95வயதில் தமிழில் எழுதிக் கொண்டிருப்பவர்கள் மிகவும் அரிதான நபர்களே இருக்கக் கூடும். அதிலும் குறிப்பாகக் கதைகளை எழுதிய எழுத்தாளர்களை நம்மால் விரல்விட்டு எண்ணிவிட முடியும். அப்படியான ஒரு மூத்த எழுத்தாளர்தான் மே.சு.சண்முகம். விருதுநகர் மாவட்டம் நென்மேனி மேட்டுப்பட்டியில் பிறந்து வளர்ந்து தற்போது கோவில்பட்டியில் தனது நூற்றாண்டை நோக்கி எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்தான் இவர். இரண்டு நாவல்கள், மூன்று சிறுகதைத் தொகுப்புகள், இரு கட்டுரைத் தொகுதிகள், என்று 1940களிலிருந்து எழுதிக்கொண்டிருக்கும் இவர் தற்போது ”என் கதை” என்னும் தன் வரலாற்று நூலையும், ”என் கவிதைகள்” என்னும் கவிதைத் தொகுப்பு நூலையும் தனது 95ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வெளிக்கொண்டுவந்துள்ளார்.
இதில் ’என் கதை’ நூல் அவரின் தன் வரலாற்று நூல்களின் முதல் பாகம் ஆகும். அவரே அவர் நூலில் குறிப்பிட்டிருப்பது போல ஒரு மனிதனுக்கு உள்ள மூன்று பருவங்களான பள்ளிப்பருவம், பணிப்பருவம், பணி ஓய்வுப் பருவம் என்பதில் இந்நூல் முதல் பருவம் குறித்தது. அதாவது பாலகாண்டம். இல்லற காண்டம், முதுமைக் காண்டம் என்னும் பகுதிகளில், இன்னும் இரண்டு நூல்கள் வரவிருக்கின்றன. இந்த நூலைப் படிக்கும் போது பல செய்திகள் தெரியவருகின்றன. குறிப்பாக எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு யார் இந்தப் பெயரை வைத்திருப்பார்கள் என்றும், அவரின் எழுத்துகளில் உள்ள தீராத சமூகப் பார்வையின் வேர் எங்கிருக்கிறது என்றும், எழுத்தாளர் கோணங்கியின் எழுத்துகளில் உள்ள நவீனம் எங்கிருந்து தொடங்கியிருக்கிறது என்றும், நவீன நாடகங்களை அரங்கேற்றிவரும் நாடகவியலாளர் முருகபூபதியின் நாடகங்கள் எந்த அரங்கத்திலிருந்து வந்தவை என்பதையும் புரிந்துகொள்ள முடியும். ஒருவாறு நீங்கள் யூகித்திருப்பதைப் போலவே எழுத்தாளர் மே.சு.சண்முகம் மேற்கண்ட மூன்று படைப்பாளிகளின் தந்தை ஆவார்.
இந்நூல் படிப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமான பல தகவல்களைக் கொண்டுள்ளது. எழுத்து நடையும் மிக விரைவாகப் படிப்பதைப்போல எழுதப்பட்டுள்ளது. இடையில் வரும் எடுத்துக்காட்டுகளும், அடுக்குத் தொடர்களும் படிப்பவர்களை அந்தக்காலத்திற்கு அழைத்துச் செல்கின்றன. 80 ஆண்டுகளுக்கு முன்பு நென்மேனி மேட்டுப்பட்டி எப்படி இருந்தது, சாத்தூர் எப்படி இருந்தது, அதைவிடப் பெரிய நகரமான தூத்துக்குடி எப்படி இருந்தது என்பதை நம் கண் முன் நிறுத்துகிறார். விடுதலை பெற்ற அக்காலத்தில் ஒவ்வோர் அரசு அலுவலகங்களும் எப்படி அவ்வூருக்கு வந்தன என்றும் சொல்கிறார். கல்விச்சூழலில் உயர்கல்வி பலருக்கும் எட்டாக்கனியாக இருந்தது என்று அவர் பதிவு செய்யும் இடம் மிக நுட்பமானது. 300 குடும்பங்கள் உள்ள மேட்டுப்பட்டியிலிருந்து நென்மேனியில் ஆறாம் வகுப்பில் சேர்வதற்கு 10 மாணவர்கள் மட்டுமே வந்தார்கள். அவர்களிலும் பெண்கள் மூன்று பேர்தாம். இது அங்குள்ள எல்லாக் கிராமங்களின் நிலை போன்ற பதிவுகள் நுட்பமான பார்வையாகும். தூத்துக்குடி கால்டுவெல் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்புப் படிக்கச் செல்லும்போது அந்த எண்ணிக்கை இன்னும் குறைகிறது. ஆங்கிலத்தில் அடிப்படைப் பயன்பாட்டுச் சொற்களே அறிந்திடாத ஊரிலிருந்து தூத்துக்குடி கால்டுவெல் பள்ளியின் ஆங்கில உரையாடலால் ஏற்பட்ட அதிர்ச்சி, இன்று வரை தனக்குக் கைகூடாத ஒன்றாக அவர் பதிவு செய்வது பலரின் அனுபவமாகும். சுற்றுலா செல்லும் இடங்களில் சென்னை மதுரை போன்ற இடங்கள் வசதிபடைத்த மாணவர்களுக்கும், வசதி குறைவான மாணவர்களுக்குப் பாஞ்சாலங்குறிச்சி போன்ற இடங்கள் இன்றைய தலைமுறைக்கு வியப்பாகக்கூட இருக்கலாம்.
