நான் பள்ளி படித்த நாட்களில் நன்றாக நினைவிருக்கிறது என் பதினோராம் வகுப்பு அறிவியல் ஆசிரியரை என் பாடப் புத்தகத்துக்கு நடுவே சுஜாதாவை.. வைத்துப் படித்து ஏமாற்றி இருக்கிறேன். கல்லூரி படித்த காலத்தில்.. எர்னஸ்ட் ஹெமிங்வே.. ராய் பிராட்பரி..
எச்.ஜி.வெல்ஸ் என்று என் பாடப் புத்தகத்திற்கு நடுவே வகுப்பறையில் ரகசிய நூலாசிரியர்கள் புகுந்து கொண்டார்கள். ஜேபிஎஸ் ஹால்டேன் சமன்பாட்டை வகுப்பறையில் பேராசிரியர் நடத்தும் பொழுதே அந்த அறிஞரின் அறிவியலும் சோசலிசமும் புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு மாட்டிக் கொண்டவன் நான்.
வாசிப்புதான் என்னை வாத்தியார் ஆக்கியது.. என்று ஒரு முறை தலைப்புக் கொடுத்துப் பேசியபோது அதற்கான உரைத் தயாரிப்பின் நடுவே என் வாழ்க்கையின் போக்கை மாற்றி அமைத்த நூல்கள் பற்றி நானே ஆச்சரியப் படும்படி ஒரு வரிசையை ஏற்படுத்தினேன். இன்று ஆசிரியர் என்பவரின் அடையாளம் மாறிவிட்டது. ஆசிரியர்களின் கையில் மடிக்கணினியையும் அவர்களிடம் ஐபாடை யும் பார்க்கிறேன். இப்போதும் சொல்கிறேன், கைகளில் புத்தகங்கள் வைத்துக் கொண்டிருப்பதுதான் ஓர் ஆசிரியரின் மிக அடிப்படையான. கெத்தான தகுதி என்பதில் மாற்றமில்லை. சென்னையில் ஒரு மாணவர் சந்திப்பின்போது. ஓர் ஏழாம் வகுப்பு மாணவர் அற்புதமான ஒரு கேள்வி கேட்டு என்னை அசர வைத்தார்: “அரசாங்கம் ஆசிரியர்களைப் பணியமர்த்தும் பொழுது ஆதார் கார்டையும் ரேஷன் கார்டையும் கேட்கிறார்களே, ஏன் லைப்ரரி கார்டு கேட்பதில்லை?” என்று அந்த மாணவர் கேள்வி எழுப்பிய போது அதில் இருந்த நியாயம் என்னை அதிர வைத்தது. சரி நாம் விஷயத்துக்கு வருவோம். இந்த மாதம் நான் வாசித்த ஐந்து அற்புதமான புத்தகங்களை ஆசிரியர் சமூகத்திற்கு அறிமுகம் செய்ய விரும்புகின்றேன். அவை அனைத்துமே ஆங்கில நூல்கள். முதலாவது புத்தகம் அறிஞர் ஸ்டீபன் ஹாகிங் தன்னுடைய மகள் லூசி ஹாகிங் உடன் இணைந்து தொகுத்த ஓர் அற்புதம். UNLOCKING OF THE UNIVERSE-என்கிற தலைப்பில் அந்த நூல் வெளிவந்துள்ளது. இது ஒரு 410 பக்க அறிவியல் புதையல் ஆகும். இந்த நூல் ஏழு பாகங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளது முதல்பாகத்தில் ஸ்டீபன் ஹாகிங் அனைத்தையும் குறித்த கோட்பாடு குறித்து 10 கட்டுரைகள் எழுதியிருக்கிறார் இரண்டாம் பாகம் முதல் மற்ற அறிஞர்களுடைய கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. ராபர்ட் தியோக்ஸ்- டாக்டர் கேட் டார்லிங் டெனிஸ் எஸ் ஆபிஸ் உட்பட பல நவீன அறிஞர்களின் பங்களிப்புகள் இந்தப் புத்தகம் எங்கும் உள்ளன.
