நேர்காணல்:
அ. வெண்ணிலா
கேள்விகள் : கமலாலயன்
‘கருவறையின் இருட்டை விரட்ட இரண்டு கல் விளக்குகள் முயன்று தோற்றன. கல் விளக்கின் சிற்றொளி, கண்ணகி அம்மையின் முன் நெற்றியில் சுடர, முகம் கருமை கலந்த மஞ்சள் ஒளியில் மின்னியது. தெய்வங்களின் இதழ்க்கடையோரம் விகசித்து நிற்கும் புன்னகை, கண்ணகி அம்மையிடம் இருந்ததில்லை. மனிதத் துயரங்களை அனுபவிக்காத தெய்வங்களின் முகங்களுக்கே உரியது விகசிக்கும் புன்னகை. கண்ணகி,தெய்வமான பிறகும் அவளின் இதழ் ஓரம் கசிந்து நிற்கிறது துயரத்தின் கசப்பு.’
நீரதிகாரம் நாவலின் நான்காவது அத்தியாயத்தின் தொடக்க வரிகள் இவை. அந்த நாவல் நெடுக அனாயாசமாகத் தெறித்துக் கொண்டேயிருக்கும் கவித்துவ வரிகளும் அதன் ஊடாக நிற்கும் சிந்தனைகளும் பிரமிப்பூட்டுபவை.
அ. வெண்ணிலா, இன்று தமிழ்நாட்டின் முன்னணி எழுத்தாளர்களுள் ஒருவர். 1998-ஆம் ஆண்டில் ‘என் மனசை உன் தூரிகை தொட்டு’ என்ற முதல் தொகுதியின் மூலம் பளிச்சென்று கவனம் ஈர்த்தவர். அதன் பிறகு இன்று வரை இவரின் படைப்புலகில் சிறிதும் தயக்கமில்லை, இடைவெளிகள் இல்லை. தொடர்ந்து முன் சென்று கொண்டிருப்பவர் வெண்ணிலா.
எட்டுக் கவிதைத் தொகுதிகள், மூன்று நாவல்கள், நான்கு சிறுகதைத் தொகுப்புகள், ஆறு கட்டுரைத் தொகுதிகள், ஒரு கடிதத் தொகுப்பு ஆகியவை இவரின் படைப்புகள். முனைவர் மு. இராஜேந்திரன் இ.ஆ.ப. அவர்களுடன் இணைந்து கம்பலை முதல்… என்ற ஒரு கட்டுரைத் தொகுப்பையும், வந்தவாசிப்போர் – 250 என்ற ஒரு வரலாற்றுத் தொகுப்பையும் எழுதியிருக்கிறார். இவரின் முனைவர் பட்ட ஆய்வு நூல் ‘தேவரடியார் – கலையே வாழ்வாக‘ என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. இவை தவிர, 14 கலை, இலக்கிய, அரசியல் துறை ஆளுமைகளுடனான நேர்காணல்களின் தொகுதியை ‘நிகழ் முகம்‘ என்ற நூலாகத் தொகுத்திருக்கிறார்.
1930 முதல் 2015 வரையிலான தமிழ்ச்சிறுகதைப் பரப்பில் பயணித்த பெண் படைப்பாளிகளின் கதைகள் தொகுப்பை ‘மீதமிருக்கும் சொற்கள்‘ என்ற தொகுப்பாகத் தந்திருக்கிறார். இந்த ஒரு தொகுப்புக்காக மட்டும் மூன்றாண்டுகள் உழைத்திருக்கிறார். ஓவியர் ட்ராட்ஸ்கி மருதுவின் ‘வாழ்வும் கலைப்பணியும்‘, உலகத் தமிழ்ப் பெண் கவிஞர்களின் கவிதைகள் தொகுப்பு ஆகியனவும் இவரின் தொகுப்பு நூற் பணிகளே.
செம்பதிப்பு நூல்களாக இரு பெருந்தொகுப்புகளையும் இவர் பதிப்பாசிரியராக இருந்து பதிப்பித்துள்ளார். அவை, ப.சிவனடி எழுதிய ‘இந்திய சரித்திரக் களஞ்சியம்’ (8 தொகுதிகள்), ஆனந்தரங்கம்பிள்ளை தினப்படி சேதிக் குறிப்பு (12 தொகுதிகள் – டாக்டர் மு. ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ். உடன் இணைந்து) ஆகிய நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன.
