இலக்கியம் என்றால் என்ன? என்று பலரும் பலவிதமாகச் சொல்லியும் எழுதியும் வந்துள்ளார்கள். இலக்கியம் எனும் வடிவத்தை இதுதான் என அறுதியிட்டுக் கூற முடிந்தால், அது எவ்வகையான உருவத்தைப் பெறும் என்பதைப் பல கோணங்களில் ஆராய்ந்து, எட்டுத் தலைப்புகளின் கீழ் எட்டு ஆய்வாளர்களால் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். மனிதன் தன்னுடைய நுண்ணறிவின் மூலம் கண்டுபிடித்த மிக முக்கியமான அறிவியக்க வகைகளில் ஒன்று இலக்கியம். மனிதர்களுக்குள் எழும் எண்ணத்தை, அதன் மூலம் உருவாகும் சிந்தனையைத் தேக்கி வைத்து, ஒழுங்குபடுத்தி இலக்கியம் என ஒன்றை உருவாக்குகிறார்கள். அது கதையாகவோ, கலையாகவோ வெளிப்படுகிறது. அது மனிதனின் சிந்தனையில் இருந்து தான் உருவமாகிறது.
தமிழில் இரண்டு வகையான குழுக்கள் இலக்கியம் என்றால் என்ன என்ற கேள்விக்கு விளக்கம் கொடுத்துள்ளார்கள். முதலில் அறத்தைக் கூறுவது மட்டுமே இலக்கியம் என்ற கண்ணோட்டத்தைக் கொண்டுள்ள ஒரு பிரிவினர். இலக்கியத்தை விமர்சனப் பார்வையோடு பார்க்காமல், அறம் மட்டுமே போதும் என்று கூறுபவர்களை ஆரம்பகட்ட வாசிப்பாளர்கள் எனலாம். இவற்றுக்கெல்லாம் இந்நூலின் முதல் கட்டுரையாளர் பல இலக்கியங்களை மேற்கோள் காட்டி, மேற்கூறியவற்றை மறுதலித்து மேல்நாட்டு அறிஞர்கள் பலரின் கூற்றுகளை முன்வைத்து தக்க சான்றுகளுடன் இலக்கியம் என்பது யாதென்று கூறியுள்ளார். இரண்டாம் கட்டுரையாளர், மேல்நாட்டு அறிஞர் ழான் பவுல் சார்த்தரின் கோட்பாடுகளை முன்வைத்து இலக்கியம் என்பது யாதென்று கூற வருகிறார். 1948 இல் வெளியிடப்பட்ட இலக்கியம் என்றால் என்ன? என்னும் நூலில் சார்த்தர் இலக்கியம் பற்றி மிக விரிவாக விவாதிக்கிறார். இலக்கியங்கள் வாசகர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை இந்த நூலில் சார்த்தர் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறார். முன்னுரையில் சார்த்தர் இலக்கியம் முற்றிலும் கலையின் பக்கம் தள்ளப்படுவது கூட அரசியலாக இருக்கலாம் என்று கூறுகிறார். உரைநடையானது கருத்துகளைத் தெரிவிக்கிறது என்று சார்த்தர் நம்புகிறார். இதற்காகப்பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு மொழிகளில் எடுக்கப்பட்ட நாடகங்களை மேற்கோளாக இவர் எடுத்துக்காட்டுகிறார். இலக்கியம் என்பது வெறும் சம்பவங்களாக இல்லாமல் ஒரு புதிய வகை சிக்கலுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதன் உண்மைத் தன்மையை கண்டறியும் செயல்திட்டமாக இருத்தல் வேண்டும். இது தற்செயலாக அமைவது அல்ல. அறிவார்ந்து சிந்தித்துச் செயல்படுத்துவது என்பதின் புரிதலே இலக்கியம் என்பதற்கான விடையாக இருக்கிறது. க.நா.சு. வின் இலக்கியப் பார்வையை முன்வைத்து நான்காவது கட்டுரையாளர் பேசி உள்ளார். க.நா.சு. தன்னுடைய இலக்கியம் குறித்தான பார்வையைத் தொகுத்து நூலாக எழுதவில்லை. ஆனால், அவர் எழுதிய சில நூல்களில் இலக்கியம் குறித்த பார்வையை ஆங்காங்கே முன் வைத்திருக்கிறார். இவ்வாறாகச் சிதறிக் கிடக்கும் அவரது இலக்கியங்களில் பொதிந்துள்ள ஆழமான விஷயங்களைத் தொகுத்துக் கட்டுரையாளர் கொடுத்துள்ளார்.
