ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கும்போது இருக்கும் வாக்கிய அமைப்புப் (syntax) பிரச்சினைகள் இந்திய மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும்போது இருப்பதில்லை. ஓம்பிரகாஷ் வால்மீகி என்னும் இந்திக் கவிஞரின் கவிதைகள் சமீபத்தில் மணற்கேணி பதிப்பகத்தால் திருமதி. க்ருஷாங்கினி அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்திருக்கிறது. உள்ளடக்கம், கட்டமைப்பு அனைத்தும் ஒரு கவிதைத் தொகுதியின் தார்மீக இடத்தைப் பிடித்துள்ளன. சமீபத்தில் நான் வாசித்த மிகச்சிறந்த கவிதைத் தொகுப்பாக இத்தொகுப்பு உள்ளது. க்ருஷாங்கினி தமிழில் ஒரு கவிஞராக, சிறுகதையாளராக, மொழிபெயர்ப்பாளராக எண்பதுகளின் தொடக்கத்திலிருந்து இயங்கி வருகிறார். ‘பட்டது போதும்’ என்னும் இக்கவிதைத் தொகுப்பின் விளம்பரம் வெளியானபோது இத்தொகுப்பை வாங்கி வாசிக்கலாம் என்று நினைத்துக்கொண்டேன். அதற்குள் எனக்கு நண்பர் ரவிக்குமார் எம்.பி. யிடமிருந்து இத்தொகுப்பு வந்து சேர்ந்திருந்தது இரட்டை மகிழ்ச்சி.
முதலில் ஒரு நூலைக் கையிலெடுத்தால், அதில் எத்தனை எழுத்துப் பிழைகள் இருக்கின்றன என்றுதான் பார்க்கத் தோன்றும். அது எனக்குப் பாரதி புத்தகாலயம் கற்றுக்கொடுத்த சிறந்த பாடங்களுள் ஒன்று. இந்தத் தொகுப்பிலும் ஓரிரு எழுத்துப் பிழைகளைக் காண நேர்ந்தது. ஆனால் பிழைபட்ட வார்த்தை என்ன என்பதை வாசகனால் புரிந்து கொள்ள முடியும். ஆனாலும் கவிதைத் தொகுப்பில் பிழைகளற்று இருத்தல் நல்லது. இந்நூலை வாசித்து முடிக்கும்போது, சமீபத்தில் ஒரு நல்ல கவிதைத் தொகுப்பை வாசித்த மன நிறைவு இருந்தது. ‘ஓரளவிற்காவது, ஒருவரின் படைப்புகளைப் படிக்காவிட்டால் அந்தப் படைப்பாளியின் மையச் சரடைப் புரிந்துகொள்ள முடியாது’ என்பது என் கருத்து. ஆனால் (அந்தப் படைப்பாளரின்) எல்லா ஹிந்தி நூல்களும் கிடைப்பதில்லை’ என்ற மொழிபெயர்ப்பாளரின் உரை ஒரு படைப்பாளனை எவ்வாறு அணுகவேண்டும் என்பதிலுள்ள அக்கறையையும் மொழிபெயர்ப்பில், தான் எடுத்துக்கொண்ட சிரத்தையையும் அறிய முடிகிறது. இத்தொகுப்பில் மொத்தம் 50 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. ஐம்பதும் முத்துகள். கவிதையை மொழிபெயர்க்க ஒரு தனித்த மிருதுவான கவிதை மனம் வேண்டும். கிருஷாங்கினி உள்ளபடியே ஒரு சிறந்த கவிஞர். தமிழ் ஆங்கிலம் தவிர ஹிந்தி, சமஸ்கிருதம், பாலி ஆகிய மொழிகளும் இவருக்குத் தெரியும் என்பதும் கூடுதல் சிறப்பு.
