறவேண்டிய கல்வியே அடிப்படையாக இருக்கிறது. அதனை அடைவதற்கான சூழ்நிலையை அவர்கள் பெறுவதற்கே போராட்டமாக இருக்கிறது என்பதையே பெரும்பாலான கதைகள் மையமாகக் கொண்டிருக்கின்றன.
நிபன்சா எழுதிய, “செக்கலுக்கு போவோம் வாங்க” எனும் முதல் சிறுகதையில், முக்கிய நபராக குடும்பத்தில் பொருளீட்டும் தந்தை பக்கவாதம் வந்து படுத்த படுக்கையாக ஆன பிறகு, அவரது மகள் முன்னெடுத்து மீன்பிடிக்கும் தொழிலை மேற்கொள்கிறாள். அதனால் அவளுக்கு ஏற்படும் சிக்கல்களையும், அவர்கள் வாழ்ந்த அடிப்படையான வாழ்க்கையை தக்க வைத்துக்கொள்வதற்கே மகள் போராட வேண்டிய நிலையையும் அடிப்படையாகக் கொண்டு இந்தக் கதை எழுதப்பட்டிருக்கிறது. கருவிகளைக்கொண்டு தீர்மானித்து அரசாங்கம் அறிவிக்கும் முன்னறிவிப்புகளையும் கடந்து, கடலின் போக்கை தனது அனுபவத்தால் பெற்றிருக்கும் தந்தையிடமிருந்து கற்ற அறிவால், கருநீல நிறம் கொண்ட கடலின் பகுதியில் மீன்களின் போக்கு அதிகமாக இருக்கும் என்பதை மகள் அறிந்திருக்கிறாள். இதுபோன்ற நுணுக்கமான தகவல்களும் கதைகளில் இடம்பெற்றிருக்கின்றன.
சுசிலன் எழுதிய “எம் மவனே” எனும் அடுத்த கதையின் முக்கியப் பாத்திரமான நன்றாகப் படிக்கின்ற மாணவன், தான் பெற்ற பரிசுத் தொகையைக்கொண்டு அவனுக்கு அதுவரை கிட்டாமல் இருந்த புதிய ஆடைகளை வாங்கிக் கொள்ள விருப்பப்படுகிறான். அதனை வாங்குவதற்கு வயதில் தன்னைவிட பெரியவராக இருக்கும் நண்பரிடம் இருசக்கர வாகனத்தை கடனாகக் கேட்கிறான். 18 வயது நிரம்பாத அம்மாணவன் சட்டத்தை மீறி சாலையில் செல்லும் பொழுது ஏற்படும் விபத்தால் மரித்துப் போகிறான். மகிழ்ச்சியையே காணாதவர்கள் தங்களது அதிகப்படியான மகிழ்ச்சியாலும், நிதானமில்லாமல் சறுக்கி விழுவதை இந்நூல் படம் பிடித்துக் காட்டியிருக்கிறது. கடல் நீரின் மீது நிலையற்ற வாழ்வினைக் கொண்டு சொற்ப வருமானத்தை ஈட்டி அன்றாட வாழ்க்கைக்கு போராடுகின்ற குடும்பத் தலைவருக்கு மதுப்பழக்கம் இருந்துவிட்டால், அவரைச் சார்ந்தவர்கள் அடைகின்ற துன்பத்திற்கு அளவே இல்லை. “குடித்துவிட்டு வாகனத்தையே ஓட்ட முடியாதவனுக்கு குடும்பத்தை மட்டும் எப்படி நடத்த முடியும்?” என்கிற கேள்விகளையெழுப்பி, “மது அருந்தியவர்கள் வண்டியை ஓட்டினால் அதனைத் தடுக்க சட்டம் இருக்கிறது; ஆனால் அவர்கள் குடும்பத்தை நடத்தக் கூடாது என்பதற்கு சட்டம் இல்லையே!” என்றவாறு ஆதங்கமடைகிற வரிகள் கதைகளில் இடம் பெற்றிருக்கின்றன.
