உலக அளவில் முதலிடத்தில் இருக்கும் மிகவும் பழமை வாய்ந்த ஃப்ராங்க்பர்ட் புத்தகக் காட்சி புத்தகங்களின் உரிமைகளை வாங்குவதற்கும் விற்பதற்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. இரண்டாமிடத்திலிருக்கும் லண்டன் புத்தகக் காட்சி புத்தகங்கள் விற்பனை, உரிமங்கள் பரிமாற்றம் இரண்டுக்குமே இடமளிக்கிறது.
ஆசியாவின் மிகப்பெரிய புத்தகக் காட்சியாக முன்னர் கொல்கத்தா புத்தகக் காட்சிதான் இருந்தது. ஆனால் புத்தக விற்பனையிலும் அரங்கங்கள் எண்ணிக்கையிலும் சாதனை படைத்து சென்னைப் புத்தகக் காட்சி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
1977 ஆம் ஆண்டு டிசம்பரில் மதரசா இ ஆஸம் பள்ளியில் 22 அரங்குகளுடன் தொடங்கப்பட்ட இந்த முயற்சி கடும் போராட்டங்களுக்கு நடுவிலும் மிகச் சிறப்பாக இன்றுவரை தொடர்ச்சியாக நடைபெற்று வருவது பாராட்டத்தக்கது. இந்தப் புத்தகத் திருவிழா வரலாற்றுச் சிறப்புமிக்க தன் நீண்ட நெடும் பயண நெடுகிலும் சந்தித்த சவால்கள் ஏராளம். சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட இது பி.ஐ. பப்ளிகேஷன்ஸ் கே. வீ. மேத்யூ என்னும் மாமனிதரின் அசாத்தியமான உழைப்பால் அடுத்தடுத்த உயரங்களுக்குச் சென்றது. அதற்கடுத்தடுத்துப் பொறுப்புக்கு வந்தவர்கள் இதன் வளர்ச்சிக்கு அளித்த பங்களிப்பையும் நாம் நன்றியோடு இந்த நேரத்தில் நினைவுகூர்கிறோம்.
மதராசா இ ஆஸம் பள்ளி, உட்லண்ட்ஸ் டிரைவின், காயிதேமில்லத் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி, தீவுத் திடல் எனப் பல்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு இப்போது நந்தனம் ஓய் எம் சி ஏ மைதானத்தில் இது நடைபெறுகிறது.
2006 ஆம் ஆண்டு செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டதற்குப் பிறகு புத்தகக் காட்சி கூடுதல் நாட்கள், அதிக அரங்குகள், மிக அதிக அளவில் வாசகர்கள் கூடுகின்ற இடம் என வெற்றிகரமாகப் புதிய உச்சங்களைத் தொட்டுள்ளது. தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சென்னைப் புத்தகக் காட்சியை அறுவடைத் திருவிழாவோடு இணைந்த தமிழரின் மிகப்பெரிய கொண்டாட்டமாக மாற்றி அதன் பொதுத்தன்மையைப் பேணிப் பாதுகாத்து வந்திருக்கிறது. இந்த ஆண்டு புத்தகத் திருவிழா பொங்கல் விடுமுறை தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாகவே முடிவடையும் வகையில் டிசம்பர் 27 முதல் ஜனவரி 12 வரை இந்தப் புத்தகக் கொண்டாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 48வது சென்னைப் புத்தகக்காட்சியையடுத்து சர்வதேசப் புத்தகக் கண்காட்சி நடக்கவிருக்கிறது என்றாலும்.. சர்வதேசப் புத்தகக் காட்சியைச் சென்னைப் புத்தகக் காட்சியோடு இணைத்து நடத்தாமல் அது முடிந்த பிறகு ஜனவரி 16, 17, 18 ஆகிய தேதிகளில் நடத்த உள்ளார்கள்.
உலகில் லண்டன், ரியாத், ஷார்ஜா சர்வதேசப் புத்தகக் காட்சியிலும் இந்தியாவில் கல்கத்தா, டெல்லி உள்ளிட்ட நகரங்களிலும் சர்வதேச, உள்ளூர்ப் புத்தகக் காட்சிகள் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில்தான் நடைபெற்று வருகின்றன என்பதை நாம் இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும்.