மனிதன் அன்றாடம் மரங்களைப் பார்க்கிறான், ஆனால் ஒரு கவிஞனின் பார்வையில் அது ஒரு மரமாக மட்டுமே தென்படுவதில்லை, மாறாக மரம் ஒரு மரமாக அறியப்படவேண்டுமானால், அது தன் இலைகளுடன் இருக்கவேண்டும், கிளைகளில் அது உயிர்ப்புடன் ஆடிக்கொண்டிருக்க வேண்டும், அப்போதுதான் அது மரமாகக் கருதப்படும் என்று கவிஞன் கூறுகையில் இன்னும் பல சிந்தனைகளை நமக்குள் துளிர்க்கச் செய்கின்றன.
’நீ வாழ்ந்திருக்கும்போதே/ மரணம் எய்துவாய்’ என்னும் வரிகள் ஒரு தலித்தின் வாழ்வை மிகச் சரியாக பிரதிபலிக்கின்றன. இந்தியா என்னும் சனாதனம் ஊன்றப்பட்ட பூமியில் ‘நீ படைத்த சொற்கள்/ கொத்தும் உன்னையே/ பாம்பென மாறி’ …‛எலிவளை அல்லது/ பறவைக்கூட்டில் இருக்கும்/ ஆத்மாக்கள்/ ஏன் ஆவதில்லை/ பிரம்மாவின் அம்சமாக?/ எனக்குத் தெரியவில்லை/ அறிந்திருக்கலாம்/ ஒருவேளை நீங்கள்’. சனாதன இலக்கியங்களாகக் கருதப்படும் அனைத்துமே கவிஞரின் பார்வையில் மறுவாசிப்புக்கு உள்ளாக்கப்படுவதை நாம் அவதானிக்க முடியும். ‘கைப்பிடிச் சோறு’ என்னும் கவிதை முன்னோர்கள் என்ற ஒற்றை வார்த்தையால் அனைத்துச் சாதியினரையும் ஒருசேர விளித்து, ஒவ்வொருவரையும் தனித்தனியே விமர்சனத்திற்குள்ளாக்குகிறது. ‘ஓ பெருமை கொண்ட முன்னோர்களே/ உம்முடைய ஸ்மிருதிகள்/ இன்னமும் இருக்கின்றன/ உயிரோடு/ இந்தத் தரிசு நிலத்தில்/ அதன் நெஞ்சின் மீது/ தமது பசுமையோடுகூட/… ஓ என் முன்னோர்களே…நீர் தேடிக்கொண்டே இருந்தீர்/ கைப்பிடி நிறையச் சோற்றை, கனவுகளை அடமானம் வைத்து’… அறிய விரும்புகிறேன்/ நான்/ உமது வாசனையை/ உமது சொற்களை/ உமது பயத்தை/ அது/ எங்கும் நிறைந்த காற்றின் இடையிலேயும்/ எரிந்துகொண்டிருக்கிறது/ ஒரு விளக்கைப் போல/ யுகம் யுகமாக’ என்ற மேற்கண்ட வரிகள் நம் இந்தியக் கலாச்சார வரலாற்றையே கேள்விக்குள்ளாக்கிவிடுகின்றன. அடுத்து, மனதை மிகவும் தொட்ட ஒரு கவிதை ‘உற்பத்திப் பொருட்கள்.’ தலித்துகள் வெறும் உற்பத்திப் பொருட்களாக மட்டுமே பார்க்கப்படுகிறார்கள் என்பது கற்பனை செய்யப்பட முடியாத நிஜம். ‘பிறக்கிறோம் நாங்கள்/காடுகளில் மரங்கள்/ முளைப்பதைப் போலவே/…நாங்கள் தொலைந்துபோகிறோம்/அப்படியே/ எப்படிப் பிறப்பெடுத்தோமோ/அதைப்போலவே/பெயரற்று/உற்பத்திப் பொருட்களைப்போல’. இக்கவிதை மொத்தத் தலித் வாழ்வையும் புடமிட்டுப் பிரதிபலிக்கிறது. இக்கவிதைகளை மொழிபெயர்க்கும்போது அவர் எதிர்கொண்ட சவால்களை இங்கு பகிரத் தோன்றுகிறது. அது என்னவென்றால், அவரின் நண்பர்கள், அவரிடம், ‘இந்த வேலையைச் செய்வதற்குத் தலித்துகள் இருக்கிறார்கள், நீங்கள் ஏன், இதை மெனக்கிட்டுச் செய்கிறீர்கள், இதைச் செய்ய வேண்டாம்’ என்று சொன்ன நண்பர்களின் உரையாடலை என்னோடு பகிர்ந்துகொண்டார்கள் என்பது கூடுதல் சுவாரஸ்யம்.