மீண்டும் நீரதிகாரம் நாவலிலிருந்து : “எத்தனையோ பேரின் நூற்றாண்டுக் கனவு. நிறைவேற்றும் வாய்ப்பை நாம் பெற்றிருக்கிறோம். இந்தச் சாதனைக்காக நூற்றுக்கணக்கானவர்கள் காத்திருந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லாருக்கும் நாம் நன்றியைத் தெரிவிப்போம். அவர்கள் தங்கள் கனவை வளர்த்தெடுத்துக் காப்பாற்றியதால்தான் நம்மிடம் வரைக்கும் வந்தது“ பென்னி குயிக்கின் இந்த வார்த்தைகள் பெரியாறு அணைக் கட்டுமானப்பணிக்கு மட்டுமே பொருந்துவனவல்ல. மனித குலத்தின் அனைத்து மகத்தான சாதனைகளுக்கும் இவை பொருந்தும். இந்த ஓர் அறிமுகத்துடன் அ. வெண்ணிலா அவர்களுடனான நேர்காணல் :
‘நீரிலலையும் முகம்’ கவிதைத் தொகுப்பில் தொடங்கி, மாபெரும் வரலாற்று நாவலான ‘நீரதிகாரம்’ வரையிலும் உங்களின் பல படைப்புகள் ‘நீர்மம்’ எனும் இயற்கை ஆற்றலைச் சுற்றியே சுழன்று வந்திருக்கின்றன. ஒரு சிறுகதையிலும் கூட, வீட்டிலுள்ள அண்டா,பானைகள், குடங்கள், வாளிகள் என எல்லாப் பாத்திரங்களிலும் குழாய் நீரைப் பிடித்து நிரப்பிக்கொண்டிருக்கும் ஓர் அன்னையின் கதாபாத்திரம் இடம் பெறுகிறது. ஏன் இந்த நீர்ப்பற்று? ஏதேனும் சிறப்புக் காரணம் உண்டா?
ஆச்சரியமா இருக்கு, நீங்கள் இன்னும் அந்தக் கதையை நினைவு வைத்திருப்பது.
நீரதிகாரம் தலைப்பு வைக்கப்பட்டவுடன் தான் நானும் நினைத்துப் பார்த்தேன்… என்னுடைய முதல் புத்தகத்தின் தலைப்புக்கும் இதற்கும் அமைந்துவிட்ட ஒத்திசைவு, மிகவும் எதேச்சையானதுதான்.
நீர்தான் நம் வாழ்வின் ஆதாரம். மனிதகுலத்தின் நாகரிகத்துக்கும் அதன் வீழ்ச்சிக்கும் பலநேரம் நீரே காரணமாக இருந்திருக்கிறது.
நீரின்றி அமையாது உலகம் என்ற வரிகள் எவ்வளவு ஆழமான பொருள் பொதிந்தவை என்பதை நீரதிகாரம் தொடர் எழுதும்போது உணர்ந்தேன். இயற்கையின் ஆகப்பெரும் சக்தியான நீருடன் தான் நம்முடைய போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது.
திராவிட இயக்கத்தின் தீவிர ஆதரவாளரான உங்கள் தந்தையிடமிருந்து நீங்கள் பல பண்புகளைச் சுவீகரித்துக் கொண்டிருப்பதை நான் கண்டிருக்கிறேன். ‘சாலாம்புரி’ நாவலிலும் அதன் சாயல்கள் உள்ளன. அவற்றுள் மிகவும் நெகிழ்ச்சிக்குரிய, மிக உயரிய பண்பு என எதை நீங்கள் கருதுகிறீர்கள் ?