இந்த ஆண்டு சென்னை சர்வதேசப் புத்தகக் காட்சியினுடைய சிறப்பு விருந்தினர்களாக இத்தாலியின் போலோக்னா குழந்தைகள் புத்தகத் திருவிழா தேர்வு செய்யப்பட்டுள்ளது தமிழில் குழந்தைகளுக்கான நூல்கள் அதிக அளவில் வருவதை ஊக்குவிக்கும் மிக முக்கியமானதொரு பயணத்தின் தொடக்கப் புள்ளியாகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்படும் களமாகவும் சென்னைச் சர்வதேசப் புத்தகக் காட்சி நிகழ்வுகள் அமையும் என்ற எதிர்பார்ப்பு இதனால் ஏற்பட்டுள்ளது. போலோக்னா குழந்தைகளுக்கான புத்தகத் திருவிழா 61 ஆண்டுகளாக நடந்து வருகின்ற ஒரு சர்வதேசப் புத்தகத் திருவிழா.. வெறும் புத்தகக் கண்காட்சியாக மட்டும் இது நடைபெறுவதில்லை. குழந்தைகளுக்காக வெளியிடப்படும் புத்தகங்களில் இடம்பெறுகிற ஓவியங்களை வரைகின்ற ஓவியர்களுக்கான தனி அமர்வுகளுக்கும் இந்தப் புத்தகக் காட்சி அமைப்பாளர்கள் ஏற்பாடு செய்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் 3000 புதிய ஓவியர்களை உருவாக்குவதற்கான மிகப்பெரிய பயிற்சிப் பட்டறைகள் அப்போது நடத்தப்படுவதையும் நாம் இங்கே பதிவு செய்தேயாக வேண்டும்.சர்வதேச அளவில் போலோக்னா குழந்தைகள் புத்தகத் திருவிழாவில் தான் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் விருது வழங்கப்படுகிறது.
அந்நாட்டு அரசாங்கம் சுவீடன் குழந்தைகளுக்கான பெண் எழுத்தாளர் அஸ்ட்ரீட் அண்ணா லிந்ரன் பெயரில் வழங்குகின்ற குழந்தை இலக்கியத்திற்கான, நோபல் பரிசுக்கு இணையான விருதும் இந்தக் குழந்தைகள் புத்தகத் திருவிழாவில்தான் வழங்கப்படுகிறது என்பதையும் கவனிக்க வேண்டும்..
சர்வதேசப் புத்தகத் திருவிழா வெற்றி பெறுவதில் முழு முனைப்புக் காட்டும் அரசு சென்னைப் புத்தகத் திருவிழாவை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கும் தன் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என்பதுதான் நம்முடைய வேண்டுகோள். சென்னைப் புத்தகத் திருவிழா நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் நடந்துவருகிறது.
பபாசி அமைப்பு அந்த இடத்திற்கான வாடகை, அரங்க அமைப்பு இவற்றிற்காக ஏறத்தாழ ரூபாய் 5 கோடி வரை ஒவ்வோர் ஆண்டும் செலவிடுகிறது. இந்தச் செலவை ஈடு கட்டுவதற்காகப் பதிப்பாளர்களிடம் வாடகை வாங்குவது, நன்கொடையாளர்களின் தயவை எதிர்பார்த்துக் காத்திருப்பது எனப் பல்வேறு இடர்ப்பாடுகளைப் பபாசி தொடர்ந்து சந்தித்து வருகிறது. சமீபகாலமாக நிலவும் தொழில் மந்தச் சூழலில் கொடையாளர்கள் கிடைப்பது அரிதாகிவிட்டது. அரசு உதவினால் இந்த நிலையை மிக எளிதாக மாற்றிவிட முடியும். சர்வதேசப் புத்தகக் காட்சி நடைபெறவிருக்கின்ற நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையம் மத்திய மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.
அனைத்து வசதிகளும் கொண்ட இந்த இடத்தில் சர்வதேச சென்னைப் புத்தகத் திருவிழா நடைபெறும் அதே நேரத்தில் வருங்காலங்களில் வருடாவருடம் மாற்றமில்லாமல் குறிப்பிட்ட தேதிகளில் வாடகையின்றி அல்லது குறைந்தபட்ச வாடகையில் 3 வாரங்கள் பிரம்மாண்டமான வாசகர்கள் சங்கமிக்கும் சென்னைப் புத்தகத் காட்சியை நடத்துவதற்குப் பபாசி அமைப்பிற்கு அரசு உதவ முன்வரவேண்டும் என்பதுதான் பதிப்புத் துறைசார்ந்த அனைவரின் விருப்பமாகும்.. அதை வலியுறுத்தி நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து மத்திய மாநில அரசுகளுக்குப் பலமாகக் கோரிக்கை வைக்கவேண்டும்.
மிகப்பெரிய அறிவுத் திருவிழாவான சென்னைப் புத்தகக் கண்காட்சியை மேன்மேலும் உயரத்திற்குக் கொண்டு செல்வதற்கு அறிவுசார் துறையிலுள்ள அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு வெற்றி பெறுவோம். அரசு நம் கோரிக்கையிலுள்ள நியாயத்தை உணர்ந்து செவிசாய்த்து நமக்கு உதவும் என நம்புவோம்.
– ஆசிரியர் குழு l