இரண்டாவது பாகம் புவி பற்றிய கட்டுரைகளையும் மூன்றாவது பாகம் இந்த முழு பிரபஞ்சத்தினுடைய ஏனைய நட்சத்திரக் கூட்டங்கள் பற்றிய 22 கட்டுரைகளையும் நான்காவது பாகம் இருள் பொருள் குறித்தும் ஐந்தாம்பாகம் பிரபஞ்சத்தில் ஏனைய உயிர்கள் இருக்குமா என்பது குறித்தும் கடைசி இரண்டு பாகங்கள் காலப் பயணம் மேற்கொள்வதையும் எதிர்காலத்தையும் பற்றி அமைக்கப்பட்டுள்ளன. இந்த நூலை வாசித்த பொழுது எனக்குக் க்வாண்டம் கணினிகள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்பது குறித்த அடிப்படைகளைப் புரிந்து கொள்ள முடிந்தது இப்போது புதிதாக அறிமுகமாகியிருக்கும் முப்பரிமாண அச்சாக்கம் என்கின்ற அறிவியலை இந்த நூல் அழகாக விளக்குகிறது-மனிதன் புவியிலிருந்து ஆற்றலை எடுக்க முடியாத ஒரு காலகட்டம் உருவாகும் பொழுது தொலை தூரத்தில் உள்ள ஆல்பா செஞ்சுரி நட்சத்திரக் கூட்டத்திலிருந்தும் அன்றி மூல நட்சத்திரக் கூட்டத்திலிருந்து ஆற்றலைக் கொண்டு வருகின்ற கற்பனையை நினைத்துப் பார்க்கும்பொழுது ஆச்சரியமாக இருக்கிறது.நான் வாசித்த இரண்டாவது புத்தகம் மரபணுவியல் கண்டுபிடிப்பாளர் ஜேம்ஸ் வாட்சன் அவர்கள் எழுதிய டி.என்.ஏ.-த சீக்ரெட் ஆஃப் லைஃப் என்கிற-புத்தகம் ஆகும். ஜேம்ஸ் வாட்ஸன். ஃப்ரான்ஸிஸ் க்ரிக், மௌரிஸ் வில்கின்ஸ் மூவருமாக இணைந்து மரபணுவினுடைய கட்டமைப்பை வெளியிட்டதற்காக 1962 இல் நோபல் பரிசு பெற்றார்கள். ஜேம்ஸ் வாட்சன் 1953 இல் தனது நண்பர் பிரான்சிஸ் கிரிக் உடன் இணைந்து மரபணுவின் இரட்டைச் சுருள் அமைப்பை முன்வைத்து ஒரு பிரபலமான ஆய்வுக் கட்டுரை எழுதியதை உலகம் அறியும். அது குறித்த தன்னுடைய அனுபவங்களைத்தான் இந்த நூலில் அவர் பகிர்ந்து கொள்கிறார். ஒரு திரில் நாவலைப் படிப்பது போன்ற உணர்வை இந்த நூலின் நடை நமக்கு ஏற்படுத்துகிறது.
ஆதிகால கிரேக்கர்கள் முதல் அரிஸ்டாட்டில் மற்றும் பிற்காலத்தினுடைய கிரிகரிமேண்டல் என பயணம் அங்கிருந்து தொடங்குகிறது. எக்ஸ் ரே ஃபிக்ஷன் என்கின்ற ஒரு முறையில் ரோசலின் ஃபிராங்க்ளின் அம்மையார் எப்படிப் புகைப்படங்களை அடைந்திருந்தார் என்பதையும் அந்தப் புகைப்படங்களைக் கடத்திக்கொண்டு வந்து மாரிஸ் வில்கின்ஸ் எப்படித் தங்களிடம் கொடுத்தார் என்பதையும் கூட இந்த நூலில் அவர் விவரிக்கிறார் 13 அத்தியாயங்களாக எழுதப்பட்டுள்ள இந்த நூல் ஒரு புத்தகம் மட்டுமல்ல.. CHANNEL 4 எனும் அறிவியல் தொலைக்காட்சி நிகழ்ச்சியினுடைய டாக்குமென்ட்டரியாக வந்ததன் ஆவணம் ஆகும். உலகத்தின் சிந்தனைப் போக்கையே மாற்றியமைத்த மரபணுவினுடைய கண்டுபிடிப்பை விவரிக்கும் இந்த நூலைக் கண்டிப்பாக நான் வாசிக்க வேண்டும். நீங்கள் சொல்லலாம்: “நான் வேதியியல் படித்தவன்.எனக்கு எதற்கு உயிரியல் சம்பந்தமான ஒரு புத்தகம்” என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் மரபணுக் கட்டமைப்பு என்பது குறித்த கண்டுபிடிப்பு வேதியியல், இயற்பியல், உயிரியல் மூன்றையும் உள்ளடக்கிய ஒரு பகடி ஆட்டம் ஆகும். இதைப் புரிந்து கொள்ள இந்தப் புத்தகம் உதவும். மூன்றாவது புத்தகம். SHADOWS OF THE MIND – எனும் தலைப்பில் நோபல் அறிஞர் கணிதவியல் நிபுணர் ரோஜர் பென்ரோஸ் எழுதிய புத்தகம். 1984 ஆம் ஆண்டு ரோஜர் பென்ரோஸ் THE EMPEROR”S NEW MIND என்று ஒரு புத்தகம் எழுதினார். இந்தப் புத்தகம் அந்த நாட்களில் என்னைச் செதுக்கிய நூல்களில் ஒன்று. அந்த நூல் எப்படி எல்லாம் நாம் இயற்பியலின் விதிகளைக் கணிதவியல் ரீதியில் மன மாற்றம் செய்யும் பொழுது கணினி துறை முன்னேறப் போகிறது என்பதை முன்கூட்டியே அறிவித்த புத்தகம் ஆகும். இப்போது இந்த நூலோடு அவர் களம் காண்கிறார். இந்த நூல் முந்தைய நூலின் தொடர்ச்சி ஆகும். ரோஜர் பென்ரோஸ் இந்தப் புத்தகத்தில் மனிதர்களைப்போலவே சிந்திக்கும் ரோபோக்களை உருவாக்குவதற்கு நாம் நம்முடைய அறிவியலின் விதிகளை எப்படி எல்லாம் மாற்ற வேண்டி இருக்கிறது,புதிய பார்வையில் அறிவியலையே மாற்றும் பொழுதுதான் சிந்திக்கும் ரோபோட் களை நாம் உருவாக்க முடியும் என்கிற ரீதியில் செயற்கை நுண்ணறிவைப் பற்றி அற்புதமான 17 அத்தியாயங்களை இந்த நூலில் முன்வைக்கிறார். செயற்கை நுண்ணறிவு குறித்த மிக மிகச் சிறப்பான புத்தகம் இது.
அடுத்து நான் முன்வைக்கும் நூல் THE GAP.. எனும் தாமஸ் சுடன்திரோ எழுதிய பரிணாமவியல் குறித்த புத்தகம் ஆகும். இவர் ஓர் உளவியல் பேராசிரியர். குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். மனிதனுடைய பொதுவான.மூதாதையர்களைப் பற்றி அவர் பேசுகிறார். குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்று ஒருபோதும் டார்வின் சொல்லவில்லை. டார்வின் சொன்னது என்னவென்றால் மனிதக் குரங்குக்கும் மனிதர்களுக்கும் பொது மூதாதையர்கள் இருந்திருக்க வேண்டும் என்பதுதான். இந்தக் கருத்தோடு போனபோஸ் என்கிற வகை மனிதக் குரங்கையும் ஆய்வுசெய்து மனிதன் என்கின்ற ஹோமோ சாபியன்ஸ் அடையப்படும் வரையிலான வரலாற்றில் ஆஸ்திரேலிய பிதக்கஸ். நியாண்டர்தால். மனிதர்கள் ஹோமோ ஹாபிலிஸ், ஹோமோ எரக்டஸ் என்று வரிசையாக இடைப்பட்ட இடைவெளிகளில் எப்படிப்பட்ட உயிரினங்கள் வாழ்ந்திருக்க வேண்டுமென்பதற்கான அடிப்படைத் தரவுகளை இந்த நூல் முன்வைக்கிறது. அவ்வகையில் டார்வினியம் குறித்த மிக முக்கியமான நூலாக நான் இதை கருதுகிறேன். குறிப்பாக நியாண்டர்தால் மனிதனுடைய மரபணுக்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு டார்வின் தொடர்ந்து வென்று வருகிறார் என்று இந்த நூல் நிரூபிக்கிறது. இறுதியாக ஓர் இந்திய நூலுக்குள் நுழைகிறோம் இந்த நூலின் தலைப்பு KNOWLEDGE AS COMMONS. என்பதாகும். இதை எழுதியவர் PRABIR PURKAYASTHA. இவர் புது டில்லி அறிவியல் இயக்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவர். இந்த நூலை நாம் கல்லூரிகளில் கண்டிப்பாகப் பாடமாக வைக்க வேண்டும். அறிவியல் வேறு தொழில்நுட்பம் வேறு என்று இந்தப் புத்தகம் நிருபிக்கிறது. அறிவியல் மனிதனின் மூளையைப் பயன்படுத்துகின்றது என்பது தெரிந்த விஷயமாகும் ஆனால் தொழில்நுட்பம் மனிதனின் கைகளைப் பயன்படுத்தி உழைப்பில் ஈடுபடுகின்ற விஷயமாக இந்த நூல் அறிமுகம் செய்கிறது. அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் இணைத்து அறிவியல் தொழில்நுட்பம் என்று கார்பரேட் முன்வைத்து சந்தைப் பொருளாக்கி நம் எல்லாரையும் நுகர்வோராக மாற்றி இருக்கிறது என்பதை இந்த நூல் நிரூபிக்கிறது. தொழில்நுட்பம் முழுவதுமாக அறிவியல் சார்ந்ததாகும். ஆனால் சில சமயம் அறிவியலும் தொழில்நுட்பத்தைச் சார்ந்ததாக இருக்கிறது. அதே சமயம் இரண்டும் ஒன்றல்ல.
கலிலியோ கண்டுபிடிப்புகள் டெலஸ்கோப் என்கின்ற ஒரு கருவியை மட்டுமே சார்ந்தவை அல்ல. அங்கே கலிலியோவினுடைய மூளை செயல்பட்டிருக்கிறது ஆனால் ஃபிஷ் வெப்ப முடுக்கவியல் என்கின்ற ஓர் அறிவியல் இல்லாமல் ஜேம்ஸ் வாட்டினுடைய மோட்டார் வேலை செய்ய வாய்ப்பே இல்லை, இப்படிப் பலவகையான விவாதங்களை இந்த நூல் முன்வைக்கிறது… ஒரு காலகட்டத்தில் அறிவைப் பயன்படுத்துவது மேல் ஜாதிக்காரர்களின் வேலையாகவும், கைகளைப் பயன்படுத்திக் கடுமையாக உழைப்பது அடிமைகளின் வேலையாகவும் கருதப்பட்டது. இதனடிப்படையில்தான் இந்தியாவில் சாதிய வர்ணாசிரம சனாதனக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. உலகின் பல இடங்களில் அடிமை முறை அமலில் இருந்தது. விடுதலை அடைந்த காலங்களில் அறிவு ஜனநாயகப்படுத்தப்பட்டது. அறிவைப் போலவே தொழில்நுட்பத்தையும் நாம் அனைவருக்கும் கிடைக்கின்ற பொது விஷயமாக மாற்ற வேண்டும் தண்ணீர் உட்பட அனைத்தையும் வியாபாரச் சரக்கு ஆக்குகின்ற கார்பரேட்களின் உத்தி முறியடிக்கப்பட வேண்டும் இன்றைக்குக் கல்வியைக் கூட வியாபாரச் சரக்காக்கி பல்கலைக்கழகங்களில் இருந்து அனைத்தையும் தனியார் மயமாக.. மாற்றுகிறார்கள். நம்முடைய உடல் நலம் பேணுகின்ற சுகாதாரத் துறையைத் தனியார் மயமாக்குகிறது. அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் பொது நலனுக்குப் பயன்படுத்த வேண்டும் என்று இந்தப் புத்தகம் அறிவியலின் அடிப்படையில் அறைகூவல் விடுத்து இக்கால கட்டத்தின் அரசியலைப் பேசுகிறது. அறிவியல் ஆசிரியர் என்கிற முறையில் அறிவியலை நேசிப்போம். வகுப்பறையை நேசிப்போம். வாசிப்பையும் நேசிப்போம். l