ஒரு நல்ல படைப்பு நம் மனதில் உத்வேகம் கொடுத்து, தீபத்தை ஏற்றி வைக்கிற சக்தியைக் கொண்டிருத்தல் வேண்டும். ஒரு படைப்பாளன் கூறும் கருத்துகள் ஏற்றுக் கொள்ளக் கூடியவையாக இருத்தல் வேண்டும். அதாவது, படைப்பாளி எழுதுகிற ஒவ்வொரு வாக்கியத்திலும் உண்மைத்தன்மை உள்ளது என்று வாசிப்பவர் புரிந்து கொள்ளும் அளவிற்கு அது இருத்தல் வேண்டும். மேலும், சிந்தனைச் சுதந்திரத்தோடு இயங்குபவன்தான் படைப்பாளி. அந்தச் சிந்தனையின் சுதந்திரம் சுலபமாக இருக்கலாம். ஆனால், அதை நேர் பார்த்து சரியாக அவற்றிற்கு உருவம் கொடுப்பது சிரமமான காரியம், அப்படிக் கொடுப்பவனே உண்மையான படைப்பாளி. பிற இலக்கியம் உணடாக்கிய தாக்கத்தால் எழுதினாலும் அவரின் சொந்த ஆளுமையின் தீவிரம் மிகுதியாக வெளிப்பட வேண்டும்.
க.நா.சுப்பிரமணியம் பேசியது, எழுதியது அனைத்தும் உலகத் தரமான படைப்புகள் படைக்கப்படுவதற்கான சிந்தனைகளைப் பற்றியது. வர்க்க முரண்பாடு, சாதிய முரண்பாடு, அரசியல் இயக்கங்கள், வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகள், இனக்குழுக்களின் சமூக உறவு, பண்பாட்டுப் பிரச்சனைகள், போரின் விளைவுகள், அந்நிய ஆட்சி, நில உடமையின் குணரூபங்கள், ஆட்சி மாற்றங்கள், மதக் கருத்துகள் என்று எத்தனையோ சமூகப் பிரச்சனைகள் நாவலுக்கு அடித்தளமாக நிற்பதை எடுத்துக்காட்டியுள்ளார். உலகத்தர இலக்கியங்களில் அழகியல், நுணுக்கங்கள், கற்பனை சாத்தியங்கள், புதைந்திருப்பதை எடுத்துக்காட்டி ஒரு படைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று அடையாளப்படுத்துகிறார். இலக்கியம் என்பது இதுதான் என்று வரையறுக்க முடியாது. அது வடிவத்தாலும், குறியீட்டாலும், அடைக்க முடியாத உணரவும் முடியாத ஒரு தொடர் இயக்கப் பாதையில் நழுவி நிற்கும் இயங்கு சக்தி. இந்த நழுவலைக் கண்டடைய ஒரு படைப்பாளியும், வாசகனும், விமர்சகனும் பல முக்கிய அர்த்தப்படுத்தலோடு இயக்கிப் பார்க்கிறார்கள். தத்துவம் என்று தற்போது புழக்கத்தில் உள்ள சொல்லானது வடமொழியைச் சார்ந்தது. அதற்கான சரியான தமிழ்ச்சொல் வள்ளுவர் கூறும் மெய்ப்பொருள் என்பதிலிருந்து தற்காலத்திற்கான சொல்லாக ‘மெய்யியல்’ என்பதை இக்கட்டுரையாளர் பயன்படுத்தியுள்ளார்.
சத்தியமும் உண்மையும் ஒன்றல்ல. அவற்றுக்குள் பல வேறுபாடுகள் உள்ளன என்பதை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டி உள்ளார். ஆனால், உண்மை என்பது சத்தியம் என்பதாகக் கருதப்படுகிறது. உண்மை என்பது ஒரு சூழல் சார்ந்த கருத்து என்ற புரிதல் வேண்டும். சத்தியம் என்பது மாறா உண்மை. அதாவது, உண்மை மாறும் தன்மை கொண்டது. சத்தியம் மாறாத தன்மை கொண்டது. மெய்யை அறியும் முறையியலைத்தான் மெய்யியல் என்கிறார். மேலும், தத்துவம், கோட்பாடு எல்லாவற்றையும் பரவலாக சித்தாந்தம், வேதாந்தம் என்றே புழக்கத்தில் பயன்படுத்துகிறோம். தத்துவம் படித்தவர்கள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் கூட இப்படியே பயன்படுத்துகிறார்கள். அடிப்படையில் இது தவறானது என்பது ஆதாரத்துடன் நிறுவப்பட்டுள்ளது. பிரெஞ்சு மார்க்சிய, இருத்தலியத் தத்துவ சிந்தனையாளர் ழான் பால் சார்த்தர் ஒரு புகழ்பெற்ற கட்டுரையை எழுதியுள்ளார். அதில் இலக்கியத்தை உரைநடை, கவிதை என்று இரண்டாகப் பிரித்து, உரைநடை என்பது மொழியைத் திட்டமிட்டுப் பயன்படுத்தும் ஓர் அரசியல் நடவடிக்கை என்கிறார். மேலும் கவிதை என்பது மொழிக்கு வெளியே இருப்பது. அது எழுதுபவரால் பயன்படுத்தப்படுவதற்கு மாறாக மொழி அமைப்பிலிருந்து பிரித்து அதன் சொற்களை அக உலகின் உணர்த்தல் ஆக வெளிப்படுத்துவது என்கிறார். சுருக்கமாகக் கூற வேண்டுமென்றால் இலக்கிய எழுத்துலகில் கவிதையை மட்டுமே உணர்வுடன் உறவு கொள்ளப்படுவதாகக் கூறுகிறார். இலக்கியத்திலிருந்து உணர்வும், உணர்விலிருந்து வாழ்வும், வாழ்விலிருந்து மெய்யியலும் பிறக்கிறது. இலக்கியம் என்பது வாழ்க்கைக்கான மெய்யியலைப் புனைவது மட்டுமல்ல. அது வாழ்வை மெய்மையாக வாழ்வதற்கேற்ற வேட்கையைத் தருவதும் ஆகும்.