எப்போதும் என்னை, தனிநபராக அல்லாமல், ஊரின், சமூகத்தின் அங்கமாக நினைப்பது. என் அப்பா, வாழ்நாள் முழுக்க அவரை ஊரின் பொதுமனிதராகத்தான் நினைத்தார். ஊரில் எங்கு, யாருக்கு என்ன பிரச்சினை என்றாலும் முதல் ஆளாக நிற்பார். நல்லது, கெட்டது என எல்லாவற்றிலும் முதல் ஆள். யாரும் அழைக்க வேண்டும் என்று அவர் காத்திருந்ததில்லை. இயல்பிலேயே என் அப்பாவின் இக்குணம் என்னை ஈர்த்திருக்கிறது, எனக்குள்ளும் வந்திருக்கிறது. இக்குணத்தினால் குடும்பத்திற்குள் அம்மா, அப்பாவுக்கு இடையில் பலநாள் சண்டை வந்திருக்கிறது. தறி நெய்வதைவிட்டு இறங்கிச் சென்றால் என் அம்மாவுக்குக் கடுமையான கோபம் வரும். அப்பா பொருட்படுத்த மாட்டார். சொந்த வேலையை அப்படியே விட்டு விட்டு, கோயில் கிணறு எடுப்பதற்கோ, புளியமர ஏலத்துக்கோ, நிலத்தகராறு பஞ்சாயத்துக்கோ சென்று விட்டு வருவார். திரும்பி வந்தவுடன் பேச்சு இருபக்கமும் அனல் பறக்கும். அரை மணி நேரத்துக்குள் அம்மாவை டீ வைத்துத் தரச்சொல்லிக் குடித்தபடியே, போய் வந்த கதையை நிதானமாகச் சொல்லிக்கொண்டிருப்பார் அப்பா.
‘மரணம்’ என்பது மனித வாழ்க்கையின் தவிர்க்கவே முடியாத, ஓர் இயற்கை நிகழ்வு. மனிதர்கள் இந்த உண்மையை நன்கறிவார்கள். ஆனாலும், ஒவ்வொரு மரணமும் நம்மை நிலைகுலையவே வைக்கின்றன. அப்படியிருக்கும் போது, ‘மரணம் ஒரு கலை’ என்று கொண்டாடி, ஒரு கட்டுரைத் தொகுப்பையே தந்திருக்கிற படைப்பாளி நீங்கள். இதற்கு என்ன காரணம்?
மரணம் பற்றிய சிந்தனைகள் சிறுவயதில் இருந்தே என்னை ஈர்த்திருக்கின்றன. மரணத்திற்குப் பின்னால் என்ன, உயிர், உடல், இறந்த உடலின் உயிர் என்னவாகிறது, உயிர் என்ற காற்று பிரிந்தால்தான் உடலும் இறக்கிறது, மனிதனின் இறப்பில் உடன் இறந்து போவதென்ன? மறுபிறவி, முன்பிறவி எண்ணங்கள் என்று மதங்கள் கூறும் நம்பிக்கைகள் பற்றியெல்லாம் சிந்தனைகள் இளம்வயதில் இருந்திருக்கின்றன. இப்போது அந்த எண்ணமெல்லாம் இல்லை.
மரணம் ஒரு கலை – புத்தகம் உண்மையில் மரணம் பற்றியது அல்ல. உலகின் பல ஆளுமைகள் தங்களின் அர்ப்பணிப்பான செயல்பாடுகளின் மூலம் எப்படி நிலைத்த புகழுடன் இருக்கிறார்கள் என்பதையே இந்நூல் பேசுகிறது. அப்பேராளுமைகளின் மரணத் தறுவாயினைப் பிரதானமாகக் கொண்டு அக்கட்டுரைகள் விரியும். மண்ட்டோ, செகாவ் போன்ற, ரசனையும் நுட்பமும் கூடிய படைப்பாளிகளின் இறுதியை எழுதிய துயரத்தின் வலி இன்னமும் எனக்குள் இருக்கிறது.
‘இருள்‘ என்றொரு கட்டுரையை மிக இளம் வயதிலேயே நீங்கள் எழுதியிருக்கிறீர்கள்.அதைப் படித்து வியந்தவர்களுள் நானும் ஒருவன். பொதுவாக, இருள் என்பது ஓர் அச்சமூட்டும் பொழுது. அதே வேளையில், இருள் என்பது குறைந்த ஒளி எனப் பாரதி சொல்லியதும் எனக்கு நினைவுக்கு வருகிறது. உங்கள் பார்வையில் இருள் என்பது என்ன ? எதனால் உங்களுக்கு அந்த வயதிலேயே இருளைப் பற்றி எழுதும் உந்துதல் தோன்றியது ?
