சமூக உணர்ச்சிகளை, சமூக வேறுபாடுகளை உணர்ந்து எழுதுகிறவன் சிறந்த எழுத்தாளன். அவனின் புத்தகங்கள் கொண்டாடப்படும். சிந்தனைகள் கொண்டாடப்படும். வாசிக்க நேரமில்லாத உழைப்பாளிகள் இருக்கும் நகரங்களில் எழுத்தாளர்கள் பற்றிய கவனம் குறைவாகத்தான் இருக்கிறது. பரபரப்பு, உழைப்பு, வேகம் என்று இயங்கிக் கொண்டிருக்கிறது திருப்பூர் பின்னல் ஆடை உலகம். அதன் மக்களைப் பற்றிச் சாவகாசமாக சிந்தித்து எழுதுகிற எழுத்தாளர்தான் சுப்ரபாரதி மணியன்.
அவரின் சமீபத்திய சிறார் நாவல் வெப்பம். இது அவரின் இரண்டாம் சிறார் நாவல். ஒரு படைப்பின் கருவை உருவாக்குவதும் வளர்த்தெடுப்பதும் படைப்பாளிக்கு மோசமான அனுபவமாகத்தான் இருக்கும். அந்த அனுபவத்தைப் பல படைப்பாளிகள் சொல்லக் கேட்டிருக்கிறேன். பலரிடம் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். ஆனால் சுற்றுச்சூழல் சார்ந்த அனுபவங்களை எழுதிக் கொண்டிருப்பவர்களில் சுப்ரபாரதி மணியன் முக்கியமானவர்.
அவர் கதைகளில் சமூகச் சீற்றம் இருக்கும். அதைச் சரியான வடிகாலாகப் படைப்பில் கொண்டு வந்து காண்பிப்பார். முந்தின சுற்றுச்சூழல் படைப்பு நூல்களில் சுற்றுச்சூழல் சிக்கல்கள் பற்றியும் நம்மைச் சுற்றி இருக்கும் இயற்கை உயிர்களைப் பற்றியும் நிறைய எழுதியிருக்கிறார். இன்றைக்கு அந்த உயிர்களுக்குப் பெரும் ஆபத்து இருக்கிறது.
வெப்பமயமாக்கம் சார்ந்து உலக நாடுகள் கூடிப் பேசி இது சார்ந்த எண்ணங்களை எளிமையாகச் சொல்வது, மக்களிடம் கொண்டு செல்வது, இலக்கியப் படைப்பும் ஆக்குவது என்பதைப் பல தீர்மானங்களாகக் கொண்டு வந்திருக்கிறார்கள். பல ஆண்டுகளாக அதன் எதிரொலியாகப் பல படைப்புகள் தெரிகின்றன.
இந்த வெப்பம் சிறார் நாவலில் உலகம் வெப்ப மயம் ஆவதன் காரணமாக இடம்பெயரும் கடற்கரை சார்ந்த மனிதர்களின், குறிப்பாகக் குழந்தைகளின் மன இயல்பும் சொல்லப்பட்டிருக்கிறது. வெப்பமயமாதலால் கடல் பகுதி மூழ்குவது, குழந்தைகள் படிப்பு வேண்டி இடம் பெயர்வது போன்றவை சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
வாசிப்பு அடித்தளமாக எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வாகக் கொள்ளலாம். அறிவியல் தொழில்நுட்பத்தைத் தாண்டி வாசிக்க வைக்க நாம் அறிவியல் செய்திகளையும் படைப்புகளில் முன் வைக்க வேண்டும்.
அந்தச் செயலைச் சுப்ரபாரதி மணியன் அவர்கள் இந்த வெப்பம் நாவலில் வெளிப்படுத்தி இருக்கிறார் சுற்றுச்சூழல் சார்ந்து நிறையக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அவர் அதை நாவல் வடிவிலும் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதில் ஒரு படைப்புதான் வெப்பம். சிறார்களுக்கு இந்தச் செய்தி சரியாகச் செல்ல வேண்டும் என்ற வகையில் எளிமையாகவும் நல்ல ஓவியங்களுடனும் இந்த நாவலைக் கொண்டு வந்திருக்கிறார்.
அவர் முன்னர் சுற்றுச்சூழல் பற்றிப் பல நூல்கள் எழுதி இருக்கிறார். அழிந்து வரும் மரங்கள் என்ற ஒரு நூலில் அரிய வகை மரங்கள், செடிகள், இவற்றைப் பற்றிய விவரங்களை எல்லாம் தந்திருக்கிறார். இயற்கையோடு வாழ்தல் பற்றித் தொடர்ந்து செய்திகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
இந்த வெப்பம் நாவலிலும் செடிகொடி, மரங்கள், பிராணிகள் பற்றிய தகவல்களைக் கடல் பகுதி சார்ந்த மனிதர்களின் அனுபவங்களோடு சொல்கிறார். வெப்பமயமாதல் பற்றிய அனுபவங்களை அறிவியல் அனுபவங்களாகவும், நாவல் அனுபவமாகவும் இந்த வெப்பம் சிறார் நாவல் வெளிப்படுத்துகிறது. l