விதிகள் வாழ்வின் அனுபவங்களால் நிர்ணயிக்கப்படுகின்றன. ‘வெளியே வருவார்கள் ஒரு நாள்’ என்னும் கவிதை, எளியவர்களின் வாழ்வை, ‘தூரத்தில் நின்றுகொண்டு/ பார்த்துக்கொண்டிருக்காது / அசையும் பசுமையான/ பயிர்களை/ முன்னோர்களின் குருதி/ஊற்றி வளர்த்தெடுத்ததை/ இந்த நிலம்…பசி தாகத்தோடு இருக்கும்/ இந்தக் குழந்தைகள்/ வெளியே வருவார்கள்/ஒருநாள்/ இருட்டில் அடைபட்டிருக்கும்/ வசிப்பிடங்களிலிருந்து/ பச்சை மண்ணின் மணத்தை/ தங்கள் மூச்சுகளில்/ நிரப்பி/ மேற்கண்ட வரிகள் கூறும் அவலத்தை ஒவ்வொரு சாமான்யனாலும் புரிந்துகொள்ள முடியும். தலித் அனுபவங்களைப் பகிரும் கவிதைகளில் முக்கியமான ஒன்று, ‘வலிமையற்ற மண் வீடு’ ‘வலிமையற்ற மண்வீடுகளிலிருந்து/ எந்த ஒரு தெருவும்/ தொடங்குவதில்லை/ வெளியே/ அங்கு முடிவடைகிறது/ தெரு/ ஒரு திருப்பமற்ற/ முட்டுச் சந்தின் முடிவில்/ அங்கு இல்லை எந்த/ அடையாளப் பலகையும்/ எந்த ஒரு முழக்கமும் எழுதப்படவில்லை/ சுவரொட்டிகள் எதுவும்/ ஒட்டப்படுவதும் இல்லை/ சுவர்களின் மீது/ ஆனால்/ வலிமையற்ற மண் வீடுகள்/ தடுப்பதில்லை ஒருவரிடமிருந்து/ ஒருவரை’ எளிமையான விவரணைகள் மூலம், வேரோடிக் கிடக்கும் சாதியச் சுவர்களை வெளிச்சமிட்டுக் காட்டிவிடுகின்றன.
இத்தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கவிதையிலும் வரலாறுகள் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. ’கொடுமையின் பொருள்’ என்னும் கவிதையின் கடைசி வரிகள்: ‘தொடுவானத்தின் அருகில்/ கருமையான புகை/சிவந்த குருதியைப்போலப்/ பெருகிக் கொண்டிருக்கிறது/ துயருற்றவர்களின் கடந்தகாலக்/ கூக்குரல்/ வரலாறுகளின் போலியில்/ தேடிக்கொண்டிருக்கிறது/ கொடுமையின் மிகச் சரியான/ பொருளை’ என்னும் வரிகளில் எரிக்கப்பட்ட சேரிகளையும் கொளுத்தப்பட்ட குடிசைகளையும் அதன் கூக்குரலையும் அவதானிக்க முடியும். கவிதைகள் காட்சிப் படிமங்களாக நம் கண்முன் விரிகின்றன. ’காற்று, வெயில் மற்றும் நிலம்’ என்னும் கவிதை இப்படி ஆரம்பிக்கிறது: ‘ இருக்கின்றன அனைத்தும்/ உன் கைப்பிடிக்குள்/ காற்று, வெயில் மற்றும் நிலமும்’. வரலாறெங்கும் இவர்கள் நிலமற்றவர்களாக இருந்திருக்கின்றனர். அதுமட்டுமில்லை, வெயிலும் காற்றும் இயற்கையும் கூட இவர்களுக்கு அந்நியப்பட்டுப் போயிருக்கின்றன. அடுத்து, ’அவர்கள் பயந்து போய் இருக்கின்றனர்’ என்னும் கவிதை, இன்றைய