வயதுக்கும் எழுத்துக்கும் தொடர்பொன்றும் இல்லை. அனுபவமும் எழுதுகிறவர்களின் மன அமைப்பும்தான் எழுத்துக்குப் பின்புலம்.
என் இளம் பிராயம் பெரும்பாலும் தனிமையில் கழிந்தது. தனிமை என்பதற்குள் இருளும் சேர்ந்தே இருக்கிறது. கடும்பகலிலும் அடர் இருட்டினை நான் உணர்ந்திருக்கிறேன். மனிதர்கள் அற்ற பகல் நேரத்தைய வீடு என்பது பதின்பருவப் பிள்ளைகளுக்கு நிராதரவு. இத்தலைமுறையினருக்கு இவ்வுணர்வு தோன்ற வாய்ப்பில்லை. அவர்களுக்கான நிரந்தரத் தனிமையை விலக்கும் சாதனங்கள் உடன் இருக்கின்றன.
இருள், வெளிச்சம், பித்தன், பிச்சைக்காரன், இப்படியெல்லாம் பொதுச் சமூகத்தின் நினைவுகளில் இருந்து நழுவுவதின்மேல் கவனம்கொள்ளாமல், ஒருவர் எப்படிக் கவிதை எழுத வந்திருக்க முடியும்? இருபது வயதில் நான் துண்டு துண்டான வரிகளில் எழுதிவைத்திருந்ததைப் பார்த்த என் மாமா ஒருவர், ‘என்ன கண, நீ கம்யூனிஸ்ட் மாதிரி எழுதற?’ என்றார். அவருக்கு கம்யூனிஸ்ட் யார், கம்யூனிஸம் என்றால் என்ன என்று தெரியாது. ஆனாலும் அப்படி ஒரு புரிதல் பொதுவாக இருக்கிறது. சமூகத்தின் புறக்கணிப்புகள் தாமே படைப்பாளியின் கவனத்தைக் கோரும்? அவ்வடிப்படையில்தான் எழுதத் தொடங்கியபோது இருள், மழை, பித்தன் எல்லாம் ஈர்த்தன.
ஆசிரியர், ஆய்வாளர், கவிஞர், சிறுகதையாளர், நாவலாசிரியர், கட்டுரையாளர், பதிப்பாளர், பேச்சாளர் – எனப் பன்முகப் பரிமாணங்கள் கொண்ட ஓர் ஆளுமை நீங்கள். இப்போது ஒரு நூற்றாண்டு காலம் தாண்டிய,பழமைச்சிறப்புமிக்க தமிழ்நாடு அரசு ஆவணக்காப்பகத்தில் பணி மேற்கொண்டிருக்கிறீர்கள். இவற்றுள் உங்கள் மனதிற்கு மிகவும் நெருக்கமான பணி எது ?
இதில் பேச்சாளரைச் சேர்க்க முடியாது. பேச்சு, எப்போதுமே எனக்குப் பதற்றம் கொடுக்கும் விஷயம். சமீப காலங்களில் முழுமையான உரையைத் தயாரித்துக்கொண்டே பேசுகிறேன்.
முன்பாதி நான் படைப்பாளியாக இருக்குமிடங்கள். கடைசியாகச் சொல்வது என் பணி. ஆவணக்காப்பகப் பணி எனக்கு அணுக்கமான பணி. சுவாரசியமாக செல்கிறது.
நாவல் எனும் விரிந்த களத்தில் தான் மனம் பெருங்களிப்போடு நிலைகொண்டிருக்கிறது.