திராவிட இயக்கம், அதன் பேச்சாளர்களும், எழுத்தாளர்களும் அன்றைக்கு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்களும் பள்ளி மாணவர்கள் தொடங்கி எல்லா மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் எப்படிச் செல்வாக்குச் செலுத்தின என்பதை இவரின் சொந்த அனுபவம் நமக்கு உணர்த்தும். இப்படி தன் காலத்தில் தான் பார்த்த அண்ணா போன்ற தலைவர்கள், எழுதவும் பேசவும், அரசியல் உரையாடல் நடத்தவும் எப்படித் தங்களுக்கு உந்துசக்தியாக இருந்தார்கள் என்கிற இடம் தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தின் தொடக்ககால வளர்ச்சியை நமக்கு உணர்த்தும். அன்றைக்கே இலங்கைப் பத்திரிகையில் பள்ளி மாணவரான இவரின் படைப்புகள் வந்தன போன்ற இடங்கள், கடல்கடந்து கூட இலக்கிய இதழ்கள் பள்ளி மாணவர்களுக்கு பரிச்சயம் என்பதெல்லாம் வியப்பாக இருந்தது.
இவரின் நாடக அனுபவம் அலாதியானது. பள்ளிக்காலங்களில் திராவிட இயக்க நாடகங்கள் பலரைப்போல இவர் மீது செலுத்திய தாக்கம், இவர் உருவாக்கிய பல நாடகப்பிரதிகள் மூலம் வெளிப்படுகிறது. மாணவர்கள் மத்தியில் ஆளும் அரசுக்கு எதிரான கருத்தோட்டமும், அதைத் தணிக்கை செய்யத் தலைமையாசிரியர் முயற்சிப்பதும், அதை மீறி இந்திக்கு எதிராக இவரின் நாடகம் அரங்கேறுவதும், அப்படி இந்திக்கு எதிராக உணர்ச்சி மிகுதியில் பேசிய மாணவர் ஒரு மலையாளி என்பதும் என்று பல சுவாரஸ்யமான காட்சிகள் இந்நூலில் உண்டு. இந்நூலின் ஏழாவது பகுதி 75 ஆண்டுகளுக்கும் முன்பாக இவர் எழுதி அன்றைய இதழ்களில் பதிவான படைப்புகளின் ஒளிநகல்களாக இணைக்கப்பட்டுள்ளது. எட்டுப் பகுதிகள் கொண்ட இந்நூலின் எட்டாவது பாகம் ”ஈடேறாத எண்ணங்கள்”. மே.சு.சண்முகம் அவர்கள் படிக்கும் பருவ வாழ்க்கை முழுவதும் தமிழ்மொழி, எழுத்து, நாடகம், அரசியல் என்று சுற்றித்திரிந்தவர். ஆனால் வேலைக்குச் சென்று, பணி, குடும்பம் என்று ஆனபின் எழுத்து முற்றும் அற்றுப்போகிறது. படிப்பு முடிந்து 13ஆண்டுகள் கழித்துக் கல்லூரி முதல்வராக இருக்கும் தன் சக நண்பர் ஒருவரைச் சந்திக்கும் போது நடந்த உரையாடலில், தனது இலக்கிய உலகம் ஈடேறாத கனவாக அறுந்துவிட்டதை உணர்ந்து வருந்துகிறார். நிறைவாக நில அளவைத் துறையில் தனது பணி அனுபவம் குறித்த அடுத்த நூலுக்கான குறிப்போடு இந்நூல் முடிகிறது.
ஆனால் அவரின் இலக்கியக் கனவு அவர் தலைமுறை கடந்தும் ஈடேறி அறுபடாமல் தொடர்வதை நாம் எல்லாரும் பார்க்கிறோம். அவருக்கு இருந்த தமிழ்ப்பற்றுதான் தமிழ்ச்செல்வன் என்ற தன் மகனின் பெயராக மலர்ந்துள்ளது. அவருக்கு இருந்த இலக்கியம் மற்றும் நாடகம் மீதான காதல்தான் அவர் பிள்ளைகளை இன்று படைப்பாளிகளாக வலம் வர வைத்துள்ளது. 95வயதிலும் நிறுத்தாமல் அவர் எழுதிக்கொண்டிருக்கிறார்.
உ.வே.சா.வின் என் சரித்திரம் போன்ற தன் வரலாற்று நூல்கள் எப்படி அவர்கள் சொந்த வாழ்க்கையை மட்டும் பேசாமல், அந்தக்காலத்தின் வரலாற்றைப் பேசுகின்றனவோ! அதே போல் இந்நூலும் அந்தக் காலத்தின் சுருக்கமான வரலாறாக உள்ளது. l