ஓர் எழுத்தாளனுக்கு, தான் எழுதுகின்ற எழுத்து, சமுதாயத்தில் ஏதாவது மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் இருந்தாலும், அவற்றை எதிர்பார்க்காமல் தனது படைப்புகளை கொடுக்கும்பொழுதே ஏமாற்றம் அடையாமல் இருக்கிறான். குடித்துவிட்டு தந்தை கொடுக்கும் துன்பங்களை, மகள் தனது நோட்டில் எழுதி வைத்ததை ஒருநாள் தந்தை படிக்க நேரும்பொழுது மனம் திருந்தி அப்பழக்கத்தை கைவிடுவதாக ஸ்வீட்லின் எழுதிய, “அப்பாவின் நோட்டு” எனும் கதையானது எழுத்துக்கு இருக்கும் வல்லமையையும் வெளிப்படுத்துகிறது. நிஷல் எழுதிய, “படிக்க வாரேன் டீச்சர்” எனும் சிறுகதையில் தந்தை இல்லாத வீட்டில் அன்றாட வாழ்க்கைக்கு வழியைத் தேடி அண்ணன் மீன் பிடிக்கும் தொழிலுக்குச் செல்ல வேண்டி வருகிறது. அதே குடும்பத்தில் அவனது தங்கை தனக்குக் கிடைத்த வாய்ப்பில் கல்வி பயின்று ஆசிரியையாகப் பணியாற்றுகிறாள். இவ்விடம், குடும்பச் சூழ்நிலை காரணமாக தோளில் பாரத்தைச் சுமக்கும் மகன், கல்வி பயிலும் வாய்ப்பை இழந்துவிடுவதைக் குறிப்பிடுகிறது. கொரோனா காலத்தில் பிள்ளைகளின் அடிப்படைக் கல்வி பாதிக்கப்பட்டபோது, அவர்களை எப்படி மீண்டும் கல்வியின் பக்கம் திசை திருப்புவது என்று சிந்தித்து, தனது கதையை சொல்லும் பெண் ஆசிரியரின் மூலம் இந்த நிலை விளக்கப்பட்டிருக்கிறது. நதிஷா சில்வஸ்டர் எழுதிய, “அறுதலி” என்னும் கதையில் ஏழு அண்ணன்களுக்கு ஒரே ஒரு தங்கையாக பிறந்த வீட்டில் சொகுசாக வளர்பவள், திருமணத்திற்குப் பிறகான பாதி வாழ்க்கையில் கணவனை கடல் விழுங்கிவிட, கருவாட்டை விற்றுப் பிழைத்து கருவாட்டு ராணியென அடையாளப்படுத்தப்படுகிறாள். மோசமான வானிலையை அரசு முன்னறிவிப்பு செய்வதில் சிறு பிசகு ஏற்பட்டாலும் இவர்களது கடல் பயணத்தில் உயிரையே இழந்து விடுகிறார்கள். அதற்கு இழப்பீடாக இவர்கள் பெறுவது 5 லட்சம் ரூபாய் மட்டும்தான். இருட்டிலேயே ஆழ்கடலுக்குச் சென்று வலையை விரித்துவிட்டு காத்திருக்கும் நேரத்தில், தாங்கள் சென்ற படகிலேயே உறங்கியும் விடுகிறார்கள். காற்று போகும் போக்கு சரியில்லை என்பதை கடலுக்குச் சென்ற பிறகு அறிந்துகொண்டால் விரைந்து பயணித்து கரையை அடைய முயன்றாலும், காற்றால் தள்ளப்பட்டு ஒரு சிலர் கடல் நீரில் மூழ்கி விடுவதும் நடந்து விடுகிறது. அவர்களைக் காப்பாற்றுகின்ற பொறுப்பையும் அவர்களோடு வாழ்பவர்களே சுமக்கிறார்கள். அரசாங்கத்தையோ அதிகாரிகளையோ, இந்தியக் கடற்படையையோ நாடினால் கண்துடைப்பு செய்கிறார்களேயன்றி காப்பவர்கள் இல்லையென்று ஆதங்கம் கொள்வதும் கதைகளில் பதிந்திருக்கிறது. “கடல் ஆமைகளைக் காப்பதற்குக் கூட சட்டம் இருக்கிறது. ஆனால் காற்றோடும் கடலோடும் போராடி வாழ்கின்ற மீனவர்களைக் காக்க ஒருவருமில்லை” என்பது போன்ற வரிகள் முக்கியத்துவம் அற்றவர்களாக வாழ்கின்ற அவர்களது நிலையை வெளிப்படுத்துகிறது.