கங்காபுரம் என்ற உங்கள் வரலாற்று நாவலில் வீரமாதேவி பாத்திரவார்ப்பு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு பாத்திரம். வரலாற்றில் அந்தப் பாத்திரத்திற்குச் சான்றுகள் உள்ளனவா ? அல்லது அவள் உங்கள் கற்பனையில் உருவான ஒரு நாயகியா? அவளைப்போலவே, நீரதிகாரத்தில் வரும் குருவாயி பாத்திரமும் படிப்போரின் மனங்களில் நிரந்தரமாகத் தங்கி விடும் நாயகியாகத்தான் இருக்கிறாள்…
இருவருமே புனைவு அல்லர். அசல் மாந்தர்களே. வீரமாதேவி, ராஜேந்திர சோழனின் மனைவியருள் ஒருத்தி. என்னுடைய ஊரான வந்தவாசியில் இருந்து 30, 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பிரம்மதேசம் என்ற ஊர். அவ்வூரில் இருக்கும் கல்வெட்டொன்றில், வீரமாதேவியின் சகோதரன் மூவேந்த வேளான் என்பவன், தன்னுடைய சகோதரி உடன்கட்டை ஏறியதால், தாகம் தணிக்கத் தண்ணீர்ப் பந்தல் அமைத்ததாகச் சொல்லப்பட்டுள்ளது. இறந்தவர் சோழ தேசத்தின் அரசன் ராஜேந்திர சோழன். உடன்கட்டை ஏறியவள் அவன் மனைவி வீரமாதேவி. ராஜேந்திர சோழன், பிரம்மதேசத்தில்தான் இறந்திருக்க வேண்டும், காரணம், இறந்த இடத்தில்தான் அவனுடன் வீரமாதேவி உடன்கட்டை ஏறியிருக்க முடியும் என்ற கருத்துக்கு வரலாற்று ஆசிரியர்கள் வந்திருக்கிறார்கள்.
குருவாயி, இந்தியாவின் முதல் பெண் தாவரவியலாளர் ஜானகி அம்மாளின் தாய்வழிப் பாட்டி. கிண்டி கிங்ஸ் மருத்துவமனையைத் தொடங்கிய டாக்டர் கிங்ஸ் அவர்களுடைய கம்பேனியன். பிரிட்டிஷ் ரெசிடெண்ட் ஹானிங்டனுக்கும் அவர் கம்பேனியனாக இருந்திருக்கிறார்.
உங்கள் நூற்பதிப்புப் பணிகளில் மிக முக்கியமான ஒரு சாதனை என புதுவை துபாஷியான ஆனந்தரங்கப்பிள்ளை அன்றாடம் எழுதிய டயரிக் குறிப்புகளைக் கூறலாம். அதே போல, ப.சிவனடி அவர்களின் இந்திய வரலாற்று நூற் தொகுதிகளும். அவ்விரு முயற்சிகளையும் நீங்கள் துணிந்து மேற்கொண்டது ஒரு பாராட்டுக்குரிய பெரும் சாதனைதான். அந்தப் பெரு முயற்சிகளுக்கு உங்களைத் தூண்டிய அம்சம் எது?
எழுத்தாளர்களுக்கு, அல்லது அனைத்துவகைப் படைப்பாளிகளுக்கும் ஒரு கடமை இருப்பதாக நான் நம்புகிறேன். அவரவர்களின் படைப்புகளை, சிந்தனைகளை, சாதனைகளுடன், நமக்கு முன்னால் அவரவர் துறையில் சாதித்தவர்களையும் வெளிக்கொணர வேண்டும் என்று நான் நம்புகிறேன். அவ்வகையில் தமிழ் இலக்கிய உரைநடையின் முன்னோடி ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்பையும், வரலாற்றாசிரியர் ப.சிவனடியின் இந்திய சரித்திரக் களஞ்சியம் தொகுதிகளையும் கொண்டு வந்தோம். காஸ்ட்லி கடமைதான். பல லட்சங்கள் முடங்கியிருக்கின்றன. ஆனால் பெரும் நிறைவு இருக்கிறது. நம் பெருமைகளை, நம் எழுத்தை மட்டும் பேசிக்கொண்டிருப்பதில் எனக்கு முழுமை இல்லை.
பெரியாறு அணை உருவாக்கப்பட்ட கதையைக் கூறும் நீரதிகாரம் நாவலை, அதன் மூலம் பென்னி குயிக்கின் வரலாற்றை எழுதுவதற்கு உங்கள் மனதில் எந்தத் தருணத்தில் பொறி கிளம்பியது ? எப்படி ?
இந்தக் கேள்விக்கு நிறைய இடங்களில் பதில் சொல்லிவிட்டேனே… எனக்கு மனப்பாடமாகவே ஆகிவிட்டது.!!! பென்னி குக்கின் வரலாற்றை எழுதியதைவிட, முக்கியம், முகம் தெரியாத ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்த்தியாகம், அதை எழுத்தாக்கியிருக்கிறேன். மாபெரும் பணிகளுக்கான பாராட்டு, அப்பணி நிறைவடையும்போது முதன்மையான ஒருவருக்கான ஒட்டுமொத்தப் பாராட்டாக மாறிவிடும். நீரதிகாரம், அதைக் கூட்டுழைப்பின் பலனாக நிலைநிறுத்தியிருக்கிறது.