கல்விப்பெருக்கமும், ஊடகங்களின் பெருக்கமும் அவர்களை வெகுவாக அச்சுறுத்துவதாகப் பேசுகிறது. அறிவியலும் தொழில் நுட்பமும் தலித்துகளுக்கும் கிடைக்கும் இன்றைய சூழலில் ஆதிக்க சாதிகள் இதைக்கண்டு பயந்துபோய்த்தான் இருக்கிறார்கள் என்பதை வெகு நுட்பமாகப் பேசுகிறது இக்கவிதை. இப்படி ஆரம்பிக்கிறது இக்கவிதை: ‘அவர்கள் பயந்திருக்கின்றனர்/ அத்தனை/ என் கைகளில் ஏதாவது/நூலைப் பார்த்தால்/ திடுக்கிட்டுவிடுகின்றனர்/ அவர்கள்….நான் விரும்புகிறேன்/ சொற்கள் மௌனத்தை/ உடைக்கட்டும் என/ உண்மையை உண்மை என்றும்/ பொய்யைப் பொய் என்றும்/ சொல்ல’ ‘எத்தனை பலவீனமாக இருக்கின்றன உறவுகள்’ என்னும் கவிதையின் சில வரிகள் இந்த நவீன யுகத்தின் உறவுகள் எவ்வளவு துயரமிக்கவையாக இருக்கின்றன என்பதைக் குறித்துப் பேசுகின்றன: ‘உடைகின்றன உறவுகள்/ அப்போது/ செய்தி அறிந்துவிடுகிறது/ மரத்தைவிட்டுப்/ பறந்துவிடுகின்றன/ பறவைகள்/ துயரத்தைக் கூடுகளில்/ வைத்துவிட்டு’.
இன்றைக்கும் சமூகத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகளைப் பேசும் ஓரிரு கவிதைகளை கீழே பார்க்கலாம். ‘உயரம்’ என்னும் கவிதை: ‛எந்த வழியில் சென்று நீ/ அடைந்தாயோ/ அந்த வழியில்தான்/ சென்று வந்திருக்கிறேன்/ நானும் கூட/ பின் ஏன் உன் உயரம்/ இவ்வளவு/ சுலபமாக வானத்தையும்/ தொடும் அளவிற்கு?/ பிறகு/ என் உயரம் ஏன்/ இத்தனைக் குள்ளமாக/ நான் நிலத்தையும்/ தொடமுடியாத அளவிற்கு?’. அடுத்து, சாதி என்னும் கவிதை: ‘ஏற்பில்லை எனக்கு/ மரணத்திற்குப் பின்னான/ உனது சொர்க்கம்/ செல்ல/ அங்கும்கூட எங்களை/ நீ அடையாளப்படுத்துவாய்/ என் சாதியோடு கூடவே’ சனாதனத்தின் அடுக்குகளை முற்றிலுமாக நிராகரிக்கும் விதமாக, பயம் என்னும் கவிதையின் சில வரிகள் சமுதாயத்தில் நிரந்தரமான ஒரு பிளவாக மாறிப்போயிருப்பது தெளிவாகத் தெரிகிறது: ‘உண்மையைச் சொல்கிறேன்/ நான் என் மனதார/ஒட்டிக்கொள்ள/ முடியாது/ உன் காலடிகளில்.’
இப்படி இத்தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கவிதையும் உலகத் தரம் வாய்ந்த கவிதையாக வெளிப்பாடாகியிருப்பது நமக்கு உண்மையில் ஆச்சரியத்தை ஏற்படுகிறது. இதற்கான அடிப்படைக் காரணம், மொழிபெயர்ப்பாளரின் சரியான, தரமான கவிதைத் தேர்வு என்று உறுதியாகச் சொல்லலாம். மூலக் கவி ஓம்பிரகாஷ் வால்மீகி, மற்றும் மொழிபெயர்ப்பாளர் இருவருக்கும் வாழ்த்துகள். l