“நீந்தத் தெரியாதவர்கள் மீன்வளத் துறையில் பணிபுரிகின்ற நிலையில், படித்த மீனவர்களை அப்பணிக்கு அமர்த்த முன்னுரிமை கொடுப்பதில்லை. அரசியலில் ஆளுமைகளாக மீனவர்கள் வளர்வதற்கும் வாய்ப்பில்லாமல் அவர்கள் எண்ணிக்கையில் மிகக் குறைந்த அளவே இருக்கிறார்கள்” என்பது போன்ற கருத்துகள், மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்து நிற்கும் கல்வி கற்ற இளம் வயதினரின் வரிகளாக இப்புத்தகத்தில் பதிந்திருக்கின்றன. மீனவர்களது நிலையில்லாத வாழ்க்கையாக ஒவ்வொரு நாளும் கடலுக்குச் சென்று திரும்புவதில் காலதாமதம் ஏற்பட்டால், குடும்ப உறுப்பினர்கள் பதட்டத்தில் செத்துப் பிழைக்கிறார்கள். உயிரைப் பணயம் வைத்து உயிர் வாழ்ந்து வரும் இவர்கள், ஈட்டும் பணம் குறைவாகவே இருக்கிறது. “எழுபதாயிரம் கோடி ரூபாயை மீனவர்கள் மூலம் அந்நியச் செலாவணியாகப் பெறுகின்ற அரசு, அவர்களுக்காக அதில் பத்து சதவீதம்கூட ஒதுக்குவதில்லை” என்பதை, ரஸ்லின் எழுதிய “அறிவுப் பயணம்” எனும் கதையில் இடம் பெறும் பெண் கதாபாத்திரம் பேசுகிறாள். கடலைச்சார்ந்த கதைகள் கொண்ட எத்தனையோ நூல்கள் உருவாகியிருந்தாலும், இவர்கள் பேசுவதற்கு இன்னும் நிறைய இருக்கிறது என்பதையே இந்த நூலும் காட்டுகிறது.
பரந்துபட்ட கடல் பரப்பின் அருகில் வாழும் மீனவர்களின் குரலானது, இடப்பரப்பைச் சார்ந்த அவர்களது வாழ்க்கைமுறைக்கு ஏற்ப பொதுவாகவே ஓங்கியிருக்கும் இயல்பாக இருந்தாலும், “தங்களது குறைகளைப் பேசும் இவர்களது குரல்கள் குறைவாகவே உரியவர்களுக்கு ஒலிக்கின்றன” என்கிற ஆதங்கம் இவர்களுக்கு இருக்கிறது என்பதையும் இந்த நூலை வாசிக்கும்பொழுது உணர முடிகிறது. “ஒவ்வொரு விடியலையும் முதன்முதலில் காண்கின்ற கடல் போராளிகளான இவர்களது வாழ்வும் உண்மையில் விடிய வேண்டும்” என்கிற எண்ணமும் நமக்குத் தோன்றுகிறது. தேவையான சிறுகதைத் தொகுப்பு நூல் இது. l
previous post