அம்மையப்பட்டு கிராமத்தின் நெசவாளர் குடும்பத்துப் பின்னணியில் பிறந்து வளர்ந்த நீங்கள், இன்று அடைந்திருக்கும் உயரம் நினைத்துப் பார்க்கும் போதே பிரமிப்பை ஏற்படுத்துகிறது. வந்தவாசிக்கு அருகே ஒரு குக்கிராமத்துப் பள்ளியில் ஆசிரியப் பணியிலிருந்த காலங்களில் இருந்து உங்களோடு பயணித்துக் கொண்டிருந்த கனவுகளின் வெளிப்பாடுகள்தாமா இவையெல்லாம் ?
எனக்கு வாழ்க்கை குறித்த கனவுகளோ, இலட்சியங்களோ பெரும்பாலும் இருந்ததில்லை. இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்ய வேண்டும், எப்படியாவது இதைச் சாதிக்க வேண்டும் என்றெல்லாம் நான் நினைத்ததே இல்லை. ஆனால் செயலற்று என் ஒரு நாளும் இருந்ததில்லை. அன்றன்றைக்கான என் செயல்கள் என்னை இயக்குகின்றன. இன்றிலிருந்து மட்டுமே நான் கிளைத்துப் பெருகுகிறேன்.
ராஜராஜனும்,ராஜேந்திர சோழனும் கொண்டாடப்பட வேண்டியவர்கள் என்றாலும் அவர்கள் ஆண்ட காலத்தில், சாதாரண மக்கள்மீது விதிக்கப்பட்ட வரிகள், அதே சமயம் பிராமணர்களுக்கு அளிக்கப்பட்ட எல்லையற்ற சலுகைகள், நிவந்தங்கள், இறையிலி கிராமங்கள் போன்ற நேர் எதிரான மானியங்கள் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள் ?
இதில் நான் தனியாக நினைக்க என்ன இருக்கிறது? சோழர்கள் மட்டுமல்ல, எல்லா அரசுகளுமே அதிகாரத்தின், அடக்குமுறையின் குறியீடுகள்தாம் . முடியாட்சி என்றாலும், குடியாட்சி என்றாலும் அரசு என்பதே அதிகாரம்தான். அதிகாரத்தை, நாம் சமகாலத்தில் ஜனநாயகப்படுத்தியிருக்கிறோம். எளியவர்களின் குரல் வெளியில் கேட்குமளவுக்கு, அதிகாரத்தின் சுவர்கள் இளகியிருக்கின்றன. அவ்வளவுதான்.
இன்றைக்கும் அரசு என்பது எல்லாருக்கும் ஒன்றா? அரசின் சட்டங்கள் அனைவருக்கும் சமம் என்று சொல்கின்றன. நடைமுறை என்ன சொல்கிறது?
சோழர்கள், சேர, பாண்டிய, பல்லவ அரசர்கள் போல் உலகம் முழுக்க முடியாட்சி நடந்திருக்கிறது. ஏழை எளிய மக்களுக்கான அரசு என்று அறிவித்த ஓர் அரசனாவது இருப்பதை நமக்கு வரலாறு சொல்கிறதா? வலுத்தவனுக்கு ஒரு சட்டம், விதி, சலுகை, வலுவற்றவனுக்கு ஒரு சட்டம் என்பதுதான் உலகவிதியாக இருக்கிறது. இருபதாம் நூற்றாண்டில் தான், எல்லா வேற்றுமைகளையும் கடந்து மனிதர்கள் சமம் என்ற கனவை, அரசியலமைப்பின் மூலம், சாத்தியப்படுத்தியிருக்கிறோம்.
சோழர்கள் காலத்தின் இன்மை, நன்மைகளைப் பேசுகிற வேளையில் உலகின் பல தேசங்களில் மனிதர்களை, விலங்குகள் போல் நடத்திய காட்டாட்சிகள் நடந்துகொண்டிருந்தன. மனிதகுலம் தன்னுடைய அகந்தையை, அதிகாரத்தைக், கைவிட்டதே இல்லை.