இலக்கியத்தின் தத்துவத்தை அதாவது மெய்யியலை இலக்கியத்துவம் என்று கூறப்பட்டுள்ளது. கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டில், இலக்கியம் என்பது இயற்கையின் பிரதிபலிப்பு என்ற கருத்தை முன் வைக்கிறார். இன்றுவரை இந்தக் கருத்துதான் மேற்கத்திய சமூகத்தின் இலக்கியம் குறித்த ஒரு மெய்யியல் சார்ந்த கோட்பாட்டுச் சட்டகமாக இருக்கிறது. இதனையே லெனின் தனது இலக்கியக் கோட்பாடாக எடுத்துக் கொண்டு, பிரதிபலிப்பு என்பது இருபுறமும் நடக்கிறது என்பதால் இயற்கை கலைஞனுக்குள் பிரதிபலித்து, கலைஞனின் கலை இலக்கிய வெளிப்பாட்டின் மூலம் சமூகத்திலும் பிரதிபலிக்கிறது என்கிறார். சுருங்கக்கூறினால் இயற்கையுடன் சமூகமும் சார்ந்து இயங்குவதாக இலக்கியம் வினை புரிகிறது என்பதாகும். இந்தக் கோட்பாட்டை ஒரு சில மார்க்சிய இலக்கியவாதிகள் மறுத்துப் பேசியதும், அதற்கு பல தமிழ் இலக்கியம் மற்றும் உலக இலக்கிய எடுத்துக்காட்டுகளைக் கூறியதையும் நூலில் விரிவாகப் பேசப்பட்டுள்ளது.
தத்துவத்தின் கலை வடிவம்தான் இலக்கியம். கதையோ, கவிதையோ அல்லது கட்டுரையோ தங்களுக்குள் தத்துவத் தர்க்கங்களைப் புதைத்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஓர் எழுத்தாளரின் கவிதையோ, கதையோ அல்லது இன்னபிற படைப்புச் செயல்பாடு எதுவாயினும் அது அவருடைய உணர்ச்சிப் பூர்வமான வெளிப்பாடுதான். தன் கண்முன்னே நடந்த சம்பவங்கள், சமூக அசைவு இயக்கப் போக்குகள், அரசியல் செயல்பாடுகள் என ஏதோ ஒன்றினால் மனம் உந்தப்படுகிறார். அது அவருக்குள் கோபத்தையோ அல்லது மனக் கிளர்ச்சியையோ ஏற்படுத்துகிறது. அவ்வாறு தன் மனதில் எழும் சொற்களையே எழுத்தாளர் இலக்கியப் படைப்பாக்கித் தருகிறார். ஓர் எழுத்தாளருக்கும் வாசகருக்கும் இடையீடு ஒன்று உண்டென்றால் அது புத்தகம்தான். நாவலோ, கதையோ, கவிதையோ எதுவாக இருந்தாலும் வாசகரின் மனதினை அது பற்றிக் கொள்ள வேண்டும். அப்படி நடந்து விட்டால் பிறகு அந்த எழுத்தாளனும் வாசகனும் மிக நெருக்கமாகி விடுவார்கள். கவிஞர்கள், எழுத்தாளர்கள் மொழியை ஊடகமாகக் கொண்டு தங்கள் படைப்புகளை உற்பத்தி செய்கிறார்கள். அதை வாசகர்கள் தங்கள் மனம் விரும்பியதைத் தேர்ந்தெடுத்து வாங்கிப் படிக்கிறார்கள். இப்படி இருக்கையில் எங்கிருந்து திறனாய்வாளர்கள் உள்ளே வருகிறார்கள் என்று பார்த்தால், உண்மையில் படைப்பாளர், வாசகர் ஆகிய அனைவருமே திறனாய்வாளர்கள்தாம் என்பதை ஆழமாகப் புரிந்து கொள்ள முடிகிறது. இலக்கியம் என்றால் என்ன? உண்மையிலேயே இலக்கியத்தைப் பற்றி நாம் முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் தான் இருக்கிறோம் என்பதை இந்நூலைப் படிப்பதன் மூலம் மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. l
previous post
