சாம்சங்’ போராட்டத்தை எதிர்த்த நடுநிலை (?) வாதிகள் முன்வைத்த விமர்சனங்களில் ஒன்று, ‘அது வெளிநாட்டு நிறுவனம் சார், நம்ம நாட்டு சட்டதிட்டங்களையெல்லாம் அப்படியே ஏத்துக்கணும்னு கட்டாயமெல்லாம் இல்லையே.. அங்க போய் போராட்டம் நடத்தினால் அரசாங்கம் ஏத்துக்குவாங்களா’..? எனும் விமர்சனத்தையும் ‘இப்படியெல்லாம் போராட்டம் செஞ்சா திடீர்னு அவன் வெளிநாட்டுக்குப் போய்ட்டான்னா எல்லாருக்கும் வேலை போய்டுமே சார்’ என ஒரு சிலரின் ‘கவலை’ யையும் சாம்சங் போராட்டத்தின் போது பார்த்தோம். இப்படியான குரல்களெல்லாம் ஏதோ பன்னாட்டு நிறுவனங்களின் தற்போதைய காலத்தில் மட்டும் ஒலிப்பதாக நினைக்க வேண்டாம். காலம் காலமாக ஒலித்துக் கொண்டிருக்கும் குரல்கள்தாம் இவையெல்லாம்.
எப்போதெல்லாம் தொழிலாளர்கள் தங்கள் உரிமைக்காக ஒன்று திரண்டு நிற்கிறார்களோ அப்போதெல்லாம் அரசும், நீதிமன்றங்களும், இத்தகைய கருத்து கந்தசாமிகளும் வந்துகொண்டேதான் இருக்கிறார்கள். தற்போதைய சாம்சங் போராட்டத்தைப் போல கோவை மாவட்டத் தொழிலாளி வர்க்கம் நடத்திய வீரம் செறிந்த ஒரு போராட்டத்தின் வரலாற்றை மிக நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறது தோழர்
ஆர்.வேலுசாமியின் எழுத்தில் வெளியாகியிருக்கும் ‘மிகைநாழி’ எனும் நூல்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் மக்களுக்கு வேலைவாய்ப்பை அளித்து அரவணைத்துக் கொண்ட ஊர் கோவை. பெரிதும் சிறிதுமாக விரவியிருக்கும் ஏராளமான இஞ்சினியரிங் தொழிற்சாலைகள், நூற்பாலைகள் எனத் தமிழகத்தின் மிக முக்கியமான நகரான கோவை தனது வரலாற்றுப் பக்கங்களில் வீரம் செறிந்த பல போராட்டங்களைப் பதிவு செய்திருக்கிறது. அத்தகைய போராட்டங்களில் ஒன்றுதான் கோவை எவரெஸ்ட் இஞ்சியனியரிங் கம்பெனியில் நடைபெற்ற போராட்டம். தொழிலாளிகள் தங்கள் உரிமைக்காகப் போராடிய போது, நிர்வாகமும், அரசு எந்திரமும் கைகோர்த்துக் கொண்டு அரங்கேற்றிய மிக மோசமான சம்பவங்களும், நீதிமன்றத்தில் நடைபெற்ற நாடகங்களும் தாம் மிகைநாழி நூலின் மையக்கரு. போராட்டத்தின் போது நடைபெற்ற ஒவ்வொரு நிகழ்வையும் வாசிப்பவர்களின் கண்முன்னே நடக்கும் காட்சியை போலவே பதிவு செய்திருப்பது சிறப்பு. சம்பவங்கள், ஆதாரங்கள், திரைமறைவில் நடந்த சூழ்ச்சிகள் என அனைத்தையும் திரட்டிக் கோர்வையாக அளித்திருக்கிறார் தோழர்
ஆர்.வேலுசாமி. நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து தொழிற்சங்கத் தலைவர்களைக் கொலைக்குற்றவாளிகளாக ஜோடிப்பதற்கு எவ்வாறெல்லாம் மெனக்கெடுகிறார்கள், அரசு எந்திரம் அவர்கள் விருப்பங்களுக்கு இசைவாகச் செயல்படும் அவலம், இழப்புகளைத் தாங்கித் தொழிலாளிகள் களத்தில் நின்ற தீரம், அவர்கள் குடும்பத்தினரின் தியாகம், போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவாகத் துணைநிற்கும் தொழிற்சங்க, அரசியல் தலைமை, வழக்கறிஞர்களின் உறுதுணை என அனைத்து அம்சங்களும் நூலில் இடம்பெற்றிருக்கின்றன.
சுமத்தப்பட்ட கொலைப்பழியில் இருந்து அனைவரையும் கீழமை நீதிமன்றம் வழக்கிலிருந்து விடுவிக்கிறது. ஆனால் அவர்கள்தாம் கொலையாளிகள் என நிரூபிக்க 88 காரணங்களைக் ’கண்டுபிடித்து’ உயர்நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறது வழக்கு. அடுக்கப்பட்ட காரணங்களை அப்படியே ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம் தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனையும், கடுங்காவல் தண்டனையையும் விதித்துத் தனது ‘விசுவாசத்தை’ நிலைநாட்டுகிறது. ஆம்.. அப்படித்தான் சொல்ல வேண்டும். ஏனெனில் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ஒரு நீதிபதியால்தான் அத்தகையதொரு தீர்ப்பு வழங்கப்பட்டது என்பதைக் குறிப்பிடும் நூலாசிரியர், உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் நிர்வாகத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் திரு.ப.சிதம்பரம் எனும் தகவலையும் பதிவு செய்கிறார். ஆம். முதலாளித்துவ அரசியலும், அரசும் எப்போதும் மூலதனத்திற்குத் தானே சேவகம் செய்யும்.
அதன்பிறகு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற சட்டப்போராட்டம், தொழிற்சங்கங்களும், தொழிலாளர்களும் நடத்திய களப்போராட்டங்கள் என கோவை எவரெஸ்ட் இஞ்சினியரிங் போராட்டத்தின் வரலாற்றின் தொடர்ச்சியும் மிகைநாழி நூலில் இடம் பெற்றிருக்கிறது. சின்னியம்பாளையம் தோழர்களின் தியாகம், ஸ்டேன்ஸ் மில்ஸ் உள்ளிட்ட பல்வேறு நூற்பாலைகளில் நடைபெற்ற தொழிலாளர்களின் வீரம் செறிந்த போராட்டம், அரசின் அடக்குமுறையை எதிர்த்த வால்பாறை தேயிலைத் தொழிலாளர்களின் பேரெழுச்சி என கோவைத் தொழிலாளர் வர்க்கம் கண்ட எண்ணற்ற போராட்டங்களின் வரிசையில் ஒன்றுதான் எவரெஸ்ட் தொழிலாளர்களின் போராட்டமும் ஆகும். உழைப்பைச் சுரண்டிக் கொழுக்கும் மூலதனத்தின் கோரமுகத்தையும், உழைப்பாளி மக்களுக்கு எதிராக அணிதிரளும் ‘அரசு’ எந்திரம் உள்ளிட்ட நிர்வாக அமைப்புகளின் சூழ்ச்சியையும் உணர்த்திட மிகைநாழி போன்ற ஏராளமான படைப்புகள் நமக்கு அவசியம். நூலை எழுதிய தோழர் ஆர்.வேலுசாமியும், வெளியிட்ட சிஐடியூ கோவை மாவட்டக்குழுவும் பாராட்டப்பட வேண்டியவர்கள். l