நீரதிகாரம் நாவலுக்கு அடுத்து, உங்கள் எட்டாவது கவிதைத் தொகுதியை வெளியீட்டிருக்கிறீர்கள். பல சமயங்களில் உங்கள் மனதிற்கு நெருக்கமான படைப்பு வடிவம் கவிதைதான் என்று கூறியிருப்பது நினைவுக்கு வருகிறது. இப்போதும் அதே மனநிலையில்தான் இருக்கிறீர்களா? அடுத்து நாவல் எழுதும் திட்டம் உண்டா ?
நானும் நானும் அந்தரங்கமாய்ப் பேசிக்கொள்ளும் தருணங்கள்தாம் எனக்குக் கவிதை. கவிதையெழுதாமல் ஒருபோதும் இருக்க முடியாது. அடுத்த நாவல் குறித்த திட்டமிருக்கிறது.
உங்களின் இப்போதைய பணிகளின் சுமையையும் தாண்டி, வாசிப்பதற்கு நேரம் கிடைக்கிறதா ? இப்போது சமகாலத்துப் படைப்புகள் உங்களுக்கு மன நிறைவளிக்கின்றனவா ?
வாசிப்பில்லாத நாளில்லை. ஆய்வுக்காக நூற்றுக்கணக்கான பக்கங்களைத் தினம் படித்துக்கொண்டிருக்கிறேன்.
இலக்கியத்தைப் பொறுத்தவரை, தமிழில் வெளியாகும் நாவல்களை வாசிக்கிறேன். ஜிதேந்திரன் எழுதிய துகினம் நாவல், சமீபத்தில் வாசித்தேன். மேற்குத் தொடர்ச்சி மலையின் நிலவியலையும், அங்குள்ள மக்களின் வாழ்வினையும் ஒரு புள்ளியில் விவரிக்கும் நாவல். பெருமாள் முருகனின் நெடுநேரம் நேற்றுதான் படித்து முடித்தேன். வெளியான சமயத்திலேயே படிக்க எடுத்தது, ஆள்களின் பெயர்கள், இடங்களின் பெயர்கள் எல்லாம் அசுர அசுர என்று படிக்கவே முடியாமல், செயற்கையாக இருந்ததில் பத்துப் பக்கங்களுடன் எடுத்து வைத்துவிட்டேன். அப்படிப் பெயரிடுவதில் ஓர் அரசியல் இருக்கலாம். ஒரு வாசகியாக, பிரதியில் இருந்து என்னை வெளியில் நிறுத்தும் ஒரு கூறாக பெயரிடல் இருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர், மீண்டும் எடுத்துப் படித்தேன். பெயர்களை எல்லாம் கடந்து கதையினைப் பின் தொடர்ந்ததில் ஒருவழியாகப் படித்து முடித்தாயிற்று. இன்று இமையத்தின் புதிய நாவலான உப்பு வண்டிக்காரனை வாசிக்க எடுத்திருக்கிறேன். நெடுநேரம் கதையைப் போலவே, உப்பு வண்டிக்காரன் நாவலும் கொரோனா தொற்றுக் காலத்தைப் பேசுகிறது.
திரைப்படம் அனுபவம் குறித்து…
நிறையக் கற்றுக்கொண்ட காலமது. உழைப்பு என்பதின் முழுமையான பொருளை உணர்ந்துகொண்டேன். தனிப்பட்ட விதத்தில் எந்தப் பலனும் இல்லாமல் முடிந்து போன காலம்.
பல்வேறு மாநிலங்களில் இலக்கிய விழாக்களில் கலந்துகொண்டிருக்கிறீர்கள். அந்த அனுபவம் குறித்து…
தமிழ் இலக்கியம் பெரும்பாலும் இந்திய இலக்கியப் போக்குகளின் அங்கமாய் அறியப்படுவதில்லை. நாம் தனித்திருக்கிறோம். நம்முடைய சிறந்த எழுத்தாளர்களை இந்திய எழுத்துலகம் அறிந்திருக்கவில்லை. விலக்குகள் ஒன்றிரண்டு இருக்கலாம். தமிழின் சர்வதேசத் தரத்திலான எழுத்து என்பது தமிழ்நாட்டுக்குள் மட்டும்தான் இருக்